துயருறும் நிகழ்வுகளையும் சூழ்நிலைகளையும் அடிக்கடி நாம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகின்றது. இதனை சாதித்து வெற்றி பெறுவதன் மூலம் இவ்வாறான ஒரு வாழ்க்கையை அனுபவிப்பதனையே சிலர் விரும்புகின்றனர். இத்துயரங்களை நாம் ஆழ்ந்து சிந்திக்கும் போது அவை எமது செயலாக்கத்தின் வெறும் எதிர் விளைவுகளேயன்றி வேவறல்ல என்பதனை உணர்ந்து கொள்ளலாம். அவ்வாறெனில் சூழ்நிலைக்கேற்ப செயலாக்கத்துடன் சமாளிப்புக்களுடனும் சகிப்புத்தன்மைகளுடனும் நடந்து கொள்வோமானால் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிலையினை எய்த முடியும். அது எமக்கு வெற்றியாக கூட இருக்க முடியும்.
ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் நமது வீட்டு கடிகாரத்தினை நோக்குங்கள். அதனை நாம் வெறும் நேரத்தை கணிப்பதற்காகவே சுவரில் தூக்கி விட்டிருக்கிறோம். சற்று அதனை உன்னிப்பாக அவதானியுங்கள். அதன்மேல் தமது முழுக்கவனத்தையும் செலுத்துங்கள். அது இயங்கும் போது ஏற்படும் ஊசியின் சப்தத்தை உங்களால் கேட்க முடிகின்றதல்லவா? கடிகாரத்தின் ஊசி வழக்கம் போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அதன் சப்தத்தை சில வேளை எம்மால் கேட்கவும் இன்னும் சிலவேளை கேட்காமலும் இருக்க முடிகின்றது. இதற்கு காரணம் எமது மனமே அன்றி வேறெதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை.
வீதியில் ஒலி எழுப்பிக் கொண்டு செல்லும் வாகனங்களின் சப்தமோ அல்லது வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் தமது குழந்தைகளின் பெரும் கூச்சலோ தம்மை சிறிதும் பாதிக்காது உறங்கிக் கொண்டிருக்கும் அநேகமானோர் வீட்டினுள் நடப்பவரின் காலடிச் சப்தம் அல்லது அறையின் கதவு திறக்கப்படும் சப்தத்தினை கேட்டு விழித்துவிடுகின்றனர். நாம் பேருந்து ஒன்றிலோ அல்லது வேறு வாகனம் ஒன்றிலோ பிரயாணிக்கையில் பலத்த சப்தங்களுக்கு மத்தியில் உறங்கிக் கொண்டிருப்போம். திடீரென அருகிலிருந்தவர் அல்லது வாகன நடத்துணர் தம்மை எழுப்புவது கொண்டு நாம் விழித்துக் கொள்கின்றோம். ஊரத்த ஒலிகளையும் பேசும் சப்தங்களையும் சகித்துக்கொள்ளும் நாம் ஒரு மெல்லிய முணு முணுப்பிற்கு விழித்துக் கொள்கின்றோம். ஏப்படி?
இன்னும் சொல்கின்றேன் கேழுங்கள். நகரப் புறத்தில் இருக்கும் நாம் வழமையாக பிரயாணத்தில் ஈடுபடுகின்றோமல்லவா. இதன் போது தெருவோரங்களில் வசதியில்லாத பலர் கொட்டகைகளை அமைத்துக் கொண்டு சீவியம் நடத்துகின்றார்களே. வீதி வழியால் பாத சாரியாக செல்லும் நமக்கே சில வேளை அவ்வழியால் செல்லும் வாகனங்களின் இரைச்சலை சகித்துக் கொள்ள முடியாது போகின்றதல்லவா. அவர்கள் மட்டும் எப்படி நிறைவாக உறங்குகின்றனர்? எப்போதாவது நீங்கள் சிறிதாவது எண்ணிப் பார்த்ததுண்டா? எப்படி இவை சாத்தியம்?
உணர்ச்சி என்பது ஒளியை ஒத்தது. அணைந்த விளக்கு ஏற்றப்பட்டு ஒளி வீசும் போது பக்கத்திலுள்ளவையும் அவை மனதிற்கு உகந்தவையாயினும் அல்லவாயினும் கண்ணிற்கு புலப்படும். சுற்று சூழலில் எழுப்பப்படும் ஒலிகள் இயல்பாகவே செவ்வனே கேட்கும். ஆனால் சற்று சிந்தியுங்கள்...விளக்கின் ஒளி அணைந்த மாத்திரத்தில் வீதியில் எழும் ஒலி உரத்த வீச்சில் எழுந்தாலும் கூட காதில் விழுவதில்லை. யதார்த்தம் என்னவெனில் உறங்கிக் கொண்டிருக்கும் வேளை படுக்கையறையில் எழுந்த சப்தம் செவிக்கு எட்டியதற்கு காரணம் அவர்களுடைய புலணுணர்வுகளும் கவனமும் அதன்பால் ஈர்க்கப்பட்டதே. ஏனைய ஒலிகளைப் பற்றிய சிந்தனையை அவர்கள் அறவே ஒதுக்கி விட்டமையால் அவை அவர்களை பாதிக்கவில்லை. இருளில் எமக்கு பெரிய பெரிய பொருட்கள் எல்லாம் மறைந்து விடுவது போன்று வீதியில் எழும் உரத்த வீச்சிலான சப்தங்களும் மங்கிப்போகின்றன.
எனவே நாமும் எமது கவனத்தையும் புலணுணர்வுகளையும் வாழ்க்கையில் காணப்படும் எல்லா மனக் கவலைகளிலும் நலக்குறைவுகளிலும் இருந்து திருப்பி விட்டால் என்ன? பொதுவாக எல்லா மனக்கவலைகளும் வருந்துதல்களும் மனத்தினுள் ஊடுருவுவதில்லைளூ நாமாக உள்ளுணர்வுகளுடன் அனுமதிப்பன மட்டுமே ஊடுருவும். எனினும் எம்முள் பலர் தங்களை தாங்களே பலப்படுத்தி, உறுதிப்படுத்திக் கொண்டு வேதனைகளையும் குறைகளையும் களைய முன்வராதது ஏனோ? புரியவில்லை.
ஒத்த உடல்வாகு பெற்ற இருவர் சம இடையுடைய சுமையை சுமந்து செல்கின்றனர். இவர்களில் ஒருவர் தாம் சுமக்கும் பாரம் இரு மடங்கு எடையுடையது போன்று கனப்பதாக முறையிட்டு புலம்புகின்றார். மற்றவரோ தாம் எதையும் சமந்து செல்லாதது போன்று ஆடிப்பாடி சிரித்துக்கொண்டு செல்கின்றார்.
நோயால் வாடித் தளர்ந்து கிடக்கும் ஒருவர் தம் படுக்கையை நோக்கி பாம்பொன்று ஊர்ந்து வருவதனை அறிந்துகொண்டால் நல்ல உடல் பலமும் நலமும் வாய்ந்தவர் போல் செயற்படத் தொடங்குகின்றார்தானே. இதேபோன்று வேலையை முடித்து களைப்புடன் வீடுதிரும்பியதும் இளைப்பாற நாற்காலியை தேடும் ஒருவர் தனது முதலாளியோ அல்லது நெருங்கிய பால்ய நன்பனோ துர இடத்திலிருந்து தம்மை காண வீடு தேடி வருவதாக செய்தி கிடைத்தால் என்ன நிகழும்? தம்மை காண வரும் நண்பரை வரவேற்று உபசரிக்க அவர் வரமுன் குளித்து உடுத்தி ஆயத்தமாகி விடுவாரல்லவா? அல்லது அவர் வீட்டிற்கு வந்ததும் வராததுமாக பதவியுயர்வு கிடைத்திருக்கிற செய்தி அவருக்கு தெரிந்தால் உடனே அலுவலகத்திற்கு விரைந்தோடமாட்டாரா என்ன?
மனதினுள் புதைந்து கிடக்கும் ஆற்றலே ஒருவனது நல்வாழ்விற்கு மூலாதாரம். இது உண்மையெனில் நாம் அனைவரும் அத்தகைய ஆற்றல் கொண்டிருந்தும் அதனை உணராமல் இருக்கின்றோம் என்பதுதானே அர்த்தம். நீரிழிவு புற்று நோய் போன்ற நோய்களுக்கு ஆட்பட்டிருக்கும் சிலர் பிற்கால வாழ்க்கை பாழ்பட்டுவிட்டதாக வருந்தி தன்நம்பிக்கையை இழந்து விடுகின்றனர். இத்தகையவர்கள் உடல் நலத்தோடு இருந்த வேளை வாழ்க்கையின் ஒளி மயமான அம்சத்தினை சிந்திக்காமல் இருந்தது ஏன்? தற்போது பத்திய உணவினை கடைப்பிடித்து வரும் ஒருவர் சுகக்கேடு வரமுன் நல்ல உணவுகளை உட்கொளள் சிரத்தை எடுக்காதது ஏன்? நாம் ஒரு பொருளின் அருமையையும் பெருமையையும் அது தம்மை விட்டுப்போன பின்பே உணரத் தொடங்குகிறோமே அது ஏன்? முதுமையை கண்ட பின் இளமையை பற்றி சிந்திப்பதனால் எதைத்தான சாதிக்க இயலும்? மகிழ்ச்சி நம்மை விட்டு வெகு தூரம் சென்ற பின்பு அதனை தேடுவதும் உணரத் தொடங்குவதும் பயனளிக்குமா? அநேகமாக நாம் யாவரும் காலம் கடந்த பின் வருந்துவதேன்? தற்காலம் கழிந்து கடந்த காலமாகிட முன் அதனைப்பறி சிந்தித்தால் என்ன? இருட்டில் தொலைந்த ஒன்றை வெளிச்சத்தில் தேட முடியாதல்லவா.
0 comments:
Post a Comment