நம் நாட்டை சேர்ந்த முஸ்லிம் சகோதரி ஒருவர் 2007ம் ஆண்டு குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றார். கடந்த இரு வருடமாக அவர் பற்றி எதுவித தகவலும் இல்லை. நீண்ட கால முயற்சியின் பின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஊடாக அவரிடம் தொடர்பு கொள்ள முடிந்தது. அப்போது அவர் தான் படும் துன்பங்கள் குறித்து தனது தந்தைக்கு எழுதிய கடிதமே இது. நலன் கருதி அவரது ஊர், பெயர் என்பவற்றை தவிர்த்துள்ளேன். எமது சகோதர சகோரிகள் பலருக்கு இதில் படிப்பினைகள் உண்டு என்பதனால் நானும் வாசித்த மடலை இங்கு தருகின்றேன்.
அன்புள்ள வாப்பாவுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் மகளாகிய நான் எழுதிக்கொள்வது, நான் நலமாக இருக்கிறேனோ இல்லையோ, நீங்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என வல்ல அல்லாஹ்வை பிராத்திக்கிக்கின்றேன்.
நான் வெளி நாடு வந்து ஐந்து வருடங்களாகின்றன. எனக்கு என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு என்ன ஆனது என்று எனக்கும் தெரியாது. நீங்கள் என்னோடு தொடர்பு கொள்ள எத்தனை முயற்சிகள் எடுத்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் உங்களோடு எதுவித தொடர்பும் கொள்ள முடியாமல் நான் தடுக்கப்பட்டேன். நான் என்ன செய்வேன்? நான் ஒரு பெண், நான் கூண்டில் அடைபட்ட கைதியாய் கடந்த இரண்டு வடங்களாய் அல்லல் படுகின்றேன். நான் இங்கு உண்மையில் உயிரோடு இல்லை. உயிரற்ற வெறும் சடமாகத்தான் நடமாடிக் கொண்டிருக்கின்றேன்.
ஆனால் இதனை எழுதுவதெல்லாம் உங்களை மேலும் துயரப்படுத்துவதற்காக அல்ல. எனக்கு நடந்த நிலை, வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகவே எழுதுகின்றேன்.
வாப்பா! நான் வெளி நாடு செல்ல காலடி எடுத்து வைத்த நாள் முதலே என் அழிவும் ஆரம்பமானது. நான் அன்று முதலே கொஞ்சம் கொஞ்சமாக சாகத் தொடங்கினேன். அன்று நீங்கள் அந்த ஏஜன்சியுடன் என்னை ஏயர்போட்டுக்கு அழைத்து சென்றீர்கள். ஏயர்போட்டின் உள்ளே நுழைந்ததும் என்னை நீங்கள் கட்டியணைத்து, கண்ணீர் மல்க அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் யாரும் என்னோடு உள்ளே வரவில்லை. அவன் மட்டும்தான் என்னோடு வந்தான். என்னை ஓரிடத்தில் வைத்துவிட்டு அங்குமிங்குமாக ஓடித்திரிந்தான். ஓர் அரை மணி நேரம் கழித்து வந்து 'இன்றைக்கு உனக்கு பிளைட் இல்லையாம் நாளைக்குத்தான் போகலாமாம் என்ன செய்யிறது” எனக் கேட்டதும் எனக்கு இடி விழுந்தது போல இருந்தது. எல்லோரும் போயிட்டாங்க நாம் மட்டும் தனிய இவனோட என்ன செய்வது என யோசித்துக் பொண்டிருந்த போது 'வாங்க லொஜ்ஜுக்கு போயிட்டு நாளைக்கு வருவோம்” என்று என்னை கூட்டிக் கொண்டு மருதானையில் நாங்கள் முதல் நின்ற லொஜ்ஜுக்கு அழைத்து போனான். எனக்கு பயம்தான் வந்தது. எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. 'எனக்கு தனி றூம் எடுத்து தாங்க என்று கேட்டேன்” அவன் முன்னுக்கு போய் வந்து ' ரூம் எல்லாம் புக்கிங்காம், இது மட்டும்தான் இருக்காம், என்ன செய்றது பார்த்து அஜஸ் பண்ணுவோம்” என்றான். என்னால் தனிய இருக்க முடியவில்லை. ஒரே பயமாக இருந்தது. நான் நினைத்தது போல் நடந்தது. அன்றிரவு அவன் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டான் வாப்பா. நான் கெஞ்சியும் கதறியும் அவன் என்னை விடவில்லை. என்னை கலியாணம் முடிப்பதாகச் சொன்னான். அவனுக்கு ஏற்கனவே மனைவியும் பிள்ளைகளும் இருப்பது எனக்கு தெரியும். நாசமாகிப் போன எனது வாழ்க்கைக்காக தலையசைத்தேன். அவன் சொன்னது போல் வெளிநாடு செல்ல என்னை மறு நாள் அழைத்து செல்லவில்லை. என்னை வெளிநாட்டுக்கு அனுப்பு அல்லது கலியாணம் முடி என்று அவனின் காலில் விழுந்து கெஞ்சினேன். அன்று பின்னேரம் கலியாணம் முடிப்பதாக கூறி வீடொன்றுக்கு அழைத்து சென்றான். அங்கே மிச்ச நேரம் காத்திருந்த பிறகு இரண்டு பேர் வந்து பேர், ஊர் எல்லாம் கேட்டு எழுதினார்கள். கலியாணம் முடிந்துவிட்டதாக சொன்னார்கள். பின்னர் றூமுக்கு வந்து மூன்று நாள் அங்கிருந்தேன். கணவன் மனைவியாக அழுத கண்ணீருடன் காலம் கழித்தேன். அன்று மாலை வெளிநாடு செல்வதற்காக எயர்போட்டுக்கு அழைத்து சென்று என்னை அனுப்பிவைத்தான். களியாணம் என்பது வெறும் செட்டப் என்பது பிறகுதான் தெரிந்தது.
வாப்பா! நான் அழுதுகொண்டுதான் இந்த கடிதத்தை எழுதுகின்றேன். என்னை நீங்கள் எப்படியெல்லாம் வளர்த்தீர்கள். அவ்வளவு படிக்க வைக்காட்டியும் நல்ல ஒழுக்கத்துடந்;தானே வளர்த்தீர்கள். வீட்ட விட்டு எங்கும்; செல்ல அனுமதிக்கமாட்டீர்கள். றோட்டை கூட எட்டிப்பார்க்க விடமாட்டீர்கள். அப்படி வளர்த்த நீங்கள் சீதனத்திற்காக வேண்டி பணம் சம்பாதிக்க ஆயிரக்கணக்கான மைல் தாண்டி இங்கே அனுப்பி வைத்தீர்கள். நான் யார் காவலில் வந்தேன். கொழும்பு ஏயர்போட் வரை வந்த நீங்கள் நான் வெளிநாடு சென்றதாக நினைத்து சந்தோசப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த ஓநாய் என் வாழ்க்கையை நாசமாக்க திட்டமிட்டு அவன் எனக்கு டிக்கட் ஓக்கே பண்ணாமல் சும்மா வந்திருக்கிறான். இப்படி எனக்கு மட்டுமல்ல, வெளிநாடு வரும் பல அப்பாவி பெண்களுக்கு இப்படித்தான் நடக்கிறது என்பது பின்னர்தான் எனக்கு தெரியும்.
வாப்பா! நான் உங்களிடம் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன். இதன் பிறகு தங்கச்சிமார் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம். நான் பட்ட அவமானம் போதும்! என் வாழ்க்கை நாசமானது போன்று என் சகோதரிகளது வாழ்வும் நாசமாக காரணமாகிவிடாதீர்கள். ஊரில் பிச்சை எடுத்து திண்டாலும் மானம் மரியாதையாக வாழ்வோம். அல்லது இப்படி வந்து மானம் இழந்து வாழ்வதை விட செத்து மடிவது நல்லது.
வாப்பா! அங்கு மட்டும் கொடுமை நடக்கவில்லை. இங்கும்தான் கொடுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது வீட்டுக்காரன் ஒரு கிழவன். அவனுக்கு நான்கு மனைவிமார். கடைசி மனைவிதான் நான் இருக்கும் வீட்டுக்காரி. மூத்த மனைவி மரணித்து விட்டாள். மற்ற மூன்று மனைவிமாரினது வீட்டிலும் மாறி மாறி மிசினாய் வேலை செய்து கொண்டிருக்கின்றேன். மரணித்த மனைவியின் வீட்டுக்கு செல்வேன். அங்கே இரண்டு பெரிய பெண்கள் இருக்கிறார்கள். சில இடங்களில் எனக்கு சரியாக சாப்பாடு தரமாட்டார்கள். உடுக்க உடுப்பு கிடைக்காது. நான்தான் காசு கொடுத்து உடுப்பு வாங்குவேன். சில நேரம் வேலை செய்ய நான் மறுத்தால் கொடுமைப்படுத்துவார்கள். ஆடு மாடுகளுக்கு அடிப்பது போல் அடிப்பார்கள். நோய் வந்தாலும் மருந்து எடுத்தரவோ, ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவோ மாட்டார்கள். நோய், பசியாறாது அவர்களுக்கு நான் எப்போதும் நான் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். சம்பளம் கூட ஒழுங்காக தருவதில்லை. மொத்தத்தில் அவர்கள் மனிதர்களல்ல, காட்டுமிராண்டிகளுக்கு பணிவிடை செய்வதற்காகவே நான் இங்கு கற்பிழந்து கடல் கடந்து வந்திருக்கின்றேன். நான் படும் வேதனைகளை சொல்லி அழ எனக்கு யாருமில்லை. நம் நாட்டை சேர்ந்த மற்றவர்களை சந்திக்க கிடைப்பது எனக்கு மிக அபூர்வம். யாரையும் சந்திக்க முடியாது. என்னை ஒரு கைதியாகவே நடாத்தினார்கள். சில சிங்களப் பெண்களை சந்திக்க கிடைத்தது. எனது பிரச்சினைகளை சொல்ல எனக்கு சிங்களம் தெரியாது. என் நிலமையை புரிந்துகொள்ள அவர்களுக்கு தமிழ் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் பரிந்தது. அவர்களில் சிலரும் எனது கொடுமையை அனுபவிக்கிறார்கள். பணம் வேண்டும் என்றால் எல்லாம் அனுபவிக்கத்தான் வேண்டும் என்கிறார்கள்.
வாப்பா! இந்த கொடுமைகள் எல்லாம் எனக்கு பெரிதல்ல. இதுவெல்லாம் எனக்கு மிகவும் சாதாரணமாக போய்விட்டது. எனக்கு நடக்கும் இன்னொரு கொடுமையை நினைக்கும் போதுதான் நான் ஏன் இன்னும் உயிர் வாழ்கின்றேன் என்று எண்ணத் தோன்றும். எனது கிழவனின் மனைவியருடைய ஆண்பிள்ளைகளது இம்சைதான்; அது. வாப்பாவுக்கு அதையெல்லாம் எழுதுவதையிட்டு நான் கூச்சப்படுகின்றேன். இருந்தாலும் எனக்கு ஏற்பட்ட இந்த நிலமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என்பதற்காகவே நான் சொல்கின்றேன். என்னை அவர்கள் எனது அறையில் தூங்க விடுகிறார்களில்லை. ஆள்மாறி ஆள் வந்து கொடுமைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். நான் அதனை அவர்களது தாய் மாரிடத்தில் சொன்னாலும் இலேசாக கண்டிப்பதோடு விட்டுவிடுகின்றார்கள். அவர்கள் இல்லாத நேரமாக வந்து கொடுமைப்படுத்துகின்றார்கள்.
எனது வீட்டில் எமது நாட்டை சேர்ந்த, ஏன் எமது சமுகத்தை சேர்ந்த ஒரு ட்றவைர் இருக்கின்றான். அவனும் ஒரு ஈவிரக்கமற்றவன். அவனும் பெண் பித்தன் அவர்களது நடவடிக்கைகளுக்கு துணைபோகின்றான். எனது வீட்டுக்கிழவனின் கடைசி மனைவி ஒரு இளம் பெண். அதிக மகருக்கு அவளது தந்தை அவளை விற்றிருக்கின்றான். அவள் இந்த ட்றைவரைத்தான் வைத்திருக்கின்றான். கிழவன் இல்லாத நேரம் பார்த்து இருவரும் வேண்டிய இடமெல்லாம் போய் வருவார்கள். அவளை அவன் அனுபவிப்பதற்காக வேண்டி அறபியின் ஆண்பிள்ளைகள் என்னை கொடுமைப்படுத்துவதனை அவன் கண்டுகொள்வதில்லை. எனக்கு நிகழும் கொடுமைகளை அவனிடம் எடுத்து சொன்ன போது 'தொழில் என்று வந்தால் எல்லாம் வரும்தான் நாம் பார்த்து அஜஸ் பண்ணி நடக்க வேண்டும்” என்று சொன்னான். நான் குவைத்திற்கு வந்த பிறகு 11 இலங்கைப் பெண்களுடன் தனக்கு உறவு இருப்பதாக பெருமையாக சொல்கிறான். வெட்கம் கெட்டவன். அதன் பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது நம் நாட்டு பெண்கள் சிலர் அதனை இங்கு தொழிலாக செய்கிறார்கள் என்று. வீடுகளை விட்டு வெளியே பாய்ந்து றூம்களை வாடகைக்கு எடுத்து கொண்டு தொழில் செய்து வருகின்றார்கள். பலர் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த ஆண்களோடு குடும்பம் நடாத்தி பிள்ளையும் பெற்றிருக்கிறார்கள். தனது நிலை மட்டுமல்ல பல ட்றவைர்மார் இங்கு பணமும் பெண்ணுமாகத்தான் வாழ்கின்றார்கள் என்று கூறினான் அந்த கேடு கெட்டவன்.
வாப்பா! இப்போதுதான் எனக்கு புரிகின்றது நம் நாட்டிற்கு பிள்ளை வயிற்றோடு வந்த யுவதிகள் நிலையும், பத்துப் பன்னிரண்டு வருடமாகியும் இன்னும் வெளிநாடுகளில் வாழும் பெண்களின், இன்னும் ஒரு தகவலும் இல்லாமல் வாழும் பெண்களின் நிலையும் என்னவென்று இப்போது எனக்கு புரிகின்றது. வீடு கட்டவும் காசு பணம் சேர்க்கவும் என பலர் இங்கு வருகின்றார்கள். சிலரது வாழ்வு இப்படியான நிலைக்கு தள்ளப்படுகின்றது. வேறு சிலர் இத்தகைய சூழ்நிலைகளை வேண்டி, விரும்பி தேடி எடுத்துக்கொள்கின்றார்கள். இங்கு உல்லாசமாக வாழ்கின்றார்கள். நாட்டுக்கு மானம் மரியாதையுடயவர்கள் போன்று திரும்பி வருகின்றார்கள். இங்கு பாதிக்கப்பட்ட பலர் இருக்கின்றார்கள். இத்தகைய நிலைக்கு இழுத்து செல்லப்படுகின்றார்கள். இவர்களில் சிலர் எம்பசிக்கு தப்பியோடி தமக்கு நடந்தவற்றை விளக்கியிருக்கிறார்கள். சிலருக்கு நிவாரணம் கிடைத்திருக்கிறது. வேறு சிலர் எம்பசிகளில் தங்க வைக்கப்பட்டு வீடுகளில் நடந்ததை விட மிக மோசமான நிலையில் நடாத்தப்படுகின்றார்கள். சிலர் வேறு நாடுகளுக்கு விற்கப்படுகின்றார்கள் என்பதனை அறிந்த போது நான் திடுக்கிட்டுப் போனேன்.
நான் இவ்வாறு கூறுவதிலிருந்து இங்குள்ளவர்கள் எல்லோரும் அப்படித்தான், இங்கு வருபவர்களும் அப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இங்கு நாம் வாழ்க்கையில் காணாத மிக மிக நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். எனது வீட்டுக்காரனின் இரண்டாவது மனைவியின் சகோதரர் ஒரு 'முத்தவ்வா”. நல்ல பழக்கமும் நன்னடத்தையும் உடையவர். இவரது சகோதரி, அதான் இரன்டாவது மனைவி மிக நல்லவர். எனது பிரச்சினைகளையெல்லாம் அவரிடத்தில் சொல்லியதனால் எனக்கு அவரது மற்றொரு சகோதரர் வீட்டில் வேலை வாங்கி தந்துள்ளார். இப்போது எனக்கு பழைய பிரச்சினைகள் ஒன்றுமில்லை. நான் நல்ல நிலையில் இருக்கின்றேன். என்றாலும் நான் மோசமாய்ப் போய்விட்டேன் என்பது என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. இதற்கு யார் காரணம்? எனக்கு நீங்கள் கலியாணம் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தானே என்னை வெளிநாடு அனுப்ப முடிவெடுத்தீர்கள். மகள் உழைத்து அனுப்ப நான் நல்ல, அழகான வீடு கட்டியதும் நல்ல நல்ல மாப்பிள்ளைகளெல்லாம் வரும். அப்போது என் மகளுக்கு பொருத்தமான ஒரு மாப்பிள்ளையை எடுத்துக் கொடுத்தால் மகள் சந்தோசமாக வாழும் என்ற மனக்கோட்டைதானே உங்களை இந்த முடிவெடுக்க வைத்தது.
குழந்தை பருவத்திலிருந்து வயதாகும் வரை என்னை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்த உங்களுக்கு இறுதிக் கட்டத்தில் வந்த மோசமான உடல் நிலைதானே உங்களை இந்த முடிவுக்கு வர வைத்தது.
நீங்கள் சுகவீனமுற்று விட்டீர்கள் என்று தெரிந்தும், உங்களிடமும் காணி, பூமி, பணம், நகை,வீடு என சீதனம் கேட்டு உங்களை தர்ம சங்கடத்திற்குள்ளாக்கிய அந்த நம்மூர் மாப்பிள்ளை மார்தான் இந்த பாவத்துக்கெல்லாம் காரணம். எனது இந்த புழுங்கல் நிச்சயமாக அவர்களை சும்மா விட்டுவிடாது. அல்லாஹ் அவர்களை பார்த்துக் கொள்வான்.
அதேபோல, நாட்டிலிருந்து இங்கு வந்த சிலர் மானம், மரியாதையுடன் இருக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். எல்லாம் அவர்களுக்கு அமையும் சூழலைப் பொறுத்து வாப்பா! நான் உங்களுக்கு சொல்வதெல்லாம் நமது பிள்ளைகள் யாரையும் இங்கு அனுப்ப வேண்டாம். கஞ்சி குடித்தாலும், குச்சி வீட்டில் வாழ்ந்தாலும் மானம் மரியாதையோடு வாழ்வோம். அல்லது இங்கு வந்து கற்பிழந்து மானமிழந்து வாழ்வதைவிட செத்து மடிவோம்.
வாப்பா நிறைய விடயங்களை நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது மடல் கண்டு ஆனந்தத்துடன் பிரித்திருப்பீர்கள். இவ்வளவு சோகம் இருக்கும் என கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். எனக்காக நீங்கள் யாரும் அழவேண்டாம். நான் தேவையான அளவு அழுதுவிட்டேன். எல்லோருக்குமாக சேர்த்துக்கூட நான் அழுதுவிட்டேன். ஆனால் என்னைப் போல் யாரும் இதன் பிறகு அழக்கூடாது. நீங்கள் அழவவைக்கவும் கூடாது. நான் இத்துடன் எனது கண்ணீர் மடலை முடிக்கிறேன்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு உங்கள் அன்பு மகள்.