பாவப் பழத்திலே பச்சைப் புழு கொண்டுழுந்து
கொட்டை பழுதாகி இரிக்காம்
கொழும்பிலிருந்து மருந்தெடுங்க.
குருத்து செத்த பிள்ளக்கி
குடம் பிடிச்சி தண்ணி ஊத்தி
மடல் விரிச்சி பாளதள்ளி
மறு பேர தேடினென்ன.
சூரிய காந்தியிலே
தோல் செவந்த தேங்காயிலே
தேரை கடிச்சதெண்டு
தெரியல்லயோ மாலவள்ளி.
பூங்கயிலை புளியயிலை எங்க இரிக்கி
பொன்னப்பன் தோட்டத்திலே நிமிர்ந்திரிக்கி
கருக்குப் பனி சேலையிலே கண்ணிரிக்கி
எங்கு மாமாவுக்கும் எனக்குமொரு வழக்கிரிக்கி.
காகம் பழம் அருந்தி
கடவலில கொட்ட போட்டு
பரிசனை செய்யாமல்
பணம் வருமா போடியாரே.
தகுதிவான் எண்ட இடம்
தக்ககொடி சீமான்கள் இண்டவிடம்
போடியார் இண்டவிடம்
போகுண்டவிடம் பாழ்கிடக்கு.
ஓடு பந்தல் போட்டு
ஓழங்கையெல்லாம் பந்தலிட்டு
பண்ணுமந்த கல்யாணத்த
பாக்கவர எண்ணியிருக்கம்.
மாவிலங்க, காசான்
மருந்தெடுக்கும் பூங்கமரம்,
பூவரச பூத்து பொங்கினதோ
மச்சான் உங்க மனம்.
பொண்ணெடுத்து
பண்ணுங்க மச்சான் பாக்கவர இரிக்கிம்.
பச்ச முல்லை ரெத்தினமே
பாதிநிலா சந்திரனே
மூளை உள்ள மந்திரியே
எனக்கொரு முடிவனுப்ப காணயில்ல.
எங்க மாமிட மக்களெல்லாம்
மயில் பழுத்தாப்போல இரிக்கி
மவுலாக்கு வாழ எங்க மண்டயில எழுதினதோ.
நாயன் இரிக்கான்
எங்கள நாள் தோறும் காத்திடுவான்.
இந்த புல் விளஞ்ச நெல் இல்லாட்டி
எங்களுக்கு ஒண்டுமில்ல.
மாப்பிளட உம்மாவும்
மதினி திலகாவும்
காடு பழுத்து கனியருந்தப் போறாக.
பாவப் பழத்தார பாப்பம்
எண்டு நான் போனன்.
நெஞ்சால மூடி அவக
நித்திரையும் கொள்ராக.
காச்சற் கருப்போ
மச்சானுக்கு கால்நடந்த வேதனையோ,
வேலப் பொறுப்போ மச்சானுக்கு,
வீடு வந்து போறாக.
கட்டக் கால் நோக
கடும் கானல் சூடெழும்ப
வட்ட முகம் வேர்வசிந்த
வந்தயடி எண்ட காலடிய.
விடிய விடிய விடுதி போட்ட மாலடிய
பறையனடிச்சி வந்த மகனார்
பாக்கு செம்பு இல்லயாக்கும்,
சின்னக்கிளி உம்மாவே
எண்ட செல்வ மகளாரே,
பறவைக்கு குடுத்த பாக்கியமும்
இல்லயாகா ஒனக்கு.
தாரமில்லா மாமினாரும்
சலுப்பறியாமலிருக்காரு
எண்ட பொறுதிக் கடலே
பொண்ணளவில் பொறுமை செய்ங்க.
அந்தி விடிஞ்சி
அனுதினமும் நீங்க ஒடிவந்து
குந்தும் அந்த தின்ன
இப்ப கொழருதடா சண்டாளா.
வரு வார் வருவாரெண்டு
வழிகாத்து நான் இருந்தன்.
எண்ட குறிபாத்த நெல்லு கொளமும்
பயிராச்சு.