சி.சந்திரகாந்தன் என்ற பந்து இரண்டு விக்கட்டுகளை சாய்த்திருக்கிறது


நிந்தவூரின் அரசியலில் இன்று குறிப்பிடத்தக்க ஒரு நாள். மக்களின் அரசியல் அபிப்பிராயமானது வேறு திசையில் மாற்றம் பெறுவதற்கு சற்று முந்தியகாலம் இதுவென சந்தேகிக்க வழிவகுத்துள்ள ஒரு நாள்.

நடந்தது கிரிக்கட் என்றாலும் வெறும் கிறிக்கட் என்று கூறிட முடியாத அளவிற்கு கொஞ்சம் அரசியலின் வாடையும் கூடவே பெட்டும் பந்துமாக சேர்ந்திருந்தது. என்றாலும், இந்தக் கிரிக்கட் பலருக்கு படிப்பினை கொடுத்திருக்கும் என்பது என்னவோ உண்மைதான். நிந்தவூரில் இன்று இடம்பெற்று முடிந்த கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு கிழக்கு மகாண சபையின் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். அவரது அரசியல் காலத்தில் முதல் முறையாக இந்த நிந்தவூருக்கு வருகை தந்திருக்கிறார் என நினைக்கின்றேன். என்றாலும் இவ்வருகை மக்கள் மத்தியில் அவர்கள் இதுவரை காலமும் வைத்தருந்த குருட்டுத்தனமான அரசியலுக்கு மறைமுகமாகவாயினும் சிறிது மருந்து கட்டலாம் என்பது சிலரது கருத்து.

நிந்தவூரில் எதற்கு எடுத்தாலும் அழைக்கப்படுவதற்கும், மண்ணின் மகிந்தர் என்றும், தன்மான சிங்கம் என்றும் போற்றப்படுவதற்கும் என்றிருந்த இரண்டு எம்பிக்களை இந்த நிகழ்வில் காணமுடியாமல் போனதற்கு இந்த மக்கள் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள் என்றுதான் நான் கூறவேண்டும். நீங்கள் எல்லோரும் ஏன் என்று கேட்கலாம். மக்கள் கேட்பது ஒன்Nறு ஒன்றுதான். இந்த இரண்டு எம்பிக்களும் ஊருக்கோ அல்லது இந்த நாட்டிற்கோ செய்தது என்ன? தயவு செய்து அவர்களுடைய குடும்பத்திற்கு செய்தவைகளை கூற வேண்டாம் என அம்மக்களே கூறுகிறார்கள் நான் அல்ல. இதுததான் நானும் இந்த ஊரில் இத்தனை நாளும் செவியுண்ட வினாக்கள். இதற்கான விடை எனக்கும் தெரியாது. உங்களுக்கு தெரிந்தால்...

மடத்தனமாக அரசியலை நெருப்பாக மக்கள் மத்தியில் மூட்டிவிட்டு குளிர் காய்ந்ததை விடுத்தும், மக்கள் மனங்களில் மரம் என்ற சின்னத்தை விதைத்து  மடங்களாக மாற்றியதை விடுத்தும், அரசியல் என்பது குடும்பங்களுக்குள் மாத்திரம் சுற்றித்திரிய அக்கரையாக செயற்பட்டதனை விடுத்தும், தேர்தல் என்றால் மக்கள் மடையர்களாக மாறவேண்டும் என்று பள்ளிக்கூடம் நடத்தியதனை விடுத்தும், அபிவிருத்தி என்பதனை தொட்டு நக்கும் தேனாகவும், வோட்டு என்பது காசுக்கும் ஒரு போத்தல் சாராயத்திற்கும் போடும் வெறும் கோடு என்றதனைவிடுத்தும், தெருவோரங்களில் கட்சி கந்தோருகள் அமைத்து காடையர்களை உருவாக்கியதை விடுத்தும், தலவைன் என்பவனுக்கு வெறும் தலை இருந்தால் போதும் என்று மக்களுக்கு மகுடி ஊதியதனை விடுத்தும், சேவை என்பது சாவு நடந்த வீட்டுக்கு சந்தக்கு வாங்கி கொடுக்கின்ற காசு மட்டும்தான் என்றதனைவிடுத்தும், கட்சி என்ற பேரில் ஆட்டுக்கொட்டில் நடத்தியதனை விடுத்தும், பேராளிகள் என்ற  பெயரில் போக்கிரிகளை உருவாக்கி மஞ்சல் பச்சை கலந்த தொப்பியும், சட்டையும் வழங்கி அழகு பார்த்ததை விடுத்தும், கூடவே இருந்தவர்கள் என்று கூறி கொந்தராத்து வாங்கிக் கொடுத்தனை விடுத்தும், ஒரு மண்ணாங்கட்டியும் இந்த எம்பிக்கள் செய்தது கிடையாது. செய்பவர்களையும் விட்டது கிடையாது.

அரசியல் என்பது ஒரு கலையோ அல்லது மாயசால தந்திரமோ அல்ல. இது ஒரு கற்கை அல்லது அறிவு என்று கூறலாம். அதில் தேர்ந்தவர்கள்தான் அதனை செய்யலாம். ஆனாலும் எல்லா தேர்ந்தவர்களும் அதனை செய்ய முடியாது. எவ்வாறாயினும், படித்தவர்களும் படியாதவர்களும் அதில் பங்கேற்கலாம். இவற்றை எமது மக்கள் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவில் தலைமை என்பதுவும் அப்படித்தான். இந்த அரசியல்வாதிகள் கூறுவது போன்று தலைவர்கள் உருவாவது கிடையாது. அது சனநாயக தத்துவமும் கிடையாது. இந்த வங்குரோத்து அரசியல்வாதிகள் சோடிக்கின்ற தோரணைகள்தான் அவைகள். அரசியல் தலமை என்பது எவராக இருப்பினும் சரி, வேறு எந்த தலைமையாக இருப்பினும் சரி அது உருவாவது கிடையாது, உருவாக்கப்படுவதும் கிடையாது. உண்மையில் அது ஏற்கனவே உருப்பெற்றுத்தான் இருக்கிறது. மக்களாகிய எமது வேலை அதனை அடையாளம் கண்டு கொள்வதுதான். நாம் எமது தலைவன் என்று கூறுகிறவன் அடிப்படையில் எமக்கு துரோகம் செய்கிறான் என்றால் அவன் தலைவன் இல்லை. நாம் எதற்காக அவனை தலைவனாக கொண்டோமோ அதற்கு மாற்றமாக நடக்கிறான் என்றால் நாம் தலைவனை அடையாளம் காட்டுவதில் தவறு இழைத்திருக்கிறோம் என்பதுதான் யதார்த்தம். எனவே, நாம் அடுத்த தடைவை நமது உண்மையான தலைவனை சரியான வகையில் அடையாளம் கண்டு கொள்ள முயற்சிக்க வேண்டும்.

நாம் எமது தலைவன் துரோகி எனத் தெரிந்தும் அவனையே மீண்டும் மீண்டும் தலமையாக ஏற்றுக் கொள்வோமனால் அது எமது சமுதாயத்தின் இழிவும் தவறுமே தவிர அந்த துரோகியினது அல்லது குறிப்பிட சில குழுவினது தவறல்ல. ஏனெனில் தான் விதைத்த விதையை அந்த சமுதாயம் சரியாக அறுவடை செய்யவில்லை. தன் வயக்காடு பற்றி இந்த மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை அல்லது புரியவிடாமல் மறுக்கவும் மறைக்கவும் பட்டிருக்கிறார்கள்.     

ஆனால் இன்று எமது ஊர் மக்களின் நிலமை என்ன? மக்கள் அரசியல் என்ற பெயரில் ஏமாற்ற பட்டிருக்கிறார்கள். அரசியல் செய்வது என்பதனையும், அரசியலில் பங்கேற்பது என்பதுவுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர முடியாத அளவுக்கு அவர்களுடைய அறிவு ஒரு சாராய போத்தலுக்குள் ஆயிரம் ருபாய் நோட்டின் சதுர அளவில் முடக்கப்பட்டுள்ளது. வாக்கு இருந்தால் அடையாளம் இடலாம் என்றிருந்த காலம் சென்று இன்று காசு இருந்தால் அடையாளம் இடலாம் என்ற கட்டத்துள் நாம் அடைக்கப்பட்டிருக்கிறோம். மறுவாறாக, சேவை செய்தால்தான் மக்கள் மதிப்பார்கள் என்ற காலம் போய் இப்போது போர்வை போட்டால் மக்கள் எம்மை மதிப்பார்கள் என்ற காலம் அரசியல் தலமைகளிடம் குடியேறிவிட்டது. அரசியல் தலமை என்றால் பொதுமக்களுக்கு சேவையும், நன்னோக்கமும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எம்மிடையே இருந்து மாற்றப்பட்டு வாகனமும் வாட்டசாட்டமும் கூடவே உரக்க கத்த கொஞ்சம் வாயும் இருந்தால் அவன்தான் அரசியல்வாதி என்று கைதட்டும் ஏமாளிகளாக, பலவேளைகளில் கோமாளிகளாகவும் நாம் மாறியிருக்கிறோம். அரசியல் திறமை என்பதனை அளவிடும் கோலாக நாவண்மை, அறிவு, புத்;;;;;திசாதூர்யம், வெளிப்படைத்தன்மை என்பனவெல்லாம் இருந்த காலம் போய் தற்போது ஒரு பெட்டி காசும், வந்துபோக ஒரு காரும், போஸ்டர் ஒட்ட நாலு றோடும் இருந்தால் போதும் அவன் எமது தலைன் என்று ஓங்கி ஒலிக்கும் அளவுக்குத்தான் எமது குரல் வளைகள் அசைந்து கொடுக்கின்றன.

இதெற்கெல்லாம் காரணம் என்ன. எமாற்றுபவனை விட ஏமாறுவதுதான் மூடத்தனம் என்றால் அதனைத்தான் நாம் இவ்வளவு காலமும் செய்திருக்கிறோம் என்று கூற எனக்கு வெட்கமாக இருக்கிறது. அரசியல் என்பது மக்களாகிய எம்மிடம் இருந்து வரவேண்டி விடயம் என்றிருந்தால் நாம் அதனை ஏன் சில சில்லறைகளுக்காக அதனை மற்றவர்களின் மடியில் போட்டுள்ளோம். தெளிந்த குட்டையில் மீன் பிடிப்பதை விட குழம்பிய குட்டையிலதான் மீன்கள் அதிகம் மாட்டும் என்தனை (நாம்) மீன்கள் தெரிந்து வைத்தருக்கிறதோ இல்லயோ, பிடிக்கின்ற இந்த அரசியல் ஏமாற்றுப் பேர்வழிகள் மிக அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். உமது ஊர் இந்த அளவு சின்னாபின்னப்பட்டு இன்று நட்டாற்றில் இந்த நபர்களினால் விடப்பட்டுள்ளதற்கு காரணம் இந்த சமுதாயத்தில் இருந்த ஒழுங்கு முறை குலைந்திருப்பதால்தான். ஒன்றை இந்த ஊர் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாயம் ஒழுங்கு முறையின்றி குலைந்து காணப்படும் காலம் வரை இந்த ஊரின் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஊர் மக்களுக்குள் ஒரு உன்னதமான சிவில் ஒழுங்கமைப்பு நிலவுகிற போது நீங்கள் உங்களுடைய தலைமையை சரியான முறையில் அடையாளம் கண்டிருப்பீர்கள் என்பது யதார்த்தமும் நடைமுறையும் கூட.

நான் ஏற்கனவே கூறியது போன்று, நிந்தவூரின் அரசியல் வேறு திசையில் பயணிப்பதற்கான ஒரு ஆரம்பம் இன்று என நான் குறிப்பிட்டதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். எமது மக்கள் அதிகாரம் என்றால் என்ன என்பதனை புரிய ஆரம்பித்திருக்கின்றனர். அதிகாரம் என்றால் தமக்கு இருக்கின்ற அல்லது மற்றவர்கள் தமக்கு அளித்த பலம் என்றுதான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். உண்மையில் அதன் தத்துவம் வேறு. தமிழில் இலகுவாக விளங்க வேண்டுமாயின், அதிகாரம் என்பது அதி - ஆகாரம் என்பதுவாகும். அதி எனும் சொல்லை விளங்க 'அதிதி' என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதி என்பது மதிப்பு அல்லது மரியாதை எனப் பொருள். 'அதிதி' என்பது மரியதை செலுத்தப்படுகிற நபரை குறிக்கும். ஆகாரம் எனும் சொல்; உதவுதல் அல்லது தொண்டு செய்வதனை குறிக்கிறது. நீங்கள் விளங்கிக் கொள்ள உபகாரம் செய்தல் என்பதனை நினைவில் கொள்ளலாம். ஆகவே, அதிகாரம் என்பது மக்களுக்கென சேவையாற்ற அல்லது தொண்டு செய்யவென மக்களால் அடையாம் காணப்பட்ட அல்லது மதிக்கப்பட்ட நபருக்கு உள்ளவைதான்.

ஆக எனக்கு மகிழ்ச்சி, இன்று இடம்பெற்ற கிரிக்கட் நிகழ்வுக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிதியாக அழைக்கப்பட்டும், நாம் பெருமைக்கு மா இடிக்கும் உரலின் இரு உலக்கைளும் அவ்விடத்தில் இல்லை. இப்பொழுது அவர்களிடம் இருப்பது 'காரம்' மட்டும்தான்J அப்படியென்றால், எமது மக்கள் இன்று எமது எம்பிக்களுக்கு இருக்கின்ற 'அதி' என்தனை களட்டிவிட்டிருக்கிறார்கள். மதிப்பும் மரியாதையும் அவர்களுக்கு தவறுதலாக மக்கள் வழங்கியதாகத்தான் நான் கருதுகின்றேன்;. ஏனெனில் அவர்கள் எமது சமுதாயத்தில் தலைவர்களாக தவறுதலாக அடையாளம் காணப்பட்டவர்கள். நீங்கள் அது எப்படி என்று கேட்கலாம். தலைவர்கள் உருவாவதும் கிடையாது, உருவாக்கப்படுவதும் கிடையாது. சமுதாயம் இயல்பாகவே தலைவர்களை பெற்றெடுக்கிறது. சமூகத்தின் பணி என்னவென்றால் அவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வதுதான். அதனை எனது சமுதாயம் மீண்டும் செய்யும் என நம்புகின்றேன். அந்த தலைவனுக்கு

1 இலட்சியமும் குறிக்கோளும் இருக்க வேண்டும்
2 ஏதிர்பாராது இடம்பெறகிற அத்தனை தடைகளையும் தாண்டிச் செல்லும் சாதூர்யம் இருக்க வேண்டும்.
3 வெற்றியையும் தோல்வியையும் கச்சிதமாக முகாமை செய்யும் பக்குவத்தை அறிந்திருத்தல் வேண்டும்.
4 தீர்மானங்களை எடுப்பதில் துணிகரம் இருக்க வேண்டும்.
5 கண்ணியமானவனாக இருக்க வேண்டும்
6 வேலையையும் வெற்றியையும் பகிர்ந்து கொள்பவனாக இருக்க வேண்டும்
7 பொது வாழ்வில் எத்தருணத்திலும் வெளிப்படையானவனாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் நான் கூறுவது தேர்தல் காலத்தின் போது அளவிடுவதற்கல்ல. தேர்தலின் பின்னர் அளவிவிடுவதற்கு.

நீங்கள் நினைக்கின்றீர்கள் இப்படி ஒரு தலைவனை எப்படி உம்மக்கள் கண்டுகொள்வார்கள் என. நான் கேட்கிறேன், இருக்கின்ற உலக்கைகளிடம் இவற்றில் ஒன்றுகூட இல்லையே என்று. அப்ப எப்படி மா இடிப்பது??? இருக்கிற உரலயும் கொடுத்துட்டு கிறைண்டர் ஒன்டு வாங்கினா கரண்டுல போட்டு இடிக்கலாம். அப்படி இல்லாட்டி மா இடிக்க பக்கத்து வீட்டுக்குத்தான் போகணும். பக்கத்து வீட்டுலயும் எத்தன நாளக்கி இடிக்கிற. ஒலக்க இருக்கும் வரக்கித்தான் ஒரலுக்கு வேல. ஒரல் இருக்கப்போய்த்தான் இந்த ஒலக்கையும் இங்க இருக்குது. இதுதான் மெய்யான அரசியல், எமது மக்கள் இப்போதாவது புரிந்து கொள்கிறார்கள்.  

1 comments:

Unknown said...

You are absolutely correct.
Two dummy pieces lead the Nintavur politics.

Post a Comment

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger