நீ என்னில் எதைத் தேடுகிறாய்
எனது புன்னகையை கனவுகளை,
கவிதைகளை - என்னில்
எதைத் தேடுகிறாய்.
தயவு செய்து உனது பார்வையை நிறுத்து
அது எனது ஓவியங்களை அசிங்கப்படுத்துகிறது.
உனது தாளத்தை நிறுத்து
அது எனது பாடலை காயப்படுத்துகிறது.
உனது புன்னகையை நிறுத்து
அது எனது உதடுகளை சிரமப்படுத்துகிறது.
தயவு செய்து உனது புகழ்ச்சியை நிறுத்து
அர்த்தமற்ற போலி வார்த்தைகளை
நீ எனக்கு பரிசளிக்கிறாய்.
அய்யகோ!
தயவு செய்து உனது சொற்பொழிவை நிறுத்து
அது எனது நேரங்கைளை கொன்று குவிக்கிறது.
எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு
எனது கவிதைகளை செவிமடு,
என்னைக் கனவுகள் காணவிடு
உன்னைப் போலவே நானும் எலும்புகளாலும்
தசைகளாலும் உணர்வுகளாலும் ஆக்கப்பட்டிருக்கிறேன்.
முன்னேற்றங்களை நோக்கி நானும் முகம்
திருப்பவே விரும்புகின்றேன்.
முறிப்புகளை நிகழ்த்தி உண்மையான உலகத்தையே
கண்டடைய விரும்புகின்றேன்.
தயவு செய்து நிறுத்து,
என்னை கனவுகள் காணவிடு,
உன்னைப்போலவே நானும் எலும்புகளாலும்
தசைகளாலும் உணர்வுகளாலும்தான் ஆக்கப்பட்டிருக்கிறேன்.
0 comments:
Post a Comment