வெற்றி வேண்டுமா?

சிந்தனை செய், செயலில் இறங்கு, அதன் விளைவுகளை ஏற்றுக்கொள். அத்தகைய மனப்பக்குவத்தை அனைவரும் பெற்றிருப்பது அத்தியாவசியமானது. அதனால்தான் வள்ளுவர் “எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவது எண்பதிலிழுக்கு” என்றார். எடுத்த எடுப்பில் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எவரும் இல்லை. எதற்கும் ஒரு படிமுறையுண்டு. அவ்வாறெனில் வாழ்க்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாக சிந்தனை என்பன ஒருவரின் வெற்றிக்கு இன்றியமையாதனவாகின்றன. வாழ்வியலின் வெற்றிக்கான தடைகள் எமது சிறு பராயம் தொட்டே எம்மை பின்தொடர ஆரம்பித்து விடுகின்றன. என்றாலும் மற்றவரை விட எம்மிடம் இருக்கும் ஒரு மேலதிக திறமை எப்போதும் நம்மை சடுதியாக உயர இட்டுச் செல்லும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

முடியாது என்பதன் இயலாமை.

மனதில் ஏற்படும் தயக்கங்கள் எந்த ஒரு காரியத்ததையம்; செய்யவிடாது தடுத்துவிடும். ஒரு கலந்துரையாடலில் சென்று பங்கு பற்றும் ஒருவர் ஒரு கருத்ததை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார். பலரும் ஒவ்வெருவராக கருத்து தெரிவிப்பார்கள். இவரும் ஒவ்வொருவராக கருத்து தெரிவிக்கும் போது அடுத்து நாம் தெரிவிப்போம் என்று நினைத்து கொள்வார். இப்படி தனது வாய்ப்புக்களை ஒவ்வொன்றாக நழுவ விடுவர். அவரது தயக்கம் காரணமாக அவர் கூட்டம் முடியும் வரைக்கும் தனது கருத்தை தெரிவித்திருக்கமாட்டார். தயக்கமும், முடியாது என்ற சிந்தனையும் ஒரே வயிற்றுப் பிள்ளைகள்.

ஒரு விளையாட்டிலோ அல்லது செயலிலோ களமிறங்கும் ஒருவர் இரு நம்பிக்கைகளை தம்முள் மேற்கொள்ள முடியும். ஓன்று “நான் இந்த பந்தை பிடிக்காமல் விடமாட்டேன்” அல்லது இரண்டாவது “என்னால் அந்த பந்தை பிடிக்க முடியும்”. இவை இரண்டும் ஒரே கருத்துப்போன்று தோன்றினாலும், சிந்திக்கும் விதத்தில் வித்தியாசம் உண்டென்பதனை ஊன்றிக் கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். முதலாவதில் “பிடிக்காமல் விடமாட்டேன்” எனும் சிந்தனை தயக்கத்தையும், முடியுமா? என்ற நம்பிக்கையின்மையையும் காட்டுகின்றன. இரண்டாவது வாசகத்தில் “என்னால் முடியும்” என்ற நம்பிக்கை வெளிப்படுகின்றது. சில எண்ணங்கள், பலவீனங்கள் எமக்கு தெரியாமலேயே நம்மனதில் கூடுகட்டி குடியிருக்கின்றன. வேறுதிசை நோக்கி எம்மை இட்டுச் செல்லும் இப்படியான ஒரு விசயம் இருக்கின்றது என அறியாமலேயே நாம் இவற்றுக்கு அடிமைகளாக இருப்போம்.

வாழ்க்கைக்கு இலக்கு ஒன்றை வைப்பதும் அதனை நோக்கி நகர்வதும்.

எல்லா மனிதர்களும் ஒரு விடயத்தில் பொதுவானவர்கள். அதுதான் அவர்கள் எல்லோருமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஆனால் அதற்கான எந்த முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வது கிடையாது. இதனால் அவர்களின் பாடு பெரும் துன்பமாகத்தான் தொடர்கின்றது. ஆதலால், எல்லா மனிதர்களும் தாம் அடைய வேண்டிய இலக்கொன்றை அடையாளம் கண்டு அதனை நோக்கி தனது பயணத்தை தொடங்க வேண்டும் என்பதுடன் அதில் முன்னேற வேண்டும். அவ்வாறான இலக்கொன்றினை அடைவதன் மூலமே மகிழ்ச்சியான வாழ்வு ஒன்றை தமக்காக கட்டமைத்துக் கொள்ளலாம்.

இலக்கு ஒன்றை இனம் காணல்.

தெரிந்தோ தெரியாமலோ பலரது உள்மனதிலும் வாழ்வில் தாம் எதையாவது அடைய வேண்டும் என்ற உத்வேகம் ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கும். சிலருக்கு இதுதான் வாழ்வின் இலக்கு என்ற திட்டமிடல் இல்லாமலேயே அவ்விலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பார்கள்.

கனவுகள் காண்பது தவறல்ல. இவ்விதமான தீவிரமான கனவும், முயற்சியும் அவர்களுக்கு அபாரமான ஆத்ம சக்தியை வழங்குவதுடன் அற்ப ஆசைகளையும், சந்தோசங்களையும் தியாகம் செய்ய வைக்கின்றது. அதன் மூலம் வெற்றி என்ற இலக்கினை நோக்கி செல்ல முடிகின்றது. இவ்விதம் மிகுந்த ஆத்ம சக்தியுடனும், தன்னம்பிக்கையுடனும், தன்னை அறியாமலேயே தமது உள் மனதில் இலக்கொன்றை வைத்து செயற்படுபவர்கள் தாம் ஒரு இலக்கை வைத்து அதனை அடைய செயற்படுகின்றோம் என்பதனை அறியாமலேயே வெற்றியை நோக்கி செல்பவர்களாக இருப்பார்கள்.

ஆனால், இவ்வாறில்லாமல் நாம் அனைவரும் அறிவு பூர்வமாக இவ்வித இலக்கொன்றை தேர்ந்தெடுத்து அதனை கடும் முயற்சியினால் அடைவதன் மூலம் வாழ்வில் வெற்றி பெற முடியும். முதலில் இவ்வித இலக்கொன்றை இனம் காணல் வேண்டும். ஒவ்வவொருவர்க்குமான இலக்கு அவரவர் வாழ்வில் பொதிந்திருக்கும். சிறு பராயத்து அனுபவங்களில், அபிலாசைகளில், அவரவர்க்கான திறமைகளில், சிந்தனைகளில் பொதிந்திருக்கும். பொருத்தமான இலக்கு எது என்பதனை அவரவர்தான் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வாழ்வில் மிக முக்கியமாக என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதனை உங்கள் மனதிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்.

இலக்கு ஒன்றை இனம் காணல்.

ஊங்கள் இலக்குகளை சரியாக நிர்ணயித்துக்கொள்ள பின்வரும் அம்சங்களை கருத்திலெடுத்துக் கொள்ள வேண்டும்.

தெளிவானதாகவும் உறுதியானதாகவும் அமைதல் வேண்டும்.
அளவீடு செய்யக் கூடியதாக (measurable) இருத்தல் வேண்டும்.
அடையக்கூடியதாக (achievable) இருத்தல் வேண்டும்.
யதார்தத்மானதாக (realistic) பிரயோகிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
காலத்திற்குகந்ததாக (timely) இருக்க வேண்டும்.

அதற்காக பல கேள்விகளை நீங்களே எழுப்பி விடை காண வேண்டியிருக்கும். நீங்கள் தவறான இலக்கொன்றை வைத்து உங்கள் காலத்தினை வீணடித்துவிடாதிருக்க இது உதவும். வாழ்வில் வெற்றி பெறுதற்கான இலக்கு நோக்கி பிரயாணிக்கும் போது நமக்குள் உயர் நோக்கங்கள் இருக்க வேண்டும். அதன் பலா பலன்களுக்காக தமது உயர் நோக்கங்களை கைவிட்டு விடலாகாது. சுயநலன் மாத்திரமே தமது இலக்காக இருத்தல் கூடாது. குறுக்கு வழிகளில் உயர்ந்த இலக்குகளை அடைய முடியாது. குந்தகம், வஞ்சனை, சூழ்ச்சிகள், செய்து நமது இலக்கை அடைந்துவிட அணுவளவும் நினைக்கக் கூடாது. அதே சமயம் எமது சிந்தனைகள் சமூக அக்றையுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதனை மறந்துவிட கூடாது. இத்தகைய இலக்கினை நோக்கிய பயணத்தில் இடர்கள் என்பது சாதரணமாக வந்து சேர்ந்துவிடும். அவற்றை எதிர்கொண்டு வெற்றி கொள்ள எம்மிடத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும். பல பிரச்சினைகளிலும் இருந்து விடுபட அவை தொடர்பில் கேள்விகள் கேட்டு விடைகாண தமக்குள்ளையே பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும். சில வேளை பல கேள்விகளுக்கு எம்மிடத்தில் பதில் இல்லாமல் காணப்படலாம்;. இதன்பொருட்டு தளர்ந்து போய்விடக் கூடாது. நாம் கேள்வி கேட்டு விடை கண்டு எமது இலக்குகள் தொடர்பில் மாற்றங்கள் உண்டு பண்ணுவோமாயின் நாம் உரிய திசையில் பயணிக்கின்றோம் என கருதலாம்.

நமது இலக்கை கூர்மைப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள்.

நமது இலக்கு நோக்கம் என்பவற்றை அடிக்கடி கூறி வெளிப்படுத்தி மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
நமது இலக்கு நோக்கம் ஆகியவற்றை அடிக்கடி பொருத்திக்கொள்ள அல்லது சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
நமது இலக்கு நோக்கம் ஆகியவற்றை விசேட வார்த்தைகளால் எழுதி தொங்க விடுவதுடன் மந்திரம் போல் உச்சரியுங்கள்.
சிறுவயது முதல் மனதில் ஊதிக் கிடக்கும் அபிலாசைகளையே இலக்காகவும், நோக்கங்களாகவும் கொள்ளுங்கள்.
எந்த அளவுக்கு இலக்கு நோக்கி முன்னேறியிருக்கின்றீர்கள் என்பதனை அடிக்கடி மதிப்பீடு செய்து பாருங்கள்.

நம்முடைய நோக்கமும், வாழ்க்கையின் வெற்றி இலக்கும் கூட எமது வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்ததாக அமைதல் அவசியம். இலக்கு நோக்கிய பயணமும், நமது வாழ்வும் எப்போதும் சமாந்தரமாக செல்ல வேண்டும். நமது அவசியத்தேவைகள், நமது ஆசைகள், பிரார்த்தனைகள், எதிர்பார்ப்புக்கள், நமது கனவு, ஆர்வம் எல்லாமே ஒன்றை நோக்கியதாகவே இருக்க வேண்டும். அவ்விதம் அமையும் வேளைதான் நமது வெற்றியடைதலின் சாத்தியப்பாடு மிக அதிகமானதாக இருக்கும். நிச்சயமாக வெற்றி என்பது கசப்பான பல அனுபவங்களின் முடிவாகத்தான் இருக்கும். அப்போதுதான் நாம் அவ்வெற்றியின் மூலமாக அளவிலா ஆனந்தமும், களிப்பும் பெற முடிகின்றது. சாதாரணமாக ஒரு வெற்றி கிடைத்தால், அதனால் பெறுகின்ற ஆனந்தம் வெற்றியின் சுவையினையே இல்லாததாக மாற்றிவிடுகின்றதல்லவா?

வரலாறுகளை புரட்டிப் பாருங்கள். தட்டி அடக்கப்படுபவர்கள் எப்போதும் முட்டி மோதி எழுந்திருப்பார்கள். கட்டிப்போடப்படுபவன் கட்டவிழ்த்துச் செல்ல துடிப்பான். அளவு கடந்த வெள்ளம் மதகை உடைத்துக்கொண்டு பாய்ந்தோடும். தடைகள் தகர்க்கப்படுதற்காகவே போடப்படுகின்றன. முட்டுக்கட்டைகள் முறித்து எறியப்படல் வேண்டும். கதவுகள் திறப்பதற்காகவே மூடப்படுகின்றன. கடுமையாக முயற்சிப்பவனால் மாத்திரமே வாழ்க்கையின் பொற்கதவுகளை திறந்துகொண்டு பொக்கிசங்களை அடைய முடியும்.

0 comments:

Post a Comment

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger