கொழும்பு – தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

முஸ்லிம் சமுதாயத்தின் பொருளீட்டும் வழிமுறைகள் கடந்த 200 ஆண்டுகளாக பல மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. அடிப்படையில் முஸ்லிம்கள் தொடக்க காலம் முதல் வியாபார ரீதியான சமுதாயம் என்பதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. பொருள் வாங்கி விற்பதன் மூலம் உழைத்துச் சம்பாதிப்பதை உயர்வாகவும் பாதுகாப்பகவும் முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.

இன்றைய முதலாளித்துவம் வலியுறுத்தும் எல்லையற்ற, முறைகேடான இலாபம் என்ற கீழ்த்தரமான தத்துவமும் குறுகியகாலத்தில் வளர்ச்சி என்ற விவேகமற்ற போக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சுரண்டல் மற்றும் பதுக்கலில் ஈடுபடாத நேர்மையான வியாபரிகள் என்றுதான் இன்றளவும் முஸ்லிம் சமுதாயம் தன்னை முன்னிலைப்படுத்துகிறது.


டச்சு காலத்து இலங்கை இந்திய முளிம்களின் மரக்கல வியாபாரம் 


வரலாறு முழுவதும் கடலோர முஸ்லிம்கள் அரபு நாடுகள், இலங்கை மற்றும் கீழ்திசை நாடுகளுக்கு வியாபாரம் செய்யும் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். தமிழகத்திலும், இலங்கையிலும்  உள்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் மாட்டு வண்டிகள் மூலம் கடற்கரை பட்டிணங்களுக்கு கொண்டு வரப்பட்டு அது கடலோர முஸ்லிம்களால் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியப் பெருங்கடலின் கரையோர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றைக்கும் கூட இதற்கான அடையாளங்களை கடற்கரையோர முஸ்லிம் கிராமங்களில் காண முடிகிறது. இப்படி கொடி கட்டிப் பறந்த வியாபாரத்தை போர்சுகீஸ் மற்றும் பிரிட்டிஷார் வந்துதான் நாசமாக்கினார்கள்.

இறைவன் படைத்த கடலுக்கு எல்லைகள் வகுத்து தமிழர்களின் மீன்பிடித் தொழிலுக்கும் முஸ்லிம்களின் வியாபாரத்திற்கும் நெருக்கடி கொடுத்தனர். பிரிட்டிஷாருக்கு தெரியாமல் இலங்கை சென்று வியாபாரம் செய்தவர்களை (Smugglers) கடத்தல்காரர்கள் என்ற படத்தைச் சூட்டினார்கள். சென்ற நூற்றாண்டு வரை கூட இலங்கைக்கான வியாபாரங்கள் தொடர்ந்து வந்தன. 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமான கப்பல் போக்குவரத்து என்று சொல்லி தனுஷ்கோடிக்கும் – தலை மன்னாருக்கும் இடையே கப்பல் விட்டனர்.

தனிப்படட முறையில் மரக்கலன் வைத்து ஏற்றுமதி செய்து வந்த முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசு கப்பல் போக்குவரத்தைத் துவங்கியதால் அதைப் பயன்படுத்தி இலங்கையில் வியாபாரம் செய்து வந்தனர். இந்த கப்பல் போக்குவரத்து 50 ஆண்டுகள் நீடித்தது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று ஏற்பட்ட கடுமையான புயலால் தனுஷ்கோடி நகரமே அழிந்தது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு வந்த இந்தோ – சிலோன் போட் மெயில் என்ற இரயில் 110 பயணிகளுடன் பாம்பனிலிருந்து தனுஷ்கோடி இரயில்வே ஸ்டேஷன் நுழைய இருந்த நேரத்தில் மிகப்பெரிய கடல் அலையால் தாக்கப்பட்டு 110 பேரும் 5 பணியாளர்களும் உயிரிழந்தனர். கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

புயலுக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டு 1983 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. 1980 களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்த நேரத்தில் வட இலங்கையில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இரவில் விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டனர். அனைத்தையும் இழந்து அகதிகளாக இராமேஸ்வரத்தில் வந்து இறங்கினார்கள் முஸ்லிம்கள். அதோடு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

வேறு வழியில்லாமல் அப்போது முதல் அரபு நாடுகளுக்கு அடிமை வேலை செய்திட புறப்பட்ட பெருவாரியான முஸ்லிம் சமுதாயம் இன்று வரை அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வியாபார ரீதியாக தனது பாரம்பரியத்தை அறியாத மக்களாக மாதச் சம்பளத்திலேயே காலத்தை கடத்தி வருகின்றனர்.

இப்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக இரு அரசுகளும் அறிவித்துள்ளது. இந்த வாய்ப்புகளை முஸ்லிம் சமுதாயம் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் இனக் கலவரம் முடிந்து அமைதி திரும்பியுள்ள சூழலில் இங்கே வியாபாரத்திற்கும் விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து பெரிய அளவிற்கு இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களுக்கு இந்த கப்பல் போக்குவரத்து சற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் நடுத்தர மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் வியாபாரம் செழித்து வளரும் என்பதும் உண்மை. தமிழகத்தின் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் இலங்கையின் தற்போதைய தேவையை உணர்ந்து வியாபாரம் செய்ய தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் இலங்கையிலும் தமிழகத்திலும் வாழும் முஸ்லிம் சமுதாயம் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேற்றத்திற்கான சில அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்களின் மக்கள் தொகை 60-75 இலட்சம். இலங்கை முஸ்லிம்களின் மக்கள் தொகை 20-25  லட்சம். ஆக மொத்தம் 1 கோடி மக்கள் தொகை.

இவ்விரு நாடுகளிலும் வாழும் முஸ்லிம்களின் மொழி, உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு எல்லாமே 95 விழுக்காடு ஒன்றுதான். எல்லாவற்றையும் விட இவர்களின் இறைவழிபாட்டுக் கொள்கை 100 விழுக்காடு ஒன்றுதான். அதனடிப்பபடயில் இவர்களின் முன்னேற்றத்திற்கான சிந்தனையும் ஒன்றுதான். நாடுகளுக்கு மத்தியிலான எல்லைகளால் கடந்த 60 ஆண்டுகளாக பிளவுபட்டுக் கிடக்கும் இந்த ஒரே சமூகம் ஒன்றோடு ஒன்றாக கலக்க வேண்டும். தாய்மொழியான தமிழின் வளர்ச்சிக்கும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வலிமை பெறுவதற்கும் இந்த சமூகக் கலப்பு மிகப் பெரிய பங்களிப்பை செய்யும்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா அடைத்துள்ள கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலங்கை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை தமிழக முஸ்லிம் சமூகம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதே போல இலங்கையின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையை இரு சமூகங்களும் சேர்ந்து பயன்படுத்திட தேவையான பொருளாதாரம் மற்றும் வழிகாட்டுதலை இலங்கை முஸ்லிம் சமுதாயம் ஏற்படுத்திட வேண்டும்.

அதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக ஆய்வாளர்கள், பொருளியல் வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அது சமுதாய முன்னேற்றம் என்ற அடிப்படையில் உழைத்திட வேண்டும்.

சமூக நீதி 

0 comments:

Post a Comment

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger