யார் இந்த பொது பலசேனா?

இந்த வருடத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்களில் ஒன்றுதான் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் கருத்துக்களை வெளியிடுகின்ற இலத்திரனியல் ஊடகங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதும் அவற்றிலிருந்தும் தம்மை பாதுகாத்துக் கொள்வதுமாகும். நாடு முழுவதிலும் திட்டமிட்ட வகையிலும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முஸ்லிம் விரோத பிரச்சாரமானது சங்காக்களின் பின்னணியில் மிகவும் மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையில் செயற்படுத்தப்படுவது பொதுபல சேனா (இதன் அர்த்தம் பொளத்த அதிகாரம் கொண்ட படை) என்ற அமைப்பினாலாகும். 
இதேவேளை, இவ்வமைப்பின் சட்டரீதியான அங்கீகாரம், அவர்களுடைய பின்புலம், அவர்களுடைய அரசியல் ரீதியான காரணகர்தாக்கள், மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு என்பன பற்றி எமக்கு அதிகம் தெளிவில்லாது இருப்பினும் அவர்களுடைய இணைய தளங்களை அவதானிக்கின்ற போது அவர்களுடைய கட்டமைப்பும், பின்னணியும் அவர்கள் சந்தேகமற பொளத்த அமைப்பு என்ற ஒரு பார்வையை கொடுக்கிறது. அவர்களுடைய இணைய தளத்தின் மீதான எனது முதன் முதல் வாசிப்பு மிகவும் சுவாரசியமானது. அவர்கள் மிகவும் உன்னதமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். பல அரசாங்க இணைய தளங்களை விட மக்களுடன் அதிகமான உடாட்டங்களையும் தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கை பௌத்தமாக இருப்பினும் அவர்களுக்கு இருக்கின்ற சமூக மற்றும் அரசியல் அதிகாரம் மீதான தீவிர ஈடுபாடு அவர்களுடைய செயற்பாடுகளை நடைமுறை ரீதியாகவும்; இலட்சிய ரீதியாகவும் வளர்த்து வருகின்றது. இதனை மறுவாறாக கூறுவதானால் ஈமெயில் இனவாதம் என்பது அழகாக பொருந்தும். 

போருக்கு பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் இத்தகைய நன்கு கட்டமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் தேவைதான் என்ன? ஏன் அவர்கள் முஸ்லிம் விரோத பிரச்சாரங்கiளை முடுக்கிவிட்டுள்ளனர்? உண்மையில் பொது பலசேனா அமைப்பு மட்டும்தான் அவ்வாறு காணப்படுகின்றதா அல்லது போருக்கு பிந்திய இலங்கையில் காணப்படுகின்ற சூழலில் இவ்வமைப்பு ஒரு அறிகுறி மட்டும்தானா? ஏன் பொளத்த சங்காக்கள் தோற்கடிப்பதற்காகவே ஒரு எதிரியை உருவாக்கி கொள்கிறது? யதார்த்தத்தில், இத்தகைய நடவடிக்கையானது சமகால இலங்கையில் தங்களுடைய தாக்கத்தினை சமூக மற்றும் அரசியலில் உண்டுபண்ண வேண்டும் என்கின்றதொரு குறுகிய பிரதிபலிப்பாகும்.

போருக்கு பிந்திய பௌத்த அரசியல் 
 
இன்றைக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பதாகவே நவீன இலங்கை தனது பலமான இனவாத- சமய (சிங்கள-பௌத்த) அரசியலை இந்த உலகுக்கு நன்றாக உணர்த்திவிட்டது. உலகில் பயங்கரவாத பக்கங்களின் முதல் பக்கமாக திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒட்டு மொத்தமான தோல்வியே சிங்கள அதிகார வர்கத்தினதும் அவர்களுடைய வாக்காளர்களினதும் விருப்பு வெறுப்புகள் யாதென்பதனை மீண்டும் ஒருதடவை உறுதிப்படுத்திக் கொண்டது. இவர்களுக்கு நாட்டின் சனநாயகம் மற்றும் மனித உரிமை மீதோ, நாட்டின் வரலாறு அதன் பல் கலாச்சார அம்சங்களை உள்ளடக்கிய புவியில் அமைப்பு, சார்பு பொருளாதார முறை முதலியன எவை மீதும் அவர்களுக்கு  கவலை கிடையாது. மாறாக அவர்களுடைய முழு மூச்சும் சிங்கள-பௌத்த அரசு என்பதுதான். தனது முன்னோர்களை போன்றல்லாது எதுவித சர்வதேச அழுத்தங்களுக்கம் இடம் கொடுக்காது விடுதலை புலிகளை விட்டு வைக்கக் கூடாது என்ற சிங்கள தீர்மானமே மூச்சு என விரைவாக செயற்பட்ட சனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை பற்றி சந்தேகமே இல்லை. நடைமுறையில், தம்ம துவீபத்தில் (பௌத்த நாட்டில்) இணக்கப்பாட்டினை உண்டு பண்ணுவதற்காகவும், சிங்கள மக்களின் இறமையை நிலைநாட்டவும் எனக் கூறி 'போர்' என்ற எண்ணக் கருவினை மக்கள் மத்தியில் வெற்றிகரமாக விதைத்ததற்கான முழு பெருமையும்  பௌத்த சங்காக்களுக்கே உரியது.

சங்காக்களின் வலுவான இந்த முயற்சிக்கு இணங்கிக் கொள்ளாத குறிப்பிட்ட சிறுபான்மை சிங்களவர்களும் (நாட்டின் தென்பகுதியில்) இருந்தனர். எனினும், பெரும்பாலும் நாடு முழுவதுமாக இருந்த நிக்காயாக்கள் யாவும் 2009ல் போரை வென்றறெடுக்க தன்னால் இயன்ற அத்தனை ஒத்துளைப்புக்களையும் சங்காக்களுக்கு வழங்கினர் என்பதுதான் யதார்த்தம். இதேவேளை, போரை வென்றெடுக்க அனைத்து ஒத்துளைப்புக்களையும் வழங்கிய இரு பங்காளர்களுக்கு இலங்கை தாய் தனது மரியாதையினை செலுத்த இன்னும் கடமைப் பட்டிருக்கிறாள். முதலாவது, போர் என்கின்ற அத்தியாயத்தினை உருவாக்கி அதற்கு உரமூட்டும் வகையில் கருமமாற்றிய அத்துறலியே றத்னா, பென்கமுவே நாளக்க, எல்ல குணவாண்ஸே முதலிய இன்னும் ஆயிரம் சிங்கள சங்காக்கள். இரண்டாவது, பிராந்திய அதிகாரத்தை கைக்குள் உள்ளடக்க காத்திருக்கும் சீனா. 

இலங்கைக்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்கனவே சீனா கடனாக வழங்கியுள்ளது என அண்மைய உலக வங்கி அறிக்கை குறிப்படுகிறது. ஆனாலும் அத்தகைய பாரிய கடனுக்கான எந்தவொரு பிரதிபலிப்பினையும் எம்மால் நாட்டில் கண்டு கொள்ள முடியவில்லை என்றாலும், சீனாவுக்கு ஏதோவொரு வழியில் மகிழ்ச்சிதான். எவ்வாறாயினும், இதுவரையில் சிங்கள ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை தோற்கடித்தல் என்கின்ற சங்காவினுடைய ஒரே ஒரு எதிர்பார்ப்பினை மாத்திரமே நிறைவேற்றி கொடுத்துள்ளனர். இனவாத-சமய (சிங்கள-பௌத்த) அரசினை தாபிக்கின்ற அவர்களுடைய பரந்த நோக்கமானது இன்னும் நிலுவையில்தான் உள்ளது அல்லது அவர்களுடைய அசல் நம்பிக்கையினை விட தற்போது அது மெதுவாகவே பயணிக்கிறது எனக் கூறலாம். பொது பலசேனா அமைப்பு 'பௌத்த அதிகாரம்' என்கின்ற விடயத்தினை இந்த அளவுக்கு முனைப்பாக மக்கள் மயப்படுத்தப்படுவது இந்த பின்னணியில்தான்.

பௌத்த அரசியல் அதிகார செறிவாக்கம் (பொத்த அரசிலை உள்ளீர்த்தல்)
 
தேரவாத சங்காவினருக்கும் அவர்களுடைய அரசுகளுக்கும் இடையில் பின்னிப் பிணைந்துள்ள இயங்கியல் உறவானது தென்னாசியாவின் அரசியல் அதிகாரத்தினை தம்மோடு தக்க வைத்துக் கொள்வதுதான் என்பது பல்வேறு சமூக பொருளாதார அரசியல் ஆய்வுகளினால் உறுதிப்படுத்தப்பட்டவை. இத்தகைய இயக்கங்களின் பரிமானங்களும், உருவாக்கங்களும் இலங்கையில் மகாவம்ச இலக்கியத்தின் மூலம் நல்லதொரு வரலாறாக சித்தரிக்கப்பட்டுமுள்ளது. சங்காவினருக்கும் அரசுக்கும் இடையில் உள்ள இத்தகைய தொடர்பினை தற்கால நவீனத்துவத்துக்கு ஏற்றாற்போல் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை தற்போது எமக்கு ஏற்பட்டுள்ளது. 

கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தோற்றம் மற்றும அவவமைப்பின் மீதான சிங்கள சங்காவினரின் விரோத போக்குள்ள நடவடிக்கை முதலியனவுக்காக அரசியல் ஆதரவானது இரு வரலாற்று உண்மைகளை அடிப்படையாக கொண்டு அமைந்தவை. முதலாவது, மகா விகாரையின் மகானாம குருக்கள், மகாவம்சத்தினை எழுதியவர் தொடக்கம் தற்போதைய கங்கொடவில சோமா- நகர மக்களை நவீன பௌத்த மத சிலுவைப்போர் பிரச்சாரத்திற்கு மக்களை கவர்ந்திழுக்கும் நபர் -வரையில் சங்காவினர் கட்டிக்காத்து வந்த பாரம்பரிய அரசியல். இங்கு அளவிட முடியாத பொறுப்பும் வரையறுக்கப்படாத அதிகாரமும் சிங்கள அரசினை தாபிக்கவென சங்காவினருக்கு பேறாக அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த பேராசிரியர் வல்பொல றாகுல இத்தகைய தொடர் தேர்ச்சியான அரசியல் பயணம் குறித்து அவருடைய 'பிக்குவாகே உறுமய' என்ற புத்தகத்தின் 9ம் பதிப்பில் குறிப்பிட்டு கூறுவதுடன் நவீன சங்கா அரசியலுக்கென சிந்தனைகளையும் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக, அவர்களுடைய சமூகத்தில் இடம்பெறுகின்ற மாற்றங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக சிங்கள சங்காக்கள் இன மற்றும் சமய அடிப்படையிலான விளக்கங்களை நிறையவே ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அவற்றை ஏனையவர்களிடம் கொண்டு செல்லவும், தேவையாகிற போது ஏனையவர்களிடம் இருந்து அவற்றை உள்வாங்கி கொள்ளவும் நன்றாக தம்மை பழக்கப் படுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் ஏனைய தேரவாத சமகாலத்தவர்களின் கருத்துக்களை நிறையவே உள் வாங்கிக் கொண்டுள்ளனர். 

இலங்கை நாடு 1800 காலப் பகுதியில் மிகவும் ஆழமான காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த வேளை அதனை எதிர்த்து போராடுவதற்கு தாய்லாந்து மற்றும் பர்மா (மியன்மார்) ஆகிய நாடுகளில் உள்ள சங்காக்களுடன் சேர்ந்து இவர்கள் தொழிற்பட்டார்கள். அவர்களுடைய சுதந்திரம் மற்றும் சுயாட்சி குறித்தான கோரிக்கைகள் அவர்களை அன்றிருந்த வங்காள தேசத்தின் சகாக்களாகவே வெளிப்படுத்தியது. அநாகரிக தர்மபால சங்காவின் ஒருத்தராக இல்லாவிட்டாலும், அவர் சிங்கள-பௌத்த அரசினை தாபிக்கின்ற செயற்றிட்டத்தினால் அதிகம் செல்வாக்கிற்கு உட்பட்ட ஒரு புரட்டஸ்தாந்து பௌத்தராகவே இருந்தார்.  அப்போது அமெரிக்க போர் வீரராக இருந்த கேர்ணல் ஓல்கொட்டின் உதவியாலும், ஆலோசனையினாலும் தர்மபால இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்கினை கடைப்பிடித்ததுடன் இதற்கான மாhதிரி தந்திரோபாயங்களை புரட்டஸ்தாந்து கிறித்துவ மிசனரிளின் செயற்பாடுகளின் மூலமாகவே கற்றுக் கொண்டார்.

இன்று சோமாவினால் மற்றும் தம்புள்ள றங்கிரி விகாரையின் இநாமுலுவே சிறி சுமங்களா போன்றோரினால் முன்னெடுக்கப்படுகின்ற ஊடகங்களை அடிப்படையாக கொண்ட பௌத்த விவிலியக் கருத்துக்கள் அமெரிக்கஃபிரித்தானிய சமய போதகர்களின் தொழிற்பாடுகளின் அடியொற்றி நடந்தேறுபவை. இவர்களே மக்களின் ஒற்றுமையினையும், சகவாழ்வினையும் குலைக்கும் வண்ணமாக விரோதம் கொண்ட சமயக் கருத்துக்களை நவீன ஊடகங்கள் வாயிலாகவும் இணையத் தளங்கள் வாயிலாகவும் எவ்வாறு போதிப்பது என முதன் முதலில் உலகுக்கு கற்றுக் கொடுத்தவர்கள். 

இத்தகைய பொளத்த உள்ளீர்பு போராட்ட செயல்முறை மற்றும் சமூகத்தின் மீதான அதன் பாதிப்பு என்பது சமூக அரசியலில் அவை உள்ளீர்க்கப்படும் விதத்தினை பொறுத்தும் அத்தகைய மாற்றீட்டினால் விளைகின்ற பிரச்சினைகள் எவ்வளவு என்பதிலுமே தங்கியுள்ளது. இத்தகைய உள்ளீர்ப்பினால் பாதுகாப்பு கெடுபிடிகள் இன்னும் அதிகமாகுதல், சந்தையை மையப்படுத்திய தாரளவாத சனநாயம், உலகமயமாகும் பொருளாதார மதிப்பெண், புதிய சமயங்களின் (விசேடமாக பெந்தகொஸ்தே கிறித்துவ சபை) வளர்ச்சி அல்லது ஊடுருவல் மற்றும் தற்போதைய முஸ்லிம்கள் போன்று புதிதாக வணிகத்தில் ஈடுபடும் வர்க்கம் முதலிய சிக்கல்கள் மேலும் தோன்றலாம். இதேவேளை, அரசியலில் சங்காக்களின் இத்தகைய பௌத்த உள்ளீர்ப்பின் காரணமாக சிறுபான்மை உரிமைகள், அதிகார பரவலாக்கல் என்கின்றன யாவும் இல்லாமல் ஒழிந்துவிடுவதுடன், போர் என்கின்ற நிலமைக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்குவதுடன் அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு முதலிய கருத்துக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு நாட்டின் அரசு மேலும் மத்திய மயப்படுத்தப்படும். இத்;தகைய மத்திய மயப்படுத்தப்பட்ட அரசின் மூலமே அதிக கட்டுப்பாடுகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறான சங்காக்கள் உலக நடப்பில் பல்வேறு வகையான வன்முறைகளையும் அல்லது சில போது வன்முறையற்ற விதத்திலும் எதிரொலித்துள்ளன. இத்தகைய அம்சங்கள் பொருந்தியதாகவே பொது பலசேனாவின் நவீன போக்கு அமைந்துள்ளது.

புத்தசாசனத்தினை நிறுவுதல்

தென்னாசியவில் ஒரு தேசிய அரசின் உருவாக்கம் என்பது ஐரோப்பாவில் ஒரு தேசிய அரசினை தாபிப்பதில் இருந்து சரி நேர் எதிரானது. தென்னாசியாவில், காலணித்துவ ஆட்சிக்கு எதிராக நீண்ட காலம் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது குடியியல் சமூகத்தின் தலமையில் இன, சமய, கலாச்சார விடயங்கள் பற்றி ஒருமித்து குரல் எழுப்பக் கூடிய ஒரு நீண்ட உறுதியான அரசினை உருவாக்கும் நன்னோக்குடன் இடம்பெறவில்லை. மாறாக, பல்-தேசியம், பல-மொழி, பல-சமயம், மற்றும் பல-கலாச்சாராம் என்கின்ற தமக்கே உரித்தான தனித்துவத்தினையும், குடியியல் ரீதியான அபிலாசைகளையும் தற்போது தென்னாசிய சமூகம் தொலைத்து நிற்கிறது. 


தென்னாசியாவில் காலணித்துவத்திற்கு எதிராக இடம்பெற்ற சனநாயக போராட்டங்கள் யாவும், கிடைத்த சுதந்திரத்தினை முழு நாட்டு மக்களுக்கும் உரித்தான ஒன்றாக கருதாமல் குறிப்பிட்ட ஒரு இன வர்கத்திற்கான வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொண்டது. இலங்கையில், சிங்களவர்கள் சுதந்திரத்தை தாம் பெரும்பான்மை ஆட்சி செய்வதற்கான சந்தர்ப்பமாக கருதிக் கொண்டனர். இவை சுதந்திர இலங்கையில் அடுத்தடுத்து இடம்பெற்ற இந்திய தமிழர்களின் பிராசாவுரிமை சட்டம், சிங்கள மொழி ஆட்சி, பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் பாரபட்சம், பௌதத்தின் மேலாதிக்கம் முதலிய முதலிய சனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். மறுபுறம், காலணித்துவ ஆட்சிக்கு பின்னர், சுதந்திரம் கிடைத்த போது தமிழ் பேசும் மக்கள் பெரும்பாலும், தன்னாட்சிக்கான அல்லது சுயாதீனமானதும், சதந்திரமானதுமான பிராந்தியத்திலேயே தமது சுதந்திரக் கனவுகளுடன் வாழ்ந்து வந்தனர். இத்தகைய அவர்களுடைய அபிலாசைகளுக்கு மாற்றமாக நடந்தேறிய சுய அரசியல் இலக்கை அண்டிய காய் நகர்த்தல்கள் 30 ஆண்டு கால போருக்கு வழி அமைத்தது.

ஆண்மீக அடிப்படையில் சிங்கள 'சங்கா' என்பது வாழ்க்கையை துறந்து இறை நிலையை அடைய உதவ வேண்டும். ஆனால் அவர்களுக்கு சமூக அரசியல் அதிகாரத்தினை கைப்பற்றுவது என்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரலும் இருக்கிறது என்பது தற்போது தெளிவாகிறது. இந்நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில்  சிங்கள-பௌத்தம் என்கின்ற இன மற்றும் சமய ரீதியான சிந்தனையே அரசினை வழிநடாத்தவும், கட்டுப்படுத்தவும் வேண்டுமெனவும், அதுவே சமூக அரசியல் தளத்தின் அடிநாதமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கருதுகின்றனர். மகாவம்ச கதைகளில் வருகின்ற பெரும்பாலான எழுத்துக்கள் சமயம் சார்ந்த கருத்துக்களை பிரதிபலிக்காது அரசியல் சார்ந்தவையாக காணப்படுவது அவர்களுடைய இத்தகைய இலக்கினை விளங்கிக் கொள்ள போதுமான சான்றாகும். ஆனால், அவை கூட பாழி மொழியில் உள்ள தேரவாத கருத்துக்களுக்கு மாற்றமான போதனைகளையே கொண்டுள்ளன. 

இந்த பௌத்த அரசியல் குறிப்பிட்ட சில அடையாளம் காணப்பட்ட ஏனைய நபர்களுக்கு எதிராக விரோத போக்குகளை கடைப்பிடிக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மஹாயான பௌத்தம், இந்துத்துவம், கத்தோலிக்கம், கிறித்துவ மிசனறிகள், முஸ்லிம்கள் முதலானவர்கள் சிங்கள சங்காவினால் அவ்வாறாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள். மேலும், அவர்கள் எவர்களை அத்தகை கூட்டத்துள் இணைக்க விரும்புகின்றனரோ அவர்களும் உள்ளடங்குவர்.

மேலும், சிங்கள சங்காக்கள் ஏனையவர்களுக்கு எதிராக விரோத போக்குகளை கடைப்பிடிப்பவர்கள். அவர்களுடைய சிங்கள அரசை தாபிக்கும் திட்டம் இந்தியாவில் காணப்படுகின்ற இந்துத்துவா தேசிய பேராட்ட அமைப்பினை ஒத்தது என்கின்ற வாதமும் உண்டு.  இதற்கு ஆதாரமாக, ஞானநாத ஒபேசேகர, எச்.எல். செனவிரட்ண,எஸ்.ஜே. தம்பையா மற்றும் மேலும் அதிகமான மேற்கத்தய அறிஞர்கள் சிங்கள சங்கா அரசியலை வெறுமனே அரசியல் விஞ்ஞானமாக கருத்திற் கொள்ளாது மானிடவியல் விஞ்ஞானமாக ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர் என்பது போதுமானது.

இலங்கை போன்ற நாடுகளின் சமயம் சார் அரசியல் மாற்றங்கள் குறித்து நவீன அரசறிவியல் மட்டுப்படுத்தப்பட்ட விளக்கங்களையே தருகின்றன. மேற்கத்தேய சிந்தனையில் குறிப்பிடுவது போன்ற 'மீண்டு எழும் சமயம்' என்பது போன்ற சொற்பிரயோகங்கள் எம்மையோ அல்லது எமது அரசியலையோ விட்டுவைக்காத சமயம் குறித்த நிலமைகளை விளக்க கூடியவை அல்ல. எனவே, இங்கு சமயம் மீண்டு எழவில்லை மாறாக சமயம் எமது அரசியலில் எவ்வாறு அழ ஊடுருவியுள்ளது என்பது மீள வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சிந்தனையாளர்களே இலங்கையின் சமய அரசியல் குறித்து விளக்கம் கொண்டுள்ளனர் அதுவும் பின் நவீனத்துவ சிந்தனையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாகவே இருந்துவருகின்றது. 


இலங்கை அரசியலில் சங்காக்களின் விரோதப் போக்கான அலைகள் பௌத்த சியோனிசத்துக்கான அடையாளமா? மறுபக்கத்தில், சிங்களவர்கள் பௌத்தத்தினை நிலைநிறுத்த பிறந்தவர்கள் என்பதும், இலங்கை புத்தரின் தேசம் என்பதும் சிங்கள-பௌத்தர்களின் தொண்டு தொட்ட நம்பிக்கையாகும். புத்தரின் தேசத்தினை பாதுகாக்கவும், அதன் மேன்மையை நிலை நாட்டும் நோக்கில் புதிய போர் முறைகளை பரப்பி விடவும், வன்முறைகளை தோற்றுவிப்பதும் தேவையாகிறது என்பது அவர்களுடைய வழிவந்த போதனை. தமிழ், இந்துசமயம், இந்திய படையெடுப்பு, தமிழீழ விடுதலைப் போராட்டம், முஸ்லிம்கள், பொருளாதாரம் முதலியன மிகவும் முட்டாள்தனமான முறையில் ஆனால் மிகவும் சரியாக மகாவம்ச புராண கதைககள் மற்றும் ஏனைய இதிகாச கதைகளுடனும் பொருத்தப்பட்டு விரோத போக்கு பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுவது இதற்கு போதுமான சான்றுகள்.

இத்தகைய பௌத்த சியோனிச விளக்கத்தின் படி, மாகாவம்சம் கூறும் தூதுத்துவம் இடம் பெறுவதற்கு, சிங்களவர்களுக்கும், புத்த தர்மத்திற்கும் எதிரியாக திகழ்பவர்களை தேடி அடையாளம் காண்பது அதன் பாதுகவலர்கள் என்ற வகையில் சங்காக்களுக்கு பொறுப்பாகும். சிங்கள சங்காக்களும், அவர்களது தேசியவாத அரசியல்வாதிகளும் அவ்வாறான எதிரிகள் குறித்த நீண்டதொரு பட்டியலை முடியரசான பிரித்தானிய தொடக்கம் ஐ.நா சபை, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் மற்றும் நாட்டின் தலைவர் தொடக்கம் நாட்டின் நீதியரசர் வரை அவசியமான யாவருக்கும் வழங்கியிருக்கின்றனர். 

அரசியல் ரீதியாக இடம்பெறுகின்ற வன்முறைகள் குறித்து சமய நம்பிக்கைகள் நியாயம் கற்பிக்குமாக இருந்தால் அங்கு சனநாயகம் வாழ முடியாது. இதுவே இனவாத, மதவாத அரசியலின் முடிவாகும். இந்த அடிப்படையில் உலகில் சியோனிச நாடாக ஒரே ஒரு நாடுதான் காணப்படுகின்றது என்பது உண்மையல்ல. 1948ம் ஆண்டில் தாபிக்கப்பட்ட சியோனிச நாடுகள் இரண்டாகும். யுத கிறித்துவ நம்பிக்கையின் அடிப்படையில் இஸ்ரவேலும், மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பௌதத்திற்கு மதத்திற்கு விவரணம் செய்யும் வகையில் இலங்கை நாடுமாகும். இவ்விரு அரசுகளும் அவர்களுடைய நிலத்தின் புனிதத்தினை காக்க போராட வேண்டும் என்பதுடன் நேரடியாக அவர்களுடைய சமயங்களையும் பாதுகாக்க வேண்டும். இஸ்ரவேலுடைய ஆள்புலம் வாக்கு கொடுக்கப்பட்ட விவிலிய எல்லைகளை தேடி விரிவடைந்து செல்லும் அதே வேளையில், இலங்கையின் ஆள்புலம் புத்தரினால் தூய்மைப் படுத்தப்பட்டு தம்ம தீபமாக ஒப்படைக்கப்பட்ட மாநிலம். தற்போது இலங்கையில் ஆட்சி இடம்பெறுவது அதன் பிரசைகள் யாவருக்காகவும் என்று தற்காலிகமாக கூறப்பட்டாலும் அதனுள் 'ஏனையவர்கள்' என்ற பிரிவினரும் இருக்கின்றார்கள் என்பதனை மறந்துவிட முடியாது.

இவ்வமைப்புக்களும் அவர்களுடைய சமய அரசியலும் முழு உலகுக்குமானதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்களுடைய நாடு என்பது நித்தியம் நிறைந்த தெய்வீக இடமாகவும், அங்கு சமகாலத்தில இடம்பெறும் அரசியல் நடவடிக்கை தெய்வீக கட்டளைகளின் படி இடம்பெறுகின்றது எனவும் அவர்கள் நம்புகின்றனர். இந்தவகையில், அவர்கள் அவர்களுடைய ஆட்சியளர்களை தெய்வத்தினால் நியமிக்கப்பட்டவர்களாயும் (அல்லது புத்தரின் வழி வந்தவர்களாகவும்) அத்துடன் அவர்களுடைய படையினை ஆர்மகித்தன் என்கின்ற புனித போரில் பங்கெடுத்துள்ள நித்தியமெனும் கீர்தியை பெறுகின்ற மகன்மார்கள் எனவும் நம்புகின்றனர். எல்லே குணவான்ஸே தேரோவின் '50 ஒற்றைப் போர்' என்கின்ற பாடல்கள் எழுதப்பட்டு, தயாரிக்கப்பட்டு நாட்டில் யுத்தம் உக்கிரம் அடைந்திருந்த நிலையில் படையினர் மத்தியில் விநியோகிக்கப்பட்டது என்பது இங்கு நினைவூட்டத் தக்கது.

இந்த அடிப்படையிலேயே, இன்று பொது பலசேனா அமைப்பு முஸ்லிம்களின் முன்னேற்றத்தில் ஐயம் கொண்டு அவர்களுடைய பொருளாதார, வணிக நடவடிக்கைகள் ஊழல் நிறைந்தது என குற்றம் சாட்டுகின்றனர். புள்ளிவிபர அடிப்படையில் முஸ்லிம்கள் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எண்ணிக்கையளவில் வளர்ந்துள்ளனர் என்பது கருத்து வேறுபாட்டுக்குரிய விடயம். எவ்வாறாயினும், அத்தகைய முஸ்லிம்களின் வளர்ச்சி எவ்வாறு சிங்கள பௌதத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்? சங்காக்களின் அவ்வாறான விளக்கங்களினால் அச்சம் கொண்டுள்ள சிங்கள மக்கள் குறித்து முஸ்லிம்களிடத்தில் என்ன தீர்வு நடவடிக்கைள் இருக்கின்றன? அல்லது தற்போது எத்தகைய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்?


ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், பொது பலசேனா அமைப்பு மிகவும் அபரிவிதமாக வளர்ச்சி பெற்றுவருகின்றது. அத்தோடு நின்றுவிடாது தமது அமைப்பினை மீள கட்டமைக்கும் பொருட்டும் விரிவாக்கும் பொருட்டும் ஏனைய அனைத்து சிங்கள புத்த சாசனங்களுக்கும் அழைப்பு விடுத்தவண்ணம் உள்ளனர். இந்த மீள் கட்டமைப்பானது அமைப்புக்களுக்கு இடையில் பொறுப்புக்களை பகிர்ந்தளித்தல் மேலும், தலதா மாளிகையினதும் ஏனைய ஆத்மஸ்தானங்களினதும் வருமானம் குறித்தும், சொத்து பகிர்வு குறித்து மிகவும் அதிகம கவனம் செலுத்துதல் என்பவற்றை அடிப்படையாக கொண்டது.


பலசேனாவின் இத்தகைய அழைப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. இவ்வழைப்பு செவியேற்கப்பட்டு நவீன சிங்கள பௌத்தம் ஒரு நாள் நிறைவேறும். இந்நிலை தோன்றுகிற போது, இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் இந்த பௌத்த சியோனிசம் பற்றி விளங்கிக் கொண்டு வெறுமனே அரசியல் ரீதியாக வன்முறைகள் எதனையும் கட்டவிழ்த்து விடாது செயற்பட முடியுமா? இத்தகைய சிங்கள சங்காக்களின் நிகழ்ச்சி நிரல் குறித்து விளக்கம் அளிப்பதற்கான வழிமுறைகள் ஏதெனும் அரசாங்கத்திடமோ, ஏனைய சிவில் அமைப்புக்களிடமோ காணப்படுகின்றதா? பொது பலசேனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற அவநம்பிக்கை, வர்க்க முரண்பாடு, இனவாதம், பொருளாதார போட்டி முதலியவற்றை தவிர்த்துக் கொள்வதற்கான அடிப்படைகள் இவ்வாறான வினாக்கள் மூலமாகவே சாத்தியப்படும்.


தென்கிழக்கு ஆசியாவில் பர்மா (மியன்மார்), தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தேர வாதத்தினை கடைப்பிடிக்கின்ற நாடுகள் ஏற்கனவே பௌத்த-முஸ்லிம் முரண்பாடுகளை பாரியளவில் உருவாக்கி விட்டிருக்கின்றன.


சிங்கள பௌத்தம் மீண்டும் 1915 களில் இடம்பெற்றது போன்ற சிங்கள-முஸ்லிம் கலவரம் ஒன்றுக்கு வித்திடுமா? அவ்வாறான ஒரு கலவரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தொழிற்படுத்த அனைத்து வகையான உக்திகளையும் பொது பலசேனா முன்கொண்டு வருவதனால் 2015ல் அல்லது அதற்கு முன்பதாக அவ்வாறான நிகழ்வு ஒன்றுக்கு நிறையவே சாhத்தியங்கள் நிலவுகின்றன. இலங்கையில் சங்காக்கள் தமக்குள்ள ஐயங்களையும், கருத்துக்களையும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்;த்துக் கொள்ள முடியுமா? இத்தகைய கலந்துரையாடல் முயற்சிக்கு முஸ்லிம்கள் மத்தியல் காணப்படுகின்ற அரசியல் மற்றும் சமய அதிகார வர்க்கங்களும், அவர்களுக்கு இணங்கியதாக செல்லும் வணிக சமூகமும் என்ன நடவடிக்கைகளை கைக்கொள் போகின்றார்கள்?
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger