ஸ்ரீ பாதமலை


பக்திக்கும் கற்பனைக்குமிடமான சிகரம்

ஓங்கி நிற்கும் அழகில் ஒரு 'கோதிக் கதெட்ரல்' கோபுரம். இல்லை; ரொபட் நொக்ஸின் வார்த்தைகளிற் கூறுவதானால், கூர் வடிவில் ஒரு சர்க்கரை கட்டி”. இவ்வாறு மத்திய மலைத்தொடர்களுக்கிடையே கம்பீரமாக காட்சி தருகின்றது சமனநல கந்த. தீவெங்கிலுமிருந்து ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் பாத வழிபாட்டிற்காக, களைப்பூட்டும் கால்நடையை அதன் உச்சிக்கு மேற்கொள்கின்றனர். அது புத்தரின் புனித பாத அடையாளம் என நம்பப்படுகின்றது.



வரலாற்றிலும் மரபுவழிக் கதைகளிலும் கற்பனை ஓவியங்களிலும் காலக்கணக்கில் கட்டுண்ட இம்மலை, நம்மவர்க்கு மட்டுமன்றி உலகின் கிழக்கிலும் மேற்கிலும் இருந்து வருகை தந்த மற்றவர்களுக்கும் புனித யாத்திரை தலமாக விளங்கி வந்துள்ளது. தூர இடங்களிலிருந்து வருகை தந்த தேசாந்திரிகளும் யாத்திரிகர்களும் இத்திருவிடத்தை தரிசித்துள்ளனர். இம்மலையின் வசீகரத்தை பற்றியும் நிறையச் சான்றுகள் பகர்ந்துள்ளனர். ஏழாயிரம் அடிமட்டில் உயரங்கொண்ட இம்மலை, ஒரு பொழுது சமன்” எனும் மலைத் தெய்வ வழிபாட்டிடமாக விளங்கியது. வரலாற்றிலும் மரபு வழிக் கதைகளிலும் இலக்கிய படைப்புக்களிலும் இம்மலை 'சமந்த கூட்ட” (சமனின் சிகரம்) என அறியப்படுகின்றது.


இம்மலை பல்வேறு மதத்தினரால் புனிதமாக போற்றப்படுகின்றது. பௌத்தரோ அங்குள்ள பாத அடையாளமானது, புத்தர் இத்துபீபத்திற்கு மூன்றாம் முறையாக வருகை தந்த பொழுது பதித்து சென்ற பாத அடையாளமென கருதுகின்றனர். முஸ்லிம் எழுத்தாளர்களோ அதனை முதல் மனிதராம் ஆதமின் பாத அடையாளமெனக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் அம்மலையை 'பாபா ஆதம் மலை' என்கின்றனர். அதிலிருந்துதான் ஆதாமின் சிகரம்” (Adam’s Peak) எனப் பெயர் வந்தது. பண்டுதொட்டே யாத்திரிகர்களும் தேசாந்திரிகளும் இப்புனித மலையின் புகழைக் கேள்வியுற்று அதனை தரிசித்து சென்றனர். அதுபற்றி தங்கள் அனுபவங்களையும் கருத்து சிதறல்களையும் எழுத்தில் வடித்திருக்கின்றனர். பாரசீகக் கவிஞர் ஒருவரின் கருத்துப்படி மகா அலக்சாந்தரும் இம்மலையில் ஏறியுள்ளார்.


ஒன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதி மட்டில் சுலைமான் எனப் பெயரிய முஸ்லிம் தேசாந்திரி இம்மலையில் ஏறினார். அதைச் சுற்றி ரூபிச் (செம்மணிக்கல்) சுரங்கங்களும் மற்றும் மாணிக்க கற் சுரங்கங்களும் காணப்பட்டதாக அவர் கூறுகின்றார். அவருக்கு அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் எழுத்தோவியம் படைத்த அபூ செய்து என்பாரும் இம்மாணிக்க கற் சுரங்கங்கள் பற்றி குறிப்பிடுகின்றார். புவியியல் பற்றிய தமது படைப்பில், இம்மலையின் உயரம் பற்றியும் அங்குள்ள மாணிக்க கற்கள், கஸ்தூரி, வாசனை மரங்கள்  என்பன பற்றியும் அவர் விளக்குகின்றார்.

சின்பாத்
அராபிய இரவு புகழ் கடலோடியான சின்பாத் தனது ஏழாவது கடற்பிரயாணத்தின்போது இலங்கையை வந்தடைந்தார். அவர் கூறுகின்றார்; 'மூன்று நாட் பயண தூர்திலிருந்தே தோற்றமளிக்கும் சிகரமானது பல்லின செம்மணிக் கற்களையும் மற்றும் கனிப்பொருள் வளங்களையும் எல்லாவித வாசனைத் திரவிய மரங்களையும் கொண்டுள்ளது. மேற்பரப்பானது சாணை பிடிப்பதற்கு தேவைப்படும் ஒருவித கனிப்பொருளால் மூடப்பட்டுள்ளது. அதனை கொண்டு மாணிக்க கற்கள் வெட்டப்பட்டு மெருகூட்டப்படுகின்றன. அதன் ஆறுகளிலோ 'வைரங்கள்”, அதன் பள்ளத்தாக்குகளிலோ 'முத்துக்கள்”.


கி.பி. 1332ம் ஆண்டளவில் இலங்கை வந்த ஆங்கிலத் தேசாந்திரியான சேர் ஜோன் மண்டர்வில் என்பார், 'ஆதாமும் ஏவாளும் ஏபளின் மரணத்தையிட்டு துக்கம் கொண்டாடிய இடம் இச்சிகரம்” எனக் கூறுகின்றார். அருகிலுள்ள அருவியில் காணப்படும் மாணிக்க கற் குவியல் பற்றியும் அவர் அடிக்கடி குறிப்பிடுகின்றார். கி.பி. 1350ம் ஆண்டளவில் அறபுத் தேசாந்திரியும் யாத்திரிகருமான இப்னு பதூதா என்பவர் இஸ்லாமிய முறைப்படி இத்திருவிடத்தை தரிசித்தார். இக்கால கட்டத்தில் ஸ்ரீ பாதமலை சிறப்பாக முஸ்லிம்களின் நிலையான ஒரு யாத்திரிகைத் தலமாக மாறியது. இப்புனித மலையில் காணிக்கை செலுத்தும் பொருட்டு அவர் நீண்ட தூரம் கடந்தார். ரொபட் நொக்சின் 'இலங்கை” எனும் நூலிலும் ஸ்ரீ பாதமலை ஒரு தனியிடம் வகிக்கின்றது. அவர் கூறுகின்றார். 'இத்தீவு மக்கள் இவ்வடையாளத்தை சென்று வழிபடுவதை ஒரு புண்ணிய கைங்கரியமாக கருதுகின்றனர். பொதுவாக, அவர்களது புத்தாண்டளவில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், அனைவரும் இப்பெரிய உயர்ந்த மலைக்கு வழிபடச் செல்கின்றனர்.

மன்னர்கள்
பல சிங்கள மன்னர்கள் இத்திருவிடத்தில் விசேடமாக அக்கறை செலுத்தினர். முன்னர் நிஸங்க மல்ல (கி.பி. 1187-1196) என்பான் ஒரு முறை இப்புனித தலத்தை தரிசித்த பொழுது, மலையுச்சியிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் அமைந்திருந்த 'பகவா லென” எனும் குகைச் சுவரின் கல்வெட்டொன்றை செதுக்கிவித்து, புனித தலத்துக்காக அறக்கொடையொன்றையும் அளித்தான். இதனருகில் பக்தி சிரத்தை வாய்ந்த முஸ்லிம் யாத்திரிகர் ஒருவரால் 12ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டொன்றும் உளது. அது வருமாறு;

'முஹம்மது ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் மனித குலத்தின் பிதா”

முதலாம் விஜயபாகு மன்னன் இங்கு யாத்திரிகர்களுக்காக ஓய்விடங்களை நிறுவினான். அவர்களுக்கு உணவளிக்கும் நோக்கமாக இரத்தினபுரி மாவட்டத்தில் நெல் வயல்கள் நிரம்பிய கிலிமலே கிராமத்தையும் வழங்கினான். இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் சிகரம் வரையிலான பாதைகளை சீர் செய்தான். ஆனால் முதலாம் இராஜசிங்ஹ மன்னனோ பௌத்த மதத்தினை ஒழித்துக்கட்டும் அவாவினால் இப்புனித தலத்தை இந்துக்கள் கையில் ஒப்படைத்தான்.


பாத மலையில் அமைந்திருந்த ஒரு கோவிலில் மதகுருவாக விளங்கிய செனரத் எனும் ஒருவனே தனது கசாய உடை களைந்து, தோனகதரினா என்பாளை மணந்து கண்டி மன்னன் ஆனான் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவம்
அக்காலத்திலேயே பாத சிகரத்தில் ஏறுவதானது மயிர் கூச்செறியும் ஓர் அனுபவமாகும். அது அதிக பலமும் முயற்சியும் தேவைப்படும் ஒரு செயல். சில சமயங்களில் மலையில் ஏறுவதென்பதே ஒரு வீரச் செயலாகும். ஏனெனில், தொங்கவிடப்பட்டுள்ள அங்கு மிங்கும் அசைந்தாடும் சங்கிலிகளினதும் கப்பிகளினதும் உதவி கொண்டு கரணமடிப்பது போல் ஆற்ற வேண்டிய ஒரு செய்கை அது.

இரவு நேரங்களில், வெள்ளையுடையணிந்து இளையோரும் முதியோருமாக எண்ணற்றோர் ஒடுங்கிய ஒற்றையடிப் பாதை மூலம் வளைந்து வளைந்து ஏறுவதானது ஓர் ஆனந்தக் காட்சியே. அவர்கள் எடுத்து செல்லும் தீப்பந்த வெளிச்சத்தில் அவர்கள் மனிதக் கண்ணாம் பூச்சிகளைப் போல் தோற்றமளிக்கின்றனர்.

இன்றோ இச்சிகரத்தில் ஏறுவது ஒரு களியாட்டப் பயணம் போன்றது. காரணம், யாத்திரிகர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது அவர்கள் மெதுவாக, அதிக சிரமமின்றி களிப்புடன் மலையேறுகின்றனர். அவ்விதம் ஏறும்போதே அவர்கள் பக்திவசப்பட்டு பாடுவார்கள். அதே சமயம் பக்தியோடிழைந்த மேளங்களில் இடி முழக்கம் மலையுச்சியிலிருந்து காற்றிலே மிதந்து வரும்.

பொழுது புலருமுன்னர் மலையுச்சியை அடையும் ஒருவர் ஒரு வசீகரக் காட்சியில் கட்டுண்டு களிப்பார். கீழ் வானத்தில் கதிரவன் தோன்றும் போது, அருணோதயத்தின் அற்புதக் காட்சி அவன்முன் விரிகின்றது. திடுதிப்பென ஒளி பரவும் மெய் மறக்கும் அக்காட்சி, ஒளி வண்ணங்களின் கலவை, பல மைல்களுக்கப்பாலும் பரவும், இருண்ட நிழல், கம்பீரமாக நிற்கும் மலைகள், சமவெளிகள், அடர்ந்த காடுகள், பளிச்சிடும் நீரருவிகள், தென்னந் தோப்புக்கள் நிறைந்த அதி தூரத்திலுள்ள கரைகள் ஆகிய அனைத்தும் ஒருவனை வசீகரிக்காமல் விடுவதில்லை. அவன் இந்த ஊமை நாடகத்தின் அழகை வர்ணிக்கத் தவறவேமாட்டான்.

My Sincere Thanks To:

The National Archives, Sri Lanka.
The National Library, Sri Lanka

Reference:
The Ceylon Observer, Sunday press, 1966 April 19.
 

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger