என்னை மன்னித்து விடு,
இத்தனை நாளும் மயங்கிக்கிடந்ததும் - உன்னால்தான்
விழித்துக் கொண்டதும்.
தடுக்கி விழுந்ததனால்
மயங்கிக் கிடந்தேன்.
யாரோ! என்னை தட்டி எழுப்பியது,
என்ன? என்று கேட்டேன்
எழுந்துவிடு என்றாள்.
என்னை மன்னித்து விடு.
மயங்கிக் கிடந்ததும் உன்னால்தான்.
விழிக்க வைத்ததும், நீதான்.
நான் கவலைப்பட்டு
துக்கித்துக் கிடந்தபோது,
கிடைத்த மலர் வளையங்கள்; கூட
முட்களோடுதான் கிடைத்தன.
என்னை மன்னித்துவிடு.
மயங்கிக் கிடந்தது நான்தான்.
நான் கனத்தால் உயரும் போதெல்லாம்,
நீ மௌனத்தால் உயரமானாய்.
என்னை மன்னித்து விடு.
என்னை மன்னித்துவிடு,
மயங்கிக் கிடந்தது உன்னால்தான்.
வானளவு வஞ்சிக்கப்பட்டதும்,
வக்கிர மௌனத்தினால்
என்னை,
என் ஆத்மாவினை,
உன் தேச எல்லைகளை விட்டும்
விரட்டடிப்பு செய்ததும்,
நிச்சயமாக நீதான்.
மயங்கிக் கிடந்ததும்,
விழித்துக் கொண்டதும்
உன்னால்தான்.
வாழ்க்கையில் கதியற்று,
கண் குழிக்குள் கனதியில்லாமல் - நான்
வாடியதன் விசாலத்தினை அறிந்து,
கண்ணீரும் பஞ்சப்பட்டன.
என்னை மன்னித்துவிடு.
மயங்கிக் கிடந்தது நான்தான்.
மனத்தின் வேகம்
புவியை முறியடித்து
பூகம்பத்தினையுண்டாக்கியிருந்தது.
புத்தம் பதிதாக கிடைக்க விரும்பிய நான்,
சிதறுண்டு சின்னாபின்னமாக்கப்பட்டேன்.
தூங்கிக் கிடந்ததும் உன்னால்தான்.
வறண்ட நிலத்தில்
வாழ்க்கையின் தோல்வி.
வெற்றி தெரிந்தது,
வென்றவர்கள் எல்லோரும் - வரிசையில்
காத்து நின்றவர்கள்.
என்னையும் வரிசையில் நிறுத்தியிருந்தது,
வாழ்க்கை.
மயங்கிக் கிடந்ததும் உன்னால்தான்.
சாகக்கிடந்த போதும்
சவுக்கால் அடிவிழுந்தது.
வலிதாங்க,
வழியுணர,
உயிர்மட்டும் மீதமிருந்தது.
தசை நார்கள் மரத்துப்போய்
மறுக்க,
காலம் என்னை வேரோடு பிடுங்கி
தூர எறிந்திருந்தது.
என்னை சாவுண்டு,
சுவக்குழிக்குள் வைத்து
அள்ளியெறிந்த மண்கள் கூட
உதைத்தன.
சம்பிரதாயங்கள் சாமர்த்தியமாக
பழிவாங்கின - இன்னும் துடித்தன.
என்னை மன்னித்துவிடு,
நான் மயங்கிக் கிடந்தேன்.
என்னுள் முடக்கப்பட்டிருந்த
சிந்தனைகள்,
கற்பனைகள்,
கனவுகள்,
எட்டுத் திசைகளுக்கும் எகிறி ஓட,
கண்கள் தம் காட்சிகளால்
நம்பிக்கை இழந்து
கும்பம் விழ,
கடிவாளமிட்டிருந்த மூளைக்கும் பாரம் குறைந்து
கவுண்டுவிட,
நேரம், காலம், தூரம் யாவையும் கடந்து
உன் விதி நிசப்தமாயிருந்தது.
நிச்சயம் அது நீதான்.
என்னை மயக்கத்தில் கிடத்தியதும்,
என்னை விழிக்க வைத்ததும் - அது
நீதான்.
என்னை மன்னித்து விடு.
நீதான் - அது.
என்னை மன்னித்துவிடு,
எல்லாம் நீதான்.
0 comments:
Post a Comment