ஸ்ரீ பாத மலையின் வசீகரம்

ஏன் இச்சிகரத்திற்கு ஆதமின் பெயர் இடப்பட்டது?

"பாபா ஆதம் மலை"

பண்டைய அறபுக் கடலோடிகள் அன்றைய உலகின் நாலா பக்கமும் எடுத்துச் சென்று பரப்பிய கதைகளில் ஒன்றுதான் 'அல் றுக்குன்'  என அழைக்கப்பட்ட இச்சிகரத்தைப் பற்றிய கதையாகும். இச்சிகரத்தில் உள்ள அபூர்வ சின்னத்தினை பற்றிய கதையானது சந்தேகத்துக்கிடமின்றி அக்கறையில் குறையாத ஒன்றாகும். ஓன்பதாம் நூற்றாண்டில் இலங்கைக்கும் கீழைத்தேயங்களுக்கும் பல கடற்பிரயாணங்களை மேற்கொண்ட சுலைமான் எனும் ஓர் அறபுக் கடலோடியானவர், இப்புனித மலையை 'அல் றுக்குன்' எனக் குறிப்பிடுகின்றார். 'றுக்குன்' என்பது இத்தீவின் தென்பகுதியின் புராதன சிங்களப் பெயராகும். ஸ்ரீ பாத மலை அப்பகுதியின் எல்லையிலேயே அமைந்துள்ளது.


சுலைமான் என்பாரது கூற்றே இம் மலையுடன் ஆதமை இணைக்கின்ற ஆதாரபூர்வமாக அறியக் கிடக்கும் முதன் முதலான கூற்றாகும். எனினும், கி.பி. 4ம் 5ம் நூற்றாண்டுகளில் எகிப்திய புராதன கிறிஸ்தவ மரபினர் இம் மலையுடன் பரீட்சயம் உடையவர்களாக விளங்கினர்.


இலங்கை வந்த தேசாந்திரிகளில் ஸ்ரீ பாதத்திற்கு யாத்திரை சென்ற மிகவும் பிரசித்தி வாய்ந்த தேசாந்திரி இப்னு பதூதாவின் கூற்றில்; "கி.பி. 942ல் காலமான இமாம் அபூ அப்துல்லாஹ் அவர்கள்தாம் இந்தியாவிலிருந்து செரந்தீபிலுள்ள இம்மலைக்கான வழியை அறியத்தந்தவராவார்.


"அவ்விருவரும் எதிலிருந்தார்களோ அதைவிட்டும் அவ்விருவரையும் வெளியேற்றிவிட்டான். மேலும் உங்களில் சிலர் சிலருக்கு பகைவர்களாக இருக்க "நீங்கள் இங்கிருந்து இறங்கிவிடுங்கள்" இன்னும் பூமியில் உங்களுக்கு தங்குமிடமும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதும் உண்டு என்று நாம் கூறினோம்." (2:36)

தப்ஸீர் பைஸாவி, தப்ஸீர் காஸின் போன்ற குர்ஆன் விளக்கவுரைகள் யாவும் அல் குர்ஆன் வசனங்களுக்கு வியாக்கியானம் கூறும்பொழுது, பெருமானார் (ஸல்) அவர்களின் அருள் வாக்குகளான புஹாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ்களின் திரட்டிலிருந்து பெற்ற ஆதாரங்களை கொண்டு, ஆதம் (அலை) அவர்கள் செரந்தீபில் அல்லது இந்தியாவில் (அல்லது அப்போதைய குமரிக்கண்டத்தில்) 'நூத்' எனும் ஓர் மலையின் மீது இறங்கினார்கள் என்றும் ஹவ்வா (அலை) அவர்கள் அரேபியாவிலுள்ள ஜித்தா எனுமிடத்தில் இறங்கினார்கள் என்றும் கூறுகின்றனர்.

இமாம் இப்னு ஹஜர் அவர்களின் 'துஅபா' போன்ற கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளதாவது; "செரந்தீபிலிருந்து ஆதம் (அலை) அவர்கள் ஹஜ்ஜுக்காக நாற்பது முறை திருமக்காவுக்கு நடந்து சென்றார்கள். அவ்வித யாத்திரையின் போதுதான் அவர்கள் ஹவ்வா (அலை) அவர்களை அறபாத்தில் சந்தித்தார்கள். அதன் பின்பு அவர்கள் தம் மனைவியுடன் இலங்கை திரும்பினார்கள்."

ஆதம் (அலை) அவர்கள் இலங்கையில் இறங்கியதிலிருந்து கழிந்த காலக்கணக்கை நாம் இஸ்லாமிய கிரந்தங்களிலிருந்து கணிக்க முடியும். முஹம்மது இப்னு அஹ்மது இயாஸுல் ஹனபீ அவர்கள் தமது "பதாஉஸ் ஸுஹுர்" எனும் நூலில் ஆதம் (அலை) அவர்கள் இப்புவியில் இறங்கிய காலத்திற்கும் நூஹ் (அலை) – நோவா – அவர்களின் காலத்திலேற்பட்ட பெரும் பிரளயத்திற்கும் இடையே 2240 ஆண்டுகள் கழிந்திருக்கின்றன என்றும், அப்பெரும் பிரளயம் ஏற்பட்ட காலத்திற்கும் பெருமானார் (ஸல்) அவர்களின் ஹிஜ்ராவுக்கும் இடையே 3774 ஆண்டுகள் கழிந்திருக்கின்றன என்றும் குறிப்பிடுகின்றார். 2010 டிசம்பர் மாதம் 7ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் இஸ்லாமிய புது வருடம் 1432 ஆகும். இதிலிருந்து நாம் ஆதம் (அலை) அவர்கள் இற்றைக்கு 7446 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இறங்கினார்கள் எனக் கணக்கிடலாம். ஜெனஸிஸின் (படைப்பு பற்றி கூறும் விவிலிய நூலின் முதல் அதிகாரம்) பிரகாரம் கணிக்கப்பட்ட காலத்தை நோக்குமிடத்தும் இந்தக் காலக்கணக்கு உறுதிப்படுகின்றது.




பண்டைய அறபு முஸ்லிம்கள் சீனாவுடனும் இலங்கையுடனும் வர்த்தகத்தில் ஈடுபட்டபொழுதும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் நபி ஆதம் (அலை) அவர்களின் புனித பாதம் பதிந்த இச்சிகரத்தினை தரிசிப்பதனை ஒரு நோக்காக கொண்டனர். கடலோடிகள் இச்சிகரத்தின் உதவி கொண்டே தங்கள் பாய்மரக் கப்பல்களை செரந்தீபில் நங்கூரம் பாய்ச்சினர்.

கதைகளினால் உந்தப்பட்ட முஸ்லிம்களின் மனதில், ஆதாமும் ஏவாவும் முதன் முதலில் வசித்த நந்தவனத்தில் ( Garden of Eden) இருந்தே செரந்தீப் மலை உருவானதெனும் கருத்தும் இச்சிகரத்தின் மீதிருந்தே ஆதம் வழிபட்டாரெனும் கருத்தும் பதிந்திருக்கலாம். மரபு வரலாறுகளின்படி, ஆதி பிதாவானவர் சுவனத்திலிருந்து எறியப்பட்டது இச்சிகரத்தின் மீதாகும். தம் குற்றத்திற்கு பிராயச்சித்தமாக ஆண்டுக்கணக்காக அங்கு ஒற்றைக் காலில் நின்று அவர் பச்சாதப்பட்டார். ஆண்டுக்கணக்காக அவர் ஒற்றைக்காலில் நின்றதால் பாத அடையாளம் ஏற்பட்டது என்ற செய்திகளும் இல்லாமலில்லை.

எனவேதான் பத்தாம் நூற்றாண்டளவில் இச்சிகரம் 'பாபா ஆதம் மலை' என அழைக்கப்பட்டதோடு, முஸ்லிம்களின் அடிக்கடி செல்லும் தலமாகவும் அமைந்தது.


Reference;
The Ceylon Daily News - 5 February, 1962


The Ceylon Daily News - 1967 March 17, Friday


The Ceylon Observer - 1967 April 22 Saturday
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger