ஒலுவில் துறைமுகத்துக்காய் காணியை இழந்த மக்களுக்கு நிவாரணம் கிட்டுமா?

ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென 2008ம் ஆண்டு இரண்டாம் கட்டமாக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஸ்டஈட்டுத் தொகை சுமார் 5 வருடங்களாகியும் இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்க இடமின்றியும், வாழ வழியின்றியும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களது தற்போதைய நிலைமைகளை ஆராய்கின்ற போது பாரிய அநீதி இழைக்கப்பட்டு அவர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய நஸ்டஈட்டுத் தொகை வழங்கப்படாமல் மறுக்கப்படுமோ என்ற சந்தேகம் பிரஸ்தாப பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஸ்டஈட்டை பெற்றுக் கொடுப்பதில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் முதற் கொண்டு மக்கள் பிரதிநிதிகளும் மிகக்கூடிய கவனமெடுத்து தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஆவண செய்யப்பட வேண்டும் என்பதே இன்று பாதிக்கப்பட்டோரால் முன்வைக்கப்படும் கோரிக்கையாகும்.

இதுவிடயமாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது உள்ளக் குமுறல்கள் மற்றும் இன்றைய நிலை சம்மந்தமாக தெரிவித்த கருத்துக்களை இங்கு தொகுத்து தருகிறோம்.
காணிச் சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்ட எம்.ஐ.எம். அன்சார் என்பவர் கூறும்போது,


"ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக இரண்டாம் கட்டமாக 2008ம் ஆண்டு 48 போர்களின் காணிகள் சட்டப்படி சுவீகரிக்கப்பட்டன. சுவிகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2009ம் ஆண்டு அரச விலைமதிப்புத் திணைக்களத்தினால் விலை மதீப்பீடு செய்யப்பட்டன. அதில் பாதிக்கப்பட்ட 48 பேரில் எனது காணித்துண்டு உட்பட 32 பேரின் காணிகளுக்கு (11.18 ஹெக்டெயர்) மட்டுமே விலைமதிப்பீடு செய்யப்பட்டது."
"அதன் பிற்பாடு காணி உரிமையாளர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரினால் நஸ்டஈட்டுத் தொகை எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 32 பேர்களுக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஊடாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு 22 கோடியே 70 இலட்சத்து 97 ஆயிரத்து 460 ரூபா வழங்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் மேற்படி காணிகளுக்குரிய அரச விலை மதீப்பீடு அதிகூடியது என்ற யூகத்தின் அடிப்படையில் இதனைக் காரணம் காட்டி இலங்கைத்துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகளினால் இழுத்தடிக்கப்படுகின்றன."


பாதிக்கப்பட்ட குழுவினரால் இவ்விடயமாக இலங்கைத் துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகளிடம் வினவியபோது, அரச விலை மதிப்பீட்டுத் தொகை அதி கூடியது என்றும், அதனை வழங்குவதற்கு இலங்கைத் துறைமுக அதிகார சபையிடம் பணமில்லை என்றும் இவ்விடயம் சம்மந்தமாக ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கை கிடைத்தவுடன் நஸ்டஈடு வழங்குவது சம்மந்தமாக மேற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் சுமார் 105 பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எங்களது விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மனம் நொந்த நிலையில் இவ்விடயத்தில் விமோசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் உள்ளனர். மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட அவர்கள் இதுவரையில் மௌனிகளாய் இருப்பது மனவேதனையைத் தருகிறது. இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் மனித நேயத்துடன் நடந்து கொள்ள தவறி விட்டார்கள். பல நொண்டிச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இன்னும் நியாயமற்ற காரணங்களைக்கூறி காலத்தைக் கடத்துவது நாகரீகமற்ற செயலாகும்.


தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒலுவில் துறைமுகமும் மிக விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது. அதற்கு முன் எமக்குரிய தீர்வினை நாட்டின் தலைவரும் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜனாதிபதி அவர்கள் விரைவில் பெற்றுத்தந்து எமது துயர் துடைப்பார் என நாங்கள் நம்புகிறோம்.
மற்றுமொரு பாதிக்கப்பட்ட மசாயினா உம்மா என்ற பெண் (வயது-65) தனது கருத்தை வெளியிடும்போது,


"எனக்கு 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். ஒலுவில் துறைமுக வேலைக்காக எமது காணிகள் சவீகரிக்கப்பட்ட பிறகு எமது குடும்பத்துடன் சம்மாந்துறையில் வசித்து வருகிறோம். அடிப்படை வசதிகளற்ற களிமண் வீடு ஒன்றில் மிகச் சிரமத்திற்கு மத்தியில் நானும் எனது குடும்பமும் வசித்து வருகிறோம். நாங்கள் எமது ஒலுவில் காணியில் 40 வருட காலமாக வசித்து வந்தோம். அப்போது எனது கணவர் கூலித்தொழில் செய்து எங்கள் குடும்பத்தை நடாத்தி வந்தார். தற்போது வயது முதிர்ந்த நிலையில் வாழ்க்கையை ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பல வருசம் கடந்தும் எமது காணிகளுக்கான நஸ்டஈடு கிடைக்கவில்லை. இதில எங்கட துயரைத் துடைக்கிறதுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறுதான் நாங்க இப்ப கோரிக்க விடுக்கிறம்" என்று கூறினார்.
அதுபோல் மற்றொரு பாதிக்கப்பட்ட நபர் எம்.ஐ.மீராமுகைதீன் (வயது 50) கூறும்போது,


"எங்கட காணிகள ஒலுவில் துறைமுகத்த கட்டுறதுக்காக கேட்டாங்க. நாங்களும் அரசாங்கம் எடுத்தா நஸ்டஈடு தருவாங்கதானே எண்டு நம்பி காணிய நாட்டின் அபிவிருத்திக்காக கொடுத்தம். சுமாரா 5 வருசகாலம் போயிட்டு, நாங்களும் இப்ப வரும் அப்ப வரும் எண்டு காத்துக்கிட்டு இருக்கம். எங்கட குடும்பத்துல் 6 பேர் நாங்க எப்படி வாழ்றது? எங்கட காணியுமில்ல, காசும் இல்ல. அரசாங்கத்த நம்பி ஏமாந்த நிலைதான் எங்களுக்கு இப்ப மிஞ்சி இரிக்கி. சொல்லப்போனா எங்கிட நாளாந்த வாழ்க்கைய நடத்துறதிற்கு கடன் வாங்கிகிட்டு வாழ்றம். எங்களுக்கு சேர வேண்டியத தந்தா நாங்க எங்கட வாழ்க்கையையும் சிறப்பாக்கிகிட்டு, ஒரு தொழிலையும் செய்யலாம். பெரும் கஸ்டமா இருக்கி. சம்மந்தப்பட்டவங்க மனம் இரங்கி எங்கட விசயத்த கவனத்தில கொள்ளனும் எண்டுதான் நாங்க விரும்புறம். என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்."

மற்றொரு பாதிக்கப்பட்ட பெண் எம்.எஸ். செயிலத்தும்மா (வயது 60) குறிப்படும்போது,


"எனக்கு உரித்துடைய சுமார் 1280 பேர்ச்சஸ் (8 ஏக்கர்) காணி சுவீகரிக்கப்பட்டது. எனக்கு திருமண வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். நான் தற்போது காத்தான்குடியில் உறவினரின் வீட்டில் வசித்துவருகிறேன். எனக்கு நிரந்தரமான வீடு வளவு எதுவுமில்லை. எனக்குரித்தான நஸ்டஈடு கிடைத்தால் எனது பிள்ளைகளுக்கு வீடுகளை கட்டி அவர்களை கரை சேர்க்கலாம். ஆனால் சுமார் 5 வருட காலமாகியும் இன்னும் நஸ்டஈடு கிடைக்காமை மிகவும் மனவேதனையளிக்கிறது. இது சம்மந்தமாக எங்களுடைய பிரதேச செயலாளரிடம் கேட்டால் எல்லாம் அனுப்பப்பட்டுள்ளது பணம் கிடைத்தால் தருகிறோம் என்று சொல்கிறார். இந்த விடயத்தில் யாரெல்லாம் தடையாக இருக்கிறார்களோ அவர்களின் மனங்களில் இறைவன் இரக்கத்தன்மையை கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான யு.எல். உதுமாலெப்பை (வயது 55) என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

"எனது ஒலுவில் காணி சுவீகரிக்கப்பட்ட பிற்பாடு மத்திய முகாமிற்குச் சென்று வாழ்ந்து வருகிறேன். எனக்கு நிரந்தர தொழிலும் இல்லை. வருமானமும் இல்லை. ஒலுவிலில் இருக்கும்போது கடற்றொழில் செய்தேன். எனக்கு அப்போது கஸ்ட நிலை பெரிதாக இருக்கவில்லை. காணி சுவீகரிக்கப்பட்ட பிறகு மிகவும் கஸ்டமான நிலையில் இருக்கிறேன். எனது குடும்பத்தில் 5 பிள்ளைகள் உண்டு. அதில் இருவர் பாடசாலை செல்கிறார்கள். கஸ்டமாக இருக்கிறது. இதுவரைகாலமும் இவ்விடயமாக நாங்கள் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் செய்யாமல் மிகப் பொறுமையுடன் இருந்து வருகிறோம்."
ஒலுவில் துறைமுகம் நிர்மாணித்ததன் பிற்பாடுதான் ஹம்மாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், ஹம்மாந்தோட்டையில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய சகல நஸ்டஈடுகளும் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? நாங்களும் இந்த நாட்டு மக்கள்தானே.


எமது அரசியல் பெருந்தகைகளிடமும் பலமுறை இந்த விடயத்தை சொல்லியிருந்தும் அவர்களாலும் இதுவரையும் காத்திரமான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. தேர்தல் காலங்களில் மட்டும் உரிமை கடமை என்று வாய்கிழியக்கத்திவிட்டு எங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்கும்போது கோளைகளாக ஓடி ஒழிந்து கொள்கின்ற அரசியல் வாதிகளே எமக்கு கிடைத்திருக்கும் முதல் சாபக்கேடாகும். என்றும் கூறுகின்றார்.
இதுவிடயமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரை பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் காணிப்பகுதியின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.எம். றிபாய் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்த விடயம் தொடர்பாக பின்வரும் கருத்தை கூறினார்.

அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு,

ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென 2008ம் ஆண்டு இரண்டாம் கட்டமாக சுவீகரிக்கப்பட்ட 48 பேர்களுடைய காணிகளின் பரப்பு 20.1798 ஹெக்டெயர் ஆகும். (49.84 ஏக்கர்) இக்காணிகளுக்குரிய விலைமதிப்பீடு 2009ம் ஆண்டு அரச விலை மதிப்பீட்டுத்திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 32 பேர்களின் காணிகளுக்குரிய நஸ்டஈட்டுத் தொகையாக 22 கோடியே 70 இலட்சத்து 97 ஆயிரத்து 460 ரூபா வழங்கவேண்டி உள்ளது. விலை மதிப்பீடு செய்யப்பட்ட 32 பேருக்குரித்தான மேற்படி நஸ்டஈட்டுத் தொகையை அனுப்புவதற்கு ஆவண செய்யும்படி இலங்கைத்துறைமுக அதிகார சபையின் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எமக்கு இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தால் செய்யப்பட்ட விலை மதிப்பீடு அதிகூடியது என காரணம் காட்டியே இதுவரை நஸ்டஈட்டுத் தொகை வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதாகவே கருதவேண்டி உள்ளது. நாங்கள் இதுவிடயமாக சகல ஆவணங்களையும் உரிய இடங்களுக்கு அனுப்பியுள்ளோம். தாமதிக்கப்படுவதற்கு நாங்கள் காரணமில்லை. நஸ்டஈட்டுத்தொகை கிடைத்ததும் உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். விலை மதிப்பீட்டினை இலங்கை துறைமுக அதிகார சபை ஏற்றக்கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டதனாலேயே எஞ்சிய 16 பேர்களின் காணிகளுக்கு இதுவரையில் விலை மதிப்பீடு செய்யப்படவில்லை. என்று கூறினார்.
ஒலுவில் பிரதேசத்தில் இருந்து துறைமுக அபிவிருத்திக்காக தங்களது காணிகளுடன் வீடு உடைமைகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதென்பது அரசியல் வாதிகள் முதற்கொண்டு, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அணைவரினதும் முதன்மைக் கடைமைகளில் ஒன்றாகும்.

0 comments:

Post a Comment

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger