யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
குறித்த றமழான் மாதம் கை நீட்டும் மாதமல்ல' என்ற கட்டுரையினை எழுதியிருந்த டாக்டர் மரீனா தாஹா அவர்களுக்கு எனது நன்றியினை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றேன். ஏனெனில், குறித்த கட்டுரையானது மிகவும் பரந்த கருத்தொன்றிற்கு அச்சாணியாக திகழ்வதுடன், இன்று கல்வியியற் சூழலில் எமது முஸ்லிம் மாணவ சகோதர சகோதரிகள் எதிர்கொள்கின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் எதிர்காலத்தில் கருத்தாடல் புரிதற்கு குறித்த கட்டுரை மிகவும் உருதுணையாக அமைந்துள்ளது என்பது எனது நம்பிக்கையாகும்.
குறித்த கட்டுரையில் வெளியாகியுள்ள சில கருத்துக்கள் எமது மாணவ சகோதர சகோதரிகள் எதிர்காலத்தில் உணர்ந்து செயற்படவேண்டிய தேவையினை சுட்டிக்காட்டுவதாக இருப்பினும் கூட டாக்டர் மரீனா தாகா ரிபாய் அவர்கள் தாம் கூறிய கருத்துக்ள் தொடர்பில் சரியான ஒரு தீர்வினை முன்வைக்க தவறியிருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது. இதனை நாம் அவரது முழுக் கட்டுரையிலும் இருந்து உணர முடிகின்றது. சமூக பணியில் குறிப்பாக பெண்கள் உரிமை தொடர்பான அதிக நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஒருவர், சமூக மாற்றத்தில் அதிக நம்பிக்கை வைத்துள்ள ஒருவர் தாம் கட்டியெழுப்பிய ஆழமான கருத்துக்களுக்கான தீர்வினை மிகவும் நழுவல் போக்குடனும் அசமந்தமாகவும் எம்மீது சுமத்திச் சென்றிருக்கின்றார். ஆதாரமற்ற வகையில் தொண்டைக்குழிக்கும் நுணி நாக்கிற்கும் முடிச்சுப் போட முனைந்திருப்பது மாணவர்களாகிய எமக்கு மிகவும் வேதனையளிக்கின்றது. இதனால் இங்கு மிகவும் நுணுக்கமாக குறித்த கட்டுரையினை ஆய்வு செய்ய முனைகின்றேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லை. மாறாக கருத்துக்கன் பண்படவேண்டும் என்பதே எமது அவா.
'நபியே! நீர் விவேகத்தைக் கொண்டும், மற்றும் அழகான நல்லுபதேசத்தை கொண்டும் உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ, அதனைக் கொண்டு அவர்களுடன் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன், அவனது வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன்; இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன்.'(அந்நஹ்ல் - 125)
பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியில் கல்வியினை முன்கொண்டு செல்கின்ற எம்மை இன்று சமுதாயத்தில் வலம் வருகின்ற மறைமுகமான பிச்சைக்காரர்களாக எடுத்தாண்டிருப்பது எமது எதிர்கால செயற்பாட்டிற்கு எவ்வளவு வேகமான செயலூக்கத்தினை வழங்கும் என்பது எனது ஐயமாகும். காரணம் ஒரு கட்டுரையாளர் மாணவ சமூகத்தினையும் அதன் செயற்பாடுகளையும் குறித்து பேசுகையில் அங்கு காணப்படுகின்ற பல்வேறு சமூக கட்டமைப்பிலிருந்தும் வருகை தந்துள்ள மாணவர்களின் உளவியல் போக்கை மனதில் நிறுத்தியவண்ணம் தனது கருத்தாடலினை முன்வைக்க முனைந்திருக்க வேண்டும். இங்கு இத்தகைய அம்சம் எதுவும் கையாளப்படாது வெறுமனே மாணவர்கள் அனைவரையும் அவர்கள் வசதியற்றவர்களாக இருப்பினும் சரி, வசதி வாய்ந்தவர்களாக இருப்பினும் பிச்சைக்காரத்தமானவர்களாக வர்ணித்திருப்பது எம்மை உருவாக்கிய சமுதாயம் எம்மை ஏறி மிதிப்பதற்கு சமமாகும்.
கட்டுரையில் இருவகையான பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதாவது, ஸகாதுக்கு உரித்தல்லாதவர்க்கு ஸகாத் போய் சேருவது மற்றும் இரண்டாவதாக, கொடுத்தவர் தனது முழு ஸகாதினையும் அதனைப் பெற தகுதியானவர்களுக்கு கொடுக்காத குற்றத்திற்கு ஆளாகின்றார் என்பதாகும். எனவே, குறித்த ஸகாதானது அதற்கு தகுதியுடைய அனைத்து பிரிவினர்க்கும் போய்ச் சேர வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமோ, மாற்றுக் கருத்தோ கிடையாது. அதனால்தான் ஸகாத் என்பது கூட்டாக சேமிக்கப்பட்டு கூட்டாக பங்கிடப்படல் வேண்டும் என்பதனை இஸ்லாம் மிகவும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வருகின்றது.
இருப்பினும், ஸகாத் நிதியிலிருந்து மாணவர்களாகிய எமக்கு எதுவித உரிமையும் கிடையாது என சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் வேடிக்கையாகவுள்ளது. அவதானிக்க வேண்டிய விடயம் யாதெனில், ஸகாத் பெறத் தகுதியற்றோர்க்கான சம்பவங்களை உறுதிப்படுத்த ஹதிஸினை எடுத்தியம்பியுள்ள போதிலும் ஸகாத் பெற தகுதியானவர்களை சிறிதேனும் ஞபகப்படுத்தியிருக்கவில்லை. இவ்வாறு மேற்கொண்டிருந்தால் வழுக்களை போக்கியிருக்கலாம். மேலும், கட்டுரையின் இறுதிப் பந்தியில் 'இவர்களுக்கு விரயமாகும் ஸகாத், ஸதகா போன்றவை அவர்களைவிட சிரமப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு போய்ச் சேர முடியும்' எனக் குறிப்பிட்டிருப்பது ஸகாத், ஸதகா என்பன பற்றிய முழுமையான புரிதல் இன்றி கட்டுரை எழுதப்பட்டிருப்பதனை தெளிவாக உணர்த்துகின்றது.
அல்லாஹ் தனது திருமறையில் ஸகாத் பெறத் தகுதியானவர்கள் பற்றி பின்வருமாறு தெளிவாக குறிப்பிடுகின்றான்.
'தர்மங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதனை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தினை தழுவியோருக்கும், அடிமைகளை விடுதலை செய்பவர்களுக்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் உள்ளோர்(செலவளிப்போர்)க்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கின்றான்.' [அத்தௌபா(09) – 60]
'ஜிஹாத்' என்பது 'ஜஹதா' எனும் அடிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் கடும் பாடுபடுவது, பிரயத்தனம் புரிவது, புகழப்படக் கூடிய உழைப்பு, பணி எனப் பொருள்படும். இஸ்லாமிய வழக்கில் ஜிஹாத் என்பது ஒருவர் தமது மன விருப்பு வெறுப்புக்களுக்கெதிராக போராட்டம் நிகழ்த்துவதனை குறிக்கின்றது. அத்தோடு, இஸ்லாமிய சொல் வழக்கில் ஜிஹாத் என்பது சமூகத்தினை விருத்தியடைய செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கை முறைகளை குறித்து நிற்கின்றது. அவை சிலவேளை தனது சுய பாதுகாப்பு தொடர்பான ஒரு போராட்டமாக அல்லது கொடுங்கோண்மைக்கு எதிரான ஒரு போராட்டமாகவும் காணப்படலாம். மாறாக, ஜிஹாத் என்பது இறைவனது திருப்பொருத்தத்தினை நாடி 'புனிதப்போர் பரிதல்' (ஹர்புன் முகத்தஸ்ஸாஹ்); என விளங்கிக் கொள்ள முனைந்தால் அல்லது விளக்கமளித்தால் அதனை இஸ்லாத்தின் அடிப்படையில் நிருபிக்க முடியாது. அவ்வாறான ஒரு சொல் அல் குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் காணப்படவில்லை என்பதுடன் அவை தொடர்பில் எந்தவொரு ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் நிருபிக்க முடியாது என்பதே உண்மை.
இவ்வாறான ஒரு பேராட்டம் என்பது நல்ல வழியிலும், அதே வேளை துன்மார்க்க வழியிலும் மேற்கொள்ளப்பட முடியும். அதாவது அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தி, அவனது திருப்பொருத்தத்தினை நாடி மேற்கொள்ளப்படும் பிரயத்தனத்தினை 'பீஸபீலில்லாஹ்' எனக் கருதப்படும். அதேவேளை, துன்மாக்க சித்தமாய் மேற்கொள்ளப்படும் பிரயத்தனங்கள் அல்லது எவை அல்லாஹ்வின் சாபத்திற்கு தகுதியுடையவையாய் அமைகின்றதோ அவை 'பீஸபீலிஸ் சைத்தான்' என அழைக்கப்படுகின்றது. [அன்னிஸா(04) – 76]
மேலும், சூழ்நிலைச் சாத்தியங்களுக்கேற்பவும், நிலைமைகளை பொறுத்தும் ஜிஹாத் என்பதனை அல் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களது பொன் மொழிகளும் விளக்கியிருப்பதனை நாம் அவதானிக்க முடிகின்றது. [அல் குர்ஆன் வசனங்கள் 29:06, 22:78, 09:20, 09:24, 03:110, மேலும் பார்க்க ஸஹீஹ் புஹாரி 04/46 ஹதீஸ் இல.2784, 5792, ஸுனன் நஸயீ ஹதீஸ் இல.4209, இப்னு ஹிப்பான் ஹதீஸ் இல.4686]
அறிவைத் தேடுவதும் அதனை ஏனையவர்களுக்கு போதனை செய்வதும் இஸ்லாத்தில் விதிக்கப்பட்ட தெளிவான விடயமாகும். நாமும் அறிவைத் தேடி புறப்பட்டவர்கள் என்றவகையில் ஸகாத் நிதிப் பங்கிற்கு உரிமையுடையவர்களாகின்றோம். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, ஸகாத்தினை வழங்குபவர்கள் தமது முழு ஸகாத் நிதியினையும் அதனைப் பெற்றுக்கொள்ள தகுதிவாய்ந்த குழாம்கள் யாவுக்கும் அளிக்க வேண்டும். அல்லாத போது அதனை குறித்த குழாமினர் கேட்டுப் பெற்றுக் கொள்ள இஸ்லாத்தில் அனுமதியுண்டு. ஏனெனில் ஸகாத் பற்றி வருகின்ற எந்தவொரு குர்ஆன் வசனமும் அதனை விதித்துரைக்காமலில்லை. ஸகாத் என்பது இஸ்லாமிய அரசில் வசதிவாய்ந்தவர்களிடம் இருந்து வாங்கி எடுக்கப்பட்டு அதனை தகுதியுடையோர்க்கு வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.
இதற்கு பின்வரும் ஹதீஸ் பெரும் சான்றாயமைகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கை தொடர்பில் தப்பான கருத்துக்களை உண்டுபண்ண முனைந்தவர்கள் மீது அபூபக்கர் (றழி) அவர்கள் போர்தொடுக்க தயாரான வேளை, உமர் (றழி) அவர்கள் 'நபி (ஸல்) அவர்கள் எவர் ஒருவர் அல்லாஹ்வுக்கு நிகராக வேறு எதனையும் ஆக்கிக்கொள்ள வில்லையோ, சட்டத்தினை மீறவில்லையோ அவர்கள் தமது உயிரையும், சொத்துக்களையும் பாதுகாத்துக் கொண்டார் எனக் கூறியிருந்துமா நீங்கள் போரிடப் போகின்றீர்கள்' எனக்கேட்டார்கள். அப்போது அபூபக்கர் (றழி) அவர்கள் அல்லாஹ்வின் பெயரால் எவர்கள் தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையில் வேறுபாட்டினை கற்பிக்க நினைக்கின்றார்களோ அவர்களுக்கெதிராக நான் போராடுவேன். ஸகாத் என்பது இறைவனது கட்டளையின் பிரகாரம் சொத்திலிருந்து எடுத்துக்கொள்வது கட்டாயமான உரிமையாகும். மேலும் அவர்கள் ஒரு வெள்ளாட்டு குட்டியையாவது தர மறுத்தால் அதனை பெற்றுக்கொள்ள நான் அவர்களுடன் போராடுவேன் எனக் கூறினார்கள். அப்போது உமர் (றழி) அவர்கள் அல்லாஹ் அபூபக்கரினது இதயத்தை போராடும்படி திறந்துவிட்டான், அபூபக்கர் சரியாக தீர்மானித்துவிட்டார் எனக் கூறினார்கள். [ஸஹீஹ் அல் புஹாரி, 2/23, ஹதீஸ் இல. 483]
இஸ்லாம் எப்போதும் தமது உரிமையை நிலைநாட்ட எடுக்கும் முயற்சியினை அலட்சியப்படுத்தியதில்லை. எனிலும் ஒரு முஸ்லிம் பிறரிடம் கை நீட்டாது சொந்தமாக உழைத்து வாழ்வதை வலியுறுத்துவதற்காக வேண்டி இங்கு அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அதன் முழு வாசகங்களும் குறிப்பிடப்பட்டிருக்கப்படவில்லை. எப்போதும் ஹதீஸ்களை அவை நபி (ஸல்) அவர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளுடன் பொருந்திப் பார்ப்பதும், விளங்கிக் கொள்வதும் ஹதீஸ் கலையில் மிக இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகின்றது.
அன்ஸாரி தோழர்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சில பொருட்களை (somethings) தந்துதவும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்களும் கொடுத்தார்கள். மீண்டும் சில பொருட்களை கேட்டனர். நபிகளார்(ஸல்) அவர்களும் கொடுத்தார்கள். எனிலும், மீண்டும் சிலவற்றை அவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் இருந்தவை யாவையும் கொடுத்து தீர்த்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இன்னும் ஏதாவது இருந்திருந்தால் அதனை நான் உங்களுக்கு கொடுக்காமல் வைத்திருக்கமாட்டேன் எனக் கூறினார்கள். இதனை தொடர்ந்து 'யாரொருவர் மற்றொருவரிடம் கைநீட்டி கேட்காமலிருக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு போதுமாக்கி வைப்பான். யார் தன்னிடம் இருப்பதைக் கொண்டு போதுமாக்கி கொள்கின்றாரோ, அவருக்கு தேவையானதை அல்லாஹ் கொடுப்பான். யாரொருவர் பொறுமையாக இருக்கின்றாரோ, அல்லாஹ் அவரைப் பொறுமைசாலியாக ஆக்குவான். பொறுமையைவிட அதிகமான அருள் யாருக்கும் கிடைக்கப்போவதில்லை' எனக் கூறினார்கள. [புஹாரி,பாடம் 2/24: ஹதீஸ் இல.538]
எனவே, இங்கு ஹதீஸில் வருகின்ற சம்பவத்தினை நோக்குகின்ற போது, அளவுக்கதிகமான ஆசைகளை கட்டுப்படுத்தி வாழப் பழகிக் கொள்வதன் அவசியத்தினையே அது குறித்து காட்டுகின்றது என்பது தெளிவானதாகும். ஒருவரிடம் இருக்கின்றவையே அவருக்காக இறைவன் நாடியது, அதனை ஒருவர் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கையில் அதுவே மேலான பொறுமைத்தனம் என்பது இங்கு பொதிந்துள்ள தத்துவமாகும். மேலாக, அங்கு உரிமையுடைய அன்ஸாரித் தோழர்கள் தமக்கு தேவையானவற்றை கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்தவற்றை வாரி வழங்கியது உரிமைக்கு மதிப்பளிக்கின்றதும், அவர்களது இயலாமைக்கு பலம் சேர்க்கும் வண்ணம் துணை செய்வதனையுமே வெளிப்படுத்துகின்றது. மறுவாறாக, இந்த ஹதீஸினை புஹாரி இமாம் அவர்கள் ஏன் ஸகாத் பற்றி பேசுகின்ற பாடத்தில் எடுத்தாண்டுள்ளார்கள் என்பதனையும் நாம் உன்னிப்பாக நோக்க வேண்டும். அதாவது, ஸகாத் நிதியினை பெறுகின்ற ஒருவர் மேலும் மேலும் அதனை பெற்றுக் கொள்கின்றவராக அல்லாமல், காலவோட்டத்தில் ஸகாத்தினை கொடுக்க கூடிய தகமை பெற்ற உருவராக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேசுகின்ற சமூக மாற்றம் பற்றிய கருத்து அங்கு காணப்படுவதனை நாம் உற்று அவதானிக்க வேண்டும்.
சமூகத்தினை வழிநடாத்தக் கூடியவர்கள் இளைஞர்கள், அவர்கள் தமது கல்வித்தரத்தினை உயர்த்த முயற்சிக்க வேண்டும். மேலும் அவற்றுக்காக அரும் பாடுபட்டு உழைக்கின்ற பல முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் அதற்கான வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், வாய்ப்பு வசதிகளை இலகு படுத்திக்கொடுக்கவும் முன்வரல் வேண்டும். ஆனால் சிலர் இவ்வாறான விமர்சனங்கள் மூலம் அவர்களது செயற்பாடுகளையே உருமாற்றம் செய்யப் பாடுபடுவது அல்லது இழிவுபடுத்துவது வெறுமனே எமது உரிமைகளை மீறும் செயலன்றி வேறில்லை.
எங்களுக்கு சேர வேண்டிய ஸகாத் பங்கினை எமது சமூகம் எங்களிடம் சேர்ப்பிக்க தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் எங்களது உரிமையை நிலை நாட்ட மேற்கொள்ளும் நடவடிக்கைளை தூற்றுவது நிச்சயமாக அழகாக இருக்காது. இங்கு எமது நடவடிக்கைகள் இழிவான ஒரு நடவடிக்கையாக தோன்றலாம். ஏனெனில், காலா காலமாக எமது சமூகம் இதனைப்பற்றி கரிசனை எடுக்காததன் விளைவாக இன்று அது மறுவடிவம் பெற்று ஒரு மறைப் பெறுமானம் கொண்ட தேய்மானமுடைய நடவடிக்கையாக தற்காலத்தில எமது சகோதர சகோதரிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றது. எனவே நாம் அதனை எவ்வாறு மீண்டும் ஒரு தேய்மானமற்றதும், நேர் பெறுமானம் கொண்டதாக மாற்ற முடியும் என்பதனை சிந்திக்க வேண்டும். இதற்கு சதா காலமாக தங்களது ஒத்துழைப்பினை வழங்கி வருகின்ற வசதி பெற்ற தனவந்தர்களும், எனைய கற்றோர்களும் மாணவர்களுடனான கலந்துரையாடல்கள் மேற்கொண்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டுமே அன்றி நல்லது செய்கிறோம் என்ற பெயரில் வெறும் சாக்குப் போக்கான கருத்துக்களை முன்வைக்கக் கூடாது.
இறைவன் யாசகம் கேட்பவர்கள் தொடர்பில் கூறுகின்ற வாசகங்களை எம் போன்ற மாணவர்களுக்கு பாவித்திருப்பது கட்டுரையாளர் எங்களை மென்மேலும் பிச்சைக்காரத்தனமானவர்கள் என்பதனை வலியுறுத்த எடுத்துள்ள முற்சியினையே கட்டுகின்றது. கருத்துக்ளை மிகவும் ஆதாரமான மூலங்களுடன் தெரிவித்திருக்க வேண்டும்.
இன்னும் மாணவர்கள் யார் யாரோ கொடுக்கிறார்கள் என்பதற்காக கண்மூடித்தனமான இவ்வுணவுகளில் பங்கு பற்ற முடியாது எனக் கூறியிருப்பதுவும் மிகவும் அழ்ந்த இஸ்லாமிய சிந்தனையாக தோன்றவில்லை. இஸ்லாம் எப்போதும் இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள யாவும் மனிதனுக்கு பயன்படுதற்காக என்றே வலியுறுத்துகின்றது. அது நிராகரிப்பாளன் ஒருவனிடம் இருக்கும் சொத்தாக இருப்பினும் அவை நன்நோக்கில் ஒரு முஸ்லிமுக்கு கையளிக்கப்பட்டால் அதனை முஸ்லிமான ஒருவர் பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் மார்க்கத்தில் இல்லை. இதனை நாம் இஸ்லாமிய சட்டத்தில் இறைவனை மத்திமப் படுத்திய (theocentric) ஒரு விதியாக கையாள்கிறோம். மாறாக மேற்குலக சிந்தனை போன்று மனிதனை மத்திமப் படுத்திய செயற்பாடல்ல (anthropocentric) என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறிருக்க, அத்தகைய உணவுகளில் கண்மூடித்தனமாக பங்குபெற முடியாது எனக் குறிப்பிடுவது எத்தகைய கருத்து ஆதாரங்களுடன் என்பது புரியவில்லை. எப்போதும் மாற்றுக் கருத்துகளுக்கும், எதிர்க் கருத்துக்களுக்கும் விடப்படுகின்ற விளக்கங்கள் அல்லது கருத்துக்கள் அதாரபூர்வமான விடயங்களுடன் முன்வைக்கப்படல் அவசியம். அதுவே அழகான கருத்துப் பாய்ச்சலுக்கு வழிகோலும்.
ஸகாத்தோ அல்லது ஸதகாவோ சென்றடையுமிடம் தவறான இடமாக இருப்பினும், தவறாக பெற்றுக்கொள்ளப்படினும் அவை நிச்சயமாக அல்லாஹ்வின் நாட்டத்தின் நிமித்தம் சமுக மாற்றமொன்றிற்கு வித்திடும் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாயமைகின்றது.
நபி(ஸல்) கூறினார்கள் 'ஒரு மனிதர் எதாவது பொருளை ஸதகா கொடுக்க நாடி சென்று அதனை திருடன் என்று அறியாமல் அவனுக்கு கொடுத்தார். அடுத்த நாள் காலை, மக்கள் அவர் ஸதகா வழங்கியது திருடன் ஒருவருக்கு என்பதனை தெரியப்படுத்தினர். இதனைக் கேட்ட அம்மனிதர் இறைவா நீயே அருளாளன், நான் மீண்டும் ஒருவருக்கு கொடுக்கின்றேன் என்று கூறினார். அடுத்த நாள் காலை மீண்டும் சென்று, அறியாமல் அதனை ஒரு பெண்ணுக்கு வழங்கினார். அடுத்த நாள் காலை, மக்கள் அவரால் உணவு வழங்கங்கப்பட்டது ஒரு விபச்சாரிக்கு என கூறினார்கள். இதனை கேட்ட அம்மனிதர் இறைவா நீயே அருளாளன், நான் மீண்டும் வழங்குகிறேன் எனக் கூறிச் சென்று ஒருவருக்கு அளித்தார். அடுத்த நாள் காலை, அவர் உணவு கொடுத்த மனிதர் செல்வந்தர் என மக்கள் கூறினர். அம்மனிதர் இறைவா நீயே அருளாளன் எனக் கூறினார். பின்பு சிலர் அவரிடம் வந்து உணவு வழங்கப்பட்ட திருடன் திருடுவதை விட்டுவிட்டான், விபச்சாரி விபச்சார தொழிலை விட்டுவிட்டாள் என்றும், உணவு வழங்கப்பட்ட செல்வந்தர் புத்திவந்து இறைவன் தனக்கு வழங்கிய செல்வங்களை அல்லாஹ்வுக்காக செலவு செய்கின்றார் எனக் கூறினார்கள். [புஹாரி,பாடம் 24.ஹதீஸ் இல.502]
படிக்கின்ற மாணவர்கள் அனைவரும் வசதியற்றவர்களில்லையே, அவர்களுள் வசதி படைத்தவர்களும் இருக்கின்றார்களே! என்ற ஒரு வாதம் வைக்கப்படலாம். இவை ஸகாத் மற்றும் ஸதகா என்பவற்றுக்கடையான வேறுபாட்டினை புரிந்து கொள்ளாததன் விளைவாகும்.[அஸ்ஜெய்க். புர்கானுத்தீன் அலி, ஹிதாயா-தில்-ப்ரு] பொதுவாக 'ஸதகா என்பது ஸகாத்தினை வசூலித்தவர்கள், ஸகாத் பொருட்களை தனது சொந்த பணம் கொடுத்து கொள்வனவு செய்தவர், கடனாளி, அல்லாஹ்வுக்காக பாதையிலுள்ளோர், மற்றும் ஸகாத்தினை பெற்றுக்கொண்ட ஏழை ஆகியவர்களை தவிர்ந்த ஏனைய வசதி படைத்தவர்களுக்கு உரிமையற்றதாகும்.[அபூ தாவூத் மற்றும் இப்னு மாஜா கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. மேலும் பார்க்க தப்ஸீர் இப்னுகதீர் 09:60 ற்கான விளக்கவுரை]. எனவே ஸகாத்தாயினும் சரி, ஸதகாவாயினும் சரி அதனை பெற்றுக்கொள்ள மாணவர்களாகிய எமக்கு பரிபூரண உரிமையுண்டு.
உரிமை என்று வருகின்றவேளை அங்கு அதனை அனுபவிப்பதில் எவ்வித தன்மானப் பிரச்சினைகளும் எளப்போவது கிடையாது. எனினும், பிழையானதும், தவறானதுமான விதிமுறைகள் அல்லது கொள்கை சார் கருத்துக்கள் வெளிப்படும் போதே மனம் எந்தவொரு விடயத்தினையும் அவ்வாறான ஒரு மாயைக்குட்படுத்த நேரிடும். குறிப்பாக பல குறைகள் கொண்ட இவ்வாறான கட்டுரைகள், ஆக்கங்கள், இஸ்லாமிய சிந்தனைகள் சில வேளை இஸ்லாத்தினைப் பற்றியும் இதன் ஆழ்ந்த போதனைகள் பற்றியும் போதுமான அறிவற்ற நபர்களிடத்தில் தவறான வழிகாட்டல்களுக்கு புடம்போட்டு விடுகின்றதனை நாம் காணமுடிகின்றது. எனவே அறிவைத் தேடுகின்ற பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள நாங்கள் எல்லோரும் ஸகாத் நிதிக்கு தகுதிபெற்ற ஒரு கூட்டமாக இருக்கையில் இங்கு ஏழை மாணவர்களுக்கு மட்டும் ஸகாத், ஸதகா என்ற கருதுகோளும் அதன் அடிப்படையான ஊகமும் அறியாமைப் போலியாகவே இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்ட மற்றுமொரு விடயம், நபியவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஸதகா ஹராமாக்கப்பட்டுவிட்டதனால் பெரும் ஸஹாபிகளும் தமக்கு ஸதகாவை ஹராமாக்கிக் கொண்டார்கள். இதற்கு உமர் (றழி) அவர்களது சம்பவம் (ஆதாரம் எதுவும் கூறப்படவில்லை) எடுத்துக்காட்டப்பட்டிருந்துது. உண்மையில் அவ்வாறான ஒரு தடை நபி (ஸல்) அவர்களினால் மேற்கொள்ளப்பட பிரதான காரணம் பின்வருகின்ற நபிகளாரின் குடும்ப சந்ததியினர் தனது பெயரால் ஆட்சியில் இருப்பவர்களிடம் ஸதகா பெற முயற்சிப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் அஞ்சியதுதான் என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். பொதுவாக நபி (ஸல்) அவர்களது தோழர்கள் என்பதனை கருத்திற் கொள்ளும் போது அவ்வகுப்பினருள் நபி (ஸல்) அவர்களது குடும்பத்தினரும் உள்ளடங்குகின்றனர். எனவே, நிச்சயமாக நபி அவர்களின் தோழர்களாக காணப்பட்ட உறவினர்கள் ஸதகாவிலிருந்து விலகியிருந்திருப்பார்கள். இதனால் எல்லா நபித் தோழர்களும் ஸதகாவிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டிருந்தார்கள் என்று அல்லது நபிகளாரின் குடும்பத்தினர் (பனூ ஹாசிம் மற்றும் பனூ முத்தலிப்) அல்லாத நபித்தோழர் ஒருவர் ஸதகா பெறுவதை தவிர்ந்து கொண்டார் என நிருபிக்க முடியுமா? மறுபுறம், இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்கள் பனூ முத்தலிப்கள் ஸகாத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறுவதனையும் கருத்திற் கொள்ள வேண்டும். [பிக்ஹுஸ் ஸுன்னா, 3/46. பாடம் ஸகாத் பெறுவோர் 03.073ஆ]
அடுத்து முன்வைக்கப்படுகின்ற யோசனை உண்மையை உள்ளபடி கூறி அன்பளிப்பாக எதனையும் பெற முடிந்தால் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். இஸ்லாத்தில் பொருட்களை இனாமாக வழங்கல் என்பது ஸகாத், ஸதகா, ஹதியா ஆகிய மூன்று முறைகளில் நிகழ்த்தப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம். அறிவைத் தேடிப் புறப்பட்டிருக்கின்ற நாங்கள் இவ்வகை மூன்று ஏற்பாடுகளுக்கும் சம விகிதத்தில் தகமை கொண்டிருக்கின்ற போதும் எம்மை கொடை என்ற கொடுப்பனவிற்குள் மட்டும் சுருக்கிவிட எத்தணிப்பது இஸ்லாத்தினையும் அதன் வாழ்க்கை வழிகாட்டல்களையும் சுருக்கிக் கொள்ளவும், சொகுசுக்காக மாற்றியமைத்துக் கொள்ளவும் எடுக்கின்ற ஒரு முயற்சியாக தென்படுகின்றது. எங்களுக்கு உரிய வகையில் ஸகாத் நிதி வழங்கப்படுமானால் குறித்த கொடைகள் வேறு தேவைகளுக்காக சென்றடைய வாய்ப்புண்டு என்பதுடன் அவ்வாறின்றி கொடையை வழங்கி எமக்கான ஸகாத் பங்கினை (உரிமையை) மறுப்பீர்களானால் வசதி படைத்த நீங்கள் கொடுக்கின்ற ஸகாத் பூரணமானதாக அமையாது. காரணம் அதற்கு தகுதிபெற்ற கூட்டத்தில் ஒரு கூட்டத்தினை நீங்கள் தவறவிட்டிருப்பீர்கள்.
இவ்வாறான மாறுபட்டதும், குழறுபடியானதுமான கருத்துக்களை முன்வைக்கின்ற அந்தக் கட்டுரை ஸகாத் அல்லது ஸதகாவினை அளித்தால்தான் நன்மை கிட்டும், அன்பளிப்புக்கு நன்மை கிடைக்காது எனும் மக்களின் எண்ணத்தினை மாற்ற எடுக்கின்ற கைங்கரியமாக ஒரு தீர்வினை முன்வைக்கின்றது. அதுதான் மாணவர்களாகிய நாங்கள் தங்களுக்குள் பணத்தினையோ, பொருளினையோ பங்களிப்பு செய்வதன் மூலம் அவற்றை எல்லேரும் பங்கிட்டு உண்ணலாம் என்கின்ற யோசனை. வெளிப்படையில் சிந்திக்கின்றவர்களுக்கு நல்ல முன்யோசனையாக தென்பட்டாலும், இன்றய சூழ்நிலையில் எமது மாணவ சகோதர சகோதரிகள் எதிர்நோக்கும் சவால்களை பல்கலைக்கழகத்தினுள் அல்லது இதர கல்வி நிறுவகங்களுள்ளிருந்து நோக்கும் போதே நிலமை வெளிச்சமாகும். (கட்டுரையின் விரிவுபற்றி அஞ்சுவதால் இந்நிலமைகளை வெளிக்கொணர அல் ஹஸனாத் இன்ஸாஅல்லாஹ் எதிர்காலத்தில் சந்தர்ப்பம் வழங்கும் என நம்புகின்றேன்)
அடிப்படையில் பொருளாதாரம் என்பது சமூக கட்டமைப்பில் ஒரு சிறுபான்மையினரிடமே உறைந்து கிடப்பதுடன் அது அவ்வச் சமூகத்தினுள் சழற்சி முறையிலான ஒரு இயங்குகைக்குள் ஆட்பட்டுக்கிடப்பதனையும் நாம் அவதானிக்கலாம். அல்லாஹ்வும் அதனை செல்வந்தர்களுக்கும், ஏழை எழியவருக்கும் இடையில் சுழலக்கூடிய ஒரு சோதனையாக கட்டமைத்திருப்பதாக விளக்குகின்றான். ஒரு பரந்த சமூகத்தினுள் சொற்பமானவர்களே செல்வந்தர்களாக காணப்படுவர். அவர்களிடமே ஏனையவர்களுக்கான பொருட்களும், வசதி வாய்ப்புக்களும் தேக்கமுற்றிருக்கும். இந்த இறைவனது கட்டமைப்புக்கு மாணவர்களான நாம் மட்டும் விதிவிலக்கா என்ன.
இந்தடிப்படையில் நோக்குகையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற எம்முள் 80 சத வீதமானோர் பெரும்பாலும் ஏழை மாணவர்களாகவும், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கல்வியினை பொறுமையுடன் மேற்கொண்டு செலபவர்களாகவுமே உள்ளனர். எனவே உங்களது தீர்வின் படி 20 வீதமான நாங்கள் 80 வீதமானவர்களது சுமைகளை சுமக்க வேண்டும். உங்களது கருத்தில் சிந்தித்து, பகுத்தாராய்ந்து முடிவெடுக்கக் கூடியவர்களான எமக்கு இது வெறும் போலியாகவே தோன்றுகின்றது. மேலும் இங்கு மற்றொன்றை கருத்திற்கொள்வது அவசியம். யாதெனில், கந்தையானாலும் கசக்கிக் கட்டு என பேசுவதில் மட்டும் வேலையில்லை, கசக்கிப் போட்ட பின்னர் எதனைக் கட்டுவது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
கண்மூடித்தனமாக யார் யாரோ கொடுக்கின்ற உணவுகளில் பங்கு கொள்ள முடியாது எனக்கூறுகின்ற கட்டுரை பின்பு, எந்தவொரு அரசாங்க நிறுவனத்திலும் அரசாங்கத்தினால் இலவச சாப்பாடு கொடுக்கப்பட்டால் அதைப் பெற்றுக் கொள்ளவது மாணவரதும் உரிமை எனப் பேசுகின்றது. முஸ்லிம் மஜ்லிஸ் நடாத்தும் நிகழ்வுகளை அதன் நிதி சம்பந்தமான விடயங்களை கீறிக் கிளித்து ஆய்வுசெய்து முடிவு காணுகின்ற கட்டுரை மறுபக்கம் அரசாங்க நிறுவனங்கள் வழங்கும் இலவச சாப்பாடுகளை (பல்கலைக்கழகங்களில் அவ்வாறான ஏற்பாடுகள் இல்லை என்பது நோக்கத்தக்கது) எங்களுக்கு உரிமையுடையதாக வலியுறுத்துவது வேடிக்கையாகவுள்ளது. மேலும், பிரச்சினை ஒன்றை குறித்தாய்வு செய்கையில் முழுவகுப்பினருக்குமான தீர்வு முன்மொழியப்படுதல் அவசியம். ஆனால் இங்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.
அதேவேளை, அவை உரிய நேர வேளைக்கு கிடைக்குமா என்ற வினாவுக்கும் வியாக்கியானம் கொடுக்கப்படுகின்றது. அதாவது, வழமையாக கொடுக்கப்படுகின்ற மூன்று வேளை சாப்படுகளையும் நமது தேவைக்கேற்ப மாற்றி உபயோகிக்க முடியுமாம். பகல் நேர உணவை வேண்டாம் என்று சொல்லாமல் எடுத்து வைத்திருந்து இப்தாருக்கும், இரவு உணவை எடுத்து வைத்திருந்து ஸஹருக்கும் உட்கொள்வது கடினமான ஒன்றல்ல எனக் கட்டுரை கூறுகின்றது. ஆக புதிதாய் சமைத்த உணவை பழமைப்படுத்தி (பழுதடைந்த பின்பு) சாப்பிடச் சொல்கின்றார் (அவ்வாறில்லையெனில் கட்டுரையாளர் எங்களுடைய கல்வி நிறுவகங்களில் குறைந்த பட்சம் றமழான் காலப்பகுதிக்காவது குளிர் சாதனப்பெட்டி வசதிகளை பெற்றுத்தர ஆவணம் செய்ய வேண்டும்). அல்லாவிடில் எங்களுக்கு கிடைக்கின்ற உணவு ஒன்றில் தேனும், நெருப்பில் வாட்டியெடுக்கப்பட்ட இறைச்சித் துண்டங்களுமாக அல்லது கோதுமை உரொட்டித் துண்டுகளாகவோ இருக்க வேண்டும். சாதாரணமாக ஏறத்தாழ 5-7 மணித்தியாலங்களுள் சமைத்த உணவுகள் பங்கசு தொற்றுக்குள்ளாகும் என்கின்ற உண்மை கூட புரியப்படாதது ஏன்? இரவு 8 மணிக்கு கிடைக்கின்ற உணவை காலை 4 மணிக்கு உண்ணச் சொல்லும் செய்தியை என்வென்று கூறுவது?
இங்கு வசதி படைத்த மாணவர்கள், வசதியற்ற மாணவர்கள் என்பதனை எவ்வாறு, எத்தகைய அளவீட்டு முறையின் கீழ் வகைப்படுத்துகின்றீர்கள் என புரியவில்லை. எப்படியோ நீங்கள் தவறான ஒரு அளவீட்டு முறையினையே கையாள்கின்றீர்கள் என்பதனை கட்டுரையில் தெளிவாக உணர முடிகின்றது. [இன்ஸாஅல்லாஹ் வாய்ப்பு வழங்கப்பட்டால் எதர்காலத்தில் அவை பற்றி வெளிக்கொணர்வேன்]
இதேபோன்று, நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை குடித்து நோன்பு நோற்றார்கள் என்பதனை சுட்டிக்காட்டி நாமும் அதனை வாழ்வில் முயற்சிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் முஸ்லிமான ஒவ்வவொருவரும் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டிய ஒரு விடயம் இதுவாகும். எனிலும் இதனை நாம் ஒவ்வொருவரது வாழ்விலும் திணிக்க முற்படக் கூடாது. இவை சிலருக்கு சாத்தியமாக கூடிய விடயம் என்றிருப்பினும் பல சகோதர சகோதரிகளுக்கு இதனை பிரயோகித்துப் பார்ப்பது ஆரோக்கியத்தினை அளிக்காது. மேலும், இவை அவரவர் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் இறையச்சம் எனபவற்றுடன் உடலியல் தேவை என்பதனையும் கருத்திற் கொண்டதாக அமைய வேண்டும். ஒருவர் பசியுடன் தொழுகையை நிறைவேற்றுவதனைக் கூட தடுக்கின்றது இஸ்லாம். ஒருவர் திருப்திகரமாக உண்டு நோன்பு நோற்றால்தான் அவரால் அதனை நிறைவாக பூரணப்படுத்த முடியுமென்றால் நாம் அதனை மறுக்க முடியாது. மாணவர்களாகிய நாங்கள் இவைக்கு மேலதிகமாக நோன்பினை நோற்றுக்கொண்டு சில வேளை சிறுதூர பிரயாணங்களை கூட மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கான உடற்பலம் எமக்கு அவசியம். இது குறித்து நாம் கவனயீனமாக தொழிற்படுவது எமது நோன்பினையே பாழ்படுத்திவிடும்.
மறுபுறம், பசியறிந்து பட்டினி கிடப்பதன் மூலம் எமது தக்வாவும் நல்லமல்கள் செய்யக் கூடிய உறுதியும் அதிகரிக்கும் எனக் கூறுவது ஒரு சூபித்துவ சிந்தனையாகவே தென்படுகின்றது. இது இறைவனுக்கும் அவன் எமக்களித்த ஆத்மாவுக்கும் எதிரான உரிமை மீறலாகவே அன்றி வேறில்லை. நபி (ஸல்) அவர்களிடம் வந்த நபர்களுள் ஒருவர் நான் எனது வாழ் நாள் முழுவதும் நோன்பு நோற்கப் போகின்றேன் என்றும், மற்றவர் நான் வாழ் நாள் முழுவதும் இரவு நேரத்தில் நின்று வணங்கப் போகின்றேன் என்றும் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் ஆம் அவ்வாறே நீங்கள் நிறைவேற்றுங்கள் அது உங்களது தக்வாவுக்கும், நல்லமல்களை புரியும் மன உறுதி ஏற்படவும் வாய்ப்பாயமையும் என்று உபதேசித்தார்களா? இல்லை அதனை மறுத்துரைத்தார்களா?
நபியவர்களது வீட்டில் தெடர்ந்து மூன்று நாட்களாக அடுப்பு நெருப்பு எரியாமல் இருந்திருக்கிறது என்பதற்காக இனி நாமும் எமது வீடுகளில் மூன்று நாட்களுக்கு சமைக்காமல், சாப்பிடாமல் இருப்போம் என்றால் இவர்கள் இந்தக் கருத்தினை ஏற்றுக்கொள்வார்களா?. இல்லை, நபி அவர்களுக்கு சமைத்து உண்ணக்கூடிய உணவு வகைகள் கிடைக்கவில்லை எனக் கூறுவார்களா? வரலாறு புரியாமல் செல்கிறது கட்டுரை. நபிகளாரின் காலத்தில் சாப்பாட்டு வேளை என்பது ஒரு நாளைக்கு இரு வேளை மாத்திரமே. அதாவது, காலையில் ழுஹா தொழுகை முடிந்ததும் வரும் அண்மித்த நேரத்திலாண உணவு மற்றும் மதியம் அஸர் நேரத்திற்கும் மஹ்ரிபிற்கும் இடைப்பட்ட நேரத்திலான உணவு சாப்பாடு. இவைதான் அன்றய காலத்தில் காணப்பட்ட சாப்பாட்டு நேரங்கள். இரவில் தூங்க செல்ல முன்பதாக குடிப்பதற்காக பால் மட்டும். அதுவும் இருந்தால்தான். பெரும்பாலும் பால் கிடைக்காது. எனவே இன்று நாமும் இருவேளை சாப்பாடுதான் பொதுவாக நாளாந்தம் எடுக்க வேண்டும் என்றால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?. அத்தனையும் வெறுமையான போலித்தனமான கருத்துக்கள்.
கந்தலான ஆடையினை அணிந்திருந்த, தனது வீட்டிற்கு விருந்தினர் வந்திருந்த போதும் நோன்பினை விட்டுவிட தயங்கிய, தூங்காது இரவில் நின்று வணங்க தலைப்பட்ட அபூ தர்தா (றழி) அவர்களைப் பார்த்து சல்மான் (றழி) அவர்கள் ' அபூ தர்தாவே உமது இறைவன் உன் மீது உரிமையுடையவன், உனது ஆண்மா உன்மீது உரிமையுடையது, உன்னுடைய குடும்பத்தார் உன் மீது உரிமையுடையவர்கள். எவர் உன் மீது உரிமை கொண்டுள்ளனரோ அவர்களது உரிமைகளை நீர் வழங்க வேண்டும் என்று உபதேசித்த கருத்ததனை பின்பு நபியவர்கள் ஏற்று அங்கீகரித்தார்களே ஏன்? சற்று சிந்திக்க வேண்டும். [ஸஹீஹ் அல் புஹாரி, பாடம் நோன்பு 3/31, ஹதீஸ் இல.189]
மேலும், கட்டுரையில் இவை பற்றிய விடயங்களை முஸ்லிம் மஜ்லிஸுகள் மற்றும் AUMSA அகியவற்றுடன் கலந்துரையாடல் செய்து தீர்த்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த AUMSA என்பதனை பல மாணவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை என்பதனால் சுருக்கமாக அதன் விரிவாக்கத்தினை கொடுப்பது நல்லது எனக் கருதுகின்றேன். அதாவது, All University Muslim Students' Association என்பது அதன் விரிவாக்கமாகும்.
இந்த அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைப்பு என்பதன் செயற்பாடு குறித்தும் அதன் கட்டமைப்பு குறித்தும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகின்ற எமக்கு பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன. அதன் ஒன்றுமில்லாத கடந்தகால நடவடிக்கைகள், அதனை அவர்கள் கைக்கொண்டவிதம் என்பன பற்றி நாம் பல்வேறு இடங்களில், பலதரப்பட்ட முக்கியஸ்தர்களுக்கு மத்தியில் அதன் முக்கிய தலமை உறுப்பினர்களிடம் வினாக்களை எழுப்பியிருந்தும் கூட எமக்கு இன்னும் அவர்கள் சரியான பதில் கொடுக்க தயங்குவது அவர்களது செயற்பாடுகளில் உள்ள ஊழல்களை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன. குறிப்பாக கூறுவதானால் கடந்த சுமார் 4 வருட காலமாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் AUMSA விற்குமிடையில் எதுவித தொடர்பும் கிடையாது என்பதே உண்மை.
மேற்போந்த எதுவித இஸ்லாமிய அடிப்படைகளுமற்ற நிலையில்; இன்றய பல்கலைக்கழக மற்றும் இதர கல்வி நிறுவகங்களின் சூழல், அதன் செயற்பாடுகள் குறித்து சாதாரண விடயங்கள் கூட இன்றிய நிலையில் கட்டுரையாளர் தனது இக்கட்டுரையினை முயற்சித்துள்ளார் என்பது எமக்கு புலனாகின்றது. அவ்வாறாயின் இதன் பின்புலம் என்ன என சிந்திப்பது புத்திசாலித்தனமானவர்கள் என பிறரால் பாராட்டப்படுகின்ற எமக்கு அவசியமாகும்.
எதுவித செயற்பாடுகளுமின்றி முற்றிலும் நோக்கந்தவறிய நிலையில் சிக்கித்தவிக்கும் AUMSA அண்மைக்காலமாக டாக்டர் மரீனா தாஹா அவர்களின் உதவியுடன் (அவருக்கு தனவந்தர்கள் மற்றும் இதர நிதி நிறுவனங்களுடன் இருக்கின்ற செல்வாக்கினை பயன்படுத்தி) தமது சில நடவடிக்கைகளை அண்மைக் காலத்தில் துவங்கியிருந்தது என்பதே உண்மை. மிகவும் தந்திரோபாயத்துடன் காய் நகர்த்தும் AUMSA தற்போது றமழான் மாதத்திலும் மற்றும் ஏனைய சந்தர்பப்ங்களிலும் மாணவர்களுக்காக கிடைக்கப்பெறுகின்ற புலமைப்பரிசில் நிதிகளை முழுமையாக தமது ஆளுகைக்குட்படுத்தி எம்மத்தியில் தன்னைப் பற்றி அபரிவிதமான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்பதே நிச்சயமான உண்மை. இதன் மூலம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், ஏனைய கல்வி நிறுவனங்களிலுமுள்ள மாணவர்களை (எம்மை) (விலைகொடுத்து வாங்கி) தனது அங்கத்துவ தொகையாக காட்டிக்கொள்ள பகல் கனவு காணுகின்றது AUMSA.
எனவே, குறித்த கட்டுரையில் பிரசுரமாயிருந்த இஸ்லாத்தின் எதுவித அடிப்படைகளுமற்ற கருத்துக்கள் எமக்கிருக்கின்ற உரிமைகளில் தலையிடுவதாகவே காணப்படுகின்றது. அதாவது, எமக்கு சேர வேண்டிய ஸகாத் பங்கினை எவ்வாறு பேணுதலாக அளிக்கப்படல் வேண்டும் என்பதனை விடுத்து எங்களை பிச்சைக்காரத்தனமானவர்கள் என தூற்ற முற்படுவது, அவர்கள் புழுதியை அள்ளி தங்களுக்கு தாங்களே தூற்றிக் கொண்டதற்கு சமம். இன்று எமது கல்வி நிறுவனங்களிலுள்ள மாணவ சகோதர சகோதரிகள் மேற்கொள்கின்ற இத்தகைய நிதி வசூலிக்கும் செயற்பாடுகள் மிகவும் தாழ்வான போக்காகும் என்பதில் எனக்கும் எமது சகோதர மாணவர்களுக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. எனிலும் இதன் காரண கர்த்தாக்கள் யார் என்பதனை அறிந்து செயற்படுவதே புத்திசாலித்தனமான செயலாகும். கடமையாக அளிக்கப்பட வேண்டிய பொருள் மற்றும் வசதி வாய்ப்புக்கள் (அவை ஸகாதாகவோ அல்லது ஸதகாவாகவே இருக்கலாம்) முறையாக அளிக்கப்பட்டிருந்தால் இவ்வாறான ஒரு தேய்மானமான நடவடிக்கைக்கு எமது சகோதர சகோதரிகள் சென்றிருக்கமாட்டார்கள் என்பதே வெளிப்படையான உண்மையாகும். எனவே இத்தகைய எமது இளம் சந்ததியினரின் பிச்சைக்காரத்தனத்திற்கு யார் பொறுப்பாளர்கள்?
பல்கலைக்கழகங்களிலோ அல்லது இதர கல்வி நிறுவகங்களிலோ இருக்கின்ற நாம் இவை எதிர் காலத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்பதற்கு உரிய திட்டங்களை வகுத்து செயற்படல் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தமக்கு கிடைக்க வேண்டிய ஸகாத் நிதியினை முடக்கி வைத்துக் கொண்டு எமது சிந்தனைகளை திசை திருப்ப முனைகின்ற சக்திகளிடம் எமது அறிவை இழந்து செயற்படக் கூடாது. இத்தோடு அவர்கள் தொடர்பில் மிக அவதானமாக இருத்தல் அவசியம்.
ஒவ்வவொரு கல்வி நிறுவகங்களிலும் இருக்கும் எமது சகோதர சகோதரிகளின் பிரச்சினைகள், எதிர்கொள்ளப்படும் சவால்கள் வேறுபட்டவை என்பதனை நன்குணர்ந்து செயற்படுவது எமது திட்டத்திற்கு பலம் சேர்க்கும். அதனை அவ்வவ் கல்வி நிறுவகங்கள் சார் முஸ்லிம் மஜ்லிசினாலேயே அன்றி வேறு நிறுவனங்கனினால் தீர்மானிக்கப்படுவது உரம் சேர்க்காது. மாறாக அவை மேலும் ஒரு தேய்மான முயற்சியாகவே காணப்படும். இன்ஸா அல்லாஹ், ஆரம்ப கட்டமாக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இருக்கின்ற எமது முஸ்லிம் மஜ்லிஸ்கள் இதன் தாற்பரியத்தினை உணர வேண்டும். இதனை நாம் அனைத்து கல்வி நிறுவகங்களினதும் மஜ்லிஸ் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆராய்ந்து ஒவ்வொரு நிறுவனங்களிலும் எதிர்நோக்கும் சவால்களை கருத்திற்கொண்டு பொதுவான ஒரு முடிவுக்கு வர முயற்சிக்க வேண்டும். இதற்கு அல் ஹஸனாத் தனது உதவிகளை வழங்கும் என நான் நம்புகின்றேன். இதனைத் தொடர்ந்து வருகின்ற முஸ்லிம் மஜ்லிஸுகளும் முறையாக பின்பற்றும் வகையில் தமக்குள் நமம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவையே எமது சகோதரத்துவ முயற்சிக்கும், எமக்குள் பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்ற பேதங்களை தாண்டி அறிவைத் தேடி பிரயாணிப்பவர்கள் என்ற வகையிலான பலமான பிணைப்பொன்று துளிர்விடவும் உந்துகோலாக அமையும் என்றால் அது மிகையல்ல. இதற்கான ஆரம்ப அழைப்பை கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து நான் எனது சகோதர சகோதரிகள் சார்பில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும், ஏனைய கல்வி நிறுவகங்களுக்கும் விடுக்கின்றேன், மாஸா அல்லாஹ்.
'இவர்கள் எத்தகையேரென்றால், விசுவாசிகளில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும், தங்களது உழைப்பைத்தவிர வேறு எதையும் பெறாதவர்களையும் குறை கூறுகிறார்கள்; பின்னர் அவர்களை ஏளனமும் செய்கின்றார்கள். (விசுவாசிகளை ஏளனம் செய்யும்) அவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கின்றான்ளூ அன்றியும் (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்குண்டு.' [(அத்தௌபா: 09-79), பார்க்க, புஹாரி, பாடம் 2/24: ஹதீஸ் இல.496]
அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment