எல்லோரும் எல்லா நேரங்களிலும் மகழ்ச்சியாக இருப்பதில்லை. எந்த மனிதனும் எந்த பிரச்சினைகளின் போதும் மனதை தளரவிடாமல் மகிழ்ச்சிகாண் மனநிலையில் வைத்திருப்பானாகில் அதுவே அவனது வெற்றியின் இரகசியமாகும். உயர்வின் போது செருக்கு வந்து சேராமலும் தாழ்வின்போது தள்ளாமை வராமலும் காத்துக்கொள்வது இங்கு அவனுக்கு கைகொடுக்கும்.
எப்போதும் நல்லவற்றை விரும்புபவர்களுக்கு இருள் கூட வெளிச்சம்தான். கவலையை களிப்பாக்க முடியும். அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்ற முடியும். நம்பிக்கையில் இருந்து பிறந்ததுதானே அவநம்பிக்கை சற்று சிந்தியுங்கள். முன் விரக்தியே வாழ்க்கையின் வீணடிப்புக்கு காரணம். வாழ்வின் சூழ்நிலைகளை மகிழ்ச்கி காரணமாக மாற்றுதற்கு மனத்தை பயிற்றுவித்தல் அவசியம். உறக்கத்திலிருந்து உரிய நேரத்தில் எழுவதற்கு கூட முயற்சி ஒன்று அவசியம். தீர்மானம் செய்யும் ஆற்றல் தாம் ஒவ்வொருவரது கையிலும்தான் இருக்கிறது. பலரும் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கையில் சிலர் மட்டும் விழித்தெழுந்து தமது பிரயாணத்தில் வெகு தூரம் சென்றிருப்பார்கள். எதையும் செய்ய முன்னர் அதனை செய்து முடிக்க வேண்டுமென நம் மனது நினைக்க வேண்டும். மகிழ்ச்சி மனதிலிருந்தே உதிக்கின்றது.
பிறரை துன்புறுத்தி வாழ்பவர்கள் எமாற்று பேர்வழிகள் அதன் காரணமாகவே தமது மகிழ்ச்சியை இழக்கின்றார்கள் என்பதனை உணரமாட்டார்கள். அப்படி அவர்கள் உணரும் போது அவர்களது வாழ்வின் பெரும் பகுதியை இழந்திருப்பார்கள். அது சரி மகிழ்ச்சியான பழக்க வழக்கங்களை வளர்த்தெடுப்பது எப்படி? நாம் குறைந்தது ஒரு சில காலத்திற்கு ஒரு முறையாவது தம் வாழ்வில் என்ன நடந்தது என்பது பற்றி மீள்பார்வை செய்து பார்க்க வேண்டும். இங்கு மீள்பார்வை செய்யும் போது தம்மால் பிறருக்கு ஏதாவது தீங்கிழைத்திருக்கின்றோமா என்பதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பெரும்பாலும் எமது மனத்தின் இழுக்காறுகளே எமது மகிழ்சியான மனத்தினை நம்மிடம் இருந்து பறித்துக்கொள்கின்றது.
பொய், பொறாமை, வஞ்சகம், கோபம், இகழ்ச்சி, அகந்தை, ஆதங்கம், அநாகரீகம், மெத்தனம், சூழ்ச்சி, முறைகேடு, ஊழல், அதிகார வாஞ்சை, அதிகார துட்பிரயோகம் என்பன நமது பழக்க வழக்கங்களுள் புகுந்து கொள்ளுமாயின் அவை பிறர் வாழ்வில் துன்பங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி நமது உண்மையான மானிட வாழ்வை இல்லாததாக்கி விடுகின்றது. இதனால் அநேகமானோர் போலியான வாழ்க்கையைத்தான் வாழ்கின்றனர்.
கடந்த காலங்களை மீள்பார்வை செய்வதனால் அவற்றை சரி செய்ய முடியாது. ஆனால் இத்தகைய அனுபவங்களின் மீளாய்வினை எதிர்காலம் நோக்கிய மகிழ்ச்சியான அணுகுமுறைக்கு வழிகாட்டியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். கடந்தகால தவறுகளை எதிர்காலத்தில் விடக்கூடாதென மனதுக்கு அறிவுறுத்திக் கொள்ள வேண்டும். கசப்பான அனுபவங்கள் எமது எதிர்கால மகிழ்ச்சிப் பாதையின் படிக்கட்டுக்களாகவே அமைய வேண்டும். மனிதன் தன் குறைகளை தானே உணர்ந்து கொள்வானாயின் அவன் வாழ்வின் பாதியினை வெற்றி கொண்டுவிட்டான். தோய்வுபெற்ற கடந்தகால வாழ்க்கை முத்திரையிடப்பட்டு வாழ்வில் புதிய பதிய பிரகாசங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
சிலர் தமது வாழ்வில் குறுக்கிட்டு பல தொல்லைகளை எமக்கெதிராக கட்டமைத்திருக்கலாம். இதனால் பல தொல்லைகளை நாம் அனுபவித்திருப்போம். அதற்காக அவர்களை வெறுத்தொதுக்குவதாலோ, பழிக்குப் பழி வாங்குவதாலோ எந்த நன்மையும் விளையப் போவதில்லை. இவற்றை எண்ணி மனம் துன்பப்பட்டதுதான் எஞ்சும். பொறுத்தார் பூமியாள்வார் என்பது சான்றோர் வாக்கு. அதில் உண்மையில்லாமலில்லை. பொறுமையுடன் கூடிய சிந்தனைதான் மனித இனத்தின் மிகப் பெரிய வலிமை. ஏனெனில், எல்லோராலும் இப்படி இருந்துவிட முடியாது. இதனை அனுபவிப்பது கூட ஒரு சோதனையாகத்தான் இருக்கும். நீங்களும் அனுபவித்துப்பாருங்களேன்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசுவின் போதனையை கேட்டு சிலர் நகைக்கின்றனர். இதற்கு காரணம் அதன் உண்மை அர்த்தம் இவர்களின் அற்ப மனதுக்கு புரியாததுதான். மனிதன் உணர்ச்சியினால் நிறைந்தவன். இதனை கட்டுப்படுத்துவது மிகக் கடினமானது. பொறுமை காத்தல் இருளில் இருப்பவனுக்கு வெளிச்சம் கொண்டு வந்து சேர்க்கும். செல்லும் இடங்களில் செங்கம்பளம் விரிக்கும். சபைக்கு முதல்வனாக்கும். முகங்களில் புன்னகையை கொண்டு வந்து சேர்க்கும்.
0 comments:
Post a Comment