வரலாற்றுக் குறிப்பு - I
இயற்கையில் வாழ்ந்த மனிதன் ஆற்றலுடையவன். அவனுடைய ஆற்றலுக்கு தகுந்தாற் போன்று அவனுடைய சூழலில் கிடைத்தவற்றையும் தனக்கு பயன்படுத்திக் கொண்டான். இந்நிலையில் அவனுடைய பாதுகாப்பினையும், தேவையினையும் நிறைவுசெய்து கொள்ளும் நிலை அவனுக்கு கை கூடிய போது தனக்கான இருப்பிடத்தையும் தனது எண்ணம் வகுத்தாற் போன்று அமைத்துக் கொண்டான். அவனுடைய தேவையின் அடிப்படையில் அமைந்த இம்மனைகள் கட்டடிடங்களாயின. இவ்வாறு பல்கிப் பெருகிய பல்வேறு வகையான கட்டடிடங்களில் ஒரு வகையே 'மடங்கள்' ஆகும்.
மடம் எனும் இடம் பொதுவாக துறவு வாழிடங்களாக கருதப்படுகின்றது. இருப்பினும், இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் 'மடங்கள்' பெருமளவிற்கு இவ்வாறு துறவு வாழிடங்களாக இருக்கவில்லை என்பது வரலாற்றில் முக்கியமானதொன்று. அக்காலத்தில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்களும், ஏழை எளியவர்களின் வயிற்றுப் பசி தீர்க்கும் தண்ணீர் பந்தல் மடங்களும், சமய பக்தர்களும், யாத்திரிகர்களும் தங்கிச் செல்லக்கூடிய சத்திரமாகவும், யாத்திரிகர் விடுதிகளாகவும் பல்வேறுபட்ட சமய தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டும் மடங்கள் பல்கிப் பெருகியிருந்தன.
நடைப் பயணமாககவோ, மாட்டு வண்டியிலோ பயணித்த போக்குவரத்து குன்றிய அக்காலத்தில் தத்தம் களைப்பை போக்கிக் கொள்ளவென, இளைப்பாறவென 'இளைப்பாற்றுமடம்', 'வழிப்போக்கர்மடம்' என்பனவும், ஒரே நேரத்தில் பலர் தங்கி இளைப்பாறத்தக்க வகையில் 'சத்திரம்' என்பனவும் அமைக்கப்பட்டு காணப்பட்டுள்ளன. இவை தெருவோரங்களில் மாத்திரமன்றி, வயற்கரை, கடற்கரை போன்ற இடங்களிலும் தொழில் புரிவோர் இளைப்பாறவென அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, இளைப்பாற்றுத் தேவை எங்கெங்கிருந்தனவோ அவ்விடங்ளில் எல்லாம் இவ்வாறான மடங்கள் உருவாக்கப்பட்டு பல்கிப் பெருகியிருந்தன.
வணிகர்களும், செல்வந்தர்களும் 'மடம்' நடாத்துவதற்கென தோப்புக்களையும், கட்டிடங்களையும் வழங்கிய போது அக்கட்டிடங்கள் மடங்களானதுடன், மடங்கள் கட்டிடங்களாலும் உருவாக்கப்பட்டன.
இத்தகைய மடங்கள் கி.பி. 10ம் நூற்றாண்டில் இலங்கை மீது சேழர்களினால் மேற்கொள்ளப்பட்ட படைnயெடுப்பு நடவடிக்கையின் மூலம் அழிவுற்றதாகவும் குறிப்புக்கள் உண்டு. பிற்காலத்தில், இலங்கையில் கிறித்துவ மதம் காலணித்துவ வாதிகளினால் பரப்பப்பட்டு வந்ததுடன் அதற்காக மடங்கள் ஆலயங்கள் அமைக்கப்பட்டது. மட்டுமல்லாது, ஒல்லாந்தர் ஆட்சியின் போது இவ்வாறான மடங்கள் ஆட்சி நிருவாகத்தின் கீழாக பதியப்பட்டிருந்தமையினால் அவை பற்றிய ஆதாரங்கள், குறிப்புக்கள் சிலவற்றை காணவும் முடிகின்றது. அவற்றுள் சங்கமார் மடமும் ஒன்றாகும்.
பண்டைய நிந்தவூரில் அமைந்திருந்த 'சங்கமார் மடம்' என்பது உலகப் பிரசித்தம் பெற்றதாயிருந்தது என்பதற்ககான ஆதாரங்கள் இன்றும் கிடைக்கின்றன. இம்மடம் ஊரின் எவ்விடத்தில் அமையப்பெற்றிருந்தது என்பது குறித்து ஆராய்கின்றபாது பல கருத்துக்கள் குறிப்புக்களில் காணப்படுகின்ற போதிலும் செய்மதிப்படத்தில் இங்கு காட்டப்பட்டுள்ள இடத்தில் அமையப் பெற்றிருந்ததாக உறுதிப்படுத்த எம்மால் முடிகின்றது. செய்மதிப்படத்தில் நிந்தவூரில் அமையப் பெற்றுள்ள ஒரு பகுதி குறிப்பாக 'அம்பலம்' (ambalam) எனக் குறித்து விளக்கப்படுகின்றது. அம்பலம் என்பது அக்கால மக்கள் தமது பிரயாணங்ளின் போது ஆங்காங்கே ஓய்வெடுத்துச் செல்வதற்கென அமைக்கப்பட்டிருந்த தங்குமிடமாகும்.
போக்குவரத்து, தொடர்பாடல், வைத்தியம் எனும் துறைகளில் முன்னேற்றமடையாத அக்காலத்தில் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில் நடைப் பயணமாகவோ, மாட்டு வண்டில் பூட்டியேதான் செல்ல வேண்டியிருந்தது. நடைப்பயணம் என்பது தமது பிரத்தியேக தேவையின் பொருட்டு மட்டுமன்றி ஆலையத்திற்கு செல்லும் யாத்திரையாகவும் விளங்கின. பிரசித்தி பெற்ற ஆலயங்கள் வேறு வேறு தூர இடங்களிலேயும் காணப்பட்டன. இவ்வாலயங்களின் திருவிழாக் காலத்திலோ, விரத நாட்களை முன்னிட்டோ அல்லது தாம் வைத்துக் கொண்ட நேர்த்தியின் பயனாகவோ அந்தந்த பிரதேசங்களிலிருந்தும், தூர இடங்களிலிருந்தும் பாதயாத்திரை செல்வது வழமை. இப்பாதயாத்திரையின் பொருட்டு யாத்திரை தலங்களை முன்னிட்டு பிரதான பாதைகளில் உள்ள ஆலயங்களை அண்டியும், தெருவோரங்களிலும் மடங்கள், சத்திரங்கள் தோன்றி இயங்கின. இச்சந்தர்ப்பங்களில் சங்கமார் மடமானது ஒரு இடத்தங்கலிற்ககான இடமாக அமைந்திருந்தது.
கதிர்காம யாத்திரையானது சமய வேறுபாடுகளுக்கு அப்பால் பௌத்தர்கள், கிறித்துவர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என யாவரும் தரிசிக்கும் ஒரு தலமாகும். அக்காலத்தில் யாழ்ப்பாணம் இருந்து கதிர்காமம் செல்லும் மக்கள் மாவிட்டபுரத்தில் தமது பாதயாத்திரையினை ஆரம்பித்து நல்லூர் வழியாக பொலிகண்டி கந்தவனக் கடவுளை தரிசித்து, தொhடந்தும் செல்வ சந்நிதியின் திருவிழாவை முடித்து, முல்லைத்தீவு சென்று அங்கு வற்றாப்பளை அம்மன் கோயில் விசாகப் பொங்கலை நிறைவு செய்து கொண்டு வரும் வழியில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரை வழிபட்டு சங்கமார் மடம் வந்து இளைப்பாறிவிட்டு அருகிலுள்ள வளத்தாப்புட்டி மீனாட்சியம்மாளினை தரிசித்து ஆசி பெற்றுக் கொண்டு கதிர்காமம் ஆடிவேல் விழாவிற்கு செல்வர்.
இலங்கையில் போர்த்துக்கீசர்களின் வருகையின் பின்னர் முஸ்லிம்களினதும், இந்துக்களினதும் சமய தலங்கள் அழிப்பும், காணிகள் சுவீகரிப்பும் அவர்களால் இடம்பெற்றன. இந்நிலையில் மக்களினால் பயன்படுத்தப்பட்டு வந்த மடங்களும் சேதமாக்கப்பட்டன. மறுபுறம், நாட்டில் ஏற்பட்டு வந்த பல்வேறு நவீன கோக்குவரத்து வசதிகள் காரணமாக இளைப்பாற்று மடங்களின் தேவை குறைந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் நாட்டில் நிலவிய உள்நாட் யுத்தம் காணரமாக இவ்யாத்திரை முறைகள் செயலற்றுப் போயின. சில மடங்கள் அழிவடைந்து விட்டன. அவ்வாறு அழிவுற்ற மடங்களில் நிந்தவூரில் காணப்பட்ட் புகழ்பெற்ற 'சங்கமார் மடமும்' ஒன்றாகும்.
இன்று 'சங்கமார் மடம்' அமைந்திருத்ததற்கான எந்தவொரு சான்றுகளையும் மடம் அமைந்திருந்த இடத்தில் காண முடியாவிட்டாலும், அவ்விடத்தில் இன்றும் உறுதியாய் நிற்கும் சில பாரிய நிழழல் தரும் மரங்களும், அவற்றை அனுபவித்த எமது முன்னோர்களின் அனுபவங்களுமே சான்றாய் எச்சமுள்ளன.
அவதானத்திற்கு!!!
2009ம் ஆண்டின் பின்னர் நாட்டில் நிலவுகின்ற சமாதான சூழல் காரணமாக மீண்டும் யாத்திரை முறைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கதிர்காம யாத்திரையில் ஈடுபடுகின்ற பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களை வழியில் எதிர் நோக்குவதாயும் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இச்சந்தர்பத்தில் மீண்டும் இத்தகைய 'சங்கமார் மடத்தின்' தேவை இன்றியமையாததாகும். இது குறித்து நிந்தவூர் உள்ளுராட்சி அதிகார சபையானது கருத்திற்கொள்வதன் மூலம் நிந்தவூரின் புகழை மீண்டும் நிலைநாட்ட முடியும்.
0 comments:
Post a Comment