உபத்திரவம் எது? உரிமையா? அபிவிருத்தியா?

வட மாகாண தேர்தல் சூடு பிடடித்திருக்கின்ற நிலையில் அரசியற் கட்சிகள் தமது கோசங்களையும், கோரிக்கைகளையும் மிகவும் காரசாரமாக வெளிக்கொணர்ந்து வருகின்றன. குறிப்பாக தமிழ் முஸ்லிம் தலமைகள்; தமது கருத்துக்களை எதிர்கால அரசியல் இருப்பு குறித்த ஒன்றாக கட்டமைத்து செயற்படுகின்றன. இருப்பினும் குறிப்பாக எமது முஸ்லிம் கட்சிகளிடையேயும் அமைச்சர்களிடையேயும் வழமை போன்று அபிப்பிராய பேதம் என்பது இல்லாமலில்லை. இதேவேளை, ஒரு புறம் நாட்டின் அபிவிருத்தி பணி விரைவுபடுத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை தற்போது தேர்தல் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்படுவது இருப்பில் இருக்கின்ற அரசாங்கத்திற்கு தேர்தல் முடிவுகள் சாதகமாய் அமைந்திடுமோ என்கின்ற ஐயம் சிறுபான்மை கட்சிகளுக்கு இல்லாமலில்லை.இருப்பினும் எமது முஸ்லிம் கட்சிகளும் அமைச்சர்களும் தமது நடவடிக்கைகளை ஓரு வழுவல் போக்குடையதாக கொண்டு செல்வது முஸ்லிம்களது அரசியலுக்கு திருப்திகரமானதாக அமையப்போவதில்லை. ஒருபுறம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள் தம்முடைய செல்வாக்கினை அரசாங்கத்தில் பெருக்கிக்கொள்ள வேண்டி உபாயங்களை தீட்டுகின்ற அதேவேளை, மறுபுறம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரல் ஓங்க வேண்டும் என்பதில் சிலர் முனைப்புடன் செயலாற்றுகின்றனர்.
சமூகம் ஒன்றின் இருப்பிற்கு அபிவிருத்தியென்பது இன்றியமையாத ஒன்று என்பதில் எவ்வித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. என்றாலும் இன்று எமது நாட்டில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் எவ்வளவு தூரம் மக்களின் நன்மதிப்பினை பெற்றதாகவும், அபிலாசைகளுக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் காணப்படுகின்றது என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியதாகும். சாதாரணமாக முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் மக்களது அன்றாட வாழ்க்கையினை சவாலிற்குட்படுத்தாதவாறு அனுமதிக்ப்படுவது அவசியம். எனினும் இன்றய நிலமை ஒரு பகட்டான பட்டுப்புடவை போன்றே மாயையூட்டுகின்றது.
வடக்கில் மேற்கொள்ளப்டுகின்ற திட்டங்கள் யாவும் மக்கள் மீதான ஒரு கண்துடைப்பு நிகழ்ச்சி நிரலாகவே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு எமது முஸ்லிம் அமைச்சர்களும் கைகளை வீசிக்கொண்டு பாப்பா பாட்டு பாடுவது சமூகத்தின் இருப்பிற்கு சாத்தியமற்ற சூழலை உருவாக்கும் ஒன்றாகும். அண்மையில் புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் முக்கியமான அமைச்சர் ஒருவர் தமது கருத்துக்களை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு மக்களின் ஆதரவினை வேண்டியும், மீள தமது சொந்த இடங்களில் குடியேறுகின்ற வாய்ப்பினை நழுவவிட்டுவிட வேண்டாதாம் என்ற அமைப்பில் பேசியிருந்தார். மேலும், தற்போதுள்ள அரசாங்கம் எமது சமூகத்தின் நிலமை சார்பாக வினைத்திறனுடன் செயற்படுகின்றது என்பது அவரது உரையின் சாரமாகும். இது ஒரு சமூக மாற்றத்தினை உண்டு பண்ணும் பேச்சாக என்னால் கருதமுடியாதிருக்கின்றது. இன்று அரசாங்க அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்hகளுள் கைகட்டி வாய் அடக்கியிருக்கின்றவர்கள்தான் மிகவும் திறமையும் நுட்பமும் உடையவர்கள் என்றிருந்தால் அங்கு எமது முஸ்லிம் அமைச்சர்களை தவிர வேறு எவரும் கிடையாது என பெருமையுடன் நாம் கூறிக்கொள்ளலாம்.
இன்று நிலமை என்ன? மீழ்குடியேற்றம் என்று கூறிக்கொண்டும், புனர்வாழ்வு என்று கூறிக்கொண்டும் மன்னார் மாவட்டத்தில் நிறைவேறியிருப்பது என்ன? ஒலுவில் கிராமம் எதிர்நோக்கும் சவால்கள் எவை? இவை வெறும் தேர்தலை மையப்படுத்திய அரசின் உபாய வீச்சு மட்டுமே. இவ்வாறான பெயர்தாங்கிய சுலோகங்களுடன் வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசின் நடவடிக்கை எத்தகைய நிகழ்ச்சி நிரல்களில் முன்னெடுக்கப்படுகின்றன என்பது எமக்கு தெளிவான உரு விடயமாகும்.மறுபுறம், சமூகத்தின் உரிமைக்குரல் நாங்கள், எங்களது குரல் வளைகளை நெரித்தாலும் எமது போராட்டம் என்பது நலிவடையாது என்று வாய் கிழிய பேசுபகின்றவர்கள் எவ்வாறான தீர்க்கத்தின் அடிப்படையிலும், தீர்க்க தரிசனத்துடனும் செயற்படுகின்றனர் என்பது இன்னும் மக்களுக்கு புரியாத ஒரு புதிராகவேயுள்ளது. சப்தம் எழுப்புவதும் பின்னர் மொனப்பிரதாபம் மேற்கொள்வதும், திட்டங்களை முன்வைப்பதும் பின்னர் அவற்றில் திடமில்லாமல் போவதும் இவர்களது தொடர் கதையாக மாறிவிட்டது. தேர்தலின் போது வான் ஓங்க குரல் கொடுப்பதும் தேர்தல் முடிந்ததும் ஒடிந்து விடுவதும் இவர்கள் தொடர்பில் காணப்படுகின்ற இம்மியளவு நம்பிக்கையை கூட அறுத்துவிடுகின்றன.
முஸ்லிம்களாக தங்களை காட்டிக்கொள்கின்ற இவ்விரு சாரரும் நேர்த்தியற்ற வகையில் செயல்படுவதனூடாக சமூகத்தை விற்றுப்பிழைக்கும் இயங்கியலைத்தான் கொண்டுள்ளனர் என்பதில் ஐயமில்லை. இன்னும் சிலர் தமது அரசியல் ஆட்டங்காணும் நிலையினை உணர்ந்து அடிக்கடி தலையை அரித்துக்கொள்ளும் நிலையும் இல்லாமலில்லை. முஸ்லிம் சமூகத்தின் தேவை தொடர்பில் சில சிங்கள தலைவர்களுக்கு இருக்கின்ற நேர்த்தியான கையாளல் கூட இவர்களுக்கு இல்லை என்பது வேதனையளிக்கின்றது. அண்மையில் டி. எம். ஜயவர்த்தனா அவர்கள் முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் கட்சி தேவையெனக் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், சமூகத்தின் தலைவர்கள் என செப்பித்திரிகின்ற இவர்கள் தனித்துவமான கட்சி ஒன்று முஸ்லிம்களுக்கு தேவையில்லை என்று கூறி பெரும்பான்மை கட்சிகளுக்கு கூப்பாடு போட எத்தணிக்கின்றனர்.
உண்மையில் அரசியற் கலை என்பது சகலதையும் சாத்தியமாக்குகின்ற பொறிமுறை கொண்ட ஒரு துறையாகும். அதனை நாம் கடந்த காலங்களில் சிலவேளைகளில் அனுபவித்திருந்ததனால், இன்று கூட அதன் அணுகூலங்களை அனுபவித்து வருகின்றோம் என்பதனை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். என்றாலும், இன்று இந்நிலமை மாறி முஸ்லிம் சமூகத்pன் அரசியல் சாக்கு நிரப்பும் கைங்கரியமாக மாறியுள்ளது. இதற்கு எந்த கட்சியோ குழுவோ விதிவிலக்கல்ல.வருகின்ற காலம் என்பது சிறுபான்மையினங்களினது உரிமைகள் பற்றிய ஒரு வினாவாகவே நிச்சயம் இருக்க முடியும். அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டதனால் சமாதானம் பிறந்து விட்டதாக கருதவியலாது. சூழ்நிலைதான் மாறியிருக்கிறதே அன்றி சம்பவங்களின் பின்னணியில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. வருகின்ற வட மக்களுக்கான தேர்தல் என்பது வரயிருக்கின்ற சனாதிபதி தேர்தலுக்கான முன்னாயத்த நடவடிக்கை மட்டுமே அன்றி மக்களது அபிலாசைகளுக்கு வழியமைக்கும் ஒன்றல்ல. எனவே நடக்க இருக்கும் தேர்தலில் மக்கள் காத்திரமாக செயற்பட முனைவதுடன் தமது வாக்குகளை தனித்தலைமையிலான தமிழ் பேசும் சட்சிகளுக்கே வழங்க முயல வேண்டும். கழுத்தட்டியை அடகு வைத்து விட்டு பல்லக்கு வாங்குவதனை விட, இருக்கின்ற கழுத்தட்டியை மாட்டிக்கொண்டு பாதை வழியே எடுப்பாக நடந்து செல்வது சாலச் சிறந்தது.

0 comments:

Post a Comment

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger