இஸ்லாத்தில் அறிவு என்பது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது போதனைகளாகும். அறிஞர்கள் அவர்களது வாரிசுகளாவர். ஒரு மனிதன் அறிவை சம்பாதிக்கும் முயற்சியை மேற்கொண்டு செயலாற்றும் போது அவன் அத்தகைய வாரிசுரிமையில் பங்குதாரன் ஆகின்றான். ஏனெனில் அவன் தன்னை வளப்படுத்திக் கொள்வதற்கான உயர்தரமானதும், உன்னதமானதுமான ஒரு வணக்க வழிபாடாக இஸ்லாமிய போதனைகள் காணப்படுகின்றன.
இவ்வாறன அறிவியலினை பெற அவாக்கொண்டு காணப்படும் நபர் ஒருவர் தன்னகத்தே உன்னதமான நடத்தைகளை வடிவமைத்துக் கொள்வதுடன் அவைகளை உணர்வு பூர்வமாக ஏனையவர்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிவுத்தேடலில் ஈடுபாடு கொண்ட ஒரு மாணவனது நடத்தைக்கோலங்களை நாம் மிக இன்றியமையாத ஐந்து வகையாக்கங்களுள் நோக்க முடியும்.
மாணவர்கள் தமது வல்ல நாயனான அல்லாஹுதாலாவுடன் பேணவேண்டிய நற்பழக்கங்கள்.
ஒருவரது அறிவைத்தேடும் முயற்சியில் அவனது எண்ணம் என்பது முற்றிலும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்ததாக காணப்படல் அவசியம். அவன் தனது தகுதியை அல்லது புகழை எதிர்பார்த்து அறிவை தேடும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "அறிஞர்களுடன் போட்டியிடும் நோக்கிலோ அல்லது அறியாத மக்களுடன் பிணக்கில் ஈடுபடும் நோக்கிலோ அல்லது மக்கள் உமது பக்கம் திரும்பவேண்டும் எனும் நோக்கிலோ அறிவைத் தேடிப் பெறாதீர்கள். எவர் இச்செயல்களை மேற்கொண்டாரோ அவர் நரகில் இருப்பார்.” (இப்னுமாஜா.259)
அல்லாஹுதாலாவினால் வரையறுக்கப்பட்ட எல்லலையை மீறுவதும் கூடாது.
"இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால்நடைகளிலும் பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் அறிஞர்கள்தாம். நிச்சயமாக அல்லாஹ் யாரையும் மிகைத்தவன்,; மிக மன்னிப்பவன்.” (அல் ஃபாத்திர்: 28)
எனவே எவருடைய அறிவு அவரது நடத்தையினை கட்டுப்படுத்தவில்லையோ, அவர் பெற்ற அத்தகைய அறிவினால் யாதொரு பயனுமில்லை. ஒருவரது அறிவு என்பது அவரது நம்பிக்கையினை மேலும் வலுவூட்டுவதாக அமைதல் அவசியம். இதன் மூலமே எது சரியானது, எது பிழையானது என பிரித்தறிந்து செயல்படுதற்கு போதுமான வழிகாட்டுதல்களை ஒருவர் பெற்றுக்கொள்ள முடியும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "மார்க்கம் என்பது உன்னதமானது”. அதற்கு நாங்கள் "எவர்களுக்கு?” அல்லாஹ்வவின் தூதரே! என வினவினோம். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வுக்கு, அவனுடைய வேதத்திற்கு, அவனுடைய தூதருக்கு, மேலும் முஸ்லிம் கூட்டத்தின் தலைவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும்” எனப் பதிலளித்தார்கள். (முஸ்லிம்.82)
அல்லாஹ்வும் அவனது தூதரும் எதனை தெளிவாக விளக்கியுள்ளனரோ அவற்றை பட்டவர்த்தனமாக பின்பற்றல் வேண்டும். மாறாக அவைகளுக்கு தமது சுய விருப்புவெறுப்புக்களின் அடிப்படையில் கருத்துக்களை கற்பிக்க முயலக்கூடாது. அல்லாஹ் அவனுடைய வேதத்தில் எதனை விளக்கியுள்ளானோ, கற்றுத்தந்துள்ளானோ அவற்றினை ஏற்று செயல்படுத்த வேண்டும்.
"முஃமின்களே! ஆல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்,;; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன், நன்கறிபவன்.”(அல் ஹுஜுறாத்: 01)
அறிஞர்கள் முன்னிலையில்; பேணவேண்டிய நற்பழக்கங்கள்.
மாணவர்கள் தமது தாழ்மையான மதிப்பினையும், கௌரவத்தினையும் அறிஞர்களுடன் பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும். தங்களுடைய பிரார்த்தனையில் அவர்கள் மீது அல்லாஹ்வின் அன்பும், மன்னிப்பும் அருளப்பெற பிரார்த்திக்க வேண்டும். மாணவர்கள் தமது வழிகாட்டிகளாக திகழும் அறிஞர்களது சிறு சிறு தவறுகளை விட்டுவிட்டு அவர்களது பலமான வாழ்க்கை வழிகாட்டல்களை எடுத்து நடக்க வேண்டும்.
மாணவர்கள் எப்பொழுதும் தமது வழிகாட்டலைப்பற்றி நல்லதையே எண்ண வேண்டும். அவர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், அல்லது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துக்காட்டாக கொண்டு அவர்களை குறைத்து மதிப்பிடுதல் ஆகாது. அவர் குறித்தவிடயம் சரியானது அல்லது அல்லாஹுதாலாவின் விருப்பிற்புரியது என கருதியதன் விளைவாகவே அவ்வாறு செயற்பட்டார் என்பதனை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
ஒரு அறிஞர் தனது நடவடிக்கை தொடர்பில் சரியான முடிவினை மேற்கொள்ளும் போது இரு மடங்கு கூலியை பெற்றுக்கொள்கின்றார். அவர் தீர்மானித்த விடயம் தவறுதலாக காணப்படுகையில் அல்லாஹ்விடம் இருந்து ஒரு கூலியை பெற்றுக்கொள்கின்றார். மாணவர்கள் தமது வழிகாட்டிகளான அவர்கள் தீர்மமானித்த சரியான விடயங்களுக்கு நற்கூலி வழங்க பிராத்திப்பதுடன் அவர்களது தவறான தீர்மானங்களுக்கு மன்னிப்பளிக்குமாறு அல்லஹுதாலாவிடம் மிகவும் கண்ணியமான முறையில் பிராத்திக்க வேண்டும்.
ஆசிரியர்களுடன் பேணவேண்டிய நற்பழக்கங்கள்.
மாணவர்கள் தமது ஆசிரியர்களை தெரிவு செய்கையில் அவர்களின் மார்க்கப்பற்று, பக்தி, இதயசுத்தி, இஸ்லாமிய பங்களிப்பு என்பனவற்றினை கருத்திற்கொள்வது அவசியமாகும்.
இப்னுசிறின் உட்பட பல அறிஞர்களின் கூற்று யாதெனில் "அறிவு என்பது மார்க்கத்திற்காகவாகும். நீ உனது மார்க்கத்ததை எங்கிருந்து பெற்றுக்கொள்கின்றாய் என்பதில் கவனமாயிரு” என்பதாகும்.
ஆல் ஹாதிப் அல்- பக்தாதி கூறினார்கள்; "எவர்கள் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதான மார்க்கத்தில் உள்ளனரோ, எவர்கள் தமது தொழில்களிலும், புகழுக்குரிய நடத்ததைகளிலும் நல்லவர்களாக திகழ்கின்றனரோ அத்தகையவர்களை மாணவர்கள் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.”
மாணவர்கள் தமது ஆசிரியர்கள் முன்னிலையில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ளவேண்டும் என்பதுடன் அவர்களுக்கு மரியாதை அளிக்கவும் வேண்டும்.
"உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ்வோ நீங்கள் செய்தவற்றினை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." (அல் முஜாதலாஹ்: 11)
உபாதாஹ் பின் அல் ஸாமித் (றழி) அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்; "வயோதிபர்களுக்கு மரியாதை செய்யாதவனும், சிறுவர்களுக்கு கருணை புரியாதவரும், இன்னும் எமக்குள் வேறுபாடுகள் காட்டுபவனும் என்னைச் சேர்ந்தவன் அல்ல.” (முஸ்னத் அஹமத். 21693, மஜ்மா அல் ஜவாயித்.1/127)
மாணவர்கள் தமது ஆசிரியர்களின் செயற்பாடுகளிலும், அவர்களது நடத்தைகளிலும் இருந்து நன்மையடையும் பொருட்டு அவர்களது போசிப்பில் அல்லது பாதுகாவலில் தங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மாறாக நடப்பதனை தவிர்ந்து கொள்வதுடன் அவருக்கு இணக்கமான பண்பான முறையில் தமது நடவடிக்ககைகளை மாற்றி திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் ஆசிரியர்கள் முன்னிலையில் மிகவும் கண்ணியமான முறையில் ஒழுக்கமாக அமர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஆசிரியரது மனதினை எந்த வகையிலும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது.
"எந்த மனிதருக்கும் அவனுடைய உட்புறத்தில் இரண்டு இதயங்களை அல்லாஹ் அமைக்கவில்லை.” (அல் அஹ்ஜாப் : 04)
ஆசிரியர்கள் தமது மாணவர்களுடன் சிலவேளை கடுகடுப்பாக அல்லது கண்டிப்பாக, கோபமாக நடக்க நேரிடலாம். இவற்றை மாணவர்கள் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொள்வதுடன் அவ்வாறான நடத்தைகட்காக அவர்களை மன்னிப்பது சால நன்றாகும். மாணவர்கள் தமது ஆசிரியர்களிடம் வினாக்களை தொடுக்கும் போது மிகவும் பயனுள்ளவகையில், ஒழுக்கமான முறையில் அதனை தொடுக்க வேண்டும். மேலும் ஏதுவான முறையில் அறிவை பெற்றுக்கொள்வதற்காக வினாக்களை கேட்பது மிகவும் நல்லதொரு அணுகுமுறையாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் மௌனம் சாதிப்பார்களானால், மாணவர்கள் அவர்களை விடையளிக்கும்படி அழுத்துவது கூடாது.
"உங்களுடைய அறிவை நீங்கள் எவ்வாறு சம்பாதித்தீர்கள் என இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'வினாக்களை கேட்கும் நாவுடனும், இதயத்துடனும்தான்” என பதிலளித்தார்கள்.
மாணவர்கள் குறித்த விடயம் பற்றி ஏற்கனவே நன்றாக கற்றவர்களாக இருப்பினும் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். ஒரு மாணவனது அறிவின் வெளிப்பாட்டினை புரிந்துகொள்ள அத்தகைய செயற்பாடு மிக உறுதுணையளிக்கும்.
சக மாணவர்களுடன் பேணவேண்டிய நற்பழக்கங்கள்.
மாணவர்களுடைய அறிவென்பது அவர்களது சக நண்பர்களுடன் பழகுகின்ற வேளை மிகவும் தாழ்மையானதாக இருக்க வேண்டும். அவர்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் உயர்த்திப் பேசுவது கூடாது. ஒருவர் நல்ல ஞாபக சக்தி உடையவராகவோ அல்லது துரிதமாக விளங்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றவராகவோ இருப்பாரெனில், அது அல்லாஹ்வின் அருளின் வெளிப்பாடு என அறிந்து கொள்வதுடன் அதற்காக அந்த வல்ல நாயனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
மாணவர்கள் தமது சக நண்பர்களுடன் பேணுகின்ற உறவுமுறையானது அவர்களுடைய அறிவு விருத்திக்கு வித்திடுவதாக அமைந்திருப்பது அவசியமாகும். எதனை அவர்கள் கற்றிருக்கின்றார்களோ அவை பயனளிக்கும். இதற்காக அவர்கள் பெருமையடிப்பது கூடாது.
அல் கலீல் பின் அஹமத் அவர்கள் ஒரு முறை 'நீங்கள் உங்களுடைய இவ்வாறான எல்லா அறிவையும் எவ்வாறு பெற்றுக்கொள்வீர்கள்? எனக் கேட்கப்பட்டார். அதற்கவர்கள் 'நான் அறிஞர்களை சந்திக்கும் வேளையெல்லாம் அவர்களிடம் இருந்து அறிவை எடுத்துக்கொள்வதுடன், அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்” எனப் பதிலளித்தார்கள்.
ஒரு மாணவன் தன்னுடைய நிலைபேற்றிற்காக எவற்றின் மீது அவாக்கொண்டு தன் காரியங்களை முன்னெடுக்கின்றானோ அதே போன்று தமது சக தோழர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என விருப்பங்கொள்ள வேண்டும். இயலுமான வகையில் ஏனைய வகுப்பு தோழர்களுக்கு தூண்டுதல் அளிப்பதுடன், உதவுதல் அவசியமாகும்.
இதேவேளை, ஒவ்வொருவரும் தம்மை சுற்றியுள்ள ஏனைய தமது சகோதரர்களை கேலி செய்யக் கூடாது. தம்முள் ஒருவரை ஒருவர் சிறியவர்களாக எடைபோடுவதாக அல்லது வஞ்சக உணர்வுடன் நோக்குதல் கூடாது.
தமது தனிப்பட்ட நடத்தைகளில் பேணவேண்டிய ஒழுங்குகள்.
அறிவென்பது கற்றதனை செயற்படுத்துவதாக காணப்படல் அவசியமாகும்.
"எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப் பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளை சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பானது போலாகும்.” (அல் ஜும்ஆ : 05)
இறுதித் தீர்ப்பு நாளின் போது ஒவ்வொரு முஸ்லிமும் நான்கு விடயங்கள் பற்றி குறிப்பாக கேட்கப்படுவதுடன், அவற்றில் ஒன்று உனது அறிவை எவ்வாறு நீ பயனுறச் செய்தாய்? என்பதாகும்' என ஹதீஸ் கூறுவதனை நாம் காணலாம்.
அல் ஸாபியி அவர்கள் கூறினார்கள் "நாங்கள் எங்களுடைய ஹதீஸ் பற்றிய ஞாபகத்தினை அதிகரிக்கவாக அதனை நடைமுறைப்படுத்தினோம். ஹதீஸ் பற்றி நாங்கள் கற்றுக் கொள்ள உதவியாக நோன்பிருந்தோம்.”
வாகிப் பின் அல்-ஜராஹ் கூறுகிறார்கள்; "ஹதீஸ்களை நீ ஞாபகத்தில் பாதுகாக்க வேண்டுமானால் அதனை உனது வாழ்வில் நடைமுறைப்படுத்து.”
மாணவன் ஒருவன் தான் ஆசானிடம் கற்றுக்கொண்ட அறிவினை, அதன் நிறைவான ஆளுமைத் திறன்களை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
மாலிக் (றழி) அவர்கள் "எனது தாயார் எனக்கு ஆடையை உடுத்தி றாபியாவிடம் சென்று நல்ல அறிவினை கற்றுக்கொள்ள முன்பதாக நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள் எனப் பணித்தார்கள்” எனக் கூறினார்கள்.
அப்தில்லாஹ் பின் அல் முபாறக் கூறுகிறார்கள்; "அறிவை சம்பாதிக்க முன்பதாக நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். மேலும் கூறுகையில் நல்ல பழக்க வழக்கங்கள் என்பது அறிவில் மூன்றில் இரண்டு பங்காகும்.”
அபூ ஸகரிய்யாஹ் அல்- அன்பாரி கூறினார்கள்; "நல்ல பழக்க வழக்கங்கள் இல்லாத அறிவென்பது எண்ணை இல்லாத நெருப்பு போன்றதாகும். அறிவற்ற நிலையில் காணப்படும் நல்ல பழக்க வழக்கங்கள் என்பது ஆத்மாவை கொண்டிராத வெற்றுடல் போன்றதாகும்.”
மாணவர்கள் தமது கற்றல்; நடவடிக்கையில் கடின உழைப்பும், ஈடுபாடும் கொண்டிருத்தல் வேண்டும். கடுமையான பௌதீக உழைப்பின்றி அறிவைப் பெற்றுக்கொள்வது இயலாது. ஏதுவான நேரங்களை கொண்டிருக்கும் வேளையெல்லாம் அறிவை சம்பாதித்துக்கொள்வதில் கவனயீனமாகவோ அல்லது அசமந்தமாகவோ இருத்தல் கூடாது. சிலர் எந்த வேளையிலும் ஈடுபாட்டுடன் வேலையில் முழ்கியிருப்பர்கள். இத்தகையவர்கள் மன்னிக்கப்படக் கூடியவர்கள். மாணவன் ஒருவன் எப்போதும் தனது அறிவினை வளர்த்துக்கொள்ள முனைய வேண்டும். மாறாக, தான் கொண்டிருக்கின்ற அறிவு போதுமானது என சிந்தையில் அகந்தை கொண்டிருத்தல் ஆகாது. அவனது இலக்கு 'இறைவா! எனது அறிவை விருத்தி செய்வாயாக” எனும் பிரார்த்தனையாக அமைதல் வேண்டும்.
கற்றலுக்கான பொது விதி யாதெனில், மாணவனது கற்றலானது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவர் ஒரு சந்தர்ப்பத்தில் ஓரிரண்டு ஹதீஸ்களை கற்றுக்கொள்ள முடியும். எவர் ஒருவர் யாவற்றையும் ஒரே மாத்திரத்தில் கற்றுக்கொள்ள விளைகின்றாரோ அவர் கற்ற எல்லாவற்றையும் ஒரே மாத்திரத்தில் இழந்துவிடுவார். ஆல்லாஹுதாலா தனது அருள் நிறைந்த வேதமான அல்குர்ஆனை நபியவர்களின் வாழ் நாட்களின் ஒவ்வொரு கட்டத்தில் இறக்கியதும், அதனை நடைமுறைப்படுத்த நபியவர்களுக்கு கட்டளையிட்டதும் அதற்கான நியாயமாகும்.
"இன்னும் மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும், நாம் அதனை படிப்படியாக இறக்கி வைத்தோம்.” (அல் இஸ்ராஹ் : 106)
அத்தோடு, மாணவர்கள் தம்முடைய நாளாந்த வாழ்வில் தாமாக அறிவை சம்பாதிக்க கூடிய வழிகளையும் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் அவசியம். அவர் எல்லாத் துறைகளிலம் அதனை வழக்கப்படுத்திக் கொள்ளல் இன்றியமையாததாகும்.
இமாம் அல் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் தனது இஹ்யா உலூம்-அல் தீன் (1ஃ55) ;
'பண்புள்ள கணிவான ஒழுக்கங்களையோ அல்லது அறிவின் ஏதாவது பிரிவுகளையோ மாணவர்கள் புறத்தொதுக்குதல் கூடாது. குறைந்தது தனது நோக்கங்களின் அடிப்படையில் அமைந்த பொதுவான விடயங்களிலாவது தனது அறிவுத் தேடல் முயற்சிகளை பழக்கப்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும். தனது வாழ்நாள் அனுமதிக்குமெனில் அவையாவும் பற்றிய முழுவிடயங்களையும் கற்றுக்கொள்ளல் வேண்டும். இல்லாவிடினும், தற்கால விடயங்களில் எவை முக்கிய விடயங்கள் என அறிந்து ஆர்வத்துடன் அவற்றிற்கு முன்னுரிமை அளித்து கற்றுத்தேற வேண்டும்.”
ஏனெனில், அறிவியலின் வௌ;வேறு பிரிவுகள் ஒன்றிலிருந்து ஒன்று ஏதாவது தொடர்பு கொண்டனவாக காணப்படுவதாலாகும்.
இவ்வாறான அறிவியலின் பல்துறைகளிலும் இருந்து ஒவ்வொரு அறிஞனும் பயன் பெறுபவனாக காணப்படுகின்றான். ஆனாலும் அவனது உறவின்மை அல்லது ஆர்வமின்மை காரணமாக அத்தகைய அறிவிற்கும் அவனுக்கும் இடையேயான உறவு துண்டிக்கப்படுகின்றது. எவற்றில் அறியாமையாக காணப்படுகின்றனரோ அவற்றில் தமது பரீட்சாத்தத்தினை அவர்கள் இழந்துவிடுகின்றனர்.
"மேலும் அவர்கள் இதனைக் கொண்டு நேர்வழி பெறாத போது இது பண்டைக்காலக் கட்டுக்கதைகள் எனக் கூறுகின்றார்கள்." ( அல் அஃகாப் : 11)
அறிவைத் தேடுகின்றவர்கள் தமக்கு தேவையெனக் கருதி எவற்றையெல்லாம் அறிவாக சம்பாதித்து வைத்துள்ளனரோ, அவற்றையெல்லாம் ஏனையவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "என்னிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது சிறிதளவாக இருப்பினும் அதனை பிறருக்கு எத்திவையுங்கள்.” (ஸஹீஹ் அல் புஹாரி. 3461)
0 comments:
Post a Comment