Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

முஸ்லிம் - தமிழ் அரசியல்தீர்வு

30 August 2016

யாழ்ப்பாணத்தில்

கலப்பற்ற உழுந்து வடையொன்று 30 ரூபாய்,
இறால் வடை 05 ரூபாய்

வவுனியாவில்

கோதுமை மா கலந்த உழுந்து வடை 30 ரூபாய்,
இறால் வடை 10 ரூபாய்

கொழும்பில்

ஏதோ உழுந்து வடை என்ற பெயரில் ஒன்றை 45 ரூபாய்க்கும்,
இறால் வடை ஒன்று 30 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.

அதேவேளை, இங்கு எல்லா இடத்திலும் எதனை கீரை வடை என்கின்றனரோ அதனைத்தான் கல்முனையில் மக்கள் உழுந்து வடை என வாங்கி உண்ணுகின்றனர். இவர்களுக்கு கீரை வடைதான் உழுந்து வடை.

இதனால்தான்

மறைந்த தலைவர் அஷ்ரப் தென்கிழக்கு மாகாணம் என்ற கருத்தை முன்வைத்தார்.

விக்னேஸ்வரன் ஐயா வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்கிறார்.

அதாவுல்லாஹ் கிழக்கு பிரிந்தே  இருக்க வேண்டும் என்கிறார்.

ஹசன் அலி வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட கூடாது. இணைக்கப்படின் முஸ்லிம்களுக்கு தனி அலகு வேண்டும் என்கிறார்.

ஆனால் பாருங்கள்...
உழுந்து வடையும், இறால் வடையும் கண்டியில் அதிகம் விற்பது கிடையாது.

அதனால், றஊப் ஹக்கீம் அவர்கள் மெளனம் சாதிக்கின்றார்.
:p

கொண்ட வட்டுவானில் கோபுரத்துடன் ஒரு பள்ளி...

சம்மாந்துறைப் பெண்ணாள் எனும்
என் தாய் மண்ணின்...
கூந்தல் கோரி கொண்டை முடிய
ஊவா வெல்லஸ்ஸ பரணகம எனப் பரந்து
மலையும் காடும் என வாரி முடிந்து
கொண்டை வட்டுவானில் கோரி முடிய வேண்டும்....


அவள் கூந்தலில் விழுந்த மழைப்பால்
உருண்டு திரண்டு மதுரமாகி
இங்கினியா கலை எனும் மார்பில் தேங்கி
பட்டிப்பளை எனும் முலைக்காம்பினூடே
அமுதூட்டி பசிபோக்கி அரவணைத்தாள்
சம்மாந்துறை வேவகம்பற்று எனும் எம்பெருநிலத்தை.....

காலம் உருண்டோடிக் கயவர்கள் கண்குத்திக்
கூந்தல் முதற்கொண்டு வயிறுவரை
நம் தாயைச் சிறைபிடித்து
நமக்கே எல்லை இட்டார்...பாவம்....

போசாக்கு குறைந்து மந்த புத்திக் குழந்தைகளாய்
மாரி பார்த்து மழையைநம்பி
நாற்றுப் போடும் நாதாரிக் கூட்டமாயும்
நேரம் குறித்து அளவு பார்த்து தண்ணி திறக்க
அந்த மூத்திரத்தில் கரப்புக் குத்தி
விரால் பிடித்துப் பிடரி முறிக்கும்
போடி மார்களாயும் நாம்......இருந்துவிட்டோம்....

உள்ள மாட்டுக்குள் உரிய மாடறுத்து
உண்டு உரம் செய்த உழவர் கூட்டம் நாம்...
எருது பூட்டி ஏர் இழுத்து
எருது கொண்டே எம்மரமும் இழுத்து
வண்டி கட்டி வரலாறு படைத்த
மறவர் கூட்டம் நாம்....
மறந்து போனோம் நம் வரலாறு....

பட்டிப்பளை நீர் கொண்டு
பல் துலக்கி முகம் கழுவி
நீராடி நிலம் விதைத்து
பேரோடு வாழ்ந்த நாம்தான்
பட்டிப்பளையின் மூத்த பிள்ளைகள்...

பட்டிப்பளயாறும் அதன் நீரும் எமக்குத்
தாயும் தாய்ப்பாலும்.....

சென்ற போகமொன்றில் நடந்த கொடுமை ஓன்று
கேள்விபட்டேன் உம்மா....நெஞ்சு வெடிக்கின்றது...
நம் நிலத்துப் பயிர்கள் எல்லாம்
பசி கொண்டு பால் கேட்க
முலை தூக்கி விருப்போடு
பாலூட்ட வருகையிலே....

அவள் சுரந்த பாலை கொடுக்க மறுத்த
கொடும்பாவி மனிதர்கள் புரியும் சதியால்
பயிர்கள் இறந்து பாழாய்ப் போன
பரிதாபமொன்றும் நடந்துவிட்டதாம்....

பண்டாரத் தீவிலும் பதியத் தளவாயிலும்
உஹன மகா ஓயாவின் காடுகளிலும்
களனி கண்டு கால்நடை மேய்த்து
கருக்கொண்டு காலம் தள்ளிய முன்னோரின்
வேவகம்பற்று எனும் நமது தாய் மண்ணின்
வளம் நுகர வழியற்று வாழ்விழந்த கதை
வரலாறே நீ மறந்தாயோ....!

செத்தது பயிர்களல்ல...
நம் நிலத்தின் மானமும் ரோஷமும்...
நம் வீரமும் விவேகமும்......
ஒற்றுமை அற்று விமர்சனம் கூடி
பொறாமை எரிச்சல் எல்லாம் சேர்ந்து
சீரழிந்த சமூகமாய் இன்று நாம்.....

சாதிக்கும் வெறி நமது மக்களிடம் இல்லை
தட்டிக் கொடுக்கும் தாராளமும் இல்லை.....

வீரம் என்பது விமர்சனம்தான் என
விவாதிக்கும் வீணர் கூட்டம்
விடியலைத் தேடி வெளிச்சத்தில் அலைகின்றார்....

பட்டிப்பளை என்னும் நாம் தாயை
கோம்பை மட்டையும் ஓலையும் இளக்கி
மாடும் ஆடும் இன்னும் பிறவும்.....சுகிக்கட்டும் என
கொளனிகளில் கால் கழுவ விட்டுவிட்டு ...

நம் குடலைப் பயிர்களை நீரின்றிக் கொல்ல
நாம் என்ன சூப்பி மிட்டாய் வீரர்களா....?
வெறிகொண்டு போராட மனமிங்கு நினைக்கின்றது
பறி கொண்ட எம் நிலத்தின் பவிசுகள் எல்லாமே
தறிகெட்ட மூடர்கள் தத்துக் கொடுத்தாரோ....
அறிவேன்...அறிவேன்....எம்வரலாறு
பின்னர் துணிவேன்...துணிவேன்......புது வரலாறு...
நான் கொண்ட லட்சியங்கள் பல
அதிலே இதுவும் ஓன்று.....
கொண்டவட்டுவானில் ஒரு பள்ளி கோபுரத்துடன் அமைப்பது .........


நன்றி முகம்மத் சனூஷ்
( கடந்த மகா போகத்தில் நீரில்லாமல் இறந்து போன என் மக்களின் உயிர் நாடியான வெள்ளாமைகளை நினைத்து வேதனையுடன் எழுதப்பட்டது......)

ஆட்சி மாற்றமும் அணைக்கும் கரங்களும்

நாட்டின் புதிய சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவரது  ஆதரவாளர்களினால் 'பொது வேட்பாளர்' என்ற நாமத்தின் பெயரால்  கருணையின் வடிவாகவும் வெளிக்காட்டப்பட்டார். அவர் முந்தய சனாதிபதி மகிந்தவினால் புரியப்பட்டு வந்த சர்வாதிகார ஆட்சியினையும், ஊழல் நிறைந்த அரசாங்கத்தினையும் துவைத்து கறையகற்ற வந்தவர் என்ற பார்வையும் மக்களிடம் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகிந்தவினையும் அவரது அரசாங்கத்தினையும் பைத்தியத் தனமாக புகழ்பாடிய பல்வேறு ஊடகங்களும் தற்போது புதிய சனாதிபதியின் நாமத்தினை பாராயணம் செய்து வருகின்றன.

மகிந்தவின் ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்த சனாதிபதி சிறிசேனா இலங்கையில் நாட்டினுள் வெளிநாட்டு பல்தேசியக் கம்பனிகளின் வருகையை எதிர்த்து போராடிய அன்றய நவ சமசமாஜ கட்சியின் முக்கியத்தவர்களுள் ஒருவர். யதார்த்தத்தில் அவர் ஒரு மத்தியதர வர்த்தின் நலனிலும், அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்பதிலும் ஆர்வமுடையவர். ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாக அமெரிக்காவினால் வளர்த்தெடுக்கப்பட்ட சந்திரிக்கா குமாரத்துங்க, ரணில் விக்கரமசிங்க ஆகியோர் தூண்டப்பட்டு இடம்பெற்று வந்த போட்டி நிகழ்ச்சி திட்டத்தில் உலக ஏகாதிபத்திய அமெரிக்காவின் நல்லாசியுடன் கடந்த சனவரி மாதம் 8ம் திகதியன்று சிறிசேனா இலங்கை சனாதிபதி அதிகாரத்திற்கு உரித்துப் பெற்றுக் கொண்டார்.

சிறிசேனாவின் அரசியல் பிரவேசமானது 1960ம் ஆண்டின் பிற்பட்ட காலங்களில் ஏற்பட்டது. பொலன்நறுவை பிரதேசத்தில் சாதாரண குடும்பத்தில் இளைஞராக வளர்ந்து வருகின்ற அப்போது என். சுன்முகதாசனினால் வழிநடாத்தப்பட்டு வந்த மாவோயிச கம்மியுனிச கடட்சியில் இளைஞர் அணியில் சேர்ந்து கொண்டார். அக்காலப் பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் மாவோயிச செயற்பாட்டாளர்களுக்கு மக்கள் மத்தியல் எழுச்சியும் ஆதரவும் இருந்தது. காரணம் 1964ம் ஆண்டுகளில் லங்கா சமசமாஜ கட்சியானது வீரியம் இழந்து அப்போது மத்திய தரவர்கத்தினர் மத்தியில் ஆதரவவினை பெற்று வந்த இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டது.

இத்தகைய சமசமாஜ கட்சியின் பின்னடைவினை தொடர்ந்தே சிங்கள தேசிய வாதத்தினை இளைறுர்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லவென ஜனதா விமுக்தி பெரமுன என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டு இளைஞர்கள் ஆயுத கலாச்சாரத்திற்கு ஊட்டம் செய்யப்பட்டார்கள். 1971ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி கட்சியானது அரசாங்கத்தினால் அடக்கி ஒடுக்கப்பட்ட போதே சிறிசேனாவும் கைது செய்யப்பட்டிருந்தார். இக்காலப் பகுதியிலேயே சுமார் 15000 இளைஞர்கள் இராணவத்தினரால் அறுக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், சிறிசேனா ஜே.வி.பியில் அப்போது அங்கத்தவராக இருந்தாரா என்பது தெளிவில்லை. சுமார் 15 மாதங்கள் தடுப்புக் காவலில் கடந்திவிட்டு 1972ம் ஆண்டில் சிறையிலிருந்து வnளிவந்ததும், சிறிசேனா இலங்கை சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார்.

சுதந்திரக் கட்சியில் நம்பிக்கைக்குரியவராக அவர் தொழிற்பட்டதன் காரணமாக அக்கட்சியில் அவருக்கு மென்மேலும் உயர்வுகள் கிடைத்தன. 1979ம் ஆண்டில் அதன் இளைஞர் அணிக்கு செயலாளராகவும், 1983 களில் அதன் இளைஞர்கள் முன்னணியின் தலைவராகவும் இருந்தார். 1989ம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியீட்டி பாராளுமன்றம் நுளைந்தார். 1994 – 2001 ஆண்டு வரை அப்போதைய சனாதிபதி சந்திரிக்காவினது அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றார். 2001ல் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை வென்றெடுக்க சற்று காலத்திற்கு முன்பதாகவே சிறிசேனா சுதந்திரக் கட்சியின் செயலாளராக அமர்த்தப்பட்டார். அண்மையில் சனாதிபதி மகிந்த நடந்து முடிந்த 2015 சனாதிபதி தேர்தல் அறிவித்த 2014 நவம்பர் 21ம் திகதி வரையில் சிறிசேனாவே செயலாளராக தொடர்ந்து 13 ஆண்டுகள் பதவி வகித்து வந்துள்ளார்.

சனாதிபதி தேர்தலின் போது அனேக மக்களின் இரக்கத்தினை அள்ளிக்கொண்ட சிறிசேனா முந்தய ஆட்சியாளர்களான சந்திரிக்கா மற்றும் மகிந்தவின் காலத்தில் இடம்பெற்று வந்த மக்களின் வாழ்வாதார பிரச்சினை, வாழ்க்கைத் தரம் மற்றும் சனநாயக உரிமைகள் பற்றி விமர்சித்து வந்தவர். இருப்பினும், சிங்கள தேசியவாதத்தின் அடக்கு முறை ஆட்சியினையும், விடுதலைப் புலிகளுடன் அரசு ஈடுபட்ட சிவில் யுத்தத்தில் இடம்பெற்ற அநியாயங்களையும், குற்றங்ககளையும் முழுமையாக ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

2005ம் ஆண்டில் மகிந்த ஆட்சிக்கு வந்த போது விவசாயத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை சிறிசேனா வகித்து வந்தவர். 2010 ஆண்டிலிருந்து சனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மட்டும் சுகாதார அமைச்சராக இருந்தார்.
இவ்வருடம் சனவாரி மாதம் 2ம் திகதி டெய்லி மமிறர் பத்திரிகைக்கு வழங்கிய செயவ்வியில், விடுதலைப் புலிகளுடன் அரசாங்கமம் செய்து கொண்டிருந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையினை 2006ல் முடிவுறுத்திக் கொண்டு கொடிய யுத்தத்தினை மகிந்த முன்னெடுத்து சென்றிருந்த போது 6 தடவைகள் தான் பிரதி பாதுகாப்பு அமைச்சராக பணிபுரிந்ததாக ஒரு புளுகினை விட்டிருந்தார். குறிப்பாக விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட யுத்தத்தின் இறுதி இரு வாராங்களும் தானே பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சராக இருந்ததாக கூறியிருந்தார்.
 
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி இருவாரங்களிலும் ஆகக் குறைந்தது 40,000 தமிழ் பிரசைகள் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருந்தாக ஐ.நா. சபையின் புலனாய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஈற்றில் சரணடைய முயற்சித்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும், போராளிகளும் படுகொலை செய்யப்பட்டனர். பொதுமக்கள் எதுவித பாராபட்சமும் இன்றி செல்வீச்சுகளுக்கு ஆட்பட்டு படுகொலை புரியப்பட்டிருந்தனர் என அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இந்த நாட்களிலேயே சிறிசேனா தான் பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சராக பணிபுரிந்த காலப்பகுதி என குறிப்பிட்டிருந்தார்.
 
சிறிசேனா கிராமத்து மக்களின் தோழனாக கருதப்பட்டு வருபவர். கிராமப் புறங்களில் வாழ்கின்ற ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதும், அவர்களின் வாழ்கைத் தரத்தினை மாற்றியமைப்பதும் அவருடைய அரசியல் குறிக்கோளாக இருந்து வந்தது. இருந்தும், அவர் விவசாய அமைச்சராக இருந்த போது மேட்டுக் குடி விவசாயிகளுக்கு சாதகமான போக்கினையே அவர் கடைப்பிடித்து வந்தார் என்பதும், விதை நெல் மற்றும் உரம் முதலியவற்றில் பல்தேசியக் கம்பனிகளுக்கு இருந்து வந்த வர்த்தக மேலாதிக்கத்தின இல்லாதொழிக்க எவ்வித நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடவில்லை என்பது கய்க்கும் உண்மை. 2012ல் ஆயிரக்கணக்கான சாதாரண விவசாயிகள் நெல் விலையை உயர்த்தக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சுகாதார அமைச்சராக இருந்த சிறிசேனா அந்நடவடிக்கை அப்போதைய சனாதிபதி மகிந்தவினை தோற்கடிக்க சர்வதேசம் மேற்கொள்கின்ற சதி முயற்சி என வர்ணித்தார்.
 
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் பற்றி யுத்த குற்ற விசாரணை மேற்கொள்ளுமாறு அழுத்தம் பொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அணுசரணையுடன் சர்வதேச சதியொன்று இலங்கை மீது இருந்து வந்தது. இதன் மூலம் மகிந்தவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வந்த அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான உறவுகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியினை அழித்தொழிக்க முயற்ச்சித்தது. மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் ஏகாதிபத்தியத்தின் பின்புலத்துடன் நாட்டின் சனாதிபதியாக சிறிசேனா அமர்த்தப்பட்டார். இதன் மூலம் தற்போது இலங்கைத் தீவானது பீஜிங்கிலிருந்து அகன்று அமெரிக்காவுடனான தொடர்புகளை பலப்படுத்திக் கொண்டு வருகின்கிறது. ஆசியாவில் சினாவின் ஆதிக்கத்தினை தணித்து தன் அதிகராத்தினை வியாபித்துக் கொள்ள அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள திட்டம் இதுதான்.
 
சுகாதார அமைச்சராக 2010ம் ஆண்டிலிருந்து நவம்பர் 2014 வரையிலும், சுகாதார பணியாளர்கள் தமது நிலைகுறித்து மேற்கொண்ட அனைத்து பேராட்டங்களையும் மக்கள் மயப்படாத வகையில் கவனித்துக் கொணடவர். தனது அமைச்சின் ஊடாக வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் இடம்பெறா வகையில் அதற்கான நீதிமன்றின் உத்தரவினை பெற்றுக் கொண்டவர். 2014 ஆகஸ்டில் சுகாதார பணியாளர்கள் தமது படிகளை உயாத்தும் படி கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பிரவேசத்தை வைத்தியசாலைக்குள் அனுமதித்திருந்தார்.
 
இலங்கையின் கிராமப் புறங்கள் தோறும் சுமார் பத்து இலட்சம் மக்கள் சிறுநீரக நோயினால் பாதிப்புற்றுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இப்பிரச்சினை பற்றி கவனமம் கொள்ளும் வகையில் சுத்தமான குடிநீர் விநியோகம், மனித உயிருக்கு பாதகமான இரசாயண வேதிப் பொருட்கள் முதலிய நிறுநீரக நோய்க்கு காரணமாய் அமைகின்ற விடயங்கள் குறித்து உல சுகாதா தாபனத்தினால் முன்மாழிவுகள் வைக்கப்பட்ட போது அதனை சிறிசேனா அதனை நிராகரித்திருந்தார்.
 
மகிந்தவினை ஆட்சியிலிருந்தும் விரட்ட சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் வாசிங்டனினாலும் தேர்வு செய்யப்பட்டவரோ சிறிசேனா. இஇதற்கு காரணம் அவர் பற்றிய கடந்த கால பதிவுகளாகும். அவர் அடக்கு முறைக்கு எதிராகவும், மத்தியதர வர்கத்தின் நலன் சார்பிலும் பாடுபடும் சேவகன். கடந்த 2014 நவம்பர் மாதம் அவர் தேர்தலில் போட்டியிட்டமையானது நீண்ட கால ஆலாசனைகளதும், திட்டத்தினதும் வெளிப்பாடு. 2011ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அமெரிக்க தூதுவராலயம் சிறிசேனாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருந்தது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் மற்றும் அமெரிக்காவின் முகவர் நிறுவனமாக தொழிற்படுகின்ற ருளுயுஐனு என்பன இலங்கையில் இணைந்து செயலாற்றக் கூடிய நபராக சிறிசேனாவினை தெளிவாக அடையாளப்படுத்தியதன் விளைவாக 2013 ஜுன் மாதமளவில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ''சுகாதார தலைமத்துவ பரிசிலினை' பெற்றுக் கொள்ள பயணமானார்.
 
சிறிசேனா அவருடை செவ்வியில், மகிந்தவின் அரசாங்கத்தினை விட்டும் விலகி தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் 'பாராளுமன்றம், அமைச்சுக்கள், நீதிமன்ற்கள், இராணும் மற்றும் முழு அரச நிறுவனங்களும் மகிந்தவின் குடும்பத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என விளக்கியிருந்தார். எனினும், அவை அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பது தெளிவு. பல்தேசிய கம்பனிகளின் முகவர்களும், உள்நாட்டு வர்த்தக வாணிப வர்கத்தினரும் மகிந்தவின் அரியணையை சூழக் காணப்ட்ட கூட்டத்தினருக்கும் பல்வேறு சொத்துக்களையும், செல்வங்களையும் பொற்கிளிகளாக வழங்கியே வந்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சார்பாகவும், இலங்கையின் கடந்தகால் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்திற்குட்படுத்தவும் நாட்டில் ஏற்பட்டு வருகின்ற பாரிய சீன முதலீட்டு திட்டங்கள் பற்றி பல்வேறு கட்டுக் கதைகளை அளந்ததனால் நன்மையும் சிறிசேனாவுக்கு கிடைந்திருந்தது.
 
தற்போது சிறிசேனா சனாதிபதியாக அதிகராத்தில் அமர்த்தப்பட்டாயிற்று. வாசிங்டன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமைப்பு என்பன அவரிடம் இருந்து கைமாறினை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. சிறிசேனாவின் ஆட்சியானது சமாதானத்தினையோ, சுபீட்சத்தினையோ அல்லது சனநாயகத்தினையோ நாட்டில் நிலை நிறுத்தப் போவது கிடையாது. அவரின் பின்புலத்தில் இருக்கின்ற நபர்கள் யாவரும் விரும்புவது மத்திய வகுப்பு மற்றும் கிரமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை குன்றச் செய்து அதனால் இலாபம் ஈட்டுவதற்கும், திறந்த பொருளாதார கொள்கையை மேலும் தளர்த்தி ஓட்டையாக்கி ஏகாதிபத்திய முதலீட்டினை நாட்டிற்குள் அதிகரிப்பதற்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசிய பசுபிக் பிராத்தியத்தில் சீனாவின்   பொருளாதார், இராஜ தந்திர தொடர்புகளை நசுக்குவதன் மூலம் இலங்கைத் தீவினை அமெரிக்காவின் வலைக்குள் சிக்க வைத்து அதன் வாயிலாக பிராந்திய ரீதியிலாக அமெரிக்க இராணுவ பலத்தை வலுப்படுத்துவதும், அதன் யுத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துளைப்பு நல்குவதுமாகவே சிறிசேனாவின் நிருவாகம் அமையப் போகிறது.

யார் இந்த பொது பலசேனா?

இந்த வருடத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்களில் ஒன்றுதான் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் கருத்துக்களை வெளியிடுகின்ற இலத்திரனியல் ஊடகங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதும் அவற்றிலிருந்தும் தம்மை பாதுகாத்துக் கொள்வதுமாகும். நாடு முழுவதிலும் திட்டமிட்ட வகையிலும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முஸ்லிம் விரோத பிரச்சாரமானது சங்காக்களின் பின்னணியில் மிகவும் மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையில் செயற்படுத்தப்படுவது பொதுபல சேனா (இதன் அர்த்தம் பொளத்த அதிகாரம் கொண்ட படை) என்ற அமைப்பினாலாகும். 
இதேவேளை, இவ்வமைப்பின் சட்டரீதியான அங்கீகாரம், அவர்களுடைய பின்புலம், அவர்களுடைய அரசியல் ரீதியான காரணகர்தாக்கள், மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு என்பன பற்றி எமக்கு அதிகம் தெளிவில்லாது இருப்பினும் அவர்களுடைய இணைய தளங்களை அவதானிக்கின்ற போது அவர்களுடைய கட்டமைப்பும், பின்னணியும் அவர்கள் சந்தேகமற பொளத்த அமைப்பு என்ற ஒரு பார்வையை கொடுக்கிறது. அவர்களுடைய இணைய தளத்தின் மீதான எனது முதன் முதல் வாசிப்பு மிகவும் சுவாரசியமானது. அவர்கள் மிகவும் உன்னதமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். பல அரசாங்க இணைய தளங்களை விட மக்களுடன் அதிகமான உடாட்டங்களையும் தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கை பௌத்தமாக இருப்பினும் அவர்களுக்கு இருக்கின்ற சமூக மற்றும் அரசியல் அதிகாரம் மீதான தீவிர ஈடுபாடு அவர்களுடைய செயற்பாடுகளை நடைமுறை ரீதியாகவும்; இலட்சிய ரீதியாகவும் வளர்த்து வருகின்றது. இதனை மறுவாறாக கூறுவதானால் ஈமெயில் இனவாதம் என்பது அழகாக பொருந்தும். 

போருக்கு பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் இத்தகைய நன்கு கட்டமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் தேவைதான் என்ன? ஏன் அவர்கள் முஸ்லிம் விரோத பிரச்சாரங்கiளை முடுக்கிவிட்டுள்ளனர்? உண்மையில் பொது பலசேனா அமைப்பு மட்டும்தான் அவ்வாறு காணப்படுகின்றதா அல்லது போருக்கு பிந்திய இலங்கையில் காணப்படுகின்ற சூழலில் இவ்வமைப்பு ஒரு அறிகுறி மட்டும்தானா? ஏன் பொளத்த சங்காக்கள் தோற்கடிப்பதற்காகவே ஒரு எதிரியை உருவாக்கி கொள்கிறது? யதார்த்தத்தில், இத்தகைய நடவடிக்கையானது சமகால இலங்கையில் தங்களுடைய தாக்கத்தினை சமூக மற்றும் அரசியலில் உண்டுபண்ண வேண்டும் என்கின்றதொரு குறுகிய பிரதிபலிப்பாகும்.

போருக்கு பிந்திய பௌத்த அரசியல் 
 
இன்றைக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பதாகவே நவீன இலங்கை தனது பலமான இனவாத- சமய (சிங்கள-பௌத்த) அரசியலை இந்த உலகுக்கு நன்றாக உணர்த்திவிட்டது. உலகில் பயங்கரவாத பக்கங்களின் முதல் பக்கமாக திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒட்டு மொத்தமான தோல்வியே சிங்கள அதிகார வர்கத்தினதும் அவர்களுடைய வாக்காளர்களினதும் விருப்பு வெறுப்புகள் யாதென்பதனை மீண்டும் ஒருதடவை உறுதிப்படுத்திக் கொண்டது. இவர்களுக்கு நாட்டின் சனநாயகம் மற்றும் மனித உரிமை மீதோ, நாட்டின் வரலாறு அதன் பல் கலாச்சார அம்சங்களை உள்ளடக்கிய புவியில் அமைப்பு, சார்பு பொருளாதார முறை முதலியன எவை மீதும் அவர்களுக்கு  கவலை கிடையாது. மாறாக அவர்களுடைய முழு மூச்சும் சிங்கள-பௌத்த அரசு என்பதுதான். தனது முன்னோர்களை போன்றல்லாது எதுவித சர்வதேச அழுத்தங்களுக்கம் இடம் கொடுக்காது விடுதலை புலிகளை விட்டு வைக்கக் கூடாது என்ற சிங்கள தீர்மானமே மூச்சு என விரைவாக செயற்பட்ட சனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை பற்றி சந்தேகமே இல்லை. நடைமுறையில், தம்ம துவீபத்தில் (பௌத்த நாட்டில்) இணக்கப்பாட்டினை உண்டு பண்ணுவதற்காகவும், சிங்கள மக்களின் இறமையை நிலைநாட்டவும் எனக் கூறி 'போர்' என்ற எண்ணக் கருவினை மக்கள் மத்தியில் வெற்றிகரமாக விதைத்ததற்கான முழு பெருமையும்  பௌத்த சங்காக்களுக்கே உரியது.

சங்காக்களின் வலுவான இந்த முயற்சிக்கு இணங்கிக் கொள்ளாத குறிப்பிட்ட சிறுபான்மை சிங்களவர்களும் (நாட்டின் தென்பகுதியில்) இருந்தனர். எனினும், பெரும்பாலும் நாடு முழுவதுமாக இருந்த நிக்காயாக்கள் யாவும் 2009ல் போரை வென்றறெடுக்க தன்னால் இயன்ற அத்தனை ஒத்துளைப்புக்களையும் சங்காக்களுக்கு வழங்கினர் என்பதுதான் யதார்த்தம். இதேவேளை, போரை வென்றெடுக்க அனைத்து ஒத்துளைப்புக்களையும் வழங்கிய இரு பங்காளர்களுக்கு இலங்கை தாய் தனது மரியாதையினை செலுத்த இன்னும் கடமைப் பட்டிருக்கிறாள். முதலாவது, போர் என்கின்ற அத்தியாயத்தினை உருவாக்கி அதற்கு உரமூட்டும் வகையில் கருமமாற்றிய அத்துறலியே றத்னா, பென்கமுவே நாளக்க, எல்ல குணவாண்ஸே முதலிய இன்னும் ஆயிரம் சிங்கள சங்காக்கள். இரண்டாவது, பிராந்திய அதிகாரத்தை கைக்குள் உள்ளடக்க காத்திருக்கும் சீனா. 

இலங்கைக்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்கனவே சீனா கடனாக வழங்கியுள்ளது என அண்மைய உலக வங்கி அறிக்கை குறிப்படுகிறது. ஆனாலும் அத்தகைய பாரிய கடனுக்கான எந்தவொரு பிரதிபலிப்பினையும் எம்மால் நாட்டில் கண்டு கொள்ள முடியவில்லை என்றாலும், சீனாவுக்கு ஏதோவொரு வழியில் மகிழ்ச்சிதான். எவ்வாறாயினும், இதுவரையில் சிங்கள ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை தோற்கடித்தல் என்கின்ற சங்காவினுடைய ஒரே ஒரு எதிர்பார்ப்பினை மாத்திரமே நிறைவேற்றி கொடுத்துள்ளனர். இனவாத-சமய (சிங்கள-பௌத்த) அரசினை தாபிக்கின்ற அவர்களுடைய பரந்த நோக்கமானது இன்னும் நிலுவையில்தான் உள்ளது அல்லது அவர்களுடைய அசல் நம்பிக்கையினை விட தற்போது அது மெதுவாகவே பயணிக்கிறது எனக் கூறலாம். பொது பலசேனா அமைப்பு 'பௌத்த அதிகாரம்' என்கின்ற விடயத்தினை இந்த அளவுக்கு முனைப்பாக மக்கள் மயப்படுத்தப்படுவது இந்த பின்னணியில்தான்.

பௌத்த அரசியல் அதிகார செறிவாக்கம் (பொத்த அரசிலை உள்ளீர்த்தல்)
 
தேரவாத சங்காவினருக்கும் அவர்களுடைய அரசுகளுக்கும் இடையில் பின்னிப் பிணைந்துள்ள இயங்கியல் உறவானது தென்னாசியாவின் அரசியல் அதிகாரத்தினை தம்மோடு தக்க வைத்துக் கொள்வதுதான் என்பது பல்வேறு சமூக பொருளாதார அரசியல் ஆய்வுகளினால் உறுதிப்படுத்தப்பட்டவை. இத்தகைய இயக்கங்களின் பரிமானங்களும், உருவாக்கங்களும் இலங்கையில் மகாவம்ச இலக்கியத்தின் மூலம் நல்லதொரு வரலாறாக சித்தரிக்கப்பட்டுமுள்ளது. சங்காவினருக்கும் அரசுக்கும் இடையில் உள்ள இத்தகைய தொடர்பினை தற்கால நவீனத்துவத்துக்கு ஏற்றாற்போல் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை தற்போது எமக்கு ஏற்பட்டுள்ளது. 

கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தோற்றம் மற்றும அவவமைப்பின் மீதான சிங்கள சங்காவினரின் விரோத போக்குள்ள நடவடிக்கை முதலியனவுக்காக அரசியல் ஆதரவானது இரு வரலாற்று உண்மைகளை அடிப்படையாக கொண்டு அமைந்தவை. முதலாவது, மகா விகாரையின் மகானாம குருக்கள், மகாவம்சத்தினை எழுதியவர் தொடக்கம் தற்போதைய கங்கொடவில சோமா- நகர மக்களை நவீன பௌத்த மத சிலுவைப்போர் பிரச்சாரத்திற்கு மக்களை கவர்ந்திழுக்கும் நபர் -வரையில் சங்காவினர் கட்டிக்காத்து வந்த பாரம்பரிய அரசியல். இங்கு அளவிட முடியாத பொறுப்பும் வரையறுக்கப்படாத அதிகாரமும் சிங்கள அரசினை தாபிக்கவென சங்காவினருக்கு பேறாக அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த பேராசிரியர் வல்பொல றாகுல இத்தகைய தொடர் தேர்ச்சியான அரசியல் பயணம் குறித்து அவருடைய 'பிக்குவாகே உறுமய' என்ற புத்தகத்தின் 9ம் பதிப்பில் குறிப்பிட்டு கூறுவதுடன் நவீன சங்கா அரசியலுக்கென சிந்தனைகளையும் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக, அவர்களுடைய சமூகத்தில் இடம்பெறுகின்ற மாற்றங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக சிங்கள சங்காக்கள் இன மற்றும் சமய அடிப்படையிலான விளக்கங்களை நிறையவே ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அவற்றை ஏனையவர்களிடம் கொண்டு செல்லவும், தேவையாகிற போது ஏனையவர்களிடம் இருந்து அவற்றை உள்வாங்கி கொள்ளவும் நன்றாக தம்மை பழக்கப் படுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் ஏனைய தேரவாத சமகாலத்தவர்களின் கருத்துக்களை நிறையவே உள் வாங்கிக் கொண்டுள்ளனர். 

இலங்கை நாடு 1800 காலப் பகுதியில் மிகவும் ஆழமான காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த வேளை அதனை எதிர்த்து போராடுவதற்கு தாய்லாந்து மற்றும் பர்மா (மியன்மார்) ஆகிய நாடுகளில் உள்ள சங்காக்களுடன் சேர்ந்து இவர்கள் தொழிற்பட்டார்கள். அவர்களுடைய சுதந்திரம் மற்றும் சுயாட்சி குறித்தான கோரிக்கைகள் அவர்களை அன்றிருந்த வங்காள தேசத்தின் சகாக்களாகவே வெளிப்படுத்தியது. அநாகரிக தர்மபால சங்காவின் ஒருத்தராக இல்லாவிட்டாலும், அவர் சிங்கள-பௌத்த அரசினை தாபிக்கின்ற செயற்றிட்டத்தினால் அதிகம் செல்வாக்கிற்கு உட்பட்ட ஒரு புரட்டஸ்தாந்து பௌத்தராகவே இருந்தார்.  அப்போது அமெரிக்க போர் வீரராக இருந்த கேர்ணல் ஓல்கொட்டின் உதவியாலும், ஆலோசனையினாலும் தர்மபால இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்கினை கடைப்பிடித்ததுடன் இதற்கான மாhதிரி தந்திரோபாயங்களை புரட்டஸ்தாந்து கிறித்துவ மிசனரிளின் செயற்பாடுகளின் மூலமாகவே கற்றுக் கொண்டார்.

இன்று சோமாவினால் மற்றும் தம்புள்ள றங்கிரி விகாரையின் இநாமுலுவே சிறி சுமங்களா போன்றோரினால் முன்னெடுக்கப்படுகின்ற ஊடகங்களை அடிப்படையாக கொண்ட பௌத்த விவிலியக் கருத்துக்கள் அமெரிக்கஃபிரித்தானிய சமய போதகர்களின் தொழிற்பாடுகளின் அடியொற்றி நடந்தேறுபவை. இவர்களே மக்களின் ஒற்றுமையினையும், சகவாழ்வினையும் குலைக்கும் வண்ணமாக விரோதம் கொண்ட சமயக் கருத்துக்களை நவீன ஊடகங்கள் வாயிலாகவும் இணையத் தளங்கள் வாயிலாகவும் எவ்வாறு போதிப்பது என முதன் முதலில் உலகுக்கு கற்றுக் கொடுத்தவர்கள். 

இத்தகைய பொளத்த உள்ளீர்பு போராட்ட செயல்முறை மற்றும் சமூகத்தின் மீதான அதன் பாதிப்பு என்பது சமூக அரசியலில் அவை உள்ளீர்க்கப்படும் விதத்தினை பொறுத்தும் அத்தகைய மாற்றீட்டினால் விளைகின்ற பிரச்சினைகள் எவ்வளவு என்பதிலுமே தங்கியுள்ளது. இத்தகைய உள்ளீர்ப்பினால் பாதுகாப்பு கெடுபிடிகள் இன்னும் அதிகமாகுதல், சந்தையை மையப்படுத்திய தாரளவாத சனநாயம், உலகமயமாகும் பொருளாதார மதிப்பெண், புதிய சமயங்களின் (விசேடமாக பெந்தகொஸ்தே கிறித்துவ சபை) வளர்ச்சி அல்லது ஊடுருவல் மற்றும் தற்போதைய முஸ்லிம்கள் போன்று புதிதாக வணிகத்தில் ஈடுபடும் வர்க்கம் முதலிய சிக்கல்கள் மேலும் தோன்றலாம். இதேவேளை, அரசியலில் சங்காக்களின் இத்தகைய பௌத்த உள்ளீர்ப்பின் காரணமாக சிறுபான்மை உரிமைகள், அதிகார பரவலாக்கல் என்கின்றன யாவும் இல்லாமல் ஒழிந்துவிடுவதுடன், போர் என்கின்ற நிலமைக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்குவதுடன் அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு முதலிய கருத்துக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு நாட்டின் அரசு மேலும் மத்திய மயப்படுத்தப்படும். இத்;தகைய மத்திய மயப்படுத்தப்பட்ட அரசின் மூலமே அதிக கட்டுப்பாடுகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறான சங்காக்கள் உலக நடப்பில் பல்வேறு வகையான வன்முறைகளையும் அல்லது சில போது வன்முறையற்ற விதத்திலும் எதிரொலித்துள்ளன. இத்தகைய அம்சங்கள் பொருந்தியதாகவே பொது பலசேனாவின் நவீன போக்கு அமைந்துள்ளது.

புத்தசாசனத்தினை நிறுவுதல்

தென்னாசியவில் ஒரு தேசிய அரசின் உருவாக்கம் என்பது ஐரோப்பாவில் ஒரு தேசிய அரசினை தாபிப்பதில் இருந்து சரி நேர் எதிரானது. தென்னாசியாவில், காலணித்துவ ஆட்சிக்கு எதிராக நீண்ட காலம் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது குடியியல் சமூகத்தின் தலமையில் இன, சமய, கலாச்சார விடயங்கள் பற்றி ஒருமித்து குரல் எழுப்பக் கூடிய ஒரு நீண்ட உறுதியான அரசினை உருவாக்கும் நன்னோக்குடன் இடம்பெறவில்லை. மாறாக, பல்-தேசியம், பல-மொழி, பல-சமயம், மற்றும் பல-கலாச்சாராம் என்கின்ற தமக்கே உரித்தான தனித்துவத்தினையும், குடியியல் ரீதியான அபிலாசைகளையும் தற்போது தென்னாசிய சமூகம் தொலைத்து நிற்கிறது. 


தென்னாசியாவில் காலணித்துவத்திற்கு எதிராக இடம்பெற்ற சனநாயக போராட்டங்கள் யாவும், கிடைத்த சுதந்திரத்தினை முழு நாட்டு மக்களுக்கும் உரித்தான ஒன்றாக கருதாமல் குறிப்பிட்ட ஒரு இன வர்கத்திற்கான வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொண்டது. இலங்கையில், சிங்களவர்கள் சுதந்திரத்தை தாம் பெரும்பான்மை ஆட்சி செய்வதற்கான சந்தர்ப்பமாக கருதிக் கொண்டனர். இவை சுதந்திர இலங்கையில் அடுத்தடுத்து இடம்பெற்ற இந்திய தமிழர்களின் பிராசாவுரிமை சட்டம், சிங்கள மொழி ஆட்சி, பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் பாரபட்சம், பௌதத்தின் மேலாதிக்கம் முதலிய முதலிய சனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். மறுபுறம், காலணித்துவ ஆட்சிக்கு பின்னர், சுதந்திரம் கிடைத்த போது தமிழ் பேசும் மக்கள் பெரும்பாலும், தன்னாட்சிக்கான அல்லது சுயாதீனமானதும், சதந்திரமானதுமான பிராந்தியத்திலேயே தமது சுதந்திரக் கனவுகளுடன் வாழ்ந்து வந்தனர். இத்தகைய அவர்களுடைய அபிலாசைகளுக்கு மாற்றமாக நடந்தேறிய சுய அரசியல் இலக்கை அண்டிய காய் நகர்த்தல்கள் 30 ஆண்டு கால போருக்கு வழி அமைத்தது.

ஆண்மீக அடிப்படையில் சிங்கள 'சங்கா' என்பது வாழ்க்கையை துறந்து இறை நிலையை அடைய உதவ வேண்டும். ஆனால் அவர்களுக்கு சமூக அரசியல் அதிகாரத்தினை கைப்பற்றுவது என்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரலும் இருக்கிறது என்பது தற்போது தெளிவாகிறது. இந்நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில்  சிங்கள-பௌத்தம் என்கின்ற இன மற்றும் சமய ரீதியான சிந்தனையே அரசினை வழிநடாத்தவும், கட்டுப்படுத்தவும் வேண்டுமெனவும், அதுவே சமூக அரசியல் தளத்தின் அடிநாதமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கருதுகின்றனர். மகாவம்ச கதைகளில் வருகின்ற பெரும்பாலான எழுத்துக்கள் சமயம் சார்ந்த கருத்துக்களை பிரதிபலிக்காது அரசியல் சார்ந்தவையாக காணப்படுவது அவர்களுடைய இத்தகைய இலக்கினை விளங்கிக் கொள்ள போதுமான சான்றாகும். ஆனால், அவை கூட பாழி மொழியில் உள்ள தேரவாத கருத்துக்களுக்கு மாற்றமான போதனைகளையே கொண்டுள்ளன. 

இந்த பௌத்த அரசியல் குறிப்பிட்ட சில அடையாளம் காணப்பட்ட ஏனைய நபர்களுக்கு எதிராக விரோத போக்குகளை கடைப்பிடிக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மஹாயான பௌத்தம், இந்துத்துவம், கத்தோலிக்கம், கிறித்துவ மிசனறிகள், முஸ்லிம்கள் முதலானவர்கள் சிங்கள சங்காவினால் அவ்வாறாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள். மேலும், அவர்கள் எவர்களை அத்தகை கூட்டத்துள் இணைக்க விரும்புகின்றனரோ அவர்களும் உள்ளடங்குவர்.

மேலும், சிங்கள சங்காக்கள் ஏனையவர்களுக்கு எதிராக விரோத போக்குகளை கடைப்பிடிப்பவர்கள். அவர்களுடைய சிங்கள அரசை தாபிக்கும் திட்டம் இந்தியாவில் காணப்படுகின்ற இந்துத்துவா தேசிய பேராட்ட அமைப்பினை ஒத்தது என்கின்ற வாதமும் உண்டு.  இதற்கு ஆதாரமாக, ஞானநாத ஒபேசேகர, எச்.எல். செனவிரட்ண,எஸ்.ஜே. தம்பையா மற்றும் மேலும் அதிகமான மேற்கத்தய அறிஞர்கள் சிங்கள சங்கா அரசியலை வெறுமனே அரசியல் விஞ்ஞானமாக கருத்திற் கொள்ளாது மானிடவியல் விஞ்ஞானமாக ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர் என்பது போதுமானது.

இலங்கை போன்ற நாடுகளின் சமயம் சார் அரசியல் மாற்றங்கள் குறித்து நவீன அரசறிவியல் மட்டுப்படுத்தப்பட்ட விளக்கங்களையே தருகின்றன. மேற்கத்தேய சிந்தனையில் குறிப்பிடுவது போன்ற 'மீண்டு எழும் சமயம்' என்பது போன்ற சொற்பிரயோகங்கள் எம்மையோ அல்லது எமது அரசியலையோ விட்டுவைக்காத சமயம் குறித்த நிலமைகளை விளக்க கூடியவை அல்ல. எனவே, இங்கு சமயம் மீண்டு எழவில்லை மாறாக சமயம் எமது அரசியலில் எவ்வாறு அழ ஊடுருவியுள்ளது என்பது மீள வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சிந்தனையாளர்களே இலங்கையின் சமய அரசியல் குறித்து விளக்கம் கொண்டுள்ளனர் அதுவும் பின் நவீனத்துவ சிந்தனையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாகவே இருந்துவருகின்றது. 


இலங்கை அரசியலில் சங்காக்களின் விரோதப் போக்கான அலைகள் பௌத்த சியோனிசத்துக்கான அடையாளமா? மறுபக்கத்தில், சிங்களவர்கள் பௌத்தத்தினை நிலைநிறுத்த பிறந்தவர்கள் என்பதும், இலங்கை புத்தரின் தேசம் என்பதும் சிங்கள-பௌத்தர்களின் தொண்டு தொட்ட நம்பிக்கையாகும். புத்தரின் தேசத்தினை பாதுகாக்கவும், அதன் மேன்மையை நிலை நாட்டும் நோக்கில் புதிய போர் முறைகளை பரப்பி விடவும், வன்முறைகளை தோற்றுவிப்பதும் தேவையாகிறது என்பது அவர்களுடைய வழிவந்த போதனை. தமிழ், இந்துசமயம், இந்திய படையெடுப்பு, தமிழீழ விடுதலைப் போராட்டம், முஸ்லிம்கள், பொருளாதாரம் முதலியன மிகவும் முட்டாள்தனமான முறையில் ஆனால் மிகவும் சரியாக மகாவம்ச புராண கதைககள் மற்றும் ஏனைய இதிகாச கதைகளுடனும் பொருத்தப்பட்டு விரோத போக்கு பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுவது இதற்கு போதுமான சான்றுகள்.

இத்தகைய பௌத்த சியோனிச விளக்கத்தின் படி, மாகாவம்சம் கூறும் தூதுத்துவம் இடம் பெறுவதற்கு, சிங்களவர்களுக்கும், புத்த தர்மத்திற்கும் எதிரியாக திகழ்பவர்களை தேடி அடையாளம் காண்பது அதன் பாதுகவலர்கள் என்ற வகையில் சங்காக்களுக்கு பொறுப்பாகும். சிங்கள சங்காக்களும், அவர்களது தேசியவாத அரசியல்வாதிகளும் அவ்வாறான எதிரிகள் குறித்த நீண்டதொரு பட்டியலை முடியரசான பிரித்தானிய தொடக்கம் ஐ.நா சபை, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் மற்றும் நாட்டின் தலைவர் தொடக்கம் நாட்டின் நீதியரசர் வரை அவசியமான யாவருக்கும் வழங்கியிருக்கின்றனர். 

அரசியல் ரீதியாக இடம்பெறுகின்ற வன்முறைகள் குறித்து சமய நம்பிக்கைகள் நியாயம் கற்பிக்குமாக இருந்தால் அங்கு சனநாயகம் வாழ முடியாது. இதுவே இனவாத, மதவாத அரசியலின் முடிவாகும். இந்த அடிப்படையில் உலகில் சியோனிச நாடாக ஒரே ஒரு நாடுதான் காணப்படுகின்றது என்பது உண்மையல்ல. 1948ம் ஆண்டில் தாபிக்கப்பட்ட சியோனிச நாடுகள் இரண்டாகும். யுத கிறித்துவ நம்பிக்கையின் அடிப்படையில் இஸ்ரவேலும், மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பௌதத்திற்கு மதத்திற்கு விவரணம் செய்யும் வகையில் இலங்கை நாடுமாகும். இவ்விரு அரசுகளும் அவர்களுடைய நிலத்தின் புனிதத்தினை காக்க போராட வேண்டும் என்பதுடன் நேரடியாக அவர்களுடைய சமயங்களையும் பாதுகாக்க வேண்டும். இஸ்ரவேலுடைய ஆள்புலம் வாக்கு கொடுக்கப்பட்ட விவிலிய எல்லைகளை தேடி விரிவடைந்து செல்லும் அதே வேளையில், இலங்கையின் ஆள்புலம் புத்தரினால் தூய்மைப் படுத்தப்பட்டு தம்ம தீபமாக ஒப்படைக்கப்பட்ட மாநிலம். தற்போது இலங்கையில் ஆட்சி இடம்பெறுவது அதன் பிரசைகள் யாவருக்காகவும் என்று தற்காலிகமாக கூறப்பட்டாலும் அதனுள் 'ஏனையவர்கள்' என்ற பிரிவினரும் இருக்கின்றார்கள் என்பதனை மறந்துவிட முடியாது.

இவ்வமைப்புக்களும் அவர்களுடைய சமய அரசியலும் முழு உலகுக்குமானதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்களுடைய நாடு என்பது நித்தியம் நிறைந்த தெய்வீக இடமாகவும், அங்கு சமகாலத்தில இடம்பெறும் அரசியல் நடவடிக்கை தெய்வீக கட்டளைகளின் படி இடம்பெறுகின்றது எனவும் அவர்கள் நம்புகின்றனர். இந்தவகையில், அவர்கள் அவர்களுடைய ஆட்சியளர்களை தெய்வத்தினால் நியமிக்கப்பட்டவர்களாயும் (அல்லது புத்தரின் வழி வந்தவர்களாகவும்) அத்துடன் அவர்களுடைய படையினை ஆர்மகித்தன் என்கின்ற புனித போரில் பங்கெடுத்துள்ள நித்தியமெனும் கீர்தியை பெறுகின்ற மகன்மார்கள் எனவும் நம்புகின்றனர். எல்லே குணவான்ஸே தேரோவின் '50 ஒற்றைப் போர்' என்கின்ற பாடல்கள் எழுதப்பட்டு, தயாரிக்கப்பட்டு நாட்டில் யுத்தம் உக்கிரம் அடைந்திருந்த நிலையில் படையினர் மத்தியில் விநியோகிக்கப்பட்டது என்பது இங்கு நினைவூட்டத் தக்கது.

இந்த அடிப்படையிலேயே, இன்று பொது பலசேனா அமைப்பு முஸ்லிம்களின் முன்னேற்றத்தில் ஐயம் கொண்டு அவர்களுடைய பொருளாதார, வணிக நடவடிக்கைகள் ஊழல் நிறைந்தது என குற்றம் சாட்டுகின்றனர். புள்ளிவிபர அடிப்படையில் முஸ்லிம்கள் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எண்ணிக்கையளவில் வளர்ந்துள்ளனர் என்பது கருத்து வேறுபாட்டுக்குரிய விடயம். எவ்வாறாயினும், அத்தகைய முஸ்லிம்களின் வளர்ச்சி எவ்வாறு சிங்கள பௌதத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்? சங்காக்களின் அவ்வாறான விளக்கங்களினால் அச்சம் கொண்டுள்ள சிங்கள மக்கள் குறித்து முஸ்லிம்களிடத்தில் என்ன தீர்வு நடவடிக்கைள் இருக்கின்றன? அல்லது தற்போது எத்தகைய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்?


ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், பொது பலசேனா அமைப்பு மிகவும் அபரிவிதமாக வளர்ச்சி பெற்றுவருகின்றது. அத்தோடு நின்றுவிடாது தமது அமைப்பினை மீள கட்டமைக்கும் பொருட்டும் விரிவாக்கும் பொருட்டும் ஏனைய அனைத்து சிங்கள புத்த சாசனங்களுக்கும் அழைப்பு விடுத்தவண்ணம் உள்ளனர். இந்த மீள் கட்டமைப்பானது அமைப்புக்களுக்கு இடையில் பொறுப்புக்களை பகிர்ந்தளித்தல் மேலும், தலதா மாளிகையினதும் ஏனைய ஆத்மஸ்தானங்களினதும் வருமானம் குறித்தும், சொத்து பகிர்வு குறித்து மிகவும் அதிகம கவனம் செலுத்துதல் என்பவற்றை அடிப்படையாக கொண்டது.


பலசேனாவின் இத்தகைய அழைப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. இவ்வழைப்பு செவியேற்கப்பட்டு நவீன சிங்கள பௌத்தம் ஒரு நாள் நிறைவேறும். இந்நிலை தோன்றுகிற போது, இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் இந்த பௌத்த சியோனிசம் பற்றி விளங்கிக் கொண்டு வெறுமனே அரசியல் ரீதியாக வன்முறைகள் எதனையும் கட்டவிழ்த்து விடாது செயற்பட முடியுமா? இத்தகைய சிங்கள சங்காக்களின் நிகழ்ச்சி நிரல் குறித்து விளக்கம் அளிப்பதற்கான வழிமுறைகள் ஏதெனும் அரசாங்கத்திடமோ, ஏனைய சிவில் அமைப்புக்களிடமோ காணப்படுகின்றதா? பொது பலசேனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற அவநம்பிக்கை, வர்க்க முரண்பாடு, இனவாதம், பொருளாதார போட்டி முதலியவற்றை தவிர்த்துக் கொள்வதற்கான அடிப்படைகள் இவ்வாறான வினாக்கள் மூலமாகவே சாத்தியப்படும்.


தென்கிழக்கு ஆசியாவில் பர்மா (மியன்மார்), தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தேர வாதத்தினை கடைப்பிடிக்கின்ற நாடுகள் ஏற்கனவே பௌத்த-முஸ்லிம் முரண்பாடுகளை பாரியளவில் உருவாக்கி விட்டிருக்கின்றன.


சிங்கள பௌத்தம் மீண்டும் 1915 களில் இடம்பெற்றது போன்ற சிங்கள-முஸ்லிம் கலவரம் ஒன்றுக்கு வித்திடுமா? அவ்வாறான ஒரு கலவரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தொழிற்படுத்த அனைத்து வகையான உக்திகளையும் பொது பலசேனா முன்கொண்டு வருவதனால் 2015ல் அல்லது அதற்கு முன்பதாக அவ்வாறான நிகழ்வு ஒன்றுக்கு நிறையவே சாhத்தியங்கள் நிலவுகின்றன. இலங்கையில் சங்காக்கள் தமக்குள்ள ஐயங்களையும், கருத்துக்களையும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்;த்துக் கொள்ள முடியுமா? இத்தகைய கலந்துரையாடல் முயற்சிக்கு முஸ்லிம்கள் மத்தியல் காணப்படுகின்ற அரசியல் மற்றும் சமய அதிகார வர்க்கங்களும், அவர்களுக்கு இணங்கியதாக செல்லும் வணிக சமூகமும் என்ன நடவடிக்கைகளை கைக்கொள் போகின்றார்கள்?

சி.சந்திரகாந்தன் என்ற பந்து இரண்டு விக்கட்டுகளை சாய்த்திருக்கிறது


நிந்தவூரின் அரசியலில் இன்று குறிப்பிடத்தக்க ஒரு நாள். மக்களின் அரசியல் அபிப்பிராயமானது வேறு திசையில் மாற்றம் பெறுவதற்கு சற்று முந்தியகாலம் இதுவென சந்தேகிக்க வழிவகுத்துள்ள ஒரு நாள்.

நடந்தது கிரிக்கட் என்றாலும் வெறும் கிறிக்கட் என்று கூறிட முடியாத அளவிற்கு கொஞ்சம் அரசியலின் வாடையும் கூடவே பெட்டும் பந்துமாக சேர்ந்திருந்தது. என்றாலும், இந்தக் கிரிக்கட் பலருக்கு படிப்பினை கொடுத்திருக்கும் என்பது என்னவோ உண்மைதான். நிந்தவூரில் இன்று இடம்பெற்று முடிந்த கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு கிழக்கு மகாண சபையின் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். அவரது அரசியல் காலத்தில் முதல் முறையாக இந்த நிந்தவூருக்கு வருகை தந்திருக்கிறார் என நினைக்கின்றேன். என்றாலும் இவ்வருகை மக்கள் மத்தியில் அவர்கள் இதுவரை காலமும் வைத்தருந்த குருட்டுத்தனமான அரசியலுக்கு மறைமுகமாகவாயினும் சிறிது மருந்து கட்டலாம் என்பது சிலரது கருத்து.

நிந்தவூரில் எதற்கு எடுத்தாலும் அழைக்கப்படுவதற்கும், மண்ணின் மகிந்தர் என்றும், தன்மான சிங்கம் என்றும் போற்றப்படுவதற்கும் என்றிருந்த இரண்டு எம்பிக்களை இந்த நிகழ்வில் காணமுடியாமல் போனதற்கு இந்த மக்கள் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள் என்றுதான் நான் கூறவேண்டும். நீங்கள் எல்லோரும் ஏன் என்று கேட்கலாம். மக்கள் கேட்பது ஒன்Nறு ஒன்றுதான். இந்த இரண்டு எம்பிக்களும் ஊருக்கோ அல்லது இந்த நாட்டிற்கோ செய்தது என்ன? தயவு செய்து அவர்களுடைய குடும்பத்திற்கு செய்தவைகளை கூற வேண்டாம் என அம்மக்களே கூறுகிறார்கள் நான் அல்ல. இதுததான் நானும் இந்த ஊரில் இத்தனை நாளும் செவியுண்ட வினாக்கள். இதற்கான விடை எனக்கும் தெரியாது. உங்களுக்கு தெரிந்தால்...

மடத்தனமாக அரசியலை நெருப்பாக மக்கள் மத்தியில் மூட்டிவிட்டு குளிர் காய்ந்ததை விடுத்தும், மக்கள் மனங்களில் மரம் என்ற சின்னத்தை விதைத்து  மடங்களாக மாற்றியதை விடுத்தும், அரசியல் என்பது குடும்பங்களுக்குள் மாத்திரம் சுற்றித்திரிய அக்கரையாக செயற்பட்டதனை விடுத்தும், தேர்தல் என்றால் மக்கள் மடையர்களாக மாறவேண்டும் என்று பள்ளிக்கூடம் நடத்தியதனை விடுத்தும், அபிவிருத்தி என்பதனை தொட்டு நக்கும் தேனாகவும், வோட்டு என்பது காசுக்கும் ஒரு போத்தல் சாராயத்திற்கும் போடும் வெறும் கோடு என்றதனைவிடுத்தும், தெருவோரங்களில் கட்சி கந்தோருகள் அமைத்து காடையர்களை உருவாக்கியதை விடுத்தும், தலவைன் என்பவனுக்கு வெறும் தலை இருந்தால் போதும் என்று மக்களுக்கு மகுடி ஊதியதனை விடுத்தும், சேவை என்பது சாவு நடந்த வீட்டுக்கு சந்தக்கு வாங்கி கொடுக்கின்ற காசு மட்டும்தான் என்றதனைவிடுத்தும், கட்சி என்ற பேரில் ஆட்டுக்கொட்டில் நடத்தியதனை விடுத்தும், பேராளிகள் என்ற  பெயரில் போக்கிரிகளை உருவாக்கி மஞ்சல் பச்சை கலந்த தொப்பியும், சட்டையும் வழங்கி அழகு பார்த்ததை விடுத்தும், கூடவே இருந்தவர்கள் என்று கூறி கொந்தராத்து வாங்கிக் கொடுத்தனை விடுத்தும், ஒரு மண்ணாங்கட்டியும் இந்த எம்பிக்கள் செய்தது கிடையாது. செய்பவர்களையும் விட்டது கிடையாது.

அரசியல் என்பது ஒரு கலையோ அல்லது மாயசால தந்திரமோ அல்ல. இது ஒரு கற்கை அல்லது அறிவு என்று கூறலாம். அதில் தேர்ந்தவர்கள்தான் அதனை செய்யலாம். ஆனாலும் எல்லா தேர்ந்தவர்களும் அதனை செய்ய முடியாது. எவ்வாறாயினும், படித்தவர்களும் படியாதவர்களும் அதில் பங்கேற்கலாம். இவற்றை எமது மக்கள் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவில் தலைமை என்பதுவும் அப்படித்தான். இந்த அரசியல்வாதிகள் கூறுவது போன்று தலைவர்கள் உருவாவது கிடையாது. அது சனநாயக தத்துவமும் கிடையாது. இந்த வங்குரோத்து அரசியல்வாதிகள் சோடிக்கின்ற தோரணைகள்தான் அவைகள். அரசியல் தலமை என்பது எவராக இருப்பினும் சரி, வேறு எந்த தலைமையாக இருப்பினும் சரி அது உருவாவது கிடையாது, உருவாக்கப்படுவதும் கிடையாது. உண்மையில் அது ஏற்கனவே உருப்பெற்றுத்தான் இருக்கிறது. மக்களாகிய எமது வேலை அதனை அடையாளம் கண்டு கொள்வதுதான். நாம் எமது தலைவன் என்று கூறுகிறவன் அடிப்படையில் எமக்கு துரோகம் செய்கிறான் என்றால் அவன் தலைவன் இல்லை. நாம் எதற்காக அவனை தலைவனாக கொண்டோமோ அதற்கு மாற்றமாக நடக்கிறான் என்றால் நாம் தலைவனை அடையாளம் காட்டுவதில் தவறு இழைத்திருக்கிறோம் என்பதுதான் யதார்த்தம். எனவே, நாம் அடுத்த தடைவை நமது உண்மையான தலைவனை சரியான வகையில் அடையாளம் கண்டு கொள்ள முயற்சிக்க வேண்டும்.

நாம் எமது தலைவன் துரோகி எனத் தெரிந்தும் அவனையே மீண்டும் மீண்டும் தலமையாக ஏற்றுக் கொள்வோமனால் அது எமது சமுதாயத்தின் இழிவும் தவறுமே தவிர அந்த துரோகியினது அல்லது குறிப்பிட சில குழுவினது தவறல்ல. ஏனெனில் தான் விதைத்த விதையை அந்த சமுதாயம் சரியாக அறுவடை செய்யவில்லை. தன் வயக்காடு பற்றி இந்த மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை அல்லது புரியவிடாமல் மறுக்கவும் மறைக்கவும் பட்டிருக்கிறார்கள்.     

ஆனால் இன்று எமது ஊர் மக்களின் நிலமை என்ன? மக்கள் அரசியல் என்ற பெயரில் ஏமாற்ற பட்டிருக்கிறார்கள். அரசியல் செய்வது என்பதனையும், அரசியலில் பங்கேற்பது என்பதுவுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர முடியாத அளவுக்கு அவர்களுடைய அறிவு ஒரு சாராய போத்தலுக்குள் ஆயிரம் ருபாய் நோட்டின் சதுர அளவில் முடக்கப்பட்டுள்ளது. வாக்கு இருந்தால் அடையாளம் இடலாம் என்றிருந்த காலம் சென்று இன்று காசு இருந்தால் அடையாளம் இடலாம் என்ற கட்டத்துள் நாம் அடைக்கப்பட்டிருக்கிறோம். மறுவாறாக, சேவை செய்தால்தான் மக்கள் மதிப்பார்கள் என்ற காலம் போய் இப்போது போர்வை போட்டால் மக்கள் எம்மை மதிப்பார்கள் என்ற காலம் அரசியல் தலமைகளிடம் குடியேறிவிட்டது. அரசியல் தலமை என்றால் பொதுமக்களுக்கு சேவையும், நன்னோக்கமும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எம்மிடையே இருந்து மாற்றப்பட்டு வாகனமும் வாட்டசாட்டமும் கூடவே உரக்க கத்த கொஞ்சம் வாயும் இருந்தால் அவன்தான் அரசியல்வாதி என்று கைதட்டும் ஏமாளிகளாக, பலவேளைகளில் கோமாளிகளாகவும் நாம் மாறியிருக்கிறோம். அரசியல் திறமை என்பதனை அளவிடும் கோலாக நாவண்மை, அறிவு, புத்;;;;;திசாதூர்யம், வெளிப்படைத்தன்மை என்பனவெல்லாம் இருந்த காலம் போய் தற்போது ஒரு பெட்டி காசும், வந்துபோக ஒரு காரும், போஸ்டர் ஒட்ட நாலு றோடும் இருந்தால் போதும் அவன் எமது தலைன் என்று ஓங்கி ஒலிக்கும் அளவுக்குத்தான் எமது குரல் வளைகள் அசைந்து கொடுக்கின்றன.

இதெற்கெல்லாம் காரணம் என்ன. எமாற்றுபவனை விட ஏமாறுவதுதான் மூடத்தனம் என்றால் அதனைத்தான் நாம் இவ்வளவு காலமும் செய்திருக்கிறோம் என்று கூற எனக்கு வெட்கமாக இருக்கிறது. அரசியல் என்பது மக்களாகிய எம்மிடம் இருந்து வரவேண்டி விடயம் என்றிருந்தால் நாம் அதனை ஏன் சில சில்லறைகளுக்காக அதனை மற்றவர்களின் மடியில் போட்டுள்ளோம். தெளிந்த குட்டையில் மீன் பிடிப்பதை விட குழம்பிய குட்டையிலதான் மீன்கள் அதிகம் மாட்டும் என்தனை (நாம்) மீன்கள் தெரிந்து வைத்தருக்கிறதோ இல்லயோ, பிடிக்கின்ற இந்த அரசியல் ஏமாற்றுப் பேர்வழிகள் மிக அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். உமது ஊர் இந்த அளவு சின்னாபின்னப்பட்டு இன்று நட்டாற்றில் இந்த நபர்களினால் விடப்பட்டுள்ளதற்கு காரணம் இந்த சமுதாயத்தில் இருந்த ஒழுங்கு முறை குலைந்திருப்பதால்தான். ஒன்றை இந்த ஊர் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாயம் ஒழுங்கு முறையின்றி குலைந்து காணப்படும் காலம் வரை இந்த ஊரின் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஊர் மக்களுக்குள் ஒரு உன்னதமான சிவில் ஒழுங்கமைப்பு நிலவுகிற போது நீங்கள் உங்களுடைய தலைமையை சரியான முறையில் அடையாளம் கண்டிருப்பீர்கள் என்பது யதார்த்தமும் நடைமுறையும் கூட.

நான் ஏற்கனவே கூறியது போன்று, நிந்தவூரின் அரசியல் வேறு திசையில் பயணிப்பதற்கான ஒரு ஆரம்பம் இன்று என நான் குறிப்பிட்டதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். எமது மக்கள் அதிகாரம் என்றால் என்ன என்பதனை புரிய ஆரம்பித்திருக்கின்றனர். அதிகாரம் என்றால் தமக்கு இருக்கின்ற அல்லது மற்றவர்கள் தமக்கு அளித்த பலம் என்றுதான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். உண்மையில் அதன் தத்துவம் வேறு. தமிழில் இலகுவாக விளங்க வேண்டுமாயின், அதிகாரம் என்பது அதி - ஆகாரம் என்பதுவாகும். அதி எனும் சொல்லை விளங்க 'அதிதி' என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதி என்பது மதிப்பு அல்லது மரியாதை எனப் பொருள். 'அதிதி' என்பது மரியதை செலுத்தப்படுகிற நபரை குறிக்கும். ஆகாரம் எனும் சொல்; உதவுதல் அல்லது தொண்டு செய்வதனை குறிக்கிறது. நீங்கள் விளங்கிக் கொள்ள உபகாரம் செய்தல் என்பதனை நினைவில் கொள்ளலாம். ஆகவே, அதிகாரம் என்பது மக்களுக்கென சேவையாற்ற அல்லது தொண்டு செய்யவென மக்களால் அடையாம் காணப்பட்ட அல்லது மதிக்கப்பட்ட நபருக்கு உள்ளவைதான்.

ஆக எனக்கு மகிழ்ச்சி, இன்று இடம்பெற்ற கிரிக்கட் நிகழ்வுக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிதியாக அழைக்கப்பட்டும், நாம் பெருமைக்கு மா இடிக்கும் உரலின் இரு உலக்கைளும் அவ்விடத்தில் இல்லை. இப்பொழுது அவர்களிடம் இருப்பது 'காரம்' மட்டும்தான்J அப்படியென்றால், எமது மக்கள் இன்று எமது எம்பிக்களுக்கு இருக்கின்ற 'அதி' என்தனை களட்டிவிட்டிருக்கிறார்கள். மதிப்பும் மரியாதையும் அவர்களுக்கு தவறுதலாக மக்கள் வழங்கியதாகத்தான் நான் கருதுகின்றேன்;. ஏனெனில் அவர்கள் எமது சமுதாயத்தில் தலைவர்களாக தவறுதலாக அடையாளம் காணப்பட்டவர்கள். நீங்கள் அது எப்படி என்று கேட்கலாம். தலைவர்கள் உருவாவதும் கிடையாது, உருவாக்கப்படுவதும் கிடையாது. சமுதாயம் இயல்பாகவே தலைவர்களை பெற்றெடுக்கிறது. சமூகத்தின் பணி என்னவென்றால் அவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வதுதான். அதனை எனது சமுதாயம் மீண்டும் செய்யும் என நம்புகின்றேன். அந்த தலைவனுக்கு

1 இலட்சியமும் குறிக்கோளும் இருக்க வேண்டும்
2 ஏதிர்பாராது இடம்பெறகிற அத்தனை தடைகளையும் தாண்டிச் செல்லும் சாதூர்யம் இருக்க வேண்டும்.
3 வெற்றியையும் தோல்வியையும் கச்சிதமாக முகாமை செய்யும் பக்குவத்தை அறிந்திருத்தல் வேண்டும்.
4 தீர்மானங்களை எடுப்பதில் துணிகரம் இருக்க வேண்டும்.
5 கண்ணியமானவனாக இருக்க வேண்டும்
6 வேலையையும் வெற்றியையும் பகிர்ந்து கொள்பவனாக இருக்க வேண்டும்
7 பொது வாழ்வில் எத்தருணத்திலும் வெளிப்படையானவனாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் நான் கூறுவது தேர்தல் காலத்தின் போது அளவிடுவதற்கல்ல. தேர்தலின் பின்னர் அளவிவிடுவதற்கு.

நீங்கள் நினைக்கின்றீர்கள் இப்படி ஒரு தலைவனை எப்படி உம்மக்கள் கண்டுகொள்வார்கள் என. நான் கேட்கிறேன், இருக்கின்ற உலக்கைகளிடம் இவற்றில் ஒன்றுகூட இல்லையே என்று. அப்ப எப்படி மா இடிப்பது??? இருக்கிற உரலயும் கொடுத்துட்டு கிறைண்டர் ஒன்டு வாங்கினா கரண்டுல போட்டு இடிக்கலாம். அப்படி இல்லாட்டி மா இடிக்க பக்கத்து வீட்டுக்குத்தான் போகணும். பக்கத்து வீட்டுலயும் எத்தன நாளக்கி இடிக்கிற. ஒலக்க இருக்கும் வரக்கித்தான் ஒரலுக்கு வேல. ஒரல் இருக்கப்போய்த்தான் இந்த ஒலக்கையும் இங்க இருக்குது. இதுதான் மெய்யான அரசியல், எமது மக்கள் இப்போதாவது புரிந்து கொள்கிறார்கள்.  
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger