கடந்த றமழான் காலப்பகுதியில் வழமை போன்று எமது ஊர்களிலெல்லாம் சன்மார்க்க உபன்னியாசங்கள் களைகட்டியிருந்தன. சொற்பமானோர் வழமைக்கு மாறாக தமது நேரத்தினை மார்க்க விடயங்களில் செலவு செய்வதாக கூறிக்கொண்டு றமாழானின் புனிதத்தினையே கெடுத்துவிடுவது எமது ஊர்களில் இருக்கின்ற மார்க்கத்தினை முறையாக கற்றதாக கூறிக்கொள்கின்றவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு எனது பிறந்த இடமும் விதிவிலக்கல்ல. சன்மார்க்க ஒன்று கூடல் என்ற பெயரில் வெறும் வம்பளப்புக்களும், மறுபுறத்தில் தூய்மையான இஸ்லாத்தின் பிறப்பிடம் என பிதற்றிக்கொண்டு அதன் தூய்மையையே தோசமாக மாற்றிவிடவும் எனது ஊரில் பெரும்பான்மை போதகர்கள் இருக்கிறார்கள். வேடிக்கை என்னவெனில் சுடச்சுட பதில் கொடுக்கும் இவ்விரு தரப்பினரும் சில வேளை சில விடயங்களை கண்டும் காணாமலும் சூடாற விட்டுவிடுவார்கள். அதனை நியாயப்படுத்தவும் தயங்க மாட்டார்கள்.
இப்படித்தான் இவர்களது வார்த்தைகளில் பிரயோகித்த விடயமொன்றினையே கீழே குறிப்பிட்டுள்ளேன். இது பற்றி எதிர்த்தரப்பிலிருந்து எதுவித மறுப்புக்களும் வெளியாகவில்லை. வெறுமனே அத்துண்டுப்பிரசுரத்தின் எல்லா விடயங்களுக்கும் மறுப்பினை வழங்க தயங்காத அவர்கள், குறிப்பாக மிம்பர் மேடைகளையே இதற்காக பயன்படுத்த சிறிதும் தயங்காத இவர்கள் இதற்கான எந்தத் தெளிவினையும் மக்கள் முன் வைக்க இதுவரை தயாராகவில்லை. சில வேளை கடந்த கால சில சம்பவங்கள் அவர்களை இத்தகைய மௌனாஞ்சலிக்கு உட்படுத்தியிருக்கலாம் என்ற வாதத்தை நாம் மறுப்போமானால் இதுபற்றி அவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் குறிப்பிட்டாக வேண்டியிருக்கின்றது. அவர்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாமிய சன்மார்க்கத்தினை போதிக்கும் வண்ணமான அரை குறை அறிவே அவர்களிடம் உண்டு என்பதனையும், எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதனையும் அப்பட்டமாக தெளிவுபடுத்துகின்றது எனலாம்.
"தௌஹீது வாதிகள் என்போர் ஏன் தௌஹீது என்ற சொல்லின் தமிழ் வடிவமான அத்வைதம் என்ற சொல்லை இந்துக் கொள்கை என்றும் வழிகேடு என்றும் தம் அறியாமையினால் உளறித்திரிகிறார்கள்.... துவிதம் என்றால் இரட்டை என்பது பொருள் இதன் எதிர்ச் சொல்தான் அத்துவிதம், அத்வைதம் என்பது. இரண்டற்ற ஒன்று, எகம், ஒருமை எனும் கருத்துடையது. அத்வைதக் கொள்கை, கோட்பாடு என்றால் ஏகதெய்வக் கொள்கை, ஏகத்துவம், தௌஹீது இதுதான் உண்மை. இது தமிழ் வார்த்தையாக இருப்பதனால் இந்துக் கொள்கையாகிவிடுமா? இந்து மதத்திற்கும் அத்வைதத்திற்கும் என்ன தொடர்பு என்றால் இந்துக்களிலும் பல பிரிவினர் இருக்கின்றனர். இதில் பல தெய்வ உருவ வழிபாடுகளையும் சிலைகளையும் வணங்குவோரும் உண்டு. இறைவன் ஒருவனே அவனுக்கு உருவம் கிடையாது, அவன் அர்ரூபி, ஜோதி மயமானவன் என்று நம்பி இறை நாமங்களை உள்ளத்தால் உச்சரித்து வழிபடுகிறவர்களும் உண்டு. இந்த இரண்டாவது வகையினரின் கொள்கை தான் ஏக தெய்வக்கொள்கை." [கடந்த றமழானில் வெளியான 26.08.2009 அன்றய துண்டுப்பிரசுரத்திற்கான மறுப்பு பிரசுரம்]
இதேவேளை, மேலும் இக்கருத்தினை விளங்கிக் கொள்ள குறித்த கருத்திற்கு ஒப்பானதும், ஒன்றித்ததுமான கருத்தினை அப்துல்லாஹ் என்பவரின் நூலிலும் நாம் அவதானிக்க முடிகின்றது. இவரது கருத்துக்கள் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகள் எம்மத்தியில் காணப்படினும் இக்குறித்த கருத்து தொடர்பில் அவருடைய கருத்தினையும் நாம் கவனத்திற் கொள்வது மிகவும் பொருத்தமாய் அமையும் என நான் நம்புகின்றேன்.
"தௌஹீது என்ற அறபுச் சொல்லுக்கு நேர் பொருத்தமான தமிழ் சொற்கள் அத்வைதம், ஏகத்துவம் என்பவைதான். ஏகத்துவம் என்றால் ஏகமாய் உள்ளது (ஒரே) தத்துவம்தான் என்பதே கருத்தாகும்.(ஏக + தத்துவம் = ஏகத்துவம்) அத்வைதம், அத்துவிதம் என்றால் இரண்டல்ல ஏகம் என்பதே கருத்தாகும். அதாவது, துவிதம் என்றால் இரண்டு என்பது பொருள். ஆ,துவிதம் என்றால் இரண்டல்ல ஏகம் என்பதுதான். (அ + துவிதம் = அத்துவிதம், அல்லது அத்வைதம்) சரியான ஆய்வில்லாத ஒரு சில அறிஞர்கள் அத்வைதம் இந்துக்களின் கொள்கையென்றும் தௌஹீது என்பதே முஸ்லீம்களின் கொள்கையென்றும் பாமர மக்களை ஏய்க்கிறார்கள்.இது அவர்களின் அறியாமைகளாகும்." [M.S.M. அப்துல்லாஹ்,ஈமானின் உண்மையை நீ அறிவாயா, அகில இலங்கை தரீக்கத்துல் முப்லிஹீன், பக்கம் 237]
எனவே மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் உண்மையானதா, எதாவது உண்மை புலப்படும் வகையான தன்மை தோன்றுகின்றதா அல்லது முற்றிலும் தவறான, பிழையான கருத்தா என உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். உங்களது கருத்துக்கள் தமக்குள் இதுபற்றிய ஒரு பலமான கருத்தொன்றின் பகிர்வுக்கு வித்திடவேண்டும் என்பது எனது அவாவாகும். எனவே கருத்துக்களை விமர்சியுங்கள்.
0 comments:
Post a Comment