அல்- இஸ்லாஹ் 2008/09

தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வெளியீடு.

இலங்கை முஸ்லிம்கள் பற்றியும் அவர்களது இருப்பு பற்றியும் பல்வேறு அரக்கத்தனமான குரல்கள் ஓங்கியிருக்கும் இக்கால கட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் இவ்வாறான காலத்தின் தேவையினை உணர்ந்து அல்- இஸ்லாஹ் அதன் ஆய்வினை மையப்படுத்தியிருந்ததனை அவதானிக்க முடிகின்றது.

பொதுவாக, இக்காலகட்டம் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும் அவர்களது பூர்வீக வரலாற்றினைப் பற்றியும் வெளிக்கொணரக் கூடிய சாத்தியப்பாடான முயற்சிகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய ஆய்வில் களமிறங்கும் எமது ஆய்வாளர்களே வாய்விரிக்கும் காலமாகும். முஸ்லிம் மஜ்லிஸின் மூன்றாவது இதழான இவ்வெளியீடானது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம், வரலாறு, இருப்பு மற்றும் இவற்றின் தனித்தன்மை என்பனவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி கோர்ப்பொன்றினை செய்துள்ளது. காலங்காலமாக மிகவும் அரிதாகவே கவனத்திற் கொள்ளப்படுகின்ற எமது வரலாறு, அதன் பிறப்பிடம் என்பன பற்றிய விடயங்களுக்கு உண்மையில் விடை திட்டமாக இதுவரை எம்மால் காணமுடியாவிட்டாலும் கூட இத்தகைய ஆய்வுகள் தம் மத்தியில் ஓரளவேனும் எமது பூர்வீகம் பற்றிய அறிவினை பெற்றுத்தருதற்கு ஏதுவானவை என்பதனை மறுக்க முடியாது.

இக்கோர்ப்பில் மொத்தமாக துறைசார்ந்தவர்களதும், விரிவுரையாளர்களதுமாக ஆறு கட்டுரைகளும், மாணவர்களது பத்து கட்டுரைகளும் அதனுடன் இரு கவிதைகளும் உள்ளடங்குகின்றன. இவைகள் யாவும் இலங்கை முஸ்லிம்களின் வராற்றின் தொன்மையினை பல்வேறு கோணங்களில் பகுப்பாய்வு செய்துள்ளன. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் தொன்மையினை வெளிப்படுத்தும் ஆவணங்களை பத்திரப்படுத்தல் தொடர்பிலான கருத்தாடல், இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கொள்கையின் வரலாறு, எதிர்நோக்கப்பட்;ட சவால்கள், சோனக மக்களின் அறபுத்தமிழ் மொழி பற்றிய பரிணாமம், இலங்கை முஸ்லிம்களின் குடிசனப் பரம்பல் போன்றன அவசியம் வாசிப்பிற்குட்படுத்த வேண்டியனவாகும்.

என்றாலும், மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற ஆய்வுக்கட்டுரைகளானது அவர்கள் தேடலில் மிகவும் வலுவிழந்து காணப்படுவதனை உணர்த்துகின்றன. அதாவது, அவர்கள் தமது பல்கலைக்கழக நூலகத்தினைக் கூட முழுமையாக பயன்படுத்த தவறிவிட்டனர் எனத் தோன்றுகின்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் பழமைவாய்ந்த வரலாற்று ரீதியிலாக ஆவணப்படுத்தப்பட்ட சில ஆங்கில நூல்களையாவது தூசு தட்டியிருந்தால் இன்னும் தாம் தெரிவுசெய்த கருதுகோள்களுக்கு உகந்த தொன்மையின் சாயங்களை புதுவடிவில் பிறப்பித்திருக்க முடியும்.

எமது வரலாற்று மூலங்களைத் தேடுவதிலுள்ள பிரச்சினை யாதெனில் அவைகள் அறபு, பாரசீகம், இலத்தீன் மற்றும் ஆங்கில மொழிகளில் காணப்படுவதும் அதனை மொழி பெயர்ப்பு செய்வதுமே அன்றி மூலச்சான்றுகளோ அல்லது அதனை பாதுப்பதற்கான ஏற்பாடுகளோ அறவே இல்லை என்பதல்ல என்பதனை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும். எனவே மாணவர்களுக்கு இவை தொடர்பிவல் அதிக பொறுப்புக்கள் இருப்பதாக நான் கருதுகின்றேன். மேற்போந்த வழுக்களை எதிர்காலத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் கவனத்திற் கொள்ள வேண்டும். இருப்பினும், இலங்கை இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்பு, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று பாரம்பரியம் மற்றும் இஸ்லாமிய கட்டிடக் கலை பற்றியதான ஆய்வுகள் வரவேற்கத்தக்கன. அதிலும் குறிப்பாக 'பூர்வீக ஒத்தடம்' எனும் கவிதை மிகவும் இலாவகமா தொன்மை பற்றிய அரக்கத்தனமான குரல்களை நெரிக்க முற்பட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

“புரட்டிப்பார்
புராதனக் கதைகளையல்ல
உன் முன்னோர்களின் வரலாற்றை
அப்போது புரியும் உனக்கு
நானும் நீயும்
'மனிதன்' எனும்
யதார்த்தத்தை
மண்ணில் தூவியவர்கள் யார் என்று...”

நிதர்சனத்தில், இத்தகையதொரு வெளியீடானது பெரும் சிரமத்திற்கு மத்தியில் முஸ்லிம் மஜ்லிஸினால் ஈன்றெடுக்கப்பட்டிருக்கும்; ஒரு பிள்ளைக் குஞ்சு என்பதனால் மாணவர்கள் பெருமைப்பட்டாக வேண்டும். ஏனெனில் பல்கலைக்கழக மாணவர்கள் வெறுமனே கல்வி நடவடிக்கையில் மட்டுமல்லாது இவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்கொண்டு செல்லவேண்டியது அவர்களினது பொறுப்பாகும். அதிலும் குறிப்பாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இச்சுமை அதிகமாகவே உள்ளது. இதனை பல்கலைக்கழக மாணவர்கள் அதன் ஆரம்ப வரலாற்று கட்டங்களில் உணர்ந்தவர்களாக இருந்த போதும் கடந்த இடைப்பட்ட காலங்களில் முற்றாக மறந்திருந்தார்கள் என்றே நான் கருதுகின்றேன். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக எழுச்சி மீதான பங்கு என்பது வெறும் முஸ்லிம் தேசிய எழுச்சிப் போராட்டத்துடன் (2003.01.29) ஸ்தம்பித்துப் போயிருந்தது என்பதே உண்மை.

இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியம், பூர்வீகம் பற்றி ஒரு முழுதான கருத்தாடலினை முன்வைத்த தென்கிழக்கு பல்கலைக் கழகம் அதன் பிரக்ஞை பற்றிய கருத்தாடலில் இதனை சாத்தியப்படுத்துவதில் தன்காலில் நிற்க இன்னும் தயங்குவதனை அவதானிக்க முடிகின்றது. இன்னும் இவை பற்றிய ஆழமான சிந்தனையை சாத்தியப்படுத்த அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களையும் துணைக்கு அழைக்கின்றது. ஏனைய முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும் இத்தகைய சமுக தேவை நோக்கில் செய்றபடவேண்டும் என்பதனை மறுப்பதற்கில்லை. எனிலும், அதற்கான வாய்ப்பு வசதிகளை முழுமையாக பெற்றுக்கொடுக்க கூடிய சூழல் பல்கலைக்கழகம் ஒன்றிற்கே மிகவும் சாத்தியமான ஒன்று. அதுவும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக பொறுப்பு சொல்லவேண்டிய ஒரு கல்விநிறுவகமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் காணப்படுவதனால் இம்முயற்சிகளுக்கான முழு காரியங்களையும், வாய்ப்பு வசிதிகளையும் அது மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வினைத்திறனுடன் செயற்படவேண்டும்.

இறுதியாக, தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்றைய நிலையில் தனது சமூகம் தொடர்பில் பாடுபட்டு உழைப்பது போதாது. இன்னும் கடினமாக உழழைக்க வேண்டியிருப்பதுடன், அதன் மூலம் சமூக ஈடுபாட்டில் உயிரோட்டம் கொண்ட சில கல்வியியலாளர்களையாவது, மாணவர்களையாவது பிறப்பிக்க வேண்டும். அதன் கருத்தாடல்களும், தொடர்பாடல்களும் இன்னும்; அகல தமது சிறகுகளை விரித்துக் கொண்டு எல்லா இடங்களுக்குமாக பவனி வரவேண்டும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் இதனை எப்போது நிறைவேற்றும்?

0 comments:

Post a Comment

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger