ஹலால் யுத்தம். பலிக்கடா யார்?

செய்திகளை பரிமாறிக் கொள்வதில் முஸ்லிம்கள் நாம் இன்னும் நிறையவே பக்குவமடைய வேண்டியிருக்கிறது. காரணம், சில முஸ்லிம்கள் அதீத அக்கறை என்ற பெயரில் தேவையற்ற விடயங்களை பரப்பியதும், இன்னும் சொல்லப் போனால் தேவையற்ற விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததும்தான். நம்மில் பலபேர் நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு செய்த காரியங்கள் பல இதுகால வரைக்கும் தீமையில் சென்று முடிந்திருக்கின்றன என்பதுதான் யதார்த்தம்.

செய்திகள் எப்போதும் இலவசமாக கிடைக்கின்றது என்பதற்காக கண்மண் தெரியாமல் பரப்பினீர்களே, ஒருவேளை அவற்றுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றிருந்தால் இத்தனை தகவல்களை ஒன்றுக்கு பின் முரணாக மக்களுக்கு தெரிவித்திருப்பீர்களா என்று இந்த சில ஊடகங்களைப் பார்த்து கேட்க வேண்டும் போன்று எனக்கு தோன்றுகின்றது. இந்தச் சூழ்நிலையில் சமுதாயத்துக்குள் அச்சமூட்டுகிற, உணர்ச்சி ஊட்டுகிற செய்திகளை பரப்புகிற போது ஒரே ஒரு நிமிடம் இது தேவைதானா என சிந்தித்து செயல்பட்டால் நல்லது. ஒரு ரூபாயும் பெறுமதியற்ற இத்தகைய செய்திகளால் சமுதாயத்தை திசை திரும்பாமல் இருக்க அது உதவும்.

எமது முஸ்லிம் சமுதாயம் இன்று முச்சந்தியில் நின்று கொண்டிருக்கிறது. ஒரு சிறு காற்று வீசினாலும் அது கலக்கமடைகிறது. ஒருவரோ அல்லது ஒரு சமுதாயமோ நல்லவாராக வாழ்வது என்பது வேறு, நல்லது கெட்டது தெரியாத நல்ல சமுதாயமாக வாழ்வது என்பது வேறு.  இந்தவகையில்தான் இந்த ஹலால் யுத்தமும் நோக்கப்பட வேண்டியிருக்கிறது. வாசகர்கள்; இக்கட்டுரையினை தனது ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு எதிரான குற்றமாக நோக்கவே அதிக இடமுண்டு என்ற அச்சமும் எனக்குள் இல்லாமலில்லை.

கூறப்படுகின்ற விமர்சனத்தின் தன்மையினை வைத்து அதனை மூன்று வகையாக கருதலாம். உருப்படியான விமர்சனம், உருக்குலைக்கும் விமர்சனம் மற்றயது ஒப்பிட்டு உலைவைக்கும் விமர்சனம். கடைசி இரண்டிற்கும் எனக்கும் தொடர்பு கிடையாது. எம் முன் இடம்பெறுகின்ற சம்பவங்களை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்றிருந்தால் அவைகள் இடம்பெறுகின்ற இடம், காலம், குணாதிசயம், சூழ்நிலை தன்மை என்பன பற்றியும் முறையாக அறிந்து வைத்திருத்தல் வேண்டும். இந்த அடிப்டையிலேயே சென்ற கட்டுரையில் பொது பலசேனா பற்றிய சில விடயங்களை விளக்கியிருந்தேன். அது ஹலால் பிரச்சினையின் ஒருபக்கம் மாத்திரமே. எனவே, தற்போது மறு பக்கம் நான் திரும்ப வேண்டியிருக்கிறது. எனது நன்பர்களுள் பலர், தற்போது எமது சமுதாயம் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதனால், அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற உலமா சபையினை விமர்சிப்பதனையும், அது பற்றி குறை கூறுவதனையும் விட்டு விட்டு அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துளைப்பு வழங்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றனர். 

நானும் அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துளைப்பு வழங்கும் முகமாகத்தான் இந்தக் கட்டுரையினையும் எழுத வேண்டியிருக்கிறது.
இஸ்லாம் மார்க்கம் எளிமையானது, இலகுவானது என்பதனால் சிலர் அதனை நேரடிப் பொருளில் விளங்குவதே சிறந்தது எனவும், அதுவே வழியெனவும் தீர்மானித்துக் கொள்கின்றனர். இதனால் இஸ்லாத்தினை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சேர்ப்பதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் அவர்களுடைய இத்தகைய இஸ்லாமிய மார்க்க வழிகாட்டல் முறை அன்றுவரை மக்கள் மத்தியில் காணப்பட்ட பல்வேறு தொன்மை வாய்ந்த சமூக கூறுகளும், தனித்தன்மை வாய்ந்த கலை கலாசாரங்களும், பண்பாடுகளும் கூடவே சமுதயாத்தை விட்டும் விலகிச் செல்ல காரணமாகியது.

சுதந்திரப் போராட்டத்தின் போது சிங்கள பெரும்பான்மையுடன் சேர்ந்து நின்ற முஸ்லிம் தலைவர்கள் இக்காலப்பரிவில் மற்றய சமூகங்களை போல இஸ்லாமிய மறுமலர்சிக்கான போராட்டங்களையும் கூடவே மேற்கொண்டனர். மேற்கத்திய காலணித்துவ அபாயத்திலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ளும் வண்ணம் அவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு படித்தளங்களிலும் தங்களை தயார்படுத்திக் கொண்டனர்.  அறிஞர் சித்திலெப்பை அவர்கள் மேற்கத்திய நிலைகளினை உள்ளடக்கியவாறே இஸ்லாமிய கல்வி முறையினை முஸ்லிம்களின் பண்பாட்டிற்குள் கொண்டுவர பணியாற்றினார். இதேவேளை, இஸ்லாமிய சமய பண்பாட்டுக்குள் தன்னை உள் நுளைத்துக் கொண்டு புதிய நாகரீக யுகத்திற்கு ஏற்றவாறு இஸ்லாமிய கல்வியினை அன்றிருந்த முஸ்லிம்களின் பண்பாடுகளுக்கும் எதுவித சேதமும் ஏற்படாத வண்ணமாக மத்ரசா கல்வி முறை ஊடாக மாப்பிள்ளை லெப்பை ஆலிம் தோற்றுவித்தார்.

19ம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் இலங்கையின் மேற்குப் பகுதிக்கள் மட்டும் ஒடுங்கிக் கிடந்த இந்த மதரசா கல்வி முறைமை 1950களின் பின்பு கிழக்குப் பகுதியிலும் பரவ ஆரம்பித்தன. இவ்வாறாக தொழிற்பட்ட மதரசாக்களில் இருந்து வெளியான மாணவர்கள் வெறுமனே அல்குர்ஆன் அல் ஹதீஸ் முதலியவற்றுடன் மாத்திரம் அல்லாது பல்துறைகளிலும் கற்றவர்களாக அன்று வெளியேறினர். இதனால், இலங்கைக்குள் காணப்பட்ட பல்சமூக பண்பாடுகளையும் அனுசரித்து வாழ்கின்ற போக்கும் சிந்தனை நிலையும் அவர்களிடம் நிறையவே காணப்பட்டன. இதனால் அவர்களுடைய சமூக வழிநடாத்தலும், பங்களிப்பும் நாட்டின் பல்சமூக கட்டமைப்பின் அடித்தளத்தில் உறுதியாக காணப்பட்டதுடன் அவற்றுக்கு மேலும் உந்துதல் அளித்தது.

எனினும், 1950 களுக்கு பின்னர், சமூக பொருளாதார மற்றும் கல்வி என பல்வேறு நோக்கங்களுக்காக எமது முஸ்லிம்கள் குறிப்பாக இத்தகைய மதரசாக்களிலிருந்து வெளியானவர்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்லும் நிலை தோன்றியது. அப்போது மத்திய கிழக்கில் காணப்பட்ட அரசியல் காரணிகளும், அதனுடன் இசைந்த சிந்தனைப் போக்கும் இஸ்லாமிய தூய்மைவாத (வஹாபிய) பிரச்சாரத்தினை இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் உள் நுளைக்க வழிகோலியது. அப்போது, சில ஆலிம்களின் அர்பணிப்புக்களினதும், முயற்சியினதும் காரணமாக சமூகத்தில் செல்வாக்கு பெற்ற ஒரு அமைப்பாக உலமா சபை உருப்பெற்றது. அதற்கான காரியாலயத்தினை இரு தசாப்பதங்களுக்கு முன்னதாகவே கொழும்பில் அது அமைத்துக் கொண்டது. இவ்வாறு உருப்பெற்ற உலமா சபையானது அன்றைக்கு றியாழ் மௌலவி என்பவருடைய கைப்பகைளிலேயே இருந்து வந்தது என்பது வரலாற்று உண்மையாகும்.

இவ் உலமா சபையானது, அன்று மதரசாக்களில் படித்து வெளியாகின்ற மௌலவிமார்களினது மேலதிக கல்வி, தொழில் வாய்ப்பு என்பவற்றில் குறிப்பிட்டளவு கரிசனை செலுத்தி வந்தது. காலப் போக்கில், முஸ்லிம்; மக்களின் தொழுகை நேர சூசி, பெருநாட்கள், பிறை விவகாரம், ஒழுக்க விழுமியங்கள் முதலிய மார்க்க விடயங்களில் ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதிலும் மிகவும்  ஆர்வமாக தொழிற்பட்டது. ஆனால், உலமா சபைக்கு இலங்கையில் அப்போது காணப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் வர்த்தக ஆதிக்க சக்திகளும் கொடுத்த கஷ்டங்களையும் தொந்தரவுகளையும் விட மத்திய கிழக்கிலிருந்து சிந்தனைகளை மூட்டையில் கட்டிவந்த இஸ்லாமிய தூய்மைவாதிகளினால் நிறையவே தொந்தரவுவகள் இருந்தன.

இலங்கை நாடு பல் பண்பாடுகளையும், பல் மொழிகள், பல்வகை சமூகங்களை சுமந்திருக்கின்ற ஒரு தீவாக இருப்பினும் மிகவும் குறுகிய வட்டத்துள்ளேயே எப்போதும் சிந்திக்கின்ற இஸ்லாமிய தூய்மை வாதிகள் தமது இஸ்லாமிய பிரச்சார செயற்பாடுகளை ஒரு தலைப்பட்சமான போக்கிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக தொழிற்பட்டனர். இன்று பொதுபல சேனாவின் குறியும் அவர்கள்தான் என்றால் அது மிகையல்ல. இதில் துரதிஸ்ட நிகழ்வு யாதெனில், குறிவைக்கப்பட்டவர்கள் இன்று உலமா சபைக்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தெளிவாக கூறுவதானால், இன்று அவர்கள் இலவச வைத்திய முகாம்களையும், இரத்த தான முகாம்களையும், சமூக வேலைத்திட்டங்களையும் நாடு முழுவதும் எல்லா மக்களுக்கும் நடாத்துவதன் மூலம் செய்த பிழைகளை மூடி மறைக்கவும், சிங்கள மக்களின் நம்பிக்கையை பெற்றுவிடலாம் எனவும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இரண்டக நிலையினை விளங்கிக் கொள்வது மிக மிக அவசியமாகும்.

அப்படியென்றால், இன்று உலமா சபைக்கு இத்தகைய இஸ்லாமிய தூய்மைவாத முகமூடி அணிவிக்கப்பட்டிருப்பதன் காரணங்கள்தான் என்ன என்பதனை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய தூய்மைவாதம் என்பது வேறு, இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் இஸ்லாமிய சிந்தனை மரபு என்பது வேறு என்கின்ற விடயத்தினை வெளிப்படுத்துவதில் உலமா சபை தவறிழைத்திருக்கிறது. மேலும், இன மத பேதம் எதுவுமின்றி ஏக கருத்தில் எதிர்க்கப்பட்ட ரிசானா விவகாரத்தில் உலமா சபை காத்த மௌனம் அவர்களை எவ்வளவு பேராபத்தில் சிக்க வைத்திருக்கிறது என்பதனை இன்னும் இவர்கள் உணரவில்லை.

தொழுகையில் கை கட்டுதல், தொப்பி, குனூத், விரலாட்டுதல், தலாவீஹ் என எண்ணற்ற மார்கத்தின் அம்சங்கிளில் எல்லாம் பிரச்சினைகளை தூபமிட்டு இலங்கை முழுவதும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மத்தியில் நெருக்கடிகளை உருவாக்கிவிட்டு, பள்ளிவாயல்களையும் பிரித்து தனியான பள்ளிவாயல்களையும் உருவாக்கி கொண்டாடிவிட்டு, பொலிஸ் நிலையம் வரை சென்று, எமது முஸ்லிம் மக்களை கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்து இஸ்லாத்தினையும், அதன் மகாத்மியங்கள் நிறைந்த போதனைகளையும் கேவலப்படுத்தி மழுங்கடித்து துர்பாக்கிய சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு இன்று ஒழிந்து நின்று வேடிக்கை பார்க்கும் இந்த தூய்மைவாதிகளை மிகச் சரியாக இனங்கண்டு இந்த உலமா சபை எந்தவொரு செயலும் ஆற்றவும் இல்லை. அதற்கான தயார் நிலையிலும் அவர்கள் இல்லை.

குறிப்பாக கூறுவதானால், இன்று எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை நாம் எல்லோரும் தம்புள்ளை பள்ளியிலிருந்து ஆரம்பித்த ஒன்றாகவோ அல்லது அனுராதபுரத்தில் இடிக்கப்பட்ட சியாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகவோ ஆராயத் தொடங்குவது முற்றிலும் தவறான ஒரு கண்ணோட்டமாகும். மாறாக, இப்பிரச்சினைக்கான ஆய்வு உண்மையில் பேருவளை பள்ளி எரிப்பு நாளிலிருந்து ஆழ்ந்தும் அளந்தும் நோக்க வேண்டிய விடயம். 

இன்று உலமா சபையினர் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ இந்த தூய்மைவாத சிந்தனையின் நோக்கு முறைக்குள் சிக்குண்டு இருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில், ஹலால் ஹராம் என்பதுவும் இந்த வரலாற்று போக்கில் அறியாமல் நிகழ்ததுதான். கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாதெனில், இத்தகைய ஹராம் ஹலால் என்கின்ற விடயம் நீண்ட காலமாக எமக்கு தெரிந்தவரை எமது புலமைத்துவ வட்டத்துள் ஒரு சிக்கலுக்குரிய பேசுபொருளாக இருக்கவில்லை. ஒருவேளை, அப்படி இது இருந்திருந்தால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை நீண்ட கால நோக்கில் சிக்கல்கள் எழாதவாறு அமைக்கப்பட்டிருக்க சாத்தியங்கள் இருந்திருக்கும்.

பின்வந்த காலத்தில், சுமார் அரை நூற்றாண்டுகளாக உலக விவாகரங்களில் அற்பமாகவேனும் அக்கரையில்லாமல் இருந்த தப்லீக் இயக்கம், பள்ளிவாசலுக்குள் உலக விடயங்களை பேசுவதனால் நாற்பது நாள் தொழுகை பாழாய் போய்விடும் என்று கடைசிவரைக்கும் வாசித்த செயல்வாதிகளான தப்லீக் இயக்கம் ஒரு தசாப்பதத்திற்கு முன்னால் உலமா சபையை கைப்பற்றுவதனை யாராலும் தடுக்க முடியாது போயிற்று. வரலாற்றில் இதுவும் தூய்மைவாதிகள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக தப்லீக் இயக்கம் தன்னை தக்க வைத்துக் கொள்ள கண்டுகொண்ட பொறிமுறையாக இந்த உலமா சபை மாறியது எனக் கூற முடியும். இவ்வாறு அவர்கள் உலமா சபையினை கைப்பற்றிய காலவோட்டத்தில், அப்போதை வரைக்கும் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் இல்லாத இலங்கை முஸ்லிம்களின் சமூக அரசியல் பொருளாதார சவால்களுக்கு அவர்கள் முகம் கொடுக்க நேரிட்டது. இது கூட சில வேளை, தூய்மைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட உள் வேலையாக கூட இருக்கலாம் என்கின்ற சந்தேகமும் இல்லாமலில்லை. ஆனாலும், இத்தகைய முஸ்லிம் மக்கள் எதிர் நோக்குகின்ற சமூக வாழ்வியல் சவால்களுக்கு ஈடு கொடுக்கும் சக்தியும், சாணக்கியம் நிறைந்த தலமைத்துவமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை.

இத்தகைய சூழலில், இவ்வாறான சமுதாய பிரச்சினைகளுக்கு ஈடு கொடுக்கக் கூடிய திறமை வாய்ந்த ஒரு தலைவரே உலமா சபைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இலங்கை தீவின் சமூக பொரளாதார, பண்பாட்டு கூறுகளை நன்கு கற்றுத் தேர்ந்த கணிசமான உலமாக்களும் அறிஞர்களும் எமது சமூகத்தில் இருக்கின்றனர். எனிலும், அவர்களை ஒதுக்கி எறிந்து விட்டு எதற்கும் கையாலாகாத நபர்கள் ஆலிம்கள் என்ற பெயரில் வந்து அமரக் கூடிய ஆசனமாகவே உலமா சபை தற்போது திகழ்கின்றது. இத்தகைய தூய்மைவாத பிசாசும், அதனை ஒட்டியதாக வந்து பிடித்துக்கொண்ட பிணியுமே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சினைக்கு முழுமுதல் காரணம்.

எமது நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் அனுபவத்தில் அறிஞர்களையும், புலமையாளர்களையும் திட்டமிட்டு உருவாக்கிய சரித்திரம் ஒரு போதும் கிடையாது. அவர்களாக படித்து உருவாகிக் கொண்டால்தான் உண்டு. இன்னும் அவ்வாறு உருப்பெறுபவர்கள் கூட நாட்டில் எமது சமூகத்துக்குள் காணப்படுகின்ற மிகவும் இறுக்கமான இயக்க கட்டமைப்புக்களுக்குள் ஒட்டி உறவாட தயங்கி நாட்டுக்கு வெளியிலேயே வாழ் காலத்தை கடத்தவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இன்று எமது முஸ்லிம்களின் அரசியல் நிலைக்கும் உலமா சபையின் நிலைக்கும் இடையே பெரிதாக எதுவித வேறுபாடும் கிடையாது. கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை கருத்திற்கொண்டதாக பயணிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு அரசியல் இயக்க(ங்கள்)ம் எவ்வாறு பெருந் தேசியவாத நலன்களுடன் ஒட்டிக் கொண்டு மேல்வர்க்க வர்த்தக நபர்களுடன் கூத்தாடுகின்றதோ அதேபோன்றே உலமா சபையும். நாடு முழுவதும் பரந்து வாழ்கின்ற முஸ்லிம்களின் சிந்தனைகளையும், பண்பாடுகளையம் புரிந்து தெளிந்துகொண்டு பல் இனங்களுக்கு மத்தியில் சகவாழ்வையும், மனித நேயத்தினையும் அள்ளி வழங்க வேண்டிய, காலத்துக்கு ஏற்றதும் சமயோசிதமானதும், காத்திரமானதுமான மறுசீரமைப்புக்களை தமக்கு கீழ் காணப்படுகின்ற சமுதாய கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய உலமா சபை தொடர்ந்தும் மேற்குப் பகுதி ஆலிம்களினாலேயே ஆளப்பட்டு வருகின்றது என்பது இங்கு அழுத்தம் திருத்தமாக பதியப்பட வேண்டியது.

என்னதான் எங்களுக்குள் சண்டை சச்சரவுகளும், உயிர் பலிகளும் இருந்தாலும் கருவறுக்க முடியாத என்றைக்குமான உறவு என்று இருந்த தமிழ்-முஸ்லிம் உறiவை ஜெனீவாவுக்கு சென்று கருவறுத்தது இந்த உலமா சபைதான். இந்த அற்பமான செயற்பாட்டுக்கு பின்னணியில் இருக்கும் உலமா சபையின் சந்தர்பவாத நலனை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் கட்சி இவ்வாறான ஒரு முடிவினை எடுப்பதற்கும், சமயம் சார்ந்த சிவில் அமைப்பாக இருந்து கொண்டு, அதுவும் இலங்கையில் ஒரு சிறுபான்மை சமூகத்தினை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஒரு அமைப்பாக இருந்து கொண்டு ஒரு தரப்பிற்கு மாத்திரம் சார்பாக கூத்து போடுவதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கின்றன. உலக விடயங்களை விளங்கிக் கொள்வதில் உலமா சபை மிகவும் பிற்போக்காகவே இருக்கின்றது என்பதற்கு இதனைவிட தெளிவான சம்பவம் கிடையாது. 

இன்று உலமா சபை சமூகங்களுக்கு மத்தியில் உருப்பெற்று வரும் சமயவாதங்கள் பற்றி தெளிவான புரிதல்களை வழங்கும் வகையில், புரிதலுக்குரிய தளங்களையோ, கட்டமைப்புக்களையோ அதற்கான புலமையாளர்களை கொண்ட வட்டங்களையோ உருவாக்கயிருக்கவில்லை.
இன்று நாடுமுழுவதும் காணப்படுகின்ற மதரசாக்கள் ஏதோவொரு இயக்கத்தின் சிந்தனைகளை ஊட்டுவதாகவே காணப்படுகின்றன என்பதனை புரிந்து கொண்டு அவற்றினை சீரமைப்பதற்காக பொதுவான பாடமைப்பு திட்டங்களை உருவாக்க உலமா சபைக்கு எந்த எண்ணமும் இல்லை.

உலமா சபையின் நிருவாக கட்டமைப்பு வெளிப்படையானதும், அனைத்து உலமாக்களினதும் அப்பிலாசைகளை வெளிப்படுத்தும் வண்ணமானதாக அமையப்பபெற நடவடிக்கை எடுக்க இந்த உலமா சபைக்கு எந்த துணிச்சலும் இருக்கவில்லை.

தலைவர் உட்பட, நிருவாக கட்டமைப்பின் அம்சங்கள், அதன் உறுப்பினர்களின் தகமைகள், பதவிக் காலங்கள் குறித்து வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக நாட்டின் சகல பாகங்களையும் உள்ளடக்கியதாக தெரிவுகளை மேற்கொள்ளும் நடைறை ஒன்றினை அறிமுக்கப்படுத்த உலமா சபைக்கு விளக்கமில்லை.

உலமா சபை நாட்டில் காணப்படுகின்ற சிவில் அமைப்பு என்ற வகையில் பாராபட்சம் இன்றிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவும், கொண்டு நடாத்தப்படவும் முடியாமல் ஒரு குறிப்பிட்ட வர்கத்தினரின் விருப்பு வெறுப்புக்களுக்கு மாத்திரம் கட்டுண்டு கிடப்பதிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள அதற்கு துணிச்சலில்லை.

இத்தகைய உலமா சபை தற்போது பேசு பொருளாக காணபப்படுகின்ற ஹலால் என்ற விடயத்தைகூட உரிய முறையில் அணுகவும், விளங்கவும் விளக்கமளிக்கவும் தவறியிருக்கிறது என்பதே உண்மை. இந்த விடயத்தில் உலமா சபை ஒரு குறை மாதத்தில் பெற்றெடுத்த குழந்தை.

நாம் எல்லலோரும் முஸ்லிம்கள். அறிவினையும், அதனோடு இணைந்த சிந்தனை வளர்ச்சியினையும் இந்த உலகுக்கே கற்றுக் கொடுத்த பெருமைக்கும் பெயருக்கும் தனிச் சொந்தக்காரர்கள். எனவே, நாம் எல்லா மக்களையும், எல்லா நபர்களையும் மரியாதையாக நடாத்த தெரிந்திருக்க வேண்டும். மனிதர்கள் என்ற அடிப்படையில் நாம் ஒவ்வவொருவருடைய பெறுமதியினையும் மதிப்பினையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நான் ஒரு பொதுபல சேனாவாக இருந்திருந்தால் சில கேள்விகளை அவர்களிடத்தில் கேட்க முடியும். அத்தோடு அவர்கள் அத்தனையையும் அப்படியே நிறுத்தியிருப்பார்கள். ஹலால் தொடர்பாக தீர்மானிக்கின்ற அதிகாரத்தினையும், உரிமையையும் யார் இவர்களுக்கு வழங்கியது? என்ன அடிப்படையில் இவர்கள் இதற்கான நிதியினை திரட்டடினார்கள்? இவ்வாறு நிதி சேகரித்தது சட்டப் படியானதா? இவர்கள் நடாத்துவது ஒரு கம்பனியா? அப்படியானால் இவர்கள் கம்பனி சட்டத்தின் கீழ் பதியப்பட்டவர்களா? இப்படி எதுவித அதிகாரமும் உரிமையும் இன்றி அவ்வாறு ஹலால் சான்றிதழ் வழங்குவதும், நிதி பெறுவதும் நியாயமா?

எவ்வாறு அவர்கள் சட்டத்தின் அனுமதியின்றி நிதி பெறமுடியும்?  சமூக சேவை அமைப்புக்கள் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட ஒரு அமைப்பு வியாபார தன்மையிலான நடவடிக்கை ஒன்றுக்காக நிதி பெற முடியுமா? அவர்களால் வியாபார நடவடிக்கைதான் மேற்கொள்ள முடியுமா? உலமா சபை என்ன கம்பனியா? தற்போது அவர்கள் யார் என்பதுவே குழப்பத்துக்குரியது. ஆனால் அவர்கள் மௌனம் காக்கிறார்கள். அவர்கள் இந்த செயற்பாட்டினை கம்பனி சட்டத்தின் கீழ் பதியாதபோது அந்நடவடிக்கை முற்றிலும் சட்டத்திற்கு மாற்றமான குற்றச் செயல் என்பதில் சந்தேகமில்லை.

ஹலால் விடயம் முஸ்லிம்களுக்கு சமய நம்பிக்கை சார்ந்த விடயம். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அது சமய விடயமே அல்ல. அத்தோடு, பொருள் உற்பத்தி கம்பனிகளுக்கு அது ஒரு சாதாரண வியாபாரம். எனவே, இப்பிரச்சினையில் மூன்று பங்குதாராகள் இருக்கின்றனர். நாம் இந்த மூன்று பங்குதாரர்களையும் ஒருவருக்கொருவர் வெறுப்பினை ஏற்படுத்திக் கொள்ளாத வகையில் எவ்வாறு பரஸ்பரம் சுமுகமாக நடாத்துவது என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு கம்பனி 100 பால் பக்கட்டுக்களை தயாரிக்கிறது. அதன் உற்பத்தி செலவு ரூபா 100. இப்போது அவர்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றனர். இந்த சான்றிதழுக்கான செலவாக ரூபா 1000 பெறப்படுகிறது. இப்போது கம்பனி தனது உற்பத்தி செலவுடன் பொருள் ஒன்றுக்கு 10 ரூபாயை அதிகரித்து பொருளின் உற்பத்தி செலவினை ரூபா 110 ஆக அதிகரிக்கிறது. பின்னர், சந்தைக்கு பால் பக்கட் ரூபா 120 என்ற விற்பனை விலைக்கு வருகின்றது. முஸ்லிம்களும் அதனை வாங்குகிறார்கள், முஸ்லிம் அல்லாதவர்களும் அதனை வாங்குகிறார்கள். இது நியாயமா?

கேட்டால், ஹலால் பொருளுக்கு இவ்வாறு அதிகரிக்கப்படுகின்ற பெறுமதி ஒரு பொருளுக்கு சதக்கணக்கிலேயே அதிகரிக்கின்றது என்று ஒரு விளக்கம். ஒரு சதமாயினும் சரி, ஒரு கோடி ரூபாவாயினும் சரி அதனை ஏன் ஒரு முஸ்லிம் அல்லாத ஒருவர் இந்த ஹலாலுக்காக அளிக்க வேண்டும்? சாதாரணமாக, உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள புத்த விகாரையிலிருந்து ஒரு பழத்தட்டு வருகின்றது. அத்தட்டிலிருக்கின்ற பழத்தினை நீங்கள் உண்பீர்களா? நிச்சமாக இல்லை. அதே போன்று, உங்கள் சமய நம்பிக்கையில் உருவான ஒரு விடயத்திற்கு வேறு நம்பிக்கையில் இருப்பவர் பங்களிப்து நியாயமா? அதனை நீங்கள் செய்வீர்களா?  விகாரையில் இருந்து வருகின்ற பழத்தினை சாப்பிடாது நிராகரிக்க உங்களுக்கு சகல உரிமையும் இருக்கிறது என்றால், அது ஏன் அவர்களுக்கு இல்லை? தெளிவாக, நாம் ஹலாலை வாங்கும்படியாகவும், உண்ணும் படியாகவும் அவர்களை திணிக்கின்றோம் என்பதுதானே பொருள்.

தற்போது சந்தையில் விற்கப்படுகின்ற கோழிகள் ஹலாலானவை. ஹலாலான கோழி என்றால் என்ன? அல்லாஹ்வின் பெயரால் அறுக்கப்பட்டவை. அதனையே பௌத்த சிங்களவர்களும் உண்ண வேண்டும் என்றால் இதன் பொருள் என்ன? அது அவனுடைய அடிப்படை நம்பிக்கையினை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுப்பதாக தெரியவில்லையா.

ஒரு பல் இன சமூகத்தில் பள்ளிவாசலும், இந்துக் கோவிலும்;, புத்த விகாரையும் இருப்பது எவ்வளவு நியாயமானதோ, இயல்பானதோ அதேபோன்று ஹலாலும், ஹலால் அல்லாத பொருட்களும் சந்தையில் இருப்பது நியாயமானதும் இயல்பானதும் கூட. மாறாக அவ்வாறில்லாமல் முஸ்லிம்களுக்கான ஹலால் மட்டும் இருக்க வேண்டும் என்று கூறுவதுதான் நியாயமற்றதும், இயல்புக்கு மாற்றமானதுமாகும். பொதுப் புத்தியுடைய யாரும் இதனை நிராகரிக்க முடியாது. இதனால், ஹலால் என்பது முஸ்லிம்களின் தேவைக்கு மாத்திரமானதாக இருக்க வேண்டும். மாறாக ஹலால் என்பது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை திணிக்கின்ற கருவியாக அமைந்துவிடக் கூடாது. நாம் எமது மார்க்க நம்பிக்கையினை பின்பற்றுவது மற்றய சமூகத்தாருக்கு வெறுப்பினை ஊட்டாத வண்ணமாக இருக்க வேண்டும் என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் இஸ்லாம் போதிக்கின்ற மனிதநேயத்தினையும், சமாதானத்தினையும் எமமத்தியில் வளர்த்துக் கொள்ள முடியும்.

உண்மையில் நான் ஒரு மார்க்க உபன்னியாசியோ அல்லது மார்க்க அறிஞரோ அல்ல. ஆனால் நானும் இஸ்லாத்தினை நம்பி ஏற்றுக்கொண்ட, அதனை பின்பற்றி வாழத்துடிக்கின்ற ஆயிரக்கணக்கான நபர்களில் ஒருவன். நான் மற்றய மனிதனுக்கு மதிப்பளிக்க விரும்புகின்றேன். அவனுக்கும் என்னை போன்ற ஒரு பெறுமதி இருக்கின்றது. அன்புதான் இறைவனின் ஒளி (Love is the god's light) என்பதாக இமாம் றூமி (றஹ்) அவர்கள் கூறகிறார்கள்.

சனநாயக வழியில் சிந்திப்போமானால், எந்த ஒரு நிறுவனமும் தான் விரும்பியபடி தனக்கு தேவையான அத்தாட்சியனை தான் விரும்புபவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள பூரண சுதந்திரம் உண்டு. அவ்வாறு பெற்றுக்கொள்ள அவர்களுக்கு சதந்திரம் உண்டு. ஆதே போன்று அதனை வழங்குபவர்களுக்கும் சுதந்திரம் உண்டு. இவ்வாறு வழங்கப்படுகின்ற அத்தாட்சியானது ஒரு வியாபார நிறுவனத்திற்கு வழங்கப்படுவதாக இருந்தாலும், அவ் அத்தாட்சியானது நுகர்வோரின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே, அத்தாட்சியினை வழங்குபவர் அதன் நம்பகத் தன்மை குறித்தும், அதன் செலுபடி குறித்தும் உறுதிப்படுத்தும் பொறுப்புக்குரியவர். ஆவ்வாறான அத்தாட்சியனை வழங்கும் நபர் உண்மையில் அதற்கான உத்தியோகபூர்வ அமைப்பாக இருந்தால், சட்டப்படியாக அதற்கான அதிகாரத்தை கொண்ட அமைப்பாக இருந்தால் இலங்கை சட்டத்தின் கீழ் அதன் நடவடிக்கையில் தலையிடுகின்ற பொதுபல சேனா அல்லது கோத்தபாயவாக இருப்பினும் அவர்களுக்கு எதிராக சவால் விடுத்து, தன்னை கொச்சைப் படுத்தி அவதூறு பரப்பியதற்காக இழப்பீட்டினை பெற்றுக் கொள்ள முடியுமே!  

மேலும், ஹலால் அத்தாட்சி என்பது வியாபார தாபனங்களின் வேண்டுகோளின் காரணமாக உலமா சபை வழங்குகிறது எனில், அதனை பெறுவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க வேண்டியவர்கள் அந்நிறுவனங்களே. மாறாக யார் அதனை பெறவேண்டும் என்பதனை உலமா சபை தீர்மனிக்க முடியாது. எனவே, இந்த ஹலால் அத்தாட்சயை வழங்குகின்ற உலமா சபைதான் தற்போது சிறுபிள்ளைத் தனமாக ஹலால் என்ற இஸ்லாத்தின் அம்சத்தை இழிவுபடுத்தியும், இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியும் வருகின்றது. இதனால் உலமா சபையே கோத்தபாயவின் இசைக்கு நாட்டியம் ஆடுகின்றது என்பது தெட்டத் தெளிவு.

மறுபக்கத்தில், உலமா சபையின் உறுப்பினர்களுக்கும், அதன் ஹலால் பிரிவினருக்கும் ஹலால் என்கின்ற விடயம் ஒரு வாழ்வாதாரத்திற்கான ஊடகமாக அமைந்துள்ளமையால் அவர்களால் இப்போதைக்கு ஹலால் சான்றிதழை முஸ்லிம்களுக்கு மாத்திரம் உடையதாக அல்லது முஸ்லிம் நிறுவனங்களுக்கு மாத்திரம் உடையதாக மட்டுப்படுத்தும் துணிகர செயலை மேற்கொள்ள முடியாது தத்தளிக்கின்றனர்.

இத்தீர்மானத்தினை அவர்கள் மேற்கொண்டால், அரச ஆதரவுடன் ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுபடுகின்ற ஏனைய கம்பனிகள் ஹலால் அத்தாட்சிக்காக தானாகவே கீழ் இறங்கி வருவார்கள். இதனால், தற்போது நிலவுகின்ற ஹலால் பிரச்சினை பொது பல சேனாவுக்கும் முஸ்லிமல்லாத அரச ஆதரவு கொண்ட விவாயாபார கம்பனிகளுக்கும் இடையிலான பிரச்சினையாக மீள் கட்டுமானம் பெற்று இறுதியில் பெரும்பான்மை சமூகத்தினாலேயே பொதுபல சேனா ஓரங்கட்டப்பட சிறந்த சந்தர்ப்பமாக அது மாற இடமுண்டு.

வெளிப்படையாக, உலமா சபைக்கு சமூக பிரச்சினைகளை ஆய்ந்து தீர்த்து வைக்கின்ற ஆளுமையோ பக்குவமோ கிடையாது. அவர்கள் சகூக பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது, தீர்த்துக் கொள்வது என கற்றவர்களுமல்ல அனுபவசாலிகளம் அல்லர். எனவே அவர்கள் தற்போது ஊடகங்கள் முன்னதாக தோன்றுவதும், அறிக்கைகள் வெளியிடுவதும் மிகவம் தவறான நடவடிக்கையாகும் என்பதுடன் இத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதில் அனுபவமுடையவர்களையும், அதில் பலமை வாய்ந்தவர்களையும் தேடிக் கண்டுபிடிப்பது அவர்களின் பொறுப்பாகும்.

வருடம்தோறும் எமது மதரசாக்களிலிருந்து எதுவித தொழிலுக்கும் தகுதி அற்றவிதத்தில் சுமார் 4000 பேர் வரையில் ஆலிமாக வெளியேறும் நிலை தொடருமாயின் தற்போதைய நிலையை விடய எதிர்காலத்தில் அதிகமான சிக்கல்களை நாம் முஸ்லிம் சமுதாயம் நாட்டில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு சமூகத்தை அழிக்க நாடினால் தரமற்றவர்களை தலமையில் அமர்த்துவோம் என்பதன் உண்மை அர்த்தம் இதுதான். அதன் உதாரண வடிவாகத்தான் இன்று நாம் இருக்கின்றோம், இனியும் இருக்கப் போகிறோம் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

இலங்கையில் எந்த மதரசாவிலும் உலக நிகழ்வுகள் குறித்தும், உலக அரசியல் போக்குகள் குறித்தோ இஸ்லாமிய விழுமியங்களை அடிப்டையாக கொண்ட எவ்வித கல்வி முறையும் பின்பற்றப்படுவதில்லை. அதே போன்று, இலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் இந்த மதராக் கல்வி சற்றேனும் கவலைப்படுவதும் கிடையாது. இத்தகைய கோர நிலையில், அரசியல் பொருளாதார விடயங்களில் இவர்களுடைய தலமை என்பது எந்தளவுக்கு நம்பகரமானது, அறிவுபூர்வமானது என்பது எப்போதும் கேள்விக் குறியே!

இவ்வாறாக, நாம் எதிர்நோக்குகின்ற பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மதரசாக்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப எண்ணுகின்ற பெற்றோர்கள் அது எந்தளவு ஆரோக்கியமானது என ஒரு தடவைக்கு நூறு தடவைகள் சிந்திக்கட்டும்.

0 comments:

Post a Comment

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger