Showing posts with label காணி அபகரிப்பு. Show all posts
Showing posts with label காணி அபகரிப்பு. Show all posts

கொண்ட வட்டுவானில் கோபுரத்துடன் ஒரு பள்ளி...

சம்மாந்துறைப் பெண்ணாள் எனும்
என் தாய் மண்ணின்...
கூந்தல் கோரி கொண்டை முடிய
ஊவா வெல்லஸ்ஸ பரணகம எனப் பரந்து
மலையும் காடும் என வாரி முடிந்து
கொண்டை வட்டுவானில் கோரி முடிய வேண்டும்....


அவள் கூந்தலில் விழுந்த மழைப்பால்
உருண்டு திரண்டு மதுரமாகி
இங்கினியா கலை எனும் மார்பில் தேங்கி
பட்டிப்பளை எனும் முலைக்காம்பினூடே
அமுதூட்டி பசிபோக்கி அரவணைத்தாள்
சம்மாந்துறை வேவகம்பற்று எனும் எம்பெருநிலத்தை.....

காலம் உருண்டோடிக் கயவர்கள் கண்குத்திக்
கூந்தல் முதற்கொண்டு வயிறுவரை
நம் தாயைச் சிறைபிடித்து
நமக்கே எல்லை இட்டார்...பாவம்....

போசாக்கு குறைந்து மந்த புத்திக் குழந்தைகளாய்
மாரி பார்த்து மழையைநம்பி
நாற்றுப் போடும் நாதாரிக் கூட்டமாயும்
நேரம் குறித்து அளவு பார்த்து தண்ணி திறக்க
அந்த மூத்திரத்தில் கரப்புக் குத்தி
விரால் பிடித்துப் பிடரி முறிக்கும்
போடி மார்களாயும் நாம்......இருந்துவிட்டோம்....

உள்ள மாட்டுக்குள் உரிய மாடறுத்து
உண்டு உரம் செய்த உழவர் கூட்டம் நாம்...
எருது பூட்டி ஏர் இழுத்து
எருது கொண்டே எம்மரமும் இழுத்து
வண்டி கட்டி வரலாறு படைத்த
மறவர் கூட்டம் நாம்....
மறந்து போனோம் நம் வரலாறு....

பட்டிப்பளை நீர் கொண்டு
பல் துலக்கி முகம் கழுவி
நீராடி நிலம் விதைத்து
பேரோடு வாழ்ந்த நாம்தான்
பட்டிப்பளையின் மூத்த பிள்ளைகள்...

பட்டிப்பளயாறும் அதன் நீரும் எமக்குத்
தாயும் தாய்ப்பாலும்.....

சென்ற போகமொன்றில் நடந்த கொடுமை ஓன்று
கேள்விபட்டேன் உம்மா....நெஞ்சு வெடிக்கின்றது...
நம் நிலத்துப் பயிர்கள் எல்லாம்
பசி கொண்டு பால் கேட்க
முலை தூக்கி விருப்போடு
பாலூட்ட வருகையிலே....

அவள் சுரந்த பாலை கொடுக்க மறுத்த
கொடும்பாவி மனிதர்கள் புரியும் சதியால்
பயிர்கள் இறந்து பாழாய்ப் போன
பரிதாபமொன்றும் நடந்துவிட்டதாம்....

பண்டாரத் தீவிலும் பதியத் தளவாயிலும்
உஹன மகா ஓயாவின் காடுகளிலும்
களனி கண்டு கால்நடை மேய்த்து
கருக்கொண்டு காலம் தள்ளிய முன்னோரின்
வேவகம்பற்று எனும் நமது தாய் மண்ணின்
வளம் நுகர வழியற்று வாழ்விழந்த கதை
வரலாறே நீ மறந்தாயோ....!

செத்தது பயிர்களல்ல...
நம் நிலத்தின் மானமும் ரோஷமும்...
நம் வீரமும் விவேகமும்......
ஒற்றுமை அற்று விமர்சனம் கூடி
பொறாமை எரிச்சல் எல்லாம் சேர்ந்து
சீரழிந்த சமூகமாய் இன்று நாம்.....

சாதிக்கும் வெறி நமது மக்களிடம் இல்லை
தட்டிக் கொடுக்கும் தாராளமும் இல்லை.....

வீரம் என்பது விமர்சனம்தான் என
விவாதிக்கும் வீணர் கூட்டம்
விடியலைத் தேடி வெளிச்சத்தில் அலைகின்றார்....

பட்டிப்பளை என்னும் நாம் தாயை
கோம்பை மட்டையும் ஓலையும் இளக்கி
மாடும் ஆடும் இன்னும் பிறவும்.....சுகிக்கட்டும் என
கொளனிகளில் கால் கழுவ விட்டுவிட்டு ...

நம் குடலைப் பயிர்களை நீரின்றிக் கொல்ல
நாம் என்ன சூப்பி மிட்டாய் வீரர்களா....?
வெறிகொண்டு போராட மனமிங்கு நினைக்கின்றது
பறி கொண்ட எம் நிலத்தின் பவிசுகள் எல்லாமே
தறிகெட்ட மூடர்கள் தத்துக் கொடுத்தாரோ....
அறிவேன்...அறிவேன்....எம்வரலாறு
பின்னர் துணிவேன்...துணிவேன்......புது வரலாறு...
நான் கொண்ட லட்சியங்கள் பல
அதிலே இதுவும் ஓன்று.....
கொண்டவட்டுவானில் ஒரு பள்ளி கோபுரத்துடன் அமைப்பது .........


நன்றி முகம்மத் சனூஷ்
( கடந்த மகா போகத்தில் நீரில்லாமல் இறந்து போன என் மக்களின் உயிர் நாடியான வெள்ளாமைகளை நினைத்து வேதனையுடன் எழுதப்பட்டது......)

ஒலுவில் துறைமுகத்துக்காய் காணியை இழந்த மக்களுக்கு நிவாரணம் கிட்டுமா?

ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென 2008ம் ஆண்டு இரண்டாம் கட்டமாக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஸ்டஈட்டுத் தொகை சுமார் 5 வருடங்களாகியும் இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்க இடமின்றியும், வாழ வழியின்றியும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களது தற்போதைய நிலைமைகளை ஆராய்கின்ற போது பாரிய அநீதி இழைக்கப்பட்டு அவர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய நஸ்டஈட்டுத் தொகை வழங்கப்படாமல் மறுக்கப்படுமோ என்ற சந்தேகம் பிரஸ்தாப பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஸ்டஈட்டை பெற்றுக் கொடுப்பதில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் முதற் கொண்டு மக்கள் பிரதிநிதிகளும் மிகக்கூடிய கவனமெடுத்து தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஆவண செய்யப்பட வேண்டும் என்பதே இன்று பாதிக்கப்பட்டோரால் முன்வைக்கப்படும் கோரிக்கையாகும்.

இதுவிடயமாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது உள்ளக் குமுறல்கள் மற்றும் இன்றைய நிலை சம்மந்தமாக தெரிவித்த கருத்துக்களை இங்கு தொகுத்து தருகிறோம்.
காணிச் சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்ட எம்.ஐ.எம். அன்சார் என்பவர் கூறும்போது,


"ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக இரண்டாம் கட்டமாக 2008ம் ஆண்டு 48 போர்களின் காணிகள் சட்டப்படி சுவீகரிக்கப்பட்டன. சுவிகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2009ம் ஆண்டு அரச விலைமதிப்புத் திணைக்களத்தினால் விலை மதீப்பீடு செய்யப்பட்டன. அதில் பாதிக்கப்பட்ட 48 பேரில் எனது காணித்துண்டு உட்பட 32 பேரின் காணிகளுக்கு (11.18 ஹெக்டெயர்) மட்டுமே விலைமதிப்பீடு செய்யப்பட்டது."
"அதன் பிற்பாடு காணி உரிமையாளர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரினால் நஸ்டஈட்டுத் தொகை எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 32 பேர்களுக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஊடாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு 22 கோடியே 70 இலட்சத்து 97 ஆயிரத்து 460 ரூபா வழங்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் மேற்படி காணிகளுக்குரிய அரச விலை மதீப்பீடு அதிகூடியது என்ற யூகத்தின் அடிப்படையில் இதனைக் காரணம் காட்டி இலங்கைத்துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகளினால் இழுத்தடிக்கப்படுகின்றன."


பாதிக்கப்பட்ட குழுவினரால் இவ்விடயமாக இலங்கைத் துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகளிடம் வினவியபோது, அரச விலை மதிப்பீட்டுத் தொகை அதி கூடியது என்றும், அதனை வழங்குவதற்கு இலங்கைத் துறைமுக அதிகார சபையிடம் பணமில்லை என்றும் இவ்விடயம் சம்மந்தமாக ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கை கிடைத்தவுடன் நஸ்டஈடு வழங்குவது சம்மந்தமாக மேற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் சுமார் 105 பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எங்களது விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மனம் நொந்த நிலையில் இவ்விடயத்தில் விமோசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் உள்ளனர். மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட அவர்கள் இதுவரையில் மௌனிகளாய் இருப்பது மனவேதனையைத் தருகிறது. இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் மனித நேயத்துடன் நடந்து கொள்ள தவறி விட்டார்கள். பல நொண்டிச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இன்னும் நியாயமற்ற காரணங்களைக்கூறி காலத்தைக் கடத்துவது நாகரீகமற்ற செயலாகும்.


தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒலுவில் துறைமுகமும் மிக விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது. அதற்கு முன் எமக்குரிய தீர்வினை நாட்டின் தலைவரும் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜனாதிபதி அவர்கள் விரைவில் பெற்றுத்தந்து எமது துயர் துடைப்பார் என நாங்கள் நம்புகிறோம்.
மற்றுமொரு பாதிக்கப்பட்ட மசாயினா உம்மா என்ற பெண் (வயது-65) தனது கருத்தை வெளியிடும்போது,


"எனக்கு 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். ஒலுவில் துறைமுக வேலைக்காக எமது காணிகள் சவீகரிக்கப்பட்ட பிறகு எமது குடும்பத்துடன் சம்மாந்துறையில் வசித்து வருகிறோம். அடிப்படை வசதிகளற்ற களிமண் வீடு ஒன்றில் மிகச் சிரமத்திற்கு மத்தியில் நானும் எனது குடும்பமும் வசித்து வருகிறோம். நாங்கள் எமது ஒலுவில் காணியில் 40 வருட காலமாக வசித்து வந்தோம். அப்போது எனது கணவர் கூலித்தொழில் செய்து எங்கள் குடும்பத்தை நடாத்தி வந்தார். தற்போது வயது முதிர்ந்த நிலையில் வாழ்க்கையை ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பல வருசம் கடந்தும் எமது காணிகளுக்கான நஸ்டஈடு கிடைக்கவில்லை. இதில எங்கட துயரைத் துடைக்கிறதுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறுதான் நாங்க இப்ப கோரிக்க விடுக்கிறம்" என்று கூறினார்.
அதுபோல் மற்றொரு பாதிக்கப்பட்ட நபர் எம்.ஐ.மீராமுகைதீன் (வயது 50) கூறும்போது,


"எங்கட காணிகள ஒலுவில் துறைமுகத்த கட்டுறதுக்காக கேட்டாங்க. நாங்களும் அரசாங்கம் எடுத்தா நஸ்டஈடு தருவாங்கதானே எண்டு நம்பி காணிய நாட்டின் அபிவிருத்திக்காக கொடுத்தம். சுமாரா 5 வருசகாலம் போயிட்டு, நாங்களும் இப்ப வரும் அப்ப வரும் எண்டு காத்துக்கிட்டு இருக்கம். எங்கட குடும்பத்துல் 6 பேர் நாங்க எப்படி வாழ்றது? எங்கட காணியுமில்ல, காசும் இல்ல. அரசாங்கத்த நம்பி ஏமாந்த நிலைதான் எங்களுக்கு இப்ப மிஞ்சி இரிக்கி. சொல்லப்போனா எங்கிட நாளாந்த வாழ்க்கைய நடத்துறதிற்கு கடன் வாங்கிகிட்டு வாழ்றம். எங்களுக்கு சேர வேண்டியத தந்தா நாங்க எங்கட வாழ்க்கையையும் சிறப்பாக்கிகிட்டு, ஒரு தொழிலையும் செய்யலாம். பெரும் கஸ்டமா இருக்கி. சம்மந்தப்பட்டவங்க மனம் இரங்கி எங்கட விசயத்த கவனத்தில கொள்ளனும் எண்டுதான் நாங்க விரும்புறம். என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்."

மற்றொரு பாதிக்கப்பட்ட பெண் எம்.எஸ். செயிலத்தும்மா (வயது 60) குறிப்படும்போது,


"எனக்கு உரித்துடைய சுமார் 1280 பேர்ச்சஸ் (8 ஏக்கர்) காணி சுவீகரிக்கப்பட்டது. எனக்கு திருமண வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். நான் தற்போது காத்தான்குடியில் உறவினரின் வீட்டில் வசித்துவருகிறேன். எனக்கு நிரந்தரமான வீடு வளவு எதுவுமில்லை. எனக்குரித்தான நஸ்டஈடு கிடைத்தால் எனது பிள்ளைகளுக்கு வீடுகளை கட்டி அவர்களை கரை சேர்க்கலாம். ஆனால் சுமார் 5 வருட காலமாகியும் இன்னும் நஸ்டஈடு கிடைக்காமை மிகவும் மனவேதனையளிக்கிறது. இது சம்மந்தமாக எங்களுடைய பிரதேச செயலாளரிடம் கேட்டால் எல்லாம் அனுப்பப்பட்டுள்ளது பணம் கிடைத்தால் தருகிறோம் என்று சொல்கிறார். இந்த விடயத்தில் யாரெல்லாம் தடையாக இருக்கிறார்களோ அவர்களின் மனங்களில் இறைவன் இரக்கத்தன்மையை கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான யு.எல். உதுமாலெப்பை (வயது 55) என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

"எனது ஒலுவில் காணி சுவீகரிக்கப்பட்ட பிற்பாடு மத்திய முகாமிற்குச் சென்று வாழ்ந்து வருகிறேன். எனக்கு நிரந்தர தொழிலும் இல்லை. வருமானமும் இல்லை. ஒலுவிலில் இருக்கும்போது கடற்றொழில் செய்தேன். எனக்கு அப்போது கஸ்ட நிலை பெரிதாக இருக்கவில்லை. காணி சுவீகரிக்கப்பட்ட பிறகு மிகவும் கஸ்டமான நிலையில் இருக்கிறேன். எனது குடும்பத்தில் 5 பிள்ளைகள் உண்டு. அதில் இருவர் பாடசாலை செல்கிறார்கள். கஸ்டமாக இருக்கிறது. இதுவரைகாலமும் இவ்விடயமாக நாங்கள் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் செய்யாமல் மிகப் பொறுமையுடன் இருந்து வருகிறோம்."
ஒலுவில் துறைமுகம் நிர்மாணித்ததன் பிற்பாடுதான் ஹம்மாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், ஹம்மாந்தோட்டையில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய சகல நஸ்டஈடுகளும் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? நாங்களும் இந்த நாட்டு மக்கள்தானே.


எமது அரசியல் பெருந்தகைகளிடமும் பலமுறை இந்த விடயத்தை சொல்லியிருந்தும் அவர்களாலும் இதுவரையும் காத்திரமான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. தேர்தல் காலங்களில் மட்டும் உரிமை கடமை என்று வாய்கிழியக்கத்திவிட்டு எங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்கும்போது கோளைகளாக ஓடி ஒழிந்து கொள்கின்ற அரசியல் வாதிகளே எமக்கு கிடைத்திருக்கும் முதல் சாபக்கேடாகும். என்றும் கூறுகின்றார்.
இதுவிடயமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரை பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் காணிப்பகுதியின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.எம். றிபாய் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்த விடயம் தொடர்பாக பின்வரும் கருத்தை கூறினார்.

அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு,

ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென 2008ம் ஆண்டு இரண்டாம் கட்டமாக சுவீகரிக்கப்பட்ட 48 பேர்களுடைய காணிகளின் பரப்பு 20.1798 ஹெக்டெயர் ஆகும். (49.84 ஏக்கர்) இக்காணிகளுக்குரிய விலைமதிப்பீடு 2009ம் ஆண்டு அரச விலை மதிப்பீட்டுத்திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 32 பேர்களின் காணிகளுக்குரிய நஸ்டஈட்டுத் தொகையாக 22 கோடியே 70 இலட்சத்து 97 ஆயிரத்து 460 ரூபா வழங்கவேண்டி உள்ளது. விலை மதிப்பீடு செய்யப்பட்ட 32 பேருக்குரித்தான மேற்படி நஸ்டஈட்டுத் தொகையை அனுப்புவதற்கு ஆவண செய்யும்படி இலங்கைத்துறைமுக அதிகார சபையின் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எமக்கு இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தால் செய்யப்பட்ட விலை மதிப்பீடு அதிகூடியது என காரணம் காட்டியே இதுவரை நஸ்டஈட்டுத் தொகை வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதாகவே கருதவேண்டி உள்ளது. நாங்கள் இதுவிடயமாக சகல ஆவணங்களையும் உரிய இடங்களுக்கு அனுப்பியுள்ளோம். தாமதிக்கப்படுவதற்கு நாங்கள் காரணமில்லை. நஸ்டஈட்டுத்தொகை கிடைத்ததும் உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். விலை மதிப்பீட்டினை இலங்கை துறைமுக அதிகார சபை ஏற்றக்கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டதனாலேயே எஞ்சிய 16 பேர்களின் காணிகளுக்கு இதுவரையில் விலை மதிப்பீடு செய்யப்படவில்லை. என்று கூறினார்.
ஒலுவில் பிரதேசத்தில் இருந்து துறைமுக அபிவிருத்திக்காக தங்களது காணிகளுடன் வீடு உடைமைகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதென்பது அரசியல் வாதிகள் முதற்கொண்டு, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அணைவரினதும் முதன்மைக் கடைமைகளில் ஒன்றாகும்.

யுத்த முடிவால் கிடைத்த பரிசுப் பொருள்


எமது நாட்டில் பரவலாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய இருப்பு பற்றி மிகத்த தெளிவான எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் எட்டாம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகின்றன. ஆலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டைன் என்ற சரித்திர குறிப்பாளரின் கூற்றுப்படி கலீபா அப்துல் மாலிக் பின் மர்வானின் கொடுங்கோலாட்சியின் நிமித்தம் வெளியேறி முஸ்லிம்கள் பலர் 8ம் நூற்றாண்டில் கொங்கன், இலங்கை, மலாக்கா போன்ற நாடுகளில் குடியேறியதாக தெரிகின்றது. அவ்வாறு இலங்கையில் வந்து குடியேறியவர்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடமேற்கு கரையேரங்களில் எட்டு குடியேற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் வரலாற்று பதிவுகள் சான்று பகர்கின்றன.

புனிதக் கருத்துக்களை நெஞ்சில் சுமந்தவர்களாக சாதி, சமயம், சம்பிரதாய சடங்கு முறைகளை விட்டும் ஒதுங்கிய அவர்கள் ஏனையவர்களுடன் ஒற்றுமையாக வாழத்தலைப்பட்டதனால் நாடு முழுவதும் பரந்து வாழக்கூடியதாக இருந்தது என்பது வரலாறு எமக்கு கற்றுத்தருகின்ற பாடமாகும். இலங்கையினை ஆட்சி செய்த மன்னர்களின் நன்மதிப்பினையும், கௌரவத்தினையும் பெற்றவர்களாக அவர்கள் தமது வாழ்க்கையின் கட்டமைப்பினை வடிவமைத்திருந்தனர் என்பதும் குறிப்பாகும்.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து தாய் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு சுமார் 4000 முஸ்லிம்களை செனரத் மன்னன் 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பி வைத்தான் என சான்றுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

பெரும் தொகையான முஸ்லிம்களின் குடிப் பெயர்வு அரச அணுசரணையுடன் அவ்வாறுதான் ஆரம்பமாகியது. இந்திய உபகண்டத்திலிருந்து காலப்போக்கில் வர்த்தக நோக்கிலாக ஏற்கனவே கிழக்கு பிராந்தியத்தில் குடியேறிவந்த முஸ்லிம்களின் சனச் செறிவினை மேலும் பலப்படுத்துவதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த முடியும் என மன்னர்கள் நம்பிக்கை கொண்டதன் விளைவாகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நமது நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகமானது ஒரு தனித்துவ தேசிய இனமாக அங்கீரக்கப்படுதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் வலுவான சான்றுகள் இருப்பினும், தற்போதைய நிலமையில் அவை மிகவும் சாதூரியமாக திரிவுபடுத்தப்பட்டு மக்கள் மனங்களை நம்ப வைக்கும் ஏற்பாடுகளை பல்வேறு சக்திகளும் மேற்கொண்டு வருகின்றன. முஸ்லிம்களையும் அவர்களுடைய சந்ததியினரையும் வந்தான் வரத்தான்கள் எனக் காட்டுவதன் மூலமாக மற்றும் அவர்கள் பெரும்பான்மையினரது நிலங்களை சுரண்ட வந்த இரண்டாம் தரப் பிரசைகள் எனவும் நச்சுக்கருத்துக்களை தொடர்ந்தும் நச்சரிப்பதன் மூலமும் பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்த மக்களின் மனங்களில்  வெஞ்சினங்களை நாற்றிடுதற்கு ஒரு சில பெருந்தேசியவாதங்கள் கடும் பிரயத்தனங்களை செய்துவருகின்றன.

படுமோசமான, மூர்க்கத்தனமான, தான் தோன்றித்தனமான முடிவுகளால் திசைமாறிப் போன ஒரு சாரரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள அரசு அதனால் கிடைக்கப்பெற்ற களிப்பையும், ஆனந்தத்தினையும் அதனால் உருவான அமைதி நிறைந்த வாழ்க்கையினையும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சாரருக்கு மாத்திரம் உரித்தாக்கிவிட்டதா என்ற சந்தேகம் இன்று வலுவடைந்து வருகின்றது. மழை விட்டாலும் துவானம் விடாத நிலமை சிறுபான்மை சமூகங்களின் பிரதேசங்களில் நிலவுகின்றதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் கொப்புகளுக்கும் இந்த விசித்திரமான காலநிலை ஒருபோதும் புரியப்போவதுமில்லை.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தின் நிமித்த காரணிகளாக ஆரம்பத்தில் தமிழையும் பின்பு தமிழ் பேசும் மக்களின் நிலங்களையும் அடையாளப்படுத்திக் கொண்ட பெருந்தேசிய கடும்போக்கு வாதிகள் தங்களது போருக்கு ஒத்துழைப்புத் தராதவர்கள் அனைவர் மீதும் துரோகிகள் என்ற முத்திரயை பதித்துவிட்டனர். யுத்தத்தின் முடிவில் தமக்கு கிடைத்த பரிசுப்பொருட்டகளில் ஒன்றாக தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலங்களும் அடங்கிவிட்டது என்ற போக்கிலான நடைமுறையினை நாம் தற்போது அவதானிக்கின்றோம். அதனை எண்பிக்கும் வகையிலான அவசர அவசரமான சம்பவங்கள் கிழக்கில் இன்றைய நாட்களில் கட்டவிழ்ந்து அச்சமூட்டுகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்பன 01.10.1833 ல் கோல்புறூக் - கமரூன் சீர்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட போது மொத்தமாக 18>052 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினை கொண்டிருந்தன. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் 4431.4 சதுர கிலோ மீற்றரையும், மட்டக்களப்பு மாவட்டம் 2633.1 சதுர கிலோ மீற்றரையும், திருமலை மாவட்டம் 2728.8 சதுர கிலோ மீற்றரையும் கொண்டிருந்தன. கிழக்கு மாகாணத்தின் மொத்த சதுர பரப்பளவு 9803.3 சதுர கிலோ மீற்றராக இருந்தது. காலப்போக்கில் மாவட்டங்களின் எல்லகைள், பிரதேச சபைகளின் எல்லைகள் என்பன பெரும்பான்மை சமூகத்தின் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றவாறு உருமாற்றம் பெற்றன.

1963ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது அன்றிருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் மொத்தமாக 5.8 சதவீதமான சிங்கள மக்களே வாழ்ந்து வந்தனர். ஆனால் புதிய அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது அண்டைய மாவட்டங்களின் நிலப்பரப்பும், குடிசனப்பரம்பலும் புதிதாக சேர்க்கப்பட்டு மொத்தமாக சிங்களவர்களின் தொகை 29.3 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

அதேபோன்று, 259 சதுர மைல் பரப்பளவுகொண்ட சம்மாந்துறைப்பற்று இரண்டாக பிரிக்கப்பட்ட போது, 6585 பேரைக் கொண்ட பெரும்பான்மை சிங்கள சமூகத்து மக்களுக்கான வேவகம்பற்றிற்கு 260 சதுர மைல் பரப்பளவு கொடுக்கப்பட்ட அதே வேளை 4>00704 பேரைக்கொண்ட தமிழ் பேசும் மக்களுக்கான சம்மாந்துறைப்பற்றிற்கு வெறும் 99 மைல் மட்டுமே பிரித்துக் கொடுக்கப்பட்டது. மக்களின் ஆலோசனைகளின்றி ஒருதலைப்பட்சமாகவும், அவசர அவசரமாகவும் அரசியல் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட புதிய பிரதேச சபைகளுக்கான எல்லைக் கோடுகள் யதார்த்தமானதாக அப்போது வரையறுக்கப்படாமையால் அம்பாறை மாவட்டத்திலுள்ள சில சபைகளுக்கிடையில் இன்றும் எல்லைப்பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே வருகின்றன. பல்வேறு பரிமாணங்களில் பெரும்பான்மை சமூகத்தினரால் அவ்வப்போது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற விஸ்தரிப்புவாதம் இலகுவாக நிறைவேற்றப்படுதற்கு தீராத இவ்வெல்லைப்பிணக்குகள் துணைபோகின்றன.

இவை போன்ற ஈனச்செயலினால் புதிதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இறக்காமம் பிரதேச சபையானது மிக அண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது. 1942ம் ஆண்டிலிருந்து தனியான சனிட்டரி தளமாகவும், 1947லிருந்து கிராம சபையாகவும் தனியான எல்லைகளை கொண்டிருந்து வந்த இறக்காமம் பிரதேசம் பின்னர் 1987 ம் ஆண்டிலிருந்து நிருவாக ரீதியாக சம்மாந்துறை பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டது.      

தற்போது தனியான ஒரு பிரதேச சபையாக பிரித்தெடுக்கப்பட்ட போது எவ்வித தொடர்புமற்ற அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, தமண பிரதேச சபைகள் இறக்காமத்திற்குரிய எல்லைப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களை சுரண்டியது மட்டுமல்லாமல் இந்த சுரண்டலுக்கு பதிலாக தமண பிரதேசத்திலுள்ள ஒரு சிறிய நிலப்பரப்பை இறக்காமத்துடன் இணைத்துவிட்டிருந்தனர். இந்நடவடிக்கை அவர்களுடைய பெருந்தன்மையினை காட்டுவதாக வெளிப்படையாக தோன்றினாலும் இணைக்கப்பட்ட அக்குறிப்பிட்ட நிலப்பரப்பினூடாக கணிசமான சிங்கள வாக்காளர்கள் இறக்காம பிரதேச சபைக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. 1963ல் புதிய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட வேளை எவ்வாறான உக்திகளை கையாண்டு பெரும்பான்மை மக்களும், நிலமும் புதிய மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதுவோ அதேபோன்றே ஒரு யுக்தி முறையினை கொண்டு இறக்காமம் பிரதேச சபை உருப்பெற்றுள்ளது. பெரும்பான்மையினரது சுயநலம் காக்கும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் நிருவாக அமைப்பு பண்டுதொட்டு அங்கு மையங்கொண்டுள்ளது எனக் கூறலாம்.

கிழக்கு மாகாணத்தில் காலாகாலமாக காடுகளை வெட்டி வியர்வை சிந்தி விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழ் பேசும் மக்கள் தங்களது நிலங்களிலிருந்து கடந்த அரை நூற்றாண்டு காலமாக பல்வேறு கட்டங்களாக விரட்டப்பட்டுக் கொண்டு வந்துள்ளனர்.

விவசாயம், நீர்ப்பாய்ச்சல் தொடர்பான திட்டங்களுக்காக பலாத்காரமாக சுவீகரிக்கப்பட்ட காணிகள் சொந்தக்காரர்கள் சிறுபான்மை சமூகத்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு மாற்றுக் காணிகளோ நட்ட ஈடுகளோ வழங்கப்படவில்லை. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் யுத்த சூழலின் போதும் தங்களது காணிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். திட்டமிட்ட இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி வடக்கில் பாரிய அளவிலும் கிழக்கில் ஆங்காங்கே சொரியலாகவும் அவர்கள் வெளியேறியுள்ளனர்.

பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட காணிச் சேரிகளில் அவர்களது உரிமைப்பத்திர ஆவணங்கள் கூட பறித்தெடுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.

வன இலாகாவின் நடவடிக்கைகள், புதைபொருள் ஆராய்ச்சி மற்றும் புனித நகர் திட்டம் என்ற போர்வைகிளிலும் இவ்வாறான கொடுமைகள் நிறைவேறிய வண்ணமுள்ளன.

இதனாலேயே பயங்கரவாதம் வியாபித்திருந்த வேளைகளில் இழந்த காணிகளை மீளளிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது நீதியும் நியாயமும் கடைப்பிடிக்கப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

அபிவிருத்தி திட்டங்கள், மீள்குடியேற்றங்கள் போன்றன அமுல் நடாத்தப்படும் போது அவற்றினைக் கையாளுபவர்கள் எவ்வாறு கோடீஸ்வரர்களாக மாறினார்களோ அதே போன்று நிலம்களை மீளளிக்கும் விவகாரத்தை கையாளுபவர்கள் நிலச்சுவாந்தர்களாக மாறுவதற்கான அறிகுறிகள் இப்போதிலிருந்தே தென்படத் தொடங்கியுள்ளன.


அம்பாரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 16>764 ஏக்கர் நிலம் முஸ்லிம்களால் கைவிடப்பட்டுள்ளது.
பொத்துவிலிலிருந்து 730 பேர் இழந்துவிட்ட 2592 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்றிலிருந்து 660 பேர் இழந்துவிட்ட 1785 ஏக்கர் காணிகளை பற்றி முறைப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனையிலிருந்து 329 பேர் இழந்துவிட்ட 1072 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
ஒலுவில் மற்றும் பாலமுனையிலிருந்து 176 பேர் இழந்துவிட்ட 559 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
நிந்தவூரிலிருந்து 583 பேர் இழந்துவிட்ட 2349 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறையிலிருந்து 529 பேர் இழந்துவிட்ட 2513 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
இறக்காமத்தில் இருந்து 428 பேர் இழந்துவிட்ட 2092 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
கல்முனையிலிருந்து 280 பேர் இழந்துவிட்ட 1433 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
மருதமுனையிலிருந்து 429 பேர் இழந்துவிட்ட 2365 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
மொத்தமாக அம்பாரை மாவட்டத்தில் இருந்து 4211 பேர் தாம் இழந்துவிட்ட 16>764 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 5475 பேருக்குரிய 28>813 ஏக்கர் நிலம் பறிபோயுள்ளதாக முறைப்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 5186 பேர் சம்மபந்தமாக 17>092 ஏக்கர் காணிகளை முஸ்லிம்கள் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களினாலும், கிழக்கு மாகாண சபையினாலும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தர முடியாதுள்ளன. இவற்றின் அதிகாரங்களை வெற்றுத்தகர டப்பாக்களிலிருந்து வெளிவரும் வெறுமையான சத்தங்களுக்கு மட்டும்தான் ஒப்பிடமுடியும்.

பொத்துவில் கறங்கோவா காணிப்பிரச்சினைகள் மற்றும் காணியற்றவர்களுக்கு காணிகள் வழங்கும் போர்;வையில் காணி ஆணையாளரினால் வெளியிடப்பட்ட பிழையான விளம்பரத்தினை இரத்தாக்கும் விடயம் பரிந்துரைக்கப்பட்ட போது கூட மத்திய அரசினால் அவை தூக்கி வீசப்பட்ட சம்பவங்களினையும் நாம் இங்கு மறந்துவிட முடியாது.

யுத்தத்தினாலும், சுனாமி அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணியற்றவர்களுக்கு காணிகள் வழங்குவது தொடர்பாக ஒரு பகிரங்க விளம்பரம் பத்திரிகைகளில் மாகாண ஆணையாளரினால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

விண்ணப்பதாரிகளுக்கு இருக்க வேண்டிய தகமைகள் என இவ்விளம்பரத்தில் குறிப்பிடப்படடிருந்த நிபந்தனைகள் பொதுவாக சிறுபான்மை சமூகத்தினரையும் குறிப்பாக வடக்கு கிழக்கில் யுத்தத்தினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தையும் திட்டமிட்டு பழிவாங்குவதற்காகவே உள்ளடக்கப்பட்டனவா என்ற சந்தேகத்தை கிழப்புகின்றது.

'எரிகின்ற வீட்டில் பிடுங்கியதெல்லாம் இலாபம்' என்பது போல அழிவுக்குள்ளான வடக்கு கிழக்கு மண்ணில் எஞ்சியுள்ள நிலப்பரப்பை எவ்வாறாவது அபகரித்துப் பெரும்பான்மையினருக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற அவசரமும், ஆசையும் அந்த விளம்பரத்தின் நிழலாக காணப்பட்டது.

சென்ற வருடம் அக்டோபர் மாதம் 20ம் திகதி, அம்பாரை கச்சேரியில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில், சமூகமளித்திருந்த அமைச்சர்கள் பலரும், கிழக்கு மாகாண ஆளுனரும், முதலமைச்சரும் கூட இவ்வாறான வழுக்களை சுட்டிய கோரிக்கைகளை நியாயமானது என ஏற்றுக்கொண்டிருந்தனர். எனிலும், அத்தீர்மானங்கள் மத்திய அரசிலுள்ள கடும்போக்குவாத அதிகாரிகளின் குப்பை கூடைகளை நிரப்புவதற்காகத்தான் பயன்பட்டன. சிறுபான்மை சமூகத்தின் காணிப்பிரச்சினைகள் அம்பாறை மாவட்டத்தில் கிடப்பில் போடப்படுவது ஒரு மாமூலான நடைமுறையாகும்.

தற்போது இந்த பிழையான ஒரு தலைப்பட்சமான விளம்பரத்தின் அடிப்படையில் கோரப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் உள்ள பிரதேச செயலக காரியாலயங்களில் உள்ள கோவைகளில் தூங்கி வழிகின்றன.

அரச நிலங்களை தாராளமாக கொண்டுள்ள பிரதேசங்களிலிருந்து விண்ணப்பித்த பெரும்பான்மை சமூகத்தினர் காணி ஆணையாளரினது கருணையினால் பயனடைந்துவருகின்றனர்.

சம்மாந்துறை கரங்காவட்டை பிரதேசத்தில் பயங்கரவாத பிரச்சினை காரணமாக முஸ்லிம்களினால் கடந்த காலங்களில் கைவிடப்பட்ட சுமார் 420 ஏக்கர் காணியை பெரும்பான்மை இனத்தினர் இப்போது கைப்பற்றிக் கொண்டுள்ளனர். இந்த காணி அபகரிப்புக்கு பக்கபலமாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடந்துகொள்வதாக காணி சொந்தக்காரர்கள் முறைப்படுகின்றனர். மேலும், வேலியே பயிரை மேய்வது போலாக பாதுகாப்பு உத்தயோத்தர்களும் முஸ்லிம் மக்களின் காணிகளை அத்துமீறி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மாவட்டத்தின் குடிசனப்பரம்பலின் இன விகிதாசாரத்திற்கு ஏற்றவாறு அங்குள்ள அரச காணிகள் எல்லா சமூகத்தினருக்கும் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்ற மனநிலை பெரும்பான்மை சமூகத்திற்கு ஏற்படாதவரை இந்நாட்டில் சமாதானமும் சகவாழ்வும் என்றுமே அடையமுடியாத, விடைகாண இயலாத கேள்விக் குறியாகவே இருக்கும்.  

புள்ளி விபரங்கள் யாவும் கிழக்கு மாகாண காணிகள் தொடர்பாக தமிழர் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் கடந்த வருடம் 2009 அக்டோபர் மாதம் 23ம் திகதி பாராளுமன்ற ஒத்தி வைப்பு வேளையில் சமர்ப்பித்த பிரேரணையை வழி மொழிந்த ஹஸன் அலி எம்.பி.யின் உரையிலிருந்து திரட்டப்பட்டது.                                                                                                                                                                                               
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger