Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

கொண்ட வட்டுவானில் கோபுரத்துடன் ஒரு பள்ளி...

சம்மாந்துறைப் பெண்ணாள் எனும்
என் தாய் மண்ணின்...
கூந்தல் கோரி கொண்டை முடிய
ஊவா வெல்லஸ்ஸ பரணகம எனப் பரந்து
மலையும் காடும் என வாரி முடிந்து
கொண்டை வட்டுவானில் கோரி முடிய வேண்டும்....


அவள் கூந்தலில் விழுந்த மழைப்பால்
உருண்டு திரண்டு மதுரமாகி
இங்கினியா கலை எனும் மார்பில் தேங்கி
பட்டிப்பளை எனும் முலைக்காம்பினூடே
அமுதூட்டி பசிபோக்கி அரவணைத்தாள்
சம்மாந்துறை வேவகம்பற்று எனும் எம்பெருநிலத்தை.....

காலம் உருண்டோடிக் கயவர்கள் கண்குத்திக்
கூந்தல் முதற்கொண்டு வயிறுவரை
நம் தாயைச் சிறைபிடித்து
நமக்கே எல்லை இட்டார்...பாவம்....

போசாக்கு குறைந்து மந்த புத்திக் குழந்தைகளாய்
மாரி பார்த்து மழையைநம்பி
நாற்றுப் போடும் நாதாரிக் கூட்டமாயும்
நேரம் குறித்து அளவு பார்த்து தண்ணி திறக்க
அந்த மூத்திரத்தில் கரப்புக் குத்தி
விரால் பிடித்துப் பிடரி முறிக்கும்
போடி மார்களாயும் நாம்......இருந்துவிட்டோம்....

உள்ள மாட்டுக்குள் உரிய மாடறுத்து
உண்டு உரம் செய்த உழவர் கூட்டம் நாம்...
எருது பூட்டி ஏர் இழுத்து
எருது கொண்டே எம்மரமும் இழுத்து
வண்டி கட்டி வரலாறு படைத்த
மறவர் கூட்டம் நாம்....
மறந்து போனோம் நம் வரலாறு....

பட்டிப்பளை நீர் கொண்டு
பல் துலக்கி முகம் கழுவி
நீராடி நிலம் விதைத்து
பேரோடு வாழ்ந்த நாம்தான்
பட்டிப்பளையின் மூத்த பிள்ளைகள்...

பட்டிப்பளயாறும் அதன் நீரும் எமக்குத்
தாயும் தாய்ப்பாலும்.....

சென்ற போகமொன்றில் நடந்த கொடுமை ஓன்று
கேள்விபட்டேன் உம்மா....நெஞ்சு வெடிக்கின்றது...
நம் நிலத்துப் பயிர்கள் எல்லாம்
பசி கொண்டு பால் கேட்க
முலை தூக்கி விருப்போடு
பாலூட்ட வருகையிலே....

அவள் சுரந்த பாலை கொடுக்க மறுத்த
கொடும்பாவி மனிதர்கள் புரியும் சதியால்
பயிர்கள் இறந்து பாழாய்ப் போன
பரிதாபமொன்றும் நடந்துவிட்டதாம்....

பண்டாரத் தீவிலும் பதியத் தளவாயிலும்
உஹன மகா ஓயாவின் காடுகளிலும்
களனி கண்டு கால்நடை மேய்த்து
கருக்கொண்டு காலம் தள்ளிய முன்னோரின்
வேவகம்பற்று எனும் நமது தாய் மண்ணின்
வளம் நுகர வழியற்று வாழ்விழந்த கதை
வரலாறே நீ மறந்தாயோ....!

செத்தது பயிர்களல்ல...
நம் நிலத்தின் மானமும் ரோஷமும்...
நம் வீரமும் விவேகமும்......
ஒற்றுமை அற்று விமர்சனம் கூடி
பொறாமை எரிச்சல் எல்லாம் சேர்ந்து
சீரழிந்த சமூகமாய் இன்று நாம்.....

சாதிக்கும் வெறி நமது மக்களிடம் இல்லை
தட்டிக் கொடுக்கும் தாராளமும் இல்லை.....

வீரம் என்பது விமர்சனம்தான் என
விவாதிக்கும் வீணர் கூட்டம்
விடியலைத் தேடி வெளிச்சத்தில் அலைகின்றார்....

பட்டிப்பளை என்னும் நாம் தாயை
கோம்பை மட்டையும் ஓலையும் இளக்கி
மாடும் ஆடும் இன்னும் பிறவும்.....சுகிக்கட்டும் என
கொளனிகளில் கால் கழுவ விட்டுவிட்டு ...

நம் குடலைப் பயிர்களை நீரின்றிக் கொல்ல
நாம் என்ன சூப்பி மிட்டாய் வீரர்களா....?
வெறிகொண்டு போராட மனமிங்கு நினைக்கின்றது
பறி கொண்ட எம் நிலத்தின் பவிசுகள் எல்லாமே
தறிகெட்ட மூடர்கள் தத்துக் கொடுத்தாரோ....
அறிவேன்...அறிவேன்....எம்வரலாறு
பின்னர் துணிவேன்...துணிவேன்......புது வரலாறு...
நான் கொண்ட லட்சியங்கள் பல
அதிலே இதுவும் ஓன்று.....
கொண்டவட்டுவானில் ஒரு பள்ளி கோபுரத்துடன் அமைப்பது .........


நன்றி முகம்மத் சனூஷ்
( கடந்த மகா போகத்தில் நீரில்லாமல் இறந்து போன என் மக்களின் உயிர் நாடியான வெள்ளாமைகளை நினைத்து வேதனையுடன் எழுதப்பட்டது......)

தயவு செய்து நிறுத்து


நீ என்னில் எதைத் தேடுகிறாய்
எனது புன்னகையை கனவுகளை,
கவிதைகளை - என்னில்
எதைத் தேடுகிறாய்.

தயவு செய்து உனது பார்வையை நிறுத்து
அது எனது ஓவியங்களை அசிங்கப்படுத்துகிறது.

உனது தாளத்தை நிறுத்து
அது எனது பாடலை காயப்படுத்துகிறது.


உனது புன்னகையை நிறுத்து
அது எனது உதடுகளை சிரமப்படுத்துகிறது.

தயவு செய்து உனது புகழ்ச்சியை நிறுத்து
அர்த்தமற்ற போலி வார்த்தைகளை
நீ எனக்கு பரிசளிக்கிறாய்.

அய்யகோ!
தயவு செய்து உனது சொற்பொழிவை நிறுத்து
அது எனது நேரங்கைளை கொன்று குவிக்கிறது.

எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு
எனது கவிதைகளை செவிமடு,
என்னைக் கனவுகள் காணவிடு
உன்னைப் போலவே நானும் எலும்புகளாலும்
தசைகளாலும் உணர்வுகளாலும் ஆக்கப்பட்டிருக்கிறேன்.

முன்னேற்றங்களை நோக்கி நானும் முகம்
திருப்பவே விரும்புகின்றேன்.
முறிப்புகளை நிகழ்த்தி உண்மையான உலகத்தையே
கண்டடைய விரும்புகின்றேன்.

தயவு செய்து நிறுத்து,
என்னை கனவுகள் காணவிடு,
உன்னைப்போலவே நானும் எலும்புகளாலும்
தசைகளாலும் உணர்வுகளாலும்தான் ஆக்கப்பட்டிருக்கிறேன்.

நீதான் காரணம்...காலம் நேரம் என்பனவை கடந்து...

ஏன் எனக்கு மட்டும் இப்படி
இல்லாத ஒன்றை இருக்கும்படி ஏவுகிறது.
நீ இருக்கிறாய் - நான்
இல்லையென்று கூறவில்லை.
உண்மைதான்.

எனக்கென்று இருப்பது
எதிர்காலம் மட்டும்தான்.
என்னவோ - உனக்கு அது
இறந்த காலமாக இருக்கலாம்.
எனக்கு கவலை இல்லை.

ஆத்மாக்களோடு ஆத்மாத்தமாக வாழ்ந்தவன்
நான் - இன்று அலைக்களிக்கப்படுகிறேன்.
ஒரு ஆத்மாவின் -அஹிம்சை
அரசாள்வதானால்.

எனக்கு மட்டும் என்ன நேர்ந்தது ?
இப்படி ஒரு மாற்றம்?
எரிச்சலாய் இருக்கிறது.

ஏமாற்றம் மட்டுமானால்,
எதிர்காலம் என்னவாகும்.
கனவுகளுக்கு காரணம் சொல்வது யார்?
கடல் அலைகளும் கரை ஒதுங்குகின்ற போது,
காரணங்கள் ஏன் காணாமல் போகின்றன,
உனக்கு தெரியுமா ?

நீ கேட்கலாம் ,
என்னிடம் ஏன் இந்த கேட்பு என்று.
நீதான் காரணமாயிற்றே !
நானும்தான் ஒரூ காரியம் செய்தேன்.
அது உனக்கு தெரியும்.
நன்றாக தெரியும்.

என் காரியங்களுக்கு பல காரணங்களை
நீ தைத்து வைத்தபோதிலும் கூட,
காரியம் பற்றி நீ ஏன் அங்கலாய்க்கின்றாய்?

ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
காரணம்,
காரியம்,
எவராயினும், எதுவாயினும்,
பதில் கூறியே ஆகவேண்டும்.

அப்போது என்கனவுகள்
உன்னை குற்றப்படுத்தும்,
குற்றம் சாட்டும்,
காரணமாய் நீ சஞ்சலப்படுவாய்.
என் காலங்கள்
சாட்சி கூறும்,
வாழ்கையின் வாசல் உன்னை திட்டி தீர்க்கும்.
வருகின்ற வார்த்தைகள் எல்லாம்
உன்னை வசை பாடும்.

உன் மனம் எங்கோ,
எதையோ தேடி தவிக்கும்,
ஏக்கம் எரிச்சலூட்டும்,
உன் வாழ்விக்கும், காலத்திற்கும் இடையே
இடைவெளி நீளும்,
நான்,
என் வாழ்வு, சுருக்கமாய் இருக்கும்.
வஞ்சனை நிறைந்த வாழ்வில் வேயப்பட்டவன் ஆதலால்.

இறுதியில்,
உன் இரவுகள் எனக்கு வெளிச்சமாயிருக்க,
கனவுகள் அலைந்து திரிந்து
நிறைவேற துடிக்க,
எடுத்து வைத்த காரியங்கள்
நிறைவேறாது போக,
அத்தனை காரியங்களும் வசை பாடியாவது
உன்னை வஞ்சம் தீர்க்கும்.
ஈற்றில் என் ஆத்மா எங்கோ சென்றிருக்கும்,
காலம் நேரம் என்பனவை கடந்து...

நீதான் என் சமுதாயமே!

என்னை மன்னித்து விடு,

இத்தனை நாளும் மயங்கிக்கிடந்ததும் - உன்னால்தான்

விழித்துக் கொண்டதும்.

தடுக்கி விழுந்ததனால்

மயங்கிக் கிடந்தேன்.

யாரோ! என்னை தட்டி எழுப்பியது,

என்ன? என்று கேட்டேன்

எழுந்துவிடு என்றாள்.

என்னை மன்னித்து விடு.

மயங்கிக் கிடந்ததும் உன்னால்தான்.

விழிக்க வைத்ததும், நீதான்.

நான் கவலைப்பட்டு

துக்கித்துக் கிடந்தபோது,

கிடைத்த மலர் வளையங்கள்; கூட

முட்களோடுதான் கிடைத்தன.

என்னை மன்னித்துவிடு.

மயங்கிக் கிடந்தது நான்தான்.

நான் கனத்தால் உயரும் போதெல்லாம்,

நீ மௌனத்தால் உயரமானாய்.

என்னை மன்னித்து விடு.

என்னை மன்னித்துவிடு,

மயங்கிக் கிடந்தது உன்னால்தான்.

வானளவு வஞ்சிக்கப்பட்டதும்,

வக்கிர மௌனத்தினால்

என்னை,

என் ஆத்மாவினை,

உன் தேச எல்லைகளை விட்டும்

விரட்டடிப்பு செய்ததும்,

நிச்சயமாக நீதான்.

மயங்கிக் கிடந்ததும்,

விழித்துக் கொண்டதும்

உன்னால்தான்.

வாழ்க்கையில் கதியற்று,

கண் குழிக்குள் கனதியில்லாமல் - நான்

வாடியதன் விசாலத்தினை அறிந்து,

கண்ணீரும் பஞ்சப்பட்டன.

என்னை மன்னித்துவிடு.

மயங்கிக் கிடந்தது நான்தான்.

மனத்தின் வேகம்

புவியை முறியடித்து

பூகம்பத்தினையுண்டாக்கியிருந்தது.

புத்தம் பதிதாக கிடைக்க விரும்பிய நான்,

சிதறுண்டு சின்னாபின்னமாக்கப்பட்டேன்.

தூங்கிக் கிடந்ததும் உன்னால்தான்.

வறண்ட நிலத்தில்

வாழ்க்கையின் தோல்வி.

வெற்றி தெரிந்தது,

வென்றவர்கள் எல்லோரும் - வரிசையில்

காத்து நின்றவர்கள்.

என்னையும் வரிசையில் நிறுத்தியிருந்தது,

வாழ்க்கை.

மயங்கிக் கிடந்ததும் உன்னால்தான்.

சாகக்கிடந்த போதும்

சவுக்கால் அடிவிழுந்தது.

வலிதாங்க,

வழியுணர,

உயிர்மட்டும் மீதமிருந்தது.

தசை நார்கள் மரத்துப்போய்

மறுக்க,

காலம் என்னை வேரோடு பிடுங்கி

தூர எறிந்திருந்தது.

என்னை சாவுண்டு,

சுவக்குழிக்குள் வைத்து

அள்ளியெறிந்த மண்கள் கூட

உதைத்தன.

சம்பிரதாயங்கள் சாமர்த்தியமாக

பழிவாங்கின - இன்னும் துடித்தன.

என்னை மன்னித்துவிடு,

நான் மயங்கிக் கிடந்தேன்.

என்னுள் முடக்கப்பட்டிருந்த

சிந்தனைகள்,

கற்பனைகள்,

கனவுகள்,

எட்டுத் திசைகளுக்கும் எகிறி ஓட,

கண்கள் தம் காட்சிகளால்

நம்பிக்கை இழந்து

கும்பம் விழ,

கடிவாளமிட்டிருந்த மூளைக்கும் பாரம் குறைந்து

கவுண்டுவிட,

நேரம், காலம், தூரம் யாவையும் கடந்து

உன் விதி நிசப்தமாயிருந்தது.

நிச்சயம் அது நீதான்.

என்னை மயக்கத்தில் கிடத்தியதும்,

என்னை விழிக்க வைத்ததும் - அது

நீதான்.

என்னை மன்னித்து விடு.

நீதான் - அது.

என்னை மன்னித்துவிடு,

எல்லாம் நீதான்.

மெல்லிய பனித்துளி


நினைவுகளை
சொட்டு சொட்டாய்
இதயத்தில் விழச் செய்யும்
அந்த இரவு.

வீசிச் செல்லும்,
சில்லென மேனி சிலிர்க்கும் - தென்றெலில்
தலை சாய்க்கும்,
மணம் சுகக்கும்
மரங்களும் - ஒரு நொடி
செவி சாய்க்கும்.
அவள் அழகை அறிய
ஆவலாய்...

சொற்கள் கூட்டம்
ஓட்டமெடுப்பதால்,
சொல்ல மறுக்கும்
இதயம்.
உயிர் தேடிச் செல்லும்,
அவ்வழகின் அம்சத்தையாவது
அடைந்து கொள்ள...

மெல்லிய பனித்துளியில்
கதிரானின் ஒளிக்கீற்று
அவள் திருமுகம் காணும்.
விடிய,
என் வந்தனம் எடுத்து
என் அன்புக்கு சென்றிருக்கும்,
என் நிலாவே...!
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger