Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

உணர்ச்சிகள்

ஓவ்வொரு மனிதனும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றான். சாதாரணமாக நம் அனைவருக்கும் இருக்கின்ற உள்ளுணர்வுகளே உணர்ச்சிகளாகும். வாழ்க்கையின் பல்வேறு படி நிலையின் போதும் அந்தந்த கனத்து அனுபவங்களின் பிரகாரம் பல்வேறு விதத்திலும் பல்வேறு பருமனிலும் வெளிக்காட்டப்படும் பதிதற் செயற்பாடுகளே அவை.
உணர்ச்சிகளை நல்லவை எனவும் கூறமுடியாது. கெட்டவை என்றும் சொல்லிட இயலாது. ஓவ்வொரு நிகழ்வுகளையும் நாம் எவ்வாறு எதிர்கொள்கின்றோம் என்பதன் பிரகாரமும், எமக்கு என்ன நேரிடுகின்றது மற்றும் அவ்வனுபவத்தினை நாம் எவ்வாறு துணிகின்றோம் என்பதன் மூலமும் நாம் யாவரும் இவ் உள்ளுணர்வுகளை அனுபவிக்கின்றோம். நேர் நிலையிலான மற்றும் எதிர் நிலையிலான உணர்ச்சிகள் இரண்டுமே வாழ்க்கை அனுபவங்கள் மட்டிலான இயல்பான பதிதற் செயற்பாடுகளாகும்.

ஒன்றில் நாம் எமது உணர்ச்சிகளை பயன்படுத்தலாம் அல்லது உணர்ச்சிகள் எம்மை பயன்படுத்த அனுமதிக்கலாம். அதாவது, நாம் தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தலாம் அல்லது உணர்ச்சிகள் எம்மை கட்டுப்படுத்த விட்டுவிடலாம். உணர்ச்சிகள் எப்போதும் உடல், உள ரீதியான விளைவுகளை தன்மயப்படுத்துகின்றன. வாழ்க்கையில் இருந்து ஒருவர் பெறும் திருப்தியின் அளவு, பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏற்படும் வெற்றியின் மட்டம், பிறருடனான உறவில் காணப்படும் திருப்தி, வாழ்க்கையில் கிடைக்கும் உடல் சார் நன்னிலையின் அளவையும் உணர்ச்சிகள் மறைமுகமாக தீர்மானிக்கின்றன.

அதனால், உடல் மற்றும் உள ரீதியான விளைவுகளை உணர்ச்சிகள் கொண்டுள்ளன. நேர் நிலையான உணர்ச்சிகள் மகிழ்ச்சியினை தருகின்றன. ஆனால், எதிர் நிலையான உணர்ச்சிகள் மகிழ்வற்ற நிலையை தோற்றுவிக்கின்றன. ஒவ்வொருவருடைய வாழ்விலும் இவ்வுணர்ச்சிகள் இன்றியமையாதவையாகும். எதிர் நிலை உணர்ச்சிகள் விரும்பத்தகாதவை. இவை பொதுவாக தனிப்பட்ட நபரினது நடத்தைகள், தேவைகளை பூர்த்தி செய்வதனை அல்லது குறிக்கோள்களை எய்துவதனை நோக்காக கொண்டிருக்கும். நபரினது நடத்ததைக்கான காரணத்தினை நாம் அறியாதிருக்கலாம். ஆனால், நபரொருவர் முன்வைக்கும் எந்தப் பிரச்சினையிலும் உணர்ச்சிகள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. உணர்ச்சிகள் புறக்கணிக்கப்படின் பிரச்சினை எதுவென ஒருபோதும் தெளிவாக தெரியப்போவதில்லை.

எம் அனைவருக்குமே உணர்ச்சிகள் உள்ளன. ஆனால் அவற்றை விபரிக்க பெரும்பாலும் எமக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை. உணர்ச்சிகள் நல்லவையுமல்ல, கெட்டவையுமல்ல. அவைகள் தம்பாட்டிற்கு இருக்கின்றன. தான் உணர்ச்சிகளை கொண்டிருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. குறித்த ஒரு நபரின் சொந்தப் பார்வைக் கோணத்திலிருந்து பார்த்தால் அவற்றிற்கு எப்போதும் ஒரு பொருளிருக்கும்.

உணர்ச்சி ஒன்றை மறுப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது. எமது சொந்த உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உறுதியான எமது உணர்வுகளை மறைக்கும் போது அது மற்றவர்களை குழப்பலாம். எமது உணர்வுகளை ஏற்று அனுமதிப்பது எமக்கு கடினமாக இருப்பின், மற்றவர்களது உணர்வுகளை ஏற்று அனுமதிப்பதும் எமக்கு கடினமாகவே இருக்கும். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

எமது சொந்த உணர்வுகளை தெரிந்து கொண்டு அவை குறித்து எண்ணிப் பார்ப்போம். எந்த உணர்வுகள் அவற்றை நாம் அனுபவிக்கையில், எமக்கு மகிழ்ச்சி தருவதில்லை? எந்த உணர்வுகளை, அவை எமக்கு ஏற்பட்டிருக்க கூடாதென நாம் நம்புவதன் காரணமாக, அவற்றை மறுக்க முனைகின்றோம்? ஒருவர் எம்மை புகழ்கையில் நாம் எவ்வாறு உணர்கின்றோம்?; எந்த உணர்வுகள், அவை மற்றவர்களால் உணர்த்தப்படும் போது எம்மை சங்கடத்தில் ஆழ்த்துகின்றன? எமது உணர்வுகளிற் சில எம்மை அச்சுறுத்துகின்றனவா? கோபம், அங்கலாய்ப்பு, சங்கடம், ஆற்றாமை, அல்லது தர்ம சங்கடம் போன்ற உணர்வுகள் ஏற்படுகையில் வழமையாக அது குறித்து நாம் அறிகின்றோமா? நாம் இவ்வினாக்களுக்கு பதில் அளிப்பதன் மூலம் அவற்றை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

வெற்றி வேண்டுமா?

சிந்தனை செய், செயலில் இறங்கு, அதன் விளைவுகளை ஏற்றுக்கொள். அத்தகைய மனப்பக்குவத்தை அனைவரும் பெற்றிருப்பது அத்தியாவசியமானது. அதனால்தான் வள்ளுவர் “எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவது எண்பதிலிழுக்கு” என்றார். எடுத்த எடுப்பில் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எவரும் இல்லை. எதற்கும் ஒரு படிமுறையுண்டு. அவ்வாறெனில் வாழ்க்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாக சிந்தனை என்பன ஒருவரின் வெற்றிக்கு இன்றியமையாதனவாகின்றன. வாழ்வியலின் வெற்றிக்கான தடைகள் எமது சிறு பராயம் தொட்டே எம்மை பின்தொடர ஆரம்பித்து விடுகின்றன. என்றாலும் மற்றவரை விட எம்மிடம் இருக்கும் ஒரு மேலதிக திறமை எப்போதும் நம்மை சடுதியாக உயர இட்டுச் செல்லும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

முடியாது என்பதன் இயலாமை.

மனதில் ஏற்படும் தயக்கங்கள் எந்த ஒரு காரியத்ததையம்; செய்யவிடாது தடுத்துவிடும். ஒரு கலந்துரையாடலில் சென்று பங்கு பற்றும் ஒருவர் ஒரு கருத்ததை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார். பலரும் ஒவ்வெருவராக கருத்து தெரிவிப்பார்கள். இவரும் ஒவ்வொருவராக கருத்து தெரிவிக்கும் போது அடுத்து நாம் தெரிவிப்போம் என்று நினைத்து கொள்வார். இப்படி தனது வாய்ப்புக்களை ஒவ்வொன்றாக நழுவ விடுவர். அவரது தயக்கம் காரணமாக அவர் கூட்டம் முடியும் வரைக்கும் தனது கருத்தை தெரிவித்திருக்கமாட்டார். தயக்கமும், முடியாது என்ற சிந்தனையும் ஒரே வயிற்றுப் பிள்ளைகள்.

ஒரு விளையாட்டிலோ அல்லது செயலிலோ களமிறங்கும் ஒருவர் இரு நம்பிக்கைகளை தம்முள் மேற்கொள்ள முடியும். ஓன்று “நான் இந்த பந்தை பிடிக்காமல் விடமாட்டேன்” அல்லது இரண்டாவது “என்னால் அந்த பந்தை பிடிக்க முடியும்”. இவை இரண்டும் ஒரே கருத்துப்போன்று தோன்றினாலும், சிந்திக்கும் விதத்தில் வித்தியாசம் உண்டென்பதனை ஊன்றிக் கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். முதலாவதில் “பிடிக்காமல் விடமாட்டேன்” எனும் சிந்தனை தயக்கத்தையும், முடியுமா? என்ற நம்பிக்கையின்மையையும் காட்டுகின்றன. இரண்டாவது வாசகத்தில் “என்னால் முடியும்” என்ற நம்பிக்கை வெளிப்படுகின்றது. சில எண்ணங்கள், பலவீனங்கள் எமக்கு தெரியாமலேயே நம்மனதில் கூடுகட்டி குடியிருக்கின்றன. வேறுதிசை நோக்கி எம்மை இட்டுச் செல்லும் இப்படியான ஒரு விசயம் இருக்கின்றது என அறியாமலேயே நாம் இவற்றுக்கு அடிமைகளாக இருப்போம்.

வாழ்க்கைக்கு இலக்கு ஒன்றை வைப்பதும் அதனை நோக்கி நகர்வதும்.

எல்லா மனிதர்களும் ஒரு விடயத்தில் பொதுவானவர்கள். அதுதான் அவர்கள் எல்லோருமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஆனால் அதற்கான எந்த முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வது கிடையாது. இதனால் அவர்களின் பாடு பெரும் துன்பமாகத்தான் தொடர்கின்றது. ஆதலால், எல்லா மனிதர்களும் தாம் அடைய வேண்டிய இலக்கொன்றை அடையாளம் கண்டு அதனை நோக்கி தனது பயணத்தை தொடங்க வேண்டும் என்பதுடன் அதில் முன்னேற வேண்டும். அவ்வாறான இலக்கொன்றினை அடைவதன் மூலமே மகிழ்ச்சியான வாழ்வு ஒன்றை தமக்காக கட்டமைத்துக் கொள்ளலாம்.

இலக்கு ஒன்றை இனம் காணல்.

தெரிந்தோ தெரியாமலோ பலரது உள்மனதிலும் வாழ்வில் தாம் எதையாவது அடைய வேண்டும் என்ற உத்வேகம் ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கும். சிலருக்கு இதுதான் வாழ்வின் இலக்கு என்ற திட்டமிடல் இல்லாமலேயே அவ்விலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பார்கள்.

கனவுகள் காண்பது தவறல்ல. இவ்விதமான தீவிரமான கனவும், முயற்சியும் அவர்களுக்கு அபாரமான ஆத்ம சக்தியை வழங்குவதுடன் அற்ப ஆசைகளையும், சந்தோசங்களையும் தியாகம் செய்ய வைக்கின்றது. அதன் மூலம் வெற்றி என்ற இலக்கினை நோக்கி செல்ல முடிகின்றது. இவ்விதம் மிகுந்த ஆத்ம சக்தியுடனும், தன்னம்பிக்கையுடனும், தன்னை அறியாமலேயே தமது உள் மனதில் இலக்கொன்றை வைத்து செயற்படுபவர்கள் தாம் ஒரு இலக்கை வைத்து அதனை அடைய செயற்படுகின்றோம் என்பதனை அறியாமலேயே வெற்றியை நோக்கி செல்பவர்களாக இருப்பார்கள்.

ஆனால், இவ்வாறில்லாமல் நாம் அனைவரும் அறிவு பூர்வமாக இவ்வித இலக்கொன்றை தேர்ந்தெடுத்து அதனை கடும் முயற்சியினால் அடைவதன் மூலம் வாழ்வில் வெற்றி பெற முடியும். முதலில் இவ்வித இலக்கொன்றை இனம் காணல் வேண்டும். ஒவ்வவொருவர்க்குமான இலக்கு அவரவர் வாழ்வில் பொதிந்திருக்கும். சிறு பராயத்து அனுபவங்களில், அபிலாசைகளில், அவரவர்க்கான திறமைகளில், சிந்தனைகளில் பொதிந்திருக்கும். பொருத்தமான இலக்கு எது என்பதனை அவரவர்தான் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வாழ்வில் மிக முக்கியமாக என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதனை உங்கள் மனதிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்.

இலக்கு ஒன்றை இனம் காணல்.

ஊங்கள் இலக்குகளை சரியாக நிர்ணயித்துக்கொள்ள பின்வரும் அம்சங்களை கருத்திலெடுத்துக் கொள்ள வேண்டும்.

தெளிவானதாகவும் உறுதியானதாகவும் அமைதல் வேண்டும்.
அளவீடு செய்யக் கூடியதாக (measurable) இருத்தல் வேண்டும்.
அடையக்கூடியதாக (achievable) இருத்தல் வேண்டும்.
யதார்தத்மானதாக (realistic) பிரயோகிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
காலத்திற்குகந்ததாக (timely) இருக்க வேண்டும்.

அதற்காக பல கேள்விகளை நீங்களே எழுப்பி விடை காண வேண்டியிருக்கும். நீங்கள் தவறான இலக்கொன்றை வைத்து உங்கள் காலத்தினை வீணடித்துவிடாதிருக்க இது உதவும். வாழ்வில் வெற்றி பெறுதற்கான இலக்கு நோக்கி பிரயாணிக்கும் போது நமக்குள் உயர் நோக்கங்கள் இருக்க வேண்டும். அதன் பலா பலன்களுக்காக தமது உயர் நோக்கங்களை கைவிட்டு விடலாகாது. சுயநலன் மாத்திரமே தமது இலக்காக இருத்தல் கூடாது. குறுக்கு வழிகளில் உயர்ந்த இலக்குகளை அடைய முடியாது. குந்தகம், வஞ்சனை, சூழ்ச்சிகள், செய்து நமது இலக்கை அடைந்துவிட அணுவளவும் நினைக்கக் கூடாது. அதே சமயம் எமது சிந்தனைகள் சமூக அக்றையுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதனை மறந்துவிட கூடாது. இத்தகைய இலக்கினை நோக்கிய பயணத்தில் இடர்கள் என்பது சாதரணமாக வந்து சேர்ந்துவிடும். அவற்றை எதிர்கொண்டு வெற்றி கொள்ள எம்மிடத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும். பல பிரச்சினைகளிலும் இருந்து விடுபட அவை தொடர்பில் கேள்விகள் கேட்டு விடைகாண தமக்குள்ளையே பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும். சில வேளை பல கேள்விகளுக்கு எம்மிடத்தில் பதில் இல்லாமல் காணப்படலாம்;. இதன்பொருட்டு தளர்ந்து போய்விடக் கூடாது. நாம் கேள்வி கேட்டு விடை கண்டு எமது இலக்குகள் தொடர்பில் மாற்றங்கள் உண்டு பண்ணுவோமாயின் நாம் உரிய திசையில் பயணிக்கின்றோம் என கருதலாம்.

நமது இலக்கை கூர்மைப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள்.

நமது இலக்கு நோக்கம் என்பவற்றை அடிக்கடி கூறி வெளிப்படுத்தி மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
நமது இலக்கு நோக்கம் ஆகியவற்றை அடிக்கடி பொருத்திக்கொள்ள அல்லது சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
நமது இலக்கு நோக்கம் ஆகியவற்றை விசேட வார்த்தைகளால் எழுதி தொங்க விடுவதுடன் மந்திரம் போல் உச்சரியுங்கள்.
சிறுவயது முதல் மனதில் ஊதிக் கிடக்கும் அபிலாசைகளையே இலக்காகவும், நோக்கங்களாகவும் கொள்ளுங்கள்.
எந்த அளவுக்கு இலக்கு நோக்கி முன்னேறியிருக்கின்றீர்கள் என்பதனை அடிக்கடி மதிப்பீடு செய்து பாருங்கள்.

நம்முடைய நோக்கமும், வாழ்க்கையின் வெற்றி இலக்கும் கூட எமது வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்ததாக அமைதல் அவசியம். இலக்கு நோக்கிய பயணமும், நமது வாழ்வும் எப்போதும் சமாந்தரமாக செல்ல வேண்டும். நமது அவசியத்தேவைகள், நமது ஆசைகள், பிரார்த்தனைகள், எதிர்பார்ப்புக்கள், நமது கனவு, ஆர்வம் எல்லாமே ஒன்றை நோக்கியதாகவே இருக்க வேண்டும். அவ்விதம் அமையும் வேளைதான் நமது வெற்றியடைதலின் சாத்தியப்பாடு மிக அதிகமானதாக இருக்கும். நிச்சயமாக வெற்றி என்பது கசப்பான பல அனுபவங்களின் முடிவாகத்தான் இருக்கும். அப்போதுதான் நாம் அவ்வெற்றியின் மூலமாக அளவிலா ஆனந்தமும், களிப்பும் பெற முடிகின்றது. சாதாரணமாக ஒரு வெற்றி கிடைத்தால், அதனால் பெறுகின்ற ஆனந்தம் வெற்றியின் சுவையினையே இல்லாததாக மாற்றிவிடுகின்றதல்லவா?

வரலாறுகளை புரட்டிப் பாருங்கள். தட்டி அடக்கப்படுபவர்கள் எப்போதும் முட்டி மோதி எழுந்திருப்பார்கள். கட்டிப்போடப்படுபவன் கட்டவிழ்த்துச் செல்ல துடிப்பான். அளவு கடந்த வெள்ளம் மதகை உடைத்துக்கொண்டு பாய்ந்தோடும். தடைகள் தகர்க்கப்படுதற்காகவே போடப்படுகின்றன. முட்டுக்கட்டைகள் முறித்து எறியப்படல் வேண்டும். கதவுகள் திறப்பதற்காகவே மூடப்படுகின்றன. கடுமையாக முயற்சிப்பவனால் மாத்திரமே வாழ்க்கையின் பொற்கதவுகளை திறந்துகொண்டு பொக்கிசங்களை அடைய முடியும்.

எப்போதும் சோகத்தில் மூழ்கியிருப்பவர்கள் (Perpetual worriers)

சிலர் எப்போதும் தமது கவலைகளை நினைத்து, நினைத்து சோகத்தில் ஆழ்ந்து வெறித்து வெறித்து வெற்றாக இருப்பார்கள். தமக்கு மட்டும்தான் அத்தனை துன்பங்கள் வருகின்றன என்றும் ஏனைய அனைவரும் இன்ப வெள்ளத்தில் தத்தளிக்கின்றார்கள் என்றும் தாமாகவே நினைத்து உருகுவார்கள். வாழ்வில் இன்ப துன்பங்கள் தாமாக மாறி மாறி வருவது இயல்பு என்பதை அவர்கள் ஏற்க மறுப்பார்கள்.

அவர்கள்தாம் தம் பிறப்பிலேயே தம் தோள் மீது சிலுவை சுமத்தப்பட்டுவிட்டதாக எண்ணுபவர்கள். அவர்கள் துன்பியலின் சிற்பங்கள். துன்பம் என்பது தமக்காக எழுதப்பட்ட விதி எனக்கருதி அதனுள்ளேயே சீவனம் நடாத்துவார்கள். அவர்களால் மகிழ்ச்சி என்ற மறுபக்கத்ததை பார்க்கவோ, புரட்டவோ முடியாது.

இத்தகையவர்களுக்கு வெளிச்சமான உலகத்தில் இடமில்லை. ஏனையவர்கள் அவர்களை ஒதுக்கி, ஓரங்கட்டி விடுவார்கள். இவர்களிடம் திறமை இருந்தும் அதனால் ஒன்றும் நிகழப் போவதில்லை. இவர்கள் பிரசித்தியடைய மாட்டார்கள். துக்கம் ஊஞ்சலாடும் மூஞ்சி எனும் பெயர்தான் மிஞ்சும். கடந்த காலத்தினையே நிகழ்காலமாக நினைத்து துன்பித்திருப்பார்கள். அநேகமான வேளைகளில் பிரச்சினையே அல்லாத விடயங்களை பிரச்சினையாக்கி தலை மீது கவிழ்த்துக்கொண்டு கவிழ்ந்து போவார்கள்.

கடந்த காலம் என்பது ஒரு கதையின் முடிந்து விட்ட அத்தியாயம். எதிர்பாராத திருப்பங்களை அதில் காண முடியாது. நாம் புரட்டிப் பார்க்கப்போகும் பக்கங்களில்தான் புதிய கதை தொடரப் போகின்றது. வாழ்க்கை முழுவதும் சந்தோசங்கள் நிறைந்ததுதான். அவ்வப்போது வரும் துன்பங்கள்தான் மகிழ்ச்சிகளை மிகைப்படுத்துகின்றன. எல்லா பிரச்சினைகளுக்கும் எமக்குள்ளேயே தீர்வுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை கண்டுகொள்ளாமல் அடம் பிடிப்பதால் நாம் வாழ்க்கையின் பல உன்னதங்களை இழந்து போய் விடுகின்றோம். இப்படி வெற்று சிந்தனைகளினால் வேடிக்கையாக வாழ்ந்து மனம் வாடி, உழன்று, பிறரை நோகச் செய்து பின் மடிந்து போய்விடும் மனிதர்களில் ஒருவராக நாம் இருந்து விட வேண்டுமா?

நடந்து முடிந்த சோகங்கள் நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வருவது புத்திசாலித்தனமன்று. சிலதை மறக்கவும், மன்னித்து விடவும் மனதை பழக்கிக் கொள்வதே மகிழ்ச்சியின் மற்றுமொரு திறவுகோல்.

'ஆகையால் மன்னித்துவிடு, மறந்து விடு, மகிழ்ச்சி கொள்' என்பதனை மனதிலிருத்து.

மகிழ்ச்சியின் மூலாதாரம் மனநிலையே.

துயருறும் நிகழ்வுகளையும் சூழ்நிலைகளையும் அடிக்கடி நாம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகின்றது. இதனை சாதித்து வெற்றி பெறுவதன் மூலம் இவ்வாறான ஒரு வாழ்க்கையை அனுபவிப்பதனையே சிலர் விரும்புகின்றனர். இத்துயரங்களை நாம் ஆழ்ந்து சிந்திக்கும் போது அவை எமது செயலாக்கத்தின் வெறும் எதிர் விளைவுகளேயன்றி வேவறல்ல என்பதனை உணர்ந்து கொள்ளலாம். அவ்வாறெனில் சூழ்நிலைக்கேற்ப செயலாக்கத்துடன் சமாளிப்புக்களுடனும் சகிப்புத்தன்மைகளுடனும் நடந்து கொள்வோமானால் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிலையினை எய்த முடியும். அது எமக்கு வெற்றியாக கூட இருக்க முடியும்.

ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் நமது வீட்டு கடிகாரத்தினை நோக்குங்கள். அதனை நாம் வெறும் நேரத்தை கணிப்பதற்காகவே சுவரில் தூக்கி விட்டிருக்கிறோம். சற்று அதனை உன்னிப்பாக அவதானியுங்கள். அதன்மேல் தமது முழுக்கவனத்தையும் செலுத்துங்கள். அது இயங்கும் போது ஏற்படும் ஊசியின் சப்தத்தை உங்களால் கேட்க முடிகின்றதல்லவா? கடிகாரத்தின் ஊசி வழக்கம் போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அதன் சப்தத்தை சில வேளை எம்மால் கேட்கவும் இன்னும் சிலவேளை கேட்காமலும் இருக்க முடிகின்றது. இதற்கு காரணம் எமது மனமே அன்றி வேறெதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை.

வீதியில் ஒலி எழுப்பிக் கொண்டு செல்லும் வாகனங்களின் சப்தமோ அல்லது வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் தமது குழந்தைகளின் பெரும் கூச்சலோ தம்மை சிறிதும் பாதிக்காது உறங்கிக் கொண்டிருக்கும் அநேகமானோர் வீட்டினுள் நடப்பவரின் காலடிச் சப்தம் அல்லது அறையின் கதவு திறக்கப்படும் சப்தத்தினை கேட்டு விழித்துவிடுகின்றனர். நாம் பேருந்து ஒன்றிலோ அல்லது வேறு வாகனம் ஒன்றிலோ பிரயாணிக்கையில் பலத்த சப்தங்களுக்கு மத்தியில் உறங்கிக் கொண்டிருப்போம். திடீரென அருகிலிருந்தவர் அல்லது வாகன நடத்துணர் தம்மை எழுப்புவது கொண்டு நாம் விழித்துக் கொள்கின்றோம். ஊரத்த ஒலிகளையும் பேசும் சப்தங்களையும் சகித்துக்கொள்ளும் நாம் ஒரு மெல்லிய முணு முணுப்பிற்கு விழித்துக் கொள்கின்றோம். ஏப்படி?

இன்னும் சொல்கின்றேன் கேழுங்கள். நகரப் புறத்தில் இருக்கும் நாம் வழமையாக பிரயாணத்தில் ஈடுபடுகின்றோமல்லவா. இதன் போது தெருவோரங்களில் வசதியில்லாத பலர் கொட்டகைகளை அமைத்துக் கொண்டு சீவியம் நடத்துகின்றார்களே. வீதி வழியால் பாத சாரியாக செல்லும் நமக்கே சில வேளை அவ்வழியால் செல்லும் வாகனங்களின் இரைச்சலை சகித்துக் கொள்ள முடியாது போகின்றதல்லவா. அவர்கள் மட்டும் எப்படி நிறைவாக உறங்குகின்றனர்? எப்போதாவது நீங்கள் சிறிதாவது எண்ணிப் பார்த்ததுண்டா? எப்படி இவை சாத்தியம்?

உணர்ச்சி என்பது ஒளியை ஒத்தது. அணைந்த விளக்கு ஏற்றப்பட்டு ஒளி வீசும் போது பக்கத்திலுள்ளவையும் அவை மனதிற்கு உகந்தவையாயினும் அல்லவாயினும் கண்ணிற்கு புலப்படும். சுற்று சூழலில் எழுப்பப்படும் ஒலிகள் இயல்பாகவே செவ்வனே கேட்கும். ஆனால் சற்று சிந்தியுங்கள்...விளக்கின் ஒளி அணைந்த மாத்திரத்தில் வீதியில் எழும் ஒலி உரத்த வீச்சில் எழுந்தாலும் கூட காதில் விழுவதில்லை. யதார்த்தம் என்னவெனில் உறங்கிக் கொண்டிருக்கும் வேளை படுக்கையறையில் எழுந்த சப்தம் செவிக்கு எட்டியதற்கு காரணம் அவர்களுடைய புலணுணர்வுகளும் கவனமும் அதன்பால் ஈர்க்கப்பட்டதே. ஏனைய ஒலிகளைப் பற்றிய சிந்தனையை அவர்கள் அறவே ஒதுக்கி விட்டமையால் அவை அவர்களை பாதிக்கவில்லை. இருளில் எமக்கு பெரிய பெரிய பொருட்கள் எல்லாம் மறைந்து விடுவது போன்று வீதியில் எழும் உரத்த வீச்சிலான சப்தங்களும் மங்கிப்போகின்றன.

எனவே நாமும் எமது கவனத்தையும் புலணுணர்வுகளையும் வாழ்க்கையில் காணப்படும் எல்லா மனக் கவலைகளிலும் நலக்குறைவுகளிலும் இருந்து திருப்பி விட்டால் என்ன? பொதுவாக எல்லா மனக்கவலைகளும் வருந்துதல்களும் மனத்தினுள் ஊடுருவுவதில்லைளூ நாமாக உள்ளுணர்வுகளுடன் அனுமதிப்பன மட்டுமே ஊடுருவும். எனினும் எம்முள் பலர் தங்களை தாங்களே பலப்படுத்தி, உறுதிப்படுத்திக் கொண்டு வேதனைகளையும் குறைகளையும் களைய முன்வராதது ஏனோ? புரியவில்லை.

ஒத்த உடல்வாகு பெற்ற இருவர் சம இடையுடைய சுமையை சுமந்து செல்கின்றனர். இவர்களில் ஒருவர் தாம் சுமக்கும் பாரம் இரு மடங்கு எடையுடையது போன்று கனப்பதாக முறையிட்டு புலம்புகின்றார். மற்றவரோ தாம் எதையும் சமந்து செல்லாதது போன்று ஆடிப்பாடி சிரித்துக்கொண்டு செல்கின்றார்.

நோயால் வாடித் தளர்ந்து கிடக்கும் ஒருவர் தம் படுக்கையை நோக்கி பாம்பொன்று ஊர்ந்து வருவதனை அறிந்துகொண்டால் நல்ல உடல் பலமும் நலமும் வாய்ந்தவர் போல் செயற்படத் தொடங்குகின்றார்தானே. இதேபோன்று வேலையை முடித்து களைப்புடன் வீடுதிரும்பியதும் இளைப்பாற நாற்காலியை தேடும் ஒருவர் தனது முதலாளியோ அல்லது நெருங்கிய பால்ய நன்பனோ துர இடத்திலிருந்து தம்மை காண வீடு தேடி வருவதாக செய்தி கிடைத்தால் என்ன நிகழும்? தம்மை காண வரும் நண்பரை வரவேற்று உபசரிக்க அவர் வரமுன் குளித்து உடுத்தி ஆயத்தமாகி விடுவாரல்லவா? அல்லது அவர் வீட்டிற்கு வந்ததும் வராததுமாக பதவியுயர்வு கிடைத்திருக்கிற செய்தி அவருக்கு தெரிந்தால் உடனே அலுவலகத்திற்கு விரைந்தோடமாட்டாரா என்ன?

மனதினுள் புதைந்து கிடக்கும் ஆற்றலே ஒருவனது நல்வாழ்விற்கு மூலாதாரம். இது உண்மையெனில் நாம் அனைவரும் அத்தகைய ஆற்றல் கொண்டிருந்தும் அதனை உணராமல் இருக்கின்றோம் என்பதுதானே அர்த்தம். நீரிழிவு புற்று நோய் போன்ற நோய்களுக்கு ஆட்பட்டிருக்கும் சிலர் பிற்கால வாழ்க்கை பாழ்பட்டுவிட்டதாக வருந்தி தன்நம்பிக்கையை இழந்து விடுகின்றனர். இத்தகையவர்கள் உடல் நலத்தோடு இருந்த வேளை வாழ்க்கையின் ஒளி மயமான அம்சத்தினை சிந்திக்காமல் இருந்தது ஏன்? தற்போது பத்திய உணவினை கடைப்பிடித்து வரும் ஒருவர் சுகக்கேடு வரமுன் நல்ல உணவுகளை உட்கொளள் சிரத்தை எடுக்காதது ஏன்? நாம் ஒரு பொருளின் அருமையையும் பெருமையையும் அது தம்மை விட்டுப்போன பின்பே உணரத் தொடங்குகிறோமே அது ஏன்? முதுமையை கண்ட பின் இளமையை பற்றி சிந்திப்பதனால் எதைத்தான சாதிக்க இயலும்? மகிழ்ச்சி நம்மை விட்டு வெகு தூரம் சென்ற பின்பு அதனை தேடுவதும் உணரத் தொடங்குவதும் பயனளிக்குமா? அநேகமாக நாம் யாவரும் காலம் கடந்த பின் வருந்துவதேன்? தற்காலம் கழிந்து கடந்த காலமாகிட முன் அதனைப்பறி சிந்தித்தால் என்ன? இருட்டில் தொலைந்த ஒன்றை வெளிச்சத்தில் தேட முடியாதல்லவா.


மகிழ்ச்சிகாண் மனநிலையில் வாழ்தல் (Optimistic Attitude)

எல்லோரும் எல்லா நேரங்களிலும் மகழ்ச்சியாக இருப்பதில்லை. எந்த மனிதனும் எந்த பிரச்சினைகளின் போதும் மனதை தளரவிடாமல் மகிழ்ச்சிகாண் மனநிலையில் வைத்திருப்பானாகில் அதுவே அவனது வெற்றியின் இரகசியமாகும். உயர்வின் போது செருக்கு வந்து சேராமலும் தாழ்வின்போது தள்ளாமை வராமலும் காத்துக்கொள்வது இங்கு அவனுக்கு கைகொடுக்கும்.

எப்போதும் நல்லவற்றை விரும்புபவர்களுக்கு இருள் கூட வெளிச்சம்தான். கவலையை களிப்பாக்க முடியும். அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்ற முடியும். நம்பிக்கையில் இருந்து பிறந்ததுதானே அவநம்பிக்கை சற்று சிந்தியுங்கள். முன் விரக்தியே வாழ்க்கையின் வீணடிப்புக்கு காரணம். வாழ்வின் சூழ்நிலைகளை மகிழ்ச்கி காரணமாக மாற்றுதற்கு மனத்தை பயிற்றுவித்தல் அவசியம். உறக்கத்திலிருந்து உரிய நேரத்தில் எழுவதற்கு கூட முயற்சி ஒன்று அவசியம். தீர்மானம் செய்யும் ஆற்றல் தாம் ஒவ்வொருவரது கையிலும்தான் இருக்கிறது. பலரும் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கையில் சிலர் மட்டும் விழித்தெழுந்து தமது பிரயாணத்தில் வெகு தூரம் சென்றிருப்பார்கள். எதையும் செய்ய முன்னர் அதனை செய்து முடிக்க வேண்டுமென நம் மனது நினைக்க வேண்டும். மகிழ்ச்சி மனதிலிருந்தே உதிக்கின்றது.

பிறரை துன்புறுத்தி வாழ்பவர்கள் எமாற்று பேர்வழிகள் அதன் காரணமாகவே தமது மகிழ்ச்சியை இழக்கின்றார்கள் என்பதனை உணரமாட்டார்கள். அப்படி அவர்கள் உணரும் போது அவர்களது வாழ்வின் பெரும் பகுதியை இழந்திருப்பார்கள். அது சரி மகிழ்ச்சியான பழக்க வழக்கங்களை வளர்த்தெடுப்பது எப்படி? நாம் குறைந்தது ஒரு சில காலத்திற்கு ஒரு முறையாவது தம் வாழ்வில் என்ன நடந்தது என்பது பற்றி மீள்பார்வை செய்து பார்க்க வேண்டும். இங்கு மீள்பார்வை செய்யும் போது தம்மால் பிறருக்கு ஏதாவது தீங்கிழைத்திருக்கின்றோமா என்பதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பெரும்பாலும் எமது மனத்தின் இழுக்காறுகளே எமது மகிழ்சியான மனத்தினை நம்மிடம் இருந்து பறித்துக்கொள்கின்றது.

பொய், பொறாமை, வஞ்சகம், கோபம், இகழ்ச்சி, அகந்தை, ஆதங்கம், அநாகரீகம், மெத்தனம், சூழ்ச்சி, முறைகேடு, ஊழல், அதிகார வாஞ்சை, அதிகார துட்பிரயோகம் என்பன நமது பழக்க வழக்கங்களுள் புகுந்து கொள்ளுமாயின் அவை பிறர் வாழ்வில் துன்பங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி நமது உண்மையான மானிட வாழ்வை இல்லாததாக்கி விடுகின்றது. இதனால் அநேகமானோர் போலியான வாழ்க்கையைத்தான் வாழ்கின்றனர்.

கடந்த காலங்களை மீள்பார்வை செய்வதனால் அவற்றை சரி செய்ய முடியாது. ஆனால் இத்தகைய அனுபவங்களின் மீளாய்வினை எதிர்காலம் நோக்கிய மகிழ்ச்சியான அணுகுமுறைக்கு வழிகாட்டியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். கடந்தகால தவறுகளை எதிர்காலத்தில் விடக்கூடாதென மனதுக்கு அறிவுறுத்திக் கொள்ள வேண்டும். கசப்பான அனுபவங்கள் எமது எதிர்கால மகிழ்ச்சிப் பாதையின் படிக்கட்டுக்களாகவே அமைய வேண்டும். மனிதன் தன் குறைகளை தானே உணர்ந்து கொள்வானாயின் அவன் வாழ்வின் பாதியினை வெற்றி கொண்டுவிட்டான். தோய்வுபெற்ற கடந்தகால வாழ்க்கை முத்திரையிடப்பட்டு வாழ்வில் புதிய பதிய பிரகாசங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

சிலர் தமது வாழ்வில் குறுக்கிட்டு பல தொல்லைகளை எமக்கெதிராக கட்டமைத்திருக்கலாம். இதனால் பல தொல்லைகளை நாம் அனுபவித்திருப்போம். அதற்காக அவர்களை வெறுத்தொதுக்குவதாலோ, பழிக்குப் பழி வாங்குவதாலோ எந்த நன்மையும் விளையப் போவதில்லை. இவற்றை எண்ணி மனம் துன்பப்பட்டதுதான் எஞ்சும். பொறுத்தார் பூமியாள்வார் என்பது சான்றோர் வாக்கு. அதில் உண்மையில்லாமலில்லை. பொறுமையுடன் கூடிய சிந்தனைதான் மனித இனத்தின் மிகப் பெரிய வலிமை. ஏனெனில், எல்லோராலும் இப்படி இருந்துவிட முடியாது. இதனை அனுபவிப்பது கூட ஒரு சோதனையாகத்தான் இருக்கும். நீங்களும் அனுபவித்துப்பாருங்களேன்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசுவின் போதனையை கேட்டு சிலர் நகைக்கின்றனர். இதற்கு காரணம் அதன் உண்மை அர்த்தம் இவர்களின் அற்ப மனதுக்கு புரியாததுதான். மனிதன் உணர்ச்சியினால் நிறைந்தவன். இதனை கட்டுப்படுத்துவது மிகக் கடினமானது. பொறுமை காத்தல் இருளில் இருப்பவனுக்கு வெளிச்சம் கொண்டு வந்து சேர்க்கும். செல்லும் இடங்களில் செங்கம்பளம் விரிக்கும். சபைக்கு முதல்வனாக்கும். முகங்களில் புன்னகையை கொண்டு வந்து சேர்க்கும்.
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger