எப்போதும் சோகத்தில் மூழ்கியிருப்பவர்கள் (Perpetual worriers)

சிலர் எப்போதும் தமது கவலைகளை நினைத்து, நினைத்து சோகத்தில் ஆழ்ந்து வெறித்து வெறித்து வெற்றாக இருப்பார்கள். தமக்கு மட்டும்தான் அத்தனை துன்பங்கள் வருகின்றன என்றும் ஏனைய அனைவரும் இன்ப வெள்ளத்தில் தத்தளிக்கின்றார்கள் என்றும் தாமாகவே நினைத்து உருகுவார்கள். வாழ்வில் இன்ப துன்பங்கள் தாமாக மாறி மாறி வருவது இயல்பு என்பதை அவர்கள் ஏற்க மறுப்பார்கள்.

அவர்கள்தாம் தம் பிறப்பிலேயே தம் தோள் மீது சிலுவை சுமத்தப்பட்டுவிட்டதாக எண்ணுபவர்கள். அவர்கள் துன்பியலின் சிற்பங்கள். துன்பம் என்பது தமக்காக எழுதப்பட்ட விதி எனக்கருதி அதனுள்ளேயே சீவனம் நடாத்துவார்கள். அவர்களால் மகிழ்ச்சி என்ற மறுபக்கத்ததை பார்க்கவோ, புரட்டவோ முடியாது.

இத்தகையவர்களுக்கு வெளிச்சமான உலகத்தில் இடமில்லை. ஏனையவர்கள் அவர்களை ஒதுக்கி, ஓரங்கட்டி விடுவார்கள். இவர்களிடம் திறமை இருந்தும் அதனால் ஒன்றும் நிகழப் போவதில்லை. இவர்கள் பிரசித்தியடைய மாட்டார்கள். துக்கம் ஊஞ்சலாடும் மூஞ்சி எனும் பெயர்தான் மிஞ்சும். கடந்த காலத்தினையே நிகழ்காலமாக நினைத்து துன்பித்திருப்பார்கள். அநேகமான வேளைகளில் பிரச்சினையே அல்லாத விடயங்களை பிரச்சினையாக்கி தலை மீது கவிழ்த்துக்கொண்டு கவிழ்ந்து போவார்கள்.

கடந்த காலம் என்பது ஒரு கதையின் முடிந்து விட்ட அத்தியாயம். எதிர்பாராத திருப்பங்களை அதில் காண முடியாது. நாம் புரட்டிப் பார்க்கப்போகும் பக்கங்களில்தான் புதிய கதை தொடரப் போகின்றது. வாழ்க்கை முழுவதும் சந்தோசங்கள் நிறைந்ததுதான். அவ்வப்போது வரும் துன்பங்கள்தான் மகிழ்ச்சிகளை மிகைப்படுத்துகின்றன. எல்லா பிரச்சினைகளுக்கும் எமக்குள்ளேயே தீர்வுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை கண்டுகொள்ளாமல் அடம் பிடிப்பதால் நாம் வாழ்க்கையின் பல உன்னதங்களை இழந்து போய் விடுகின்றோம். இப்படி வெற்று சிந்தனைகளினால் வேடிக்கையாக வாழ்ந்து மனம் வாடி, உழன்று, பிறரை நோகச் செய்து பின் மடிந்து போய்விடும் மனிதர்களில் ஒருவராக நாம் இருந்து விட வேண்டுமா?

நடந்து முடிந்த சோகங்கள் நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வருவது புத்திசாலித்தனமன்று. சிலதை மறக்கவும், மன்னித்து விடவும் மனதை பழக்கிக் கொள்வதே மகிழ்ச்சியின் மற்றுமொரு திறவுகோல்.

'ஆகையால் மன்னித்துவிடு, மறந்து விடு, மகிழ்ச்சி கொள்' என்பதனை மனதிலிருத்து.

0 comments:

Post a Comment

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger