காவி வன்முறையின் காவலன் கோதா

பொது பல சேனாவினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட 'மெத் செவண' எனும் புத்த தலமைத்துவ பயிற்சி கல்லூரி திறப்பு விழாவின் தலமை அதிதியாக பாதுகாப்பு செயலர் கோதாபாய ராஜபபக்ச கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றுகையில் இந்த நிகழ்வில் கால சூழ்நிலையின் முக்கியத்துவம் கருதியே தான் பங்கு கொள்ள நேர்ந்ததாக குறிப்பிட்டார். அவருடைய கருத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள புத்த குருமார்கள் பற்றி எவரும் அச்சப்படவோ அல்லது சந்தேகப்படவோ தேவையில்லை.

வெளிப்படையாக பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்படும் கோதாவின் இத்தீர்மானமானது அளவிட முடியாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுவதும், அவர்களுடன் முட்டி மோதுவதும் பொதுபல சேனாவின் அடிப்படை சித்தாந்தம். நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களையும் கறுப்பு ஜுலை ஒன்றுக்கு முன்னோக்கி கொண்டு செல்வது அவர்களுடைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக தற்போது தெரியவருகின்றது. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பானவரும், பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரின் நடவடிக்கைகளை வழிநடாத்தும் அதிகாரம் வாய்ந்தவருமான பாதுகாப்பு செயலர் வன்முறை மூலம் பிரிவினையை தோற்றுவிக்க முழு மூச்சாக செயற்படுகின்ற ஒரு அமைப்புக்கு நற்சான்று பத்திரம் வழங்கியிருப்பது பற்றி நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைய முடியாது. இவ்வாறு கோதா தனக்கும் பொது பல சேனாவுக்கும் இடையிலிருக்கின்ற இணைபிரியா உறவை நாட்டு மக்களுக்கு வெளிக்காட்ட முன்னதாகவே பொதுபலசேனா கோதாவின் கட்டளையினை உரியவாறு நிறைவேற்றி வந்ததுடன் சட்டத்தினை மீறும் நடவடிக்கைகளில் மிகவும் தைரியத்துடன் ஈடுபட்டு வந்தது. கோதாவின் இத்தகைய வெளிப்பாட்டின் பின்னர் எந்தவொரு பொலிஸ் அல்லது படை அதிகாரியும் பொதுபல சேனாவையும் அதன் அடாவடித்தனங்களையும் கட்டுப்படுத்தும் முகமாகவோ அல்லது இவர்களினால் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்ற சாதாரண அப்பாவி பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலோ எந்தவொரு நடவடிக்கையையும் இதுகால வரையிலும் மேற்கொண்டதும் கிடையாது இனிவரும் காலங்களிலாவது அதனை மேற்கொள்ளப் போவதும் கிடையாது.

பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும், கூடவே சட்டத்தையும் தாங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு சுதந்திரமாக வலம் வருகின்ற பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் சமூகங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதாயும், ஒழுக்க விழுமியங்களுக்கு மாறானதுமாகவும் உள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான இவர்களின் சதிவலைகள்  தொடர்ந்து வீசப்பட்ட வண்ணமே உள்ளன என்பதனை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. கோதாவுடனான சந்திப்பில் ஹலால் இலட்சினையினை அகற்றுவது மட்டுமல்லாமல், ஏனைய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என பொதுபல சேனாவின் பேச்சாளர் கல்கொட அத்தே ஞனான்சற தேரோ குறிப்பிட்டார். மேலும், கோதாவுடனான சந்திப்பின் போது எங்களுக்கு இருந்த அனைத்து சந்தேகங்களும் தெளிவாக தீர்க்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். ஹலால் இலட்சினை பொறிக்கப்பட்ட பொருட்களை மொத்த விற்பனை சந்தையில் இருந்து முடிவடைவதற்கு சுமார் மூன்று வருடங்கள் எடுக்கும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஆனாலும் அவ்வளவு காலம் காhத்திருப்பது நடைமுறைச் சாத்தியம் ஆகாது. இதனால் பொலிசார் அதனை மொத்த விற்பனை சந்தையில் இருந்து அகற்றும் முகமாக கட்டளை இடப்பட்டுள்ளனர் என மேலும் தேரோ குறிப்பிட்டார். இதுவே கோதாவினால் பொலிஸ் மாஅதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை என்பதனை நாம் எல்லோரும் புரிந்து தெளிந்து கொள்ள வேண்டும்.

பொதுபல சேனா பொலிஸ் மற்றும் படையினரின் பின்னணி பலத்துடன் எத்தகைய நாசகார வேலைகளில் ஈடுபடும் என்பது சிந்திக்கப்பட வேண்டியது. இந்நிலை பொதுபல சேனாவுக்கு கோதாவின் ஆதரவும் அறிவுறுத்தல்களும் இருக்கும் வரை தொடரும். சந்தர்பம் கிடைக்கின்ற போது தம்முடன் வைத்துக் கொள்வதும் பின்னர் தூக்கி எறிந்து விடுவதும் ரஜபக்சாக்களின் வழிவந்த கலை. பொதுபல சேனா கூட ஒரு கால கட்டத்தில் அவ்வாறு நசுக்கப்பட்டு முக்கியம் அற்று போகும் நிலை தோன்றலாம். அந்த நல்ல நாள் வரும் வரையில், அதன் எல்லையற்றதும், ஈடு செய்ய முடியாததுமான பாதிப்பு நாட்டில் உள்ள அனைத்து பிரசைகளுக்கும் நிச்சயம் இருக்கும்.

பொதுபல சேனா கோதாவினால் ஆரம்பிக்கப்பட்டதாகவோ அல்லது அவ்வாறாக அல்லாமலோ இருக்கலாம். ஆனாலும், ஆரம்பிக்கப்பட்டு 10 மாத காலத்துள் இத்தகைய ஒரு எழுச்சி நிலையை ராஜபக்சவின் ஆசிர்வாதம் இன்றி எட்ட முடியமா என்ற சந்தேகம் வலுக்கிறது. இன்று இலங்கையில், அரசியலாக இருக்கட்டும் அல்லது வியாபாரமாக இருக்கட்டும் அல்லது ஏனைய எத்துறையாக இருப்பினும் அவை அபிவிருத்தி பெற வேண்டுமானால் ராஜபக்சவின் ஆதரவும், ஆசிர்வாதமும் இன்றி முடியாத காரியம். ராஜபக்சவிற்கு பொதுபல சேனாவினால் ஏதாவது காரியம் சாதிக்கப்பட வேண்டி இருக்கிறதா? ராஜபபக்ச சகோதரங்கள் தமக்கு ஆதாயம் உள்ள எந்தவொரு விடயத்தையும் நிறைவேற்றிக் கொள்ள ஒருபோதும் பின் நிற்கமாட்டார்கள். அது அதியுயர் அந்தஸ்தில், பதவியில் இருக்கின்ற புத்த குருமார்களாக இருந்தாலும் அவர்களை அடக்கி ஒடுக்கி தமக்கு இசைய வைப்பதில் இவர்கள் எப்போதும் திறமைசாலிகள்தான். இவர்கள் வரம்பு மீறிய நிலையில் பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை நாட்டுக்குள் அனுமதிப்பார்களானால்? அதில் சந்தேகமே கிடையாது. அறிந்தோ அறியாமலோ பொதுபல சேனா ராஜபக்சவின் நாடகத்திற்கு வெறுமனே ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றது.

சனாதிபதி ராஜபக்சவின் தலமைத்துவத்தின் கீழ், அவருடைய சகோதரங்களும், மகன்மாரும் அவர்களுடைய பெயரை நிலைநாட்டிக் கொள்ளும் வகையில் நாடு முழுவதுமாக பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை முன்கொண்டு வருகின்றனர். பசில் ராஜபக்ச அபிவிருத்தி நடவடிக்கையும் திவிநெகும சட்டம் மூலம் தனது பெயரை நாட்டுக்குள் பரப்ப முயலுகின்றார். நாமல் ராஜபக்ச தருண் ஹெட்டக் மற்றும் நில் பலக்காய முதலியனவற்றின் உடாக  தனது பெயரை நாட்டுக்குள் பரப்ப முயன்று வருகின்றார்.

கோதா இவர்கள் இருவரையம் விட அதிகாரம் கொண்ட ஒருவர். படையணியும், பொலிஸ் மற்றும் நகர அபிவிருத்தி என்பன இவருடைய கட்டுப்பாட்டின் கீழாகவே இயங்குகின்றன. யுத்தத்தின் பின்னர், சிவில் நடவடிக்கைகளில் இருந்த வெற்றிடங்களை தனக்கு சாதகமாக்கி கொண்டு அவற்றை இராணுவ மயப்படுத்தும் வேலைத் திட்டங்களை கோதா அமுல் நடாத்தினார். யுத்தத்தின் பின்னரான இலங்கையிலும் கோதாவுடைய அதிகாரம் மேலும் அதிகரித்திருக்கிறதே அன்றி இம்மியளவும் குறையவில்லை என்ற ஒரு நிலைப்பாடு இருந்து வந்தது. ஆனாலும், தற்போது மேலை நாட்டு கெடுபிடிகளினால் முன்பு போன்று அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதில் அதிக சிக்கல்களை எதிர்கொள்கின்ற கோதாவின் அதிகார செறிவு வடக்கு மற்றும் கிழக்கில் படிப்படியாக குறைய ஆரம்பித்திருக்கின்றது. இதனை ஈடுகட்ட என்னதான் செய்ய முடியும்? ஆம், முன்பு நீதியற்ற நடவடிக்கைகள் மற்றும் வெள்ளை வேன் என்பன இருந்தன. இதனால் எல்லோருமே இவருக்கு பயந்து நடக்க வேண்டியிருந்தது. வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களை அடக்கி நசுக்கி வந்த காலம் கடந்து செல்ல, புதிதாக றனவிரு என்ற திட்டத்தினை அமுல் செய்தார் அத்துடன் நகர அபிவிருத்தி என்ற பெயரில் பூங்காக்களையும், நடைபாதைகள் மற்றும் சாலைகளையும் செப்பனிட வேண்டிய நிலை இவருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், பொதுபல சேனாவினால் இவை அனைத்துக்கும் ஒரு முடிவு கட்ட முடியும். அத்தோடு, சிங்களவர்களுக்கு புதிய எதிரியினை இனம் காட்டுவதன் மூலம் கோதா மீண்டும் நாட்டின் பலம்பொருந்திய கதாநாயகனாக முடியுமா? பொதுபல சேனா ஒருபக்கத்தில் இஸ்லாத்தினால் அச்சுறுத்தல் இருப்பதாக மக்களுக்கு வெளிப்படுத்தி வருகின்றது. அதேவேளை, கோதா தனது படையினரை மீண்டும் தயார்படுத்தி வருதுவதுடன் வரம்பற்ற அதிகாரத்தினை உபயோகித்து அதன் மூலமாக அவருடைய சகோதரரின் நாட்டினை முற்றாக அனுபவிக்க வாய்ப்பு ஏற்படும்.

இன சமய அடையாளங்களின் அடிப்படையில் இலங்கையில் பல்வேறு அரசியல் அமைப்புக்கள்;  குறித்த இன மக்களின் ஏக பிரதிநிதிகள் நாங்களே என்று குரல் கொடுத்து வருகின்றன. தமிழ் மக்களின் சார்பாக விடுதலைப் புலிகள் அந்த கோரிக்கையினை முன்வைத்தனர். சிங்கள மக்கள் சார்பாக இத்தகைய கோரிக்கையினை ராஜபக்ச முன்வைத்தார். பொதுபல சேனா ஜாதிக ஹெல உறுமயவுக்கு ஒரு படி மேலால் சென்று சிங்கள பௌத்தத்தின் ஏக பிரதிநிதிகள் நாங்கள் என்று கூறி வருகின்றது. மறுபுறத்தில், இதுவரை காலமும் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி நாங்கள்தான் என்று உரத்துக் கத்திய ஒரு கூட்டம் இன்று மகுடியை தொலைத்துவிட்டு பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய இனவாத அரசியல் அமைப்புக்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற எதிரியை தேடிப்பிடித்து அழிக்கின்ற பணியானது இலகுவில் முடிவுறும் ஒன்றல்ல. யார் ஒரு குறித்த இனத்தினை அல்லது சமயத்தினை குறிவைத்து செயல்படுகின்றனரோ அல்லது அதன் இருப்பை நிராகரிக்கின்றாரோ அவர்களை சுற்றி அது சுழன்று கொண்டே இருக்கும். விடுதலைப் புலிகள் அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழ் மக்களை அவர்களுடைய எதிரிகளாகவே நோக்கினர். ராஜபக்ச தன்னை பின்பற்ற மறுக்கின்ற சிங்கள மக்கள் மீதும் தனது கோப நெருப்பை அள்ளி வீசாமலில்லை. பொதுபல சேனாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொதுபல சேனாவினால் உருவாக்கப்பட்ட ஹலால் பிரச்சினை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தனது இணக்கப்பாட்டுடனான தீர்வினை முன்வைத்த போது சிரேஷ்ட புத்த குருமார்களில் பலர் அதனை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். அவர்களுள் பெல்லன்வில விமலரத்ன தேரர் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர். பொதுபல சேனா நாட்டில் காணப்படுகின்ற ஒட்டுமொத்த புத்த குருமார்களின் குரல் அல்ல என தெளிவாக அவர் குறிப்பிட்டார். மேலும், எல்லா சமுதாயங்களிலும் அடிப்படை வாதிகளும், தீவிர போக்குடையவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என அவர் கூறினார். மேலும், புத்த குருமார்கள் இலங்கையில் வாழ்கின்ற சமூகங்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்க ஒருபோதும் விரும்பியது கிடையாது எனவும் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மகரகமையில் இடம்பெற்ற ஊர்வலத்தின் போது, பொதுபல சேனாவின் கொள்கைகளுடன் உடன்படாத புத்த குருமார்கள் அனைவரும் அதற்கு எதிரானவர்கள் எனக் கூறி தனது விமர்சனத்தை மிகவும் காரசாரமாக முன்வைத்தார் பொதுபல சேனாவின் முக்கிய நபரான கலகொட யத்தே ஞனான்சற தேரோ. அங்கு முஸ்லிம் உலமாக்கள் மீது கடும் வார்த்தைகளை பிரயோகித்த அவர் புத்த குருமார்களில் சமாதானத்தை விரும்புபவர்கள் மீதும் கடும் வாத்தைகளால் திட்டிதீர்த்தார். "இங்கு சாத்தானின் உருவில் சில புத்தமத குருக்கள் உள்ளனர். அவர்களின் தோள்களை சுற்றி போர்வைகள் உள்ளன. ஆனால் அவர்கள் தொப்பிக் காரர்களை பின்பற்றுகின்றனர். அவர்கள் தொப்பியுடன் உட்கார்ந்து கொண்டு இந்த நாட்டில் சிங்கள தேசியத்தை கட்டியெழுப்ப பாடுபடும் எமக்கு மிகவும் தொல்லை தந்து கொண்டிருக்கின்றனர்.... இத்தகைய கேடுகெட்ட சக்திகளுக்கு விகாரைகளில் இடம் கொடுக்காதீர்கள்" என அந்த ஊர்வலத்தின் போது பொதுபல சேனாவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அன்று வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தனி ஈழத்தினை சாத்தியமாக கருதக்கூடிய வகையில் அத்தனை அம்சங்களும் (de facto) இருந்தது. ஆனால் அவர் ஈழத்திற்கான சட்ட அங்கீகாரத்தை (de jure) பெற்றுக் கொள்ளவே இலங்கை அரசுடன் யுத்தத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. பிரபாகரனின் தீவிர போக்கானது மரணத்தின் பக்கம் அவரை அழைத்துச் சென்றது என்பது யதார்த்தம். பொதுபல சேனா ஹலால் பிரச்சினையில் அவர்களுக்கு கிடைத்துவிட்டதாக கருதிய வெற்றியுடன் மகிழ்ச்சி அடைந்து விடவில்லை. மாறாக, நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீதும் அவர்கள் பின்பற்றி வருகின்ற இஸ்லாமிய மார்கத்தின் மீதும் அளவற்ற அவமானத்தை உண்டாக்கி அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் குறியாக இருந்து வருகின்றனர். அவர்களின் தீவிர போக்கானது எதிர்காலத்தில் அவர்களின் அழிவிற்கு காரணியாக அமையும். மிகவும் பரிதாபகரமான அதன் வீழ்ச்சியானது கூடவே அதன் முன்னோடியாக காணப்படும் கோதாவையும் அவருடைய சகோதரங்களையும் அழித்துவிடுமா? ஆனால், அதன் விசமத்தனமான பிரச்சாரங்களும், நச்சுக் கருத்துக்களும் சமய அடிப்படையில் தமது வாழ்வியலை அமைத்துக் கொண்டு சமாதானமானக வாழ முயலுகின்ற ஒரு அப்பாவி சமூகத்தின் மத்தியில் அதன் ஏக பிரதிநிதிகள் என்று கூறுபவர்களுக்கு ஆறாத வடுக்களையும், அவமானத்தையும், நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்திவிடும் என்பது மட்டும் உறுதி.

0 comments:

Post a Comment

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger